செவ்வாய், ஜூன் 26, 2012

வெறுங்கனவும் வெறுவாயும்


அண்மையில் நண்பன் இல்லை கவிஞ்ஞன் மானுடன் (கேதா) இளவேனில் சஞ்சிகைக்காக எழுதிய கவிதை வாசிக்கும் ‘அனுபவம்’ கிட்டியது. கவிதையை அதன் ரசனைக்கேற்ப தெரிந்த சில நண்பர்களுக்கு பகிர்ந்தேன். கேதாவுக்கு நட்பு கருதி ஒரு வட்டத்துக்குள் என உணர்வுகளை சில வார்த்தைகளில் பகிர்ந்து நிறுத்திக் கொண்டேன். ஆனால் இந்தக் கவிதைக்கு முகநூலில் பின்னூட்டியவர்கள் பினைந்த பினையில் ஒரு பிசிராந்தையார் பாதுகாக்கப்பட வேண்டி இந்தச் சோழன் எழுதிக்கொள்வது.

கவிதை என்ற பெயரில் என்னை வந்து சேரும் ‘க’ ‘வி’ ‘தை’ எல்லாம் ஒருங்கே சேர்த்து வாசித்தாலும் கவிதை என்று ஆவதில்லை. சில நல்ல கவிதைகள் மனதுள் எங்கோ ஒரு மூலையில் கல்லைப் புரட்டிப்போடும் இன்னும் சில மனதையே புரட்டிப்போடும். கவிதை ஒரு கால எந்திரம் அதில் ஏறி முன்னும் பின்னும் எங்கும் பயணிக்கலாம், இறந்து போன தருணங்கள், நிகழ்ந்து கொண்டிருக்கும் தருணங்கள், இன் வர இருப்பது, வந்தால் நலம் என நினைப்பது இப்படிப் பல. இந்தக் கவிதை யந்திரம் கொண்டு காலப் பரிமாணம் மட்டுமல்ல வெளிப்பரிமாணம் மட்டுமல்ல மூன்றாவதாய் கவிஞ்ஞன் கோர்க்கும் கற்பனைகள் அழைத்து செல்லும் பரிமாணம் இன்னதென்று பெயர் சொல்ல முடியா ஒரு பரிமாணம்: பேசாப் பொருளை பேச முடிவது கவிதைக்கு மட்டுமே சாத்தியம், அல்லது கவிதை மாதிரி படைக்கப் படும் பிற கலைப் படைப்புகளுக்கு மட்டுமே.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எண்ணிலடங்கா தருணங்கள் புதைந்திருக்கும், இந்தக் கவிதை ஒவ்வொரு இளைஞனையும் தந்தை ஆகப் போற அந்த ‘இனி வரும்’ தேவ தருணத்தை தரிசிக்க அழைத்து செல்லும் அதே வேளை பின்னேயும் இட்டு செல்கிறது - புழுதி படிந்த அந்த தருணங்களில் காற்சட்டையோடு பனைமட்டையில் கிரிக்கெட் ஆடுகிற சிறுவன் அவனுக்கு ரப்பர் பந்து வாங்கித் தந்த முன்வீட்டு சண்முகலிங்கம் பிள்ளையார் பேணியில் நெற்றி பிளந்த கிருபா அண்ணை வரை இது இட்டு செல்கிறது - இரு வழிப் பயணம், ஒரே சமயத்தில் எதி எதிர் திசையில்.

இப்படி பயணிக்க வைக்கிற கவிதை கட்டாயம் சலனம் உருவாக்கும், சில தருணங்கள் கூனிக் குறுகுறுக்க வைக்கும், சில தருணங்கள் நன்றி மறந்தார்ப் போல் உணர வைக்கும், இன்னும் சில பெருமை பீடு தரும், வருந்த வைக்கும் வலி மிகு தருணங்களும் கட்டாயம் உண்டு. இங்கேயே கவிஞ்ஜன் வெற்றி பெற்று விடுகிறான் ஆனால் பாவம் கவிதை எழுதும் வரை கவிஞ்ஞன் ஞானி எழுதி முடித்தபின் அவன் ஒரு குழந்தை கிலுகிலுப்பை, சிறு இனிப்பு, முத்தம், பாராட்டு சீராட்டு என ஏங்கும் சிறு குழந்தை. ஆனால் குறுகுறுக்கும் நெஞ்சம் சமாதானம் தேடும், சும்மா இராது தன் புத்தி கொண்டு தன் தரப்பை மெய்ப்பிக்க ஆரவாரமாய் ஒரு ஆதாரம் சொல்லும் - பாவம் தான் வெற்றி பெறுகிறேன் எனத் தெரியாமல் கவிஞ்ஞன் சிணுங்கத் தொடங்குறான். வேறு சில மனங்கள் குறுகுறுப்பை ஒப்புக் கொள்ளும், அதில் சில பாவ மன்னிப்பே பரிகாரம் என்று மறந்தும் போகும், சில  இரண்டுக்கும் நடுவில் நின்று மயங்கும் - கூழும் வேணும் மீசையும் வேணும் என்ன செய்ய என்று தயங்கும்.

இராச்சியங்கள் வாங்கித்தரத் தெரிந்த சீத்தலை சாத்தனார்களுக்கு ஊரில் ‘இராசியில்லா ஒரு இராஜகுமாரன்’ என்று இளக்காரம் இருப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் எங்கிருந்தோ ஒரு நண்பன் ஆழப் பயணிப்பான் இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் தாண்டி மூன்றாம் பரிணாமத்தில் அபிமன்யுக்கான கீதைகளை கண்டு சொல்வான், கருத்துகளால் உன்னை வடிவைமைப்பதே என் தொழில் என்று காசேதும் பாராமல் கண்ணியமாய் சொல்லுவன். என்ன சொல்ல குறும்புக்காரனொருவன் புரியாத கடுப்பினிலே இது வேறேதோ அடிகோலல் என கும்மி அடிப்பான். கவிஞ்ஞர்களை கண்டு கொள்ளாத தேசம் களை இழக்கும் என்று யாரும் அவனுக்கு சொன்னதில்லை. என்ன செய்ய இலயானுக்கு ஆறுகாலா எட்டுக் காலா என்று தெரியாத ‘சொறியனிடம்’ புரியாமல் படித்த மக்காள் ஏரோப்பிளேன் ஓடின எருமைக்கு இரண்டு வாலாம்  எண்டு கதை அளக்க தவறுவதில்லை.
போய் முடிவான் எனத்தெரிந்தும் போர்க்களத்தில் புகுத்திவிட நானொன்றும் பார்த்தனில்லை” என்று தன் வீரியம் மிக்க அறிவுக்கும் கோரமான யதார்த்தத்திற்கும் நடுவில் திரிசங்கு சொர்க்கமென அந்தராடுகையை – கையாலத்தனமா, கையிலை காணமுதல் எனக்கு அது கைவருமா என்று ஒரு சாதா தகப்பன் தனக்குள் அழுவது சீரியலுக்குள் செண்டிமன்ட் தேடும் சாரிகளுக்கு விளங்க வாய்ப்பில்லை.

இதைச் சொன்னால் என்ன நினைப்பார்கள், தன்னைப் பழசென்று பகிடி பண்ணி தலைமுறை இடைவெளி கொஞ்சம் தள்ளி இரு என்பார்களோ என்று கவிஞ்ஞன் கரைந்துள்ளான். விம்மல் கேட்கிறது. தன் கனவை புரியாது செரி என்றும் பிழை என்றும் தகிக்க வைக்கும் மனிதருக்காய் பயந்து தன் வழி போகவிடுங்கள் என்று கேட்கிறான்

“என்கிணறு என் கனவு எது சரியோ எது பிழையோ”
அப்புறம் இதுக்கெல்லாம் அலட்டாமல் “இதுதான் நான்” என்கின்றான்.
கொஞ்சம் ஆசையாய் தன்னைப்போல் இன்னொருவனை தேடி எதுவோ நீ என்கின்றான்.

ஒரு தகப்பனின் நியாயமான ஆசை, மெதுவாக நிராசை ஆகிவிடும் என்று புரிகிறது - பயம் கவ்வி பற்களால் இதயம் காயம் ஆகி இரத்தம் வடிகிறது, எதுக்கும் வழி இன்றி நிற்கையிலே அக்கறைக்கு இக்கரையே பச்சை என்றார் – போடாங்…… அப்ப சொந்தக் கரையிலேயே சொகமா இருந்திருக்கலாமே ஊரில் சில காய்ஞ்ச இலைகளின் கண்ணீர் துடைத்த படி. - அட இதுக்குத்தான் வந்தமென்று இறுமாப்பும் இல்லாமல், எதுக்குத்தான் வந்தம் என்ற எதுவும் தெரியாமல், இருப்பார் ஒருபுறம் அட ஏனோ வந்துவிட்டம் எப்ப பூவாம் என்ற ஏக்கத்தில் பல பேர் வெளிய சொல்லார் அதில் சிலர் - இன்டர் நெட் செரியா இழுக்காது என்று இடைக்காட்டு மழை நனைய மறந்து விட்டோர் மனசாட்சி இது கவிதை.

ஏற்கனவே சொன்னார்ப் போல் பழசு என்பார் மாற்றம் என்பார் முகாலயனின் காலத்து முலாம் பூசுவார், உணர்ச்சிவசப்படும் அபூதிகள் என்பார் - அப்பரின் பேரில் தண்ணீர்ப் பந்தல் வைப்பதிலும் - அந்த உணர்ச்சி வசப்படுதலிலும் ஒரு சுகமிருக்கு. வீட்டில புட்டுத்தான் ஆனா என்ன பய புள்ளைக வேளியில சாப்பிட எண்டா பர்கர் விரும்புதுகள் என்பது மாற்றம், புட்டா, பாரதியா, வாலிபன் கவிதைகளா வாட் டாட் என்பது வலி இது வேறு வலி ஊரில இருந்தாலும் இந்த வலி இருக்கும் ஆனாலும் இந்தளவு வலி இருக்கா. பின்வீட்டுக் கோடியிலே வளந்து நிக்கும் வாழை, அதன் குட்டி யூரியா விருப்பம் எண்டு சொல்லுறது இடைவெளி தலைமுறையால் - பழசு இல்லை ஆழ வேர் விடு எண்டு ஆலோசனை கூறும் – இடைவெளி. ஆனால் பிடிங்கி வைச்ச ஆல்ப்ஸ் பனி  மலைத் தோட்டத்தில் முளை விட்ட வாழை பாதி ஆப்பிள் ஆகி நிப்பது வலி அது உள்ளீடற்ற ‘வெறுங் கனவு’.

திரவியம் தேட, கலை செல்வங்கள் சேர்க்க அட்டுத்திக்கிலும் அலை கடல் கடக்கையில் காண்பது மாற்றம், பெல் பாட்டம் போய் ட்ரவுசர் நேரானது மாற்றம் - இருபதுக்குப் பிறகு மகன் பேசும் தத்துவங்கள் அவன் அணியும் சட்டைகள் இடைவெளி - துரத்தல் தாங்காது தன்னைத்தானே பெயர்த்து எடுத்து …… வேணாம் இது சொல்லால் புரிவதில்லை. எங்கோ ஒரு தொலைவில் ஒரு வாசகன் மனதில் கற்கள் உருளும் என்ற நம்பிக்கையில், தேனுக்காக பறந்து போகும் ஒரு வண்ணத்துப்பூச்சி வாசிக்கும் என்ற நம்பிக்கையில் காற்றின் தீராத பக்கங்களில் தன் க(வி)தையை எழுதி செல்கிறது இந்த இறகு.

அந்தக் கவிதை: இங்கே 

ஞாயிறு, ஜூன் 24, 2012

ஆனந்தி பகுதி I

Johnians! Always play the game.


காட்சி I: ஒற்றைப் பனை, செம்மணி வீதி 1982.

செம்மணி ரோட்டில் பயணித்துக்கொண்டிருந்த அந்த இரண்டு சைக்கிளும் மோன பாஷையும், மௌன பாஷையும் பேசிக்கொண்டிருந்தன. தூர ஏதாவது சயிக்கிளை கண்டதும், ஒன்று முன்னும் மற்றது பின்னும் என விலகுவதும் பின் நெருங்குவதுமாய் ஒரு நாடகம் ஒத்திகை பார்க்கப்பட்டது - யாரும் அறியாமல். பள்ளங்களில் விழுகிற போது கலகலத்தும் மீள மேடேறும் போது சிணுங்கியும் பரிபாசை பேசின. அந்த ரலி ஆண் சயிக்கில் லுமாலா பெண் சயிக்கிளிடம் அவ்வப்போ நெருங்கவும் லுமாலா அகப்படுவது போல் போக்கு காட்டி சட்டென்று விலகுவதும் எந்த சலிப்பும் இன்றி தொடர்ந்தது. கலகல என சிரித்தால் மாதிரி அதன் பெல் சத்தம் ரலியை மீள மீள வம்புக்கு இழுத்தது. உப்புக் காற்றின் வாசம் ஊர் நெருக்கத்தை உணர்த்தியதும் மெதுவாக அடங்கியது அந்த சலம்பல்.
என்னை ஏன் உனக்குப் பிடிக்கும் ?
பிரேக் கம்பிகளை அழுத்திய வாறே தோள்களைக் குலிக்கிக் கொண்டு சொன்னான்.
பச், தெரியேல்லை பிடிக்கும், அனா நிறைய.
ஊகும் காரணம் சொல்லு ? ஏன் ?
சயிக்கில் இன்னமும் வேகம் குறைந்தது. ஆழ மூச்சு விட்டன், அவளால் சூடு உணர முடிந்தது.
உன் பெயர்தான் காரணம், ஆனந்தி. ஆனந்தி எத்தனை அழகான ரம்மியமான பெயர். எல்லாக் காதலனுக்கும் அவன் காதலியின் பெயர் கவிதைதான் ஆனால் சிலருக்குத்தான் உண்மைப் பெயரே கவிதையாய் இருக்கும்.
அவள் உம் என்று முகத்தை வைத்துக் கொண்டாள்.
இவன் கலகல எனச் சிரித்துக்கொண்டே சொன்னான்.
எனக்கு எங்கட பிரின்சிப்பலைப் பிடிக்கும், அவர் பட்டப் பெயர் ஆனந்தி, அதால அந்தப் பெயரில ஒரு ஈடுபாடு. உன் பெயரும் ஆனந்தியாகப் போனதால் உன்னையும் பிடிக்கும் மேலும் ……….
அவள் முகம் சிவந்து வேட்கினாள், அவன் மேலும் என்று சொன்ன காரணம் அப்படிப் பட்டது.

நூறாவது முறையாக அந்தக் கேள்வி, அதற்க்கு பதில் சொல்லி முடிக்க அவனும் அவளும் பிரிகிற பனை வளவு வந்தது. அது ஒரு கல்லு ரோடு, அவளின் மனத்துடிப்பை புரிந்துகொண்டு லுமாலாவின் கறள் பிடித்த மட்காட் சடசட என சத்தேமேழுப்பியது. அந்த ஒழுங்கை முடுக்கில் ஒரு பனை இதை சட்டை செய்யாமல் தேமே என்று ஓங்கி வளர்ந்து நின்றது.
சில மாதங்களுக்கு முன்னர் …………

காட்சி II: 1982 வடக்கின் பெரும்போர்! யாழ் மத்திய கல்லூரி மைதானம்.



ஏறத்தாள ஒருவருடத்துக்கு முன்னர் எரிந்து அணையாத நூலகம், முனியப்பர், கோட்டை, பண்ணைக்கடல், எல்லாம் வெறித்துப் போய் இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் ‘மத்தி’யில் மத்திய கல்லூரி மைதானத்தில் நிறைந்திருந்த மனிதர்களின் முழுக் கவனத்தையும் உள்வாங்கி அந்த அராவரத்தை விழுங்கி நின்ற இரண்டு இளைஞ்ஞர்களில் ஒருவனைத் தான் கடந்த காட்சியில் சந்தித்தீர்கள்.
சில மணி நேரங்களுக்கு முன்னர்……..

அது ஒரு ஞாயிறு நண்பகல், சில பந்துகளுக்கு முன்னர்தான் பரியோவானின் நபிக்கை நட்ச்சத்திரமான ஒப்பிநிங் பட்ச்மனும் ஆட்டமிழந்து விட்டதால் மத்திய கல்லூரிக்கு வாய்ப்புகள் இன்னமும் பிரகாசமாகி விட்டது. எஞ்சி இருக்கும் பந்து வீச்சாளர்களையும், நம்பத்தக்க கல்லூரியின் டி.எஸ்.பீயும் மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி இறுதி செசனை சமாளிப்பது என்று வீரர்களும் கோச்சும் சில முக்கிய ஆசிரியர்களும், குறிப்பிடத்தக்க பழைய மாணவர்களும் ஆளுக்கொரு அபிப்பிராயத்தை சொல்லிக்கொண்டு இருந்தனர், வீரர்களுக்கான அறை களை இழந்து இருந்தது. எல்லார் முகத்திலும் கேள்விக்குறி. பிக் மேட்ச் மதிய உணவு விசேசம், பல்வகை பறப்பும் நடப்பும் சுட்டும் வறுத்தும் படைத்திருப்பார். இளம் பெடியள் நேற்று கூட மிக ஆர்வமாய் இருந்தனர், இன்று தோல்வி பயம் கவ்விக் கொள்ள உணவுக்கு செல்லும் ஆர்வமுமில்லை. ஏற்கனவே ஆட்டமிழந்து வந்து விட்டவர்கள் குற்ற உணர்ச்சியை அந்த அறையின் அமைதி இன்னமும் அதிகரித்தது. இயலாமையும் தன் மீதான வெறுப்பும் மிக ஒப்பிநிங் பட்ச்மன் பட்டை பல்லை நெருமியவாறு நிலத்தில் குத்திக்கொண்டு இருந்தார்.

வெளியில் ஒருகும்பல் கத்தத் தொடங்கியது "பாசே பசில வடே பரியோவான்…." அதற்க்கு மேல் அவர்களுக்கு கேட்க்க இஷ்டமில்லை.

உதவி தலைமை ஆசிரியர் வந்து நேரம் போகுது சாப்பிட வரச்சொன்னார், சாதரனமாயே கொஞ்சம் குத்தலாப் பேசும் அவர் இன்னமும் ஏதும் சொள்ளமுதல் வேண்டா வெறுப்பா எல்லாரும் சாப்பிட போனார்கள். விரைந்து உணவை முடித்துக் கொண்டு அதிகம் ஆருடனும் பேசாமல் மீண்டும் வீரர் அறைக்கு வந்து விட்டார்கள். அடுத்து ஆட வேண்டிய இருவரும் பாட் அணிந்து தயாராயினர். அப்ப அறைக்குள் நுழைந்த ஆளுமைக்கு பெயர் ஆனந்தராஜா - கண்ணாடி முன்வளுக்கை அமைதியும் ஆழமும் கொண்ட கண்கள். ஆட்களுடன் அறையும் எழுந்து நின்றது. என்ன சொல்லப் போகிறார் எதற்கு இங்கு வந்திருக்குறார்.

come-on guys cheer up…. we can still do it….. some people come to the filed to win, some people come for losing… but we – Johnians! Always play the game..

அறையின் எல்லா சுவர்களிலும் பட்டுத்தெறித்த அந்த வார்த்தைகள் மீண்டும் கூடத்தில் வந்து விழுந்து பரந்தது, எந்த ஒன்று அங்கு இவளவு நேரமும் இல்லாமல் இருந்தததோ அதை யாரோ குடம் குடமாய் கொணர்ந்து கொட்டினாற்ப் போல் இருந்தது. அடுத்து ஆடத்தயாரான வீரர்களில் ஒருவரான கல்லூரியின் டிஎஸ்பி கைகளை நீட்டி உரத்து சொன்னான் “Johnians! Always play the game.” அதிபர் ஆனந்தராஜா அதை பற்றிக் கொள்கிறார். அணித்தலைவர் மற்றைய வீரர்கள், குறை சொல்லும் உதவி அதிபர், பயிற்றுவிப்பாளர் எல்லாரும் ஒருங்கே கைகளை இணைத்து சேர்ந்து கோஷமிட்டனர் - Johnians! Always play the game. அந்த அறை மீண்டும் உயிர் பெற்றது…. வெளியில் இப்போ இன்னொரு கும்பல் பாடத் தொடங்கியது, மைதானத்திற்கு வர இருக்கும் துடுப்பாட்ட வீரர்களை வரவீர்க்கும் முகமாக – We will… We will… ROCK U!. தும்தும்தும் தகர ட்ரம் அதிர்ந்தது, மீண்டும் We will… We will… ROCK U!. தும்தும்தும்.

துடுப்பாட்ட வீரர்கள் கைகளை சுழற்றிக் கொண்டு களம் காணத் தயாராகுகிறார்கள், டிஎஸ்பியை அணுகிய அதிபர் அவன் தோள்களைத் தட்டி சொன்னார் – it is your day தம்பி, remember Johnians! Always play the game.

இவ்வளவு நேரமுமிருந்த குழப்பம் நீங்கி கண்களில் தீர்க்கமும் ஒளியும் தெரிய அவன் தலையை ஆமோதித்து அசைத்து சொன்னன் Johnians! Always play the game………..வசனம் முடிக்க முதல் அதிபர் திரும்பி மேல் மாடிக்கு நகர்கிறார்…. இவன் ஆனந்தி என்று காதலுடன் வாய் மொழிய வேம்படி கல்லூரி மாணவிகள் கூஊஊஊ…. என்று கத்த, பதிலுக்கு சுண்டுக்குளி மாணவிகள் இவன் பெயரை ஆர்ப்பரிக்க, வாய் ஆனந்தி என்று முணுமுணுத்ததை யாரும் கவனியாது விட…. வடக்கின் பெரும் போர் என்று வர்ணிக்கப் படும், நூற்றாண்டு பழைய பரியோவான் கல்லூரி மத்திய கல்லூரிக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின், 1982ம் ஆண்டிற்கான வருடாந்த துடுப்பாட்டப் போட்டியின் (cricket) இறுதி கட்டம் ஆரம்பமானது.


ஏறத்தாள ஒருவருடத்துக்கு முன்னர் எரிந்து அணையாத நூலகம், முனியப்பர், கோட்டை, பண்ணைக்கடல், எல்லாம் வெறித்துப் போய் இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் ‘மத்தி’யில் மத்திய கல்லூரி மைதானத்தில் நிறைந்திருந்த மனிதர்களின் முழுக் கவனத்தையும் உள்வாங்கி அந்த அராவரத்தை விழுங்கி நின்றனர் அந்த இருவரும்.

தொடரும்…….


Johnians என்பது பரியோவான் கல்லூரி மாணவர்களை குறிக்கும், பரியோவான் கல்லூரி கீதத்திலே இந்த வரிகள் வருகின்றன
Your Alma Mater's ancient name,. Johnians !Always play the game
உசாத்துணை:

வியாழன், ஜூன் 21, 2012

யாக்கைகள் கொண்டொரு யாகம் - II

முந்தய பாகம்
ஒரு தென்றல்க் காற்று
அந்த மரத்தின் ஒவ்வொரு இலைகயையும்
திருப்பிப் பார்த்ததுக்கொண்டிருந்தது.

ஒரு புது கொப்பியின்
எல்லா வரிகளிலும்
முத்து முத்தாக
கவிதை எழுத முயன்று கொண்டிருந்தான்.

நீ என்ன வேணும் எண்டாலும் எழுதிக்கொள்
என்ற அர்ப்பணிப்பில்
கொப்பியின் ரசனை தெரிந்தது.

கைகள் முயல்கள்
தலை எலி
நெஞ்சு பட்டம்
இடுப்பு சமுத்திரம்
கால்கள் வேர்கள்.

முயல்கள்
அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன
பயமா? பசியா?

எலி
திடீரெண்டு மறைவதுவும் பின் எழுவதுவும்
நிற்காமல் அலைந்துகொண்டிருந்தது.

சமுத்திரத்தில்
பௌர்ணமிகாலத்து அலை.

வேர்கள்
ஆழ ஊடுருவி
இறுகப் பற்றிக் கொண்டிருந்தன.

பட்டம்
சாய்வாகவும் குத்தாகவும்
காற்றின் போக்கில் பறந்து கொண்டிருந்தது.
தவறுகளும் செரி
தண்டனைகளும் செரி
அத்தனை இனிப்பு.

அறுபத்தி மூன்று கலைகளும்
ஒன்று சேர்ந்தது என்பதால்தான்,
பேரின்பம் கூட இதன் மீது பயம் கொள்கிறது.

சரணாகதியும் ஆட்கொள்ளலும்,
சரியை மார்க்கம்,
கிரியை மார்க்கம்,
யோக மார்க்கம்,
ஞான மார்க்கம்,
எல்லா மார்க்கத்தின் வழியும்
அததற்க்கான முக்திகளும்.
இதுவும் பேரின்பம் தான்.
ஆனால்
கடவுள் வேறு
பக்தன் வேறல்ல.

உலகில்
அதிகம் காமிக்கப் பட்டதும்
அதிகம் காமிக்கப் படாததும் – இதுதான்.

காமத்தின் பால்ப் பட்டு
அவர்கள் செய்ததெல்லாம்
காமத்துப்பாலிலும் சொல்லாதது.

முந்தய பாகம்

வெள்ளி, ஜூன் 08, 2012

தாவீது அடிகளார் புத்தகக் கடையும் Database System உம்

தாவீது அடிகளார் என்பவர் ஒரு புத்தகக்கடை துறந்தார் - தாவீது புத்தகக்கடை David Book Stores. அந்தக் கடையை எல்லாரும் DB, DB என்று அழைத்தனர். அந்தக் கடையில் கல்லாவில் இருக்கும் அடிகளார் ரொம்ப ஸ்டிரிக்டு, அதால அவரை டீமன் (daemon) எண்டு மரியாதையா அழைப்பது வழக்கம். இந்த டீமன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை ‘You Sir’, ‘You Sir’ என்று அழைப்பார் அது மருவி யூசர் (user) என்று ஆகியது, அந்த கடையில் வேலை செய்யும் எல்லாரும் வாடிக்கையாளர்களை யூசர் என்று அழைப்பது அந்தக் கடையின் வாடிக்கை ஆகி விட்டது.

புத்தகம் வாசிக்க இன்னுமொரு சாட்டு.

இந்தக் DB கடையில வாங்கி விக்குறதுதான் வேலை. Users வந்து பாத்துட்டு போவினம்(Read), வாங்கிப் போவினம்(Delete), வித்துப் போவினம்(Create), கொடுக்கல் வாங்கல்களை செரி செய்து போவினம்(Update). சில சமயங்களில் புதுதாக புத்தக வகைகளை கொணர்ந்து விப்பினம். அப்ப அதுக்கெண்டு அலுமாரியில் தட்டு ஒதுக்க வேண்டும். அலமாரிகளும் நிரம்பின பிறகு புது அலமாரி வேண்ட வேணும்.
கடையில வியாபாரம் அதிகமாகி விட்டதால பில்லு போட ஒரு மேனேஜரை நியமித்தார் அடிகள். அவர் பெயர் தீ.ரா.ஜாக்சன். இவரை வேடிக்கையா எல்லாரும் தி’ராங்’க்சக்சன் என்று அழைப்பதற்கு ஒரு காரணமும் இருக்கு. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை ராங்கு (wrong) பண்ணாம ஒழுங்கா ஒரு ஒடரில வியாபாரம் பண்ண அழைத்து செரியா கணக்கு பதிவதால் இவரை the-wrong-jackson = transaction manager என்று அழைப்பர்.

எந்தப் எழுத்தாளர் புத்தகம் எந்த அலமாரியில் இருக்கு எண்டு ஒரு அட்டவணை வைசிருப்பார் நம்ம டீமன், அதை இண்டெக்ஸ் எண்டு சொல்லுவினம். கடையில பலதும் பத்துமா புத்தகங்கள் இருக்கும் பய புள்ளைக ஆர்வமா வருவானுக அவைகளை அளந்து பாத்து யார் எதை வாசிக்கலாம், யார் எதை விக்கலாம், யார் வீட்டுக் புத்தகக் கணக்கை யார் யார் மாத்தலாம் எண்டு ஒரு முடிவை டீமன் அண்ணை எடுப்பார் இதை அக்செஸ் ரைட்ஸ் (access rights) எண்டு சங்கேதம் சொல்லுவினம். தாவீது கண்ணைக் காட்டினா கடைப் பெடியளுக்கு விளங்கிடும் யாருக்கு என்ன அக்செஸ் ரைட்ஸ் எண்டு.
மாதத்தின்  முதல் புதன் கிழமையில வருகிற அந்த இந்திய மாதாந்த சஞ்சிகைக்கு ஒரு பலத்த வரவேற்ப்பு இருக்கு, இப்படி எந்த காலத்தில எதை அதிகம் வாங்குவினம் எண்டு தெரிஞ்சு அதை கல்லாவுக்கு கிட்ட வைச்சிருப்பார் - இதை ஸ்டோர் ப்ரோசீஜர் (stored procedure) எண்டு அவை வியாபார பாணியில சொல்லுவினம்.


ராஜேஷ் குமார் நாவல்கள் தனியா சுஜாத்தா நாவல்கள் தனியா அடிக்கி இருந்தாலும் அவயிண்ட துப்பறியும் நாவல்களுக்கு மீசை முளைச்ச ராணிக்காமிஸ்களிட்ட ஒரு கிராக்கி இருந்தது, அதுக்காக அவர் இந்த கிரைம் புத்தகங்களை எல்லாம் ஜொயின்(join) பண்ணி ஒரு சீ-ஆர் கொப்பியில எழுதி வைச்சிருப்பார் - இந்த சீ-ஆர் கொப்பிய கிரைம் வியூ (view) எண்டு கடைப் பெடியள் சொல்லுவானுகள்.

இப்படி சீரும் சிறப்புமாய் புத்தகக் கடை நடத்தி இருக்க வேண்டிய தாவீது அடிகள் யாழ்ப்பாண நூலகம் எரிந்த சேதி கேட்டு பொறுக்காமல் உயிர் நீத்தார்.

                   
சமர்ப்பணம் தாவீது அடிகளார் - யாழ் நூலக எரிப்பு சேதி கேட்டு உயிர் நீத்த புத்தகக் காதலன் + புத்திஜீவி + கல்விமான்.

அர்த்தமுள்ள வலைத்தளங்கள் பற்றிய என் தகவல் தொழில்நுட்ப தொடர்பான இன்னொரு பதிவு.

வெள்ளி, ஜூன் 01, 2012

யானைக்கு மணிகட்டுவது யாரு ?



திடீரெண்டு மிக்சிங் செரியாகாம எகிறிக்கொண்டு இருந்த ஒரு நடு சாமத்தில அந்த யோசனை வந்தது. யானைக்கு மணி கட்டலாம். அட பூனை எண்டா வழமை. நம்ம ரேஞ்சுக்கு ஒரு யானைக்காவது மணி கட்டினாத்தானே செரியா இருக்கும்.

யானைக்கு மணி கட்டலாம் எண்டு வெளிக்கிட்டா யாரை துணைக்கு கூப்பிடலாம் எண்டு ஒரே குழப்பம். பூனை நாய் எண்டா கஜேந்திரன கூப்பிடலாம், யானைக்கு ஓம்பியை கூப்பிடலாம், அட நக்கலுக்கு இல்லை, அவன் வெளிய இருந்துதான் எப்பவும் ஆதரவு தருவான். நல்ல பொடியன் பலரிண்ட காதலுக்கு துணை போனவன் ஆனா நம்பேலாது திடீரெண்டு இந்தியாவுக்கு பிரதமமந்திரி ஆக்குறன் எண்டு கூட்டிக்கொண்டு போடுவான் - டேஞ்சரஸ் பெல்லோ. இத்தாலில இருந்து வந்தா விடுவானுகள் - நரி நீலமாயிருக்கெண்டு, நாமளும் பிரவுன் நரிதானே. இவனேன் எப்ப பார்த்தாலும் சனியன் சகடை கிங்கு மேக்கர் மாதிரி பேசுறான் எண்டு விளங்கேல்லை ஒரு நாய்ப் பிரியனோட பலகால சவகாசமாயிருக்கும். அட யானைக்கு மணி கட்ட வெளிக்கிட்டு வெளிஊர்க்கதைக்கு போயிட்டன்.

வேற ஒண்டுமில்லை யானைக்கு மணி கட்ட வேணும், சும்மா தானே நிக்குது ஒரு மணியை கட்டி விட்டா மணியா இருக்கும் எண்டு பாத்தன் (அட எவண்டா அவன் இசகு பிசகா யோசிக்குறது). யானைக்கு மணிகட்ட எண்டு ஒரு பேசு-புக்கு குரூப் தொடங்கலாம் எண்டு யோசிச்சன். சிக்கல் என்னெண்டா குரூப்பில யாரை சேர்க்கிறது எண்டு ஒரே குஷ்டமப்பா - அட சீ கஷ்டமப்பா. யானைகளை மட்டும் சேர்க்க சொல்லிச்சினம், சிலர் மணி செய்யுரவை எண்டுச்சினம். அப்ப யாரு மணிக் கட்டுறது - தூக்கி போட்டு மிதிச்சுதெண்டா ? மணி கட்டுறவையும் குரூப்பில வேணுமில்லை.

அப்புறம் மணியடிக்க ரெண்டு பேர், அதுக்கு ஒரு பசன் ஷோ நடத்தி, இல்லை பாட்டுப் போட்டி - சுப்பர் சிங்கர் யானை - வழகுவது எலிபன்ட் ஹவுஸ். வெண்ட யானையை கோல் ரோட்டில் குப்பை அள்ள விட்டு பிரச்சரிக்கலாம், மரம் நட வைக்கலாம், தண்ணியை யானை தும்பிக்கையில விசிறி அடிச்சா (மரத்துக்குத்தான்) டி.ஆர்.பி எகிறுமில்லை. அட இவளவு யோசிக்க முதல் குரூப்புக்கு ஒரு அட்மின் கண்டுபிடிக்கோணும். அட்மினுக்கு நிறைய வேலை – ஆட்சேர்ப்பு, ஆட்கொணர்வு, ஆக்களை தூக்குறது, கொமென்ட் மொடரேசன் ஆக மொத்ததில அந்த குரூப்புக்கு சிக்கின அடிமை - ரொம்பா நல்லவர். யாரு அதுக்கு செரியா வருவான் எண்டு மூளையைக் கசக்கி யோசிக்காம டான் எண்டு சாயியை தான் யோசிச்சனான் - ரொம்ப நல்ல பெடியன், பெரிய இடம் பில்லா படத்துக்கே பி.எம்.டபிள்யு சப்ளை பண்ணுறார் எண்டா பாருங்கோவன்.

செரி குரூப்புக்கு என்ன பேர் வைக்கலாம், யானை எண்டு வைச்சா, மணியகாரர்கள் கோவிப்பினம், மணி-யானை எண்டா எதோ தப்பா படுது. யானையும் மணியும் 2011 எண்டு வைக்கலாம் எண்டா 2010 இல செத்துபோன யானை எல்லாம் கனவில வந்து விரட்டும் - செரி யானை ரீயூனியன் எண்டு வைக்குறதா முடிவெடுத்தம். யானைக்கு மணி கட்டுறதா இல்லை யானைகளுக்கு ரீயூனியன் வைக்குறதா எண்டு ஒரு அறிக்கைப்போர் தொடங்கலாம் எண்டு கள நிலவரங்கள் தெரிவித்ததை நாங்கள் கணக்கேடுக்கேல்லை. யானை பெரிசா இருந்தா போதும் பிளிருதா எண்டது பிரச்சனை இல்லை - பிளிருற யானைக்கு மதம் வராது எண்டு ஒரு பழமொழி இருக்கல்லே.

குரூப் எண்டு தொடங்கினா நாலு பேர டாக் பண்ணி ஒரு போஸ்ட் போடனும் இல்லை கவிதை கதை கத்தரிக்காய் எண்டு வருத்தேடுக்கோணும். கொமென்ட் போடாதவங்களை சாட்டில் பிடித்து காச்சோணும், இப்பிடி நிறைய சமூக வலைத்தள அங்கீகரிக்கப்பட்ட வன்முறைகளால் வடம்பிடிச்சாத்தான் உண்டு.


திடீரெண்டு மணி வேண்டுறதில ஒரு சிக்கல் - மணிக்கு மணியைக் குறைச்சு கரும்பு வேண்டி போடச்சொல்லி ஒரு குழப்பம், நல்லகாலம் கரும்பு வளர்க்க சொல்லி எதிர்க்கேல்லை. இந்த மணிகட்டலுக்கு ஆள் சேர்க்க டாக்குத்தர்மார் ரெண்டு பேரக் கேட்டன் ஒருத்தன் ரோடு போடுரதைக் காட்டிலும் ரோடு மேல கார் உடுரதில விண்ணன், மற்றவன் மரமேருறதிலைக் காட்டிலும் மரத்திலிருந்து ஆள் இறக்குறதில, சும்மா படுத்திருந்தவனை மரத்தில ஏத்தி விடுறதில விண்ணன். இவனுகளை கூப்பிட்டா வழி கிடைக்கும் எண்டு பார்த்தா, யானையோட தமிழில்தான் கதை, அதுக்கு பனங்கிழங்கு கொடுக்கோணும் எண்டு டிமாண்டுகள் வைச்சானுகள்.

இதுசெரி வராது எண்டு கனடாவில இருக்குற மச்சானைக் கூப்பிட்டலாம் எண்டா, அவன் வானத்தில இருந்து டார்ச் அடிக்குற பயபிள்ளைகளோட (aliens) சாவகாசம் வைச்சிருக்குற ஆளு கொஞ்சம் டேக்கு மாக்கு பேர்வழி - ஆனா எதையும் ஒரு அறிவுபூர்வமா அணுகுவான். அவனைக் கேட்டா யானை எல்லாம் உண்மையில ஒரு பறக்கும் தட்டுகள் எண்டான். இதென்னடா புதுக்கதையா இருக்கு எண்டு பாத்தா, வெள்ளை யானை வாலைப்பிடித்துக்கொண்டு சொர்க்கம் போன அப்புகாமி தெரியுமா எண்டான் - அப்பத்தான் அவன் நெஸ்பிரேக் கதைகளிலேயே இன்னமும் இருக்குறான் எண்டு விளங்கிச்சுது.

அண்மைக்காலமாக யானை எக்ஸ்பேர்ட் ஆகிவரும் ஜேகேட்ட கேக்கலாம், மனுசன் பிரசண்டேசனில நித்திரை கொள்ளுரவனுகளுக்கே யானை விட்டு வேருட்டுதாம், பெரிய அம்பானி சீ அம்பாரி, அட சீ அது யானை மேல போடுற மேட்டர், அதென்னது ஆ பாகனா இருப்பார் போல. ஆனா கலர் கலரா யானை காட்டுமே, போதாக்குறைக்கு முதலிலேயே யானைய காட்டிடணும் இடைக்க புதுசா ஒரு யானை வேணாம் எண்டும். யானைக்கு மணியைக் கட்டுங்கோ எண்டா முயலைப் பிடிச்சுக்கொண்டு வந்தாலும் வரும் அதுவும் கையப் பிடிச்சு இழுத்து. செரி பரவாயில்லை எண்டு கேட்டா, சீமான் தனக்கு அரசியல் தெரியாது நீ வியாழமாற்றத்தில கேள்வியைக் கேளு சொல்லுறன் எண்டுது.

இவளவு சிக்கலோட யானைக்கு மணி கட்டத்தான் வேணுமா எண்டு என்னைக் கேட்டா நான் பூட்டின கதவை திறந்து சத்தமா சொல்லுவன் - யானைக்கு மணி கட்டுறதில இதெல்லாம் சகஜமப்பா.
டோண்டு வொரி பீ ஹப்பி.