செவ்வாய், ஜூன் 26, 2012

வெறுங்கனவும் வெறுவாயும்


அண்மையில் நண்பன் இல்லை கவிஞ்ஞன் மானுடன் (கேதா) இளவேனில் சஞ்சிகைக்காக எழுதிய கவிதை வாசிக்கும் ‘அனுபவம்’ கிட்டியது. கவிதையை அதன் ரசனைக்கேற்ப தெரிந்த சில நண்பர்களுக்கு பகிர்ந்தேன். கேதாவுக்கு நட்பு கருதி ஒரு வட்டத்துக்குள் என உணர்வுகளை சில வார்த்தைகளில் பகிர்ந்து நிறுத்திக் கொண்டேன். ஆனால் இந்தக் கவிதைக்கு முகநூலில் பின்னூட்டியவர்கள் பினைந்த பினையில் ஒரு பிசிராந்தையார் பாதுகாக்கப்பட வேண்டி இந்தச் சோழன் எழுதிக்கொள்வது.

கவிதை என்ற பெயரில் என்னை வந்து சேரும் ‘க’ ‘வி’ ‘தை’ எல்லாம் ஒருங்கே சேர்த்து வாசித்தாலும் கவிதை என்று ஆவதில்லை. சில நல்ல கவிதைகள் மனதுள் எங்கோ ஒரு மூலையில் கல்லைப் புரட்டிப்போடும் இன்னும் சில மனதையே புரட்டிப்போடும். கவிதை ஒரு கால எந்திரம் அதில் ஏறி முன்னும் பின்னும் எங்கும் பயணிக்கலாம், இறந்து போன தருணங்கள், நிகழ்ந்து கொண்டிருக்கும் தருணங்கள், இன் வர இருப்பது, வந்தால் நலம் என நினைப்பது இப்படிப் பல. இந்தக் கவிதை யந்திரம் கொண்டு காலப் பரிமாணம் மட்டுமல்ல வெளிப்பரிமாணம் மட்டுமல்ல மூன்றாவதாய் கவிஞ்ஞன் கோர்க்கும் கற்பனைகள் அழைத்து செல்லும் பரிமாணம் இன்னதென்று பெயர் சொல்ல முடியா ஒரு பரிமாணம்: பேசாப் பொருளை பேச முடிவது கவிதைக்கு மட்டுமே சாத்தியம், அல்லது கவிதை மாதிரி படைக்கப் படும் பிற கலைப் படைப்புகளுக்கு மட்டுமே.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எண்ணிலடங்கா தருணங்கள் புதைந்திருக்கும், இந்தக் கவிதை ஒவ்வொரு இளைஞனையும் தந்தை ஆகப் போற அந்த ‘இனி வரும்’ தேவ தருணத்தை தரிசிக்க அழைத்து செல்லும் அதே வேளை பின்னேயும் இட்டு செல்கிறது - புழுதி படிந்த அந்த தருணங்களில் காற்சட்டையோடு பனைமட்டையில் கிரிக்கெட் ஆடுகிற சிறுவன் அவனுக்கு ரப்பர் பந்து வாங்கித் தந்த முன்வீட்டு சண்முகலிங்கம் பிள்ளையார் பேணியில் நெற்றி பிளந்த கிருபா அண்ணை வரை இது இட்டு செல்கிறது - இரு வழிப் பயணம், ஒரே சமயத்தில் எதி எதிர் திசையில்.

இப்படி பயணிக்க வைக்கிற கவிதை கட்டாயம் சலனம் உருவாக்கும், சில தருணங்கள் கூனிக் குறுகுறுக்க வைக்கும், சில தருணங்கள் நன்றி மறந்தார்ப் போல் உணர வைக்கும், இன்னும் சில பெருமை பீடு தரும், வருந்த வைக்கும் வலி மிகு தருணங்களும் கட்டாயம் உண்டு. இங்கேயே கவிஞ்ஜன் வெற்றி பெற்று விடுகிறான் ஆனால் பாவம் கவிதை எழுதும் வரை கவிஞ்ஞன் ஞானி எழுதி முடித்தபின் அவன் ஒரு குழந்தை கிலுகிலுப்பை, சிறு இனிப்பு, முத்தம், பாராட்டு சீராட்டு என ஏங்கும் சிறு குழந்தை. ஆனால் குறுகுறுக்கும் நெஞ்சம் சமாதானம் தேடும், சும்மா இராது தன் புத்தி கொண்டு தன் தரப்பை மெய்ப்பிக்க ஆரவாரமாய் ஒரு ஆதாரம் சொல்லும் - பாவம் தான் வெற்றி பெறுகிறேன் எனத் தெரியாமல் கவிஞ்ஞன் சிணுங்கத் தொடங்குறான். வேறு சில மனங்கள் குறுகுறுப்பை ஒப்புக் கொள்ளும், அதில் சில பாவ மன்னிப்பே பரிகாரம் என்று மறந்தும் போகும், சில  இரண்டுக்கும் நடுவில் நின்று மயங்கும் - கூழும் வேணும் மீசையும் வேணும் என்ன செய்ய என்று தயங்கும்.

இராச்சியங்கள் வாங்கித்தரத் தெரிந்த சீத்தலை சாத்தனார்களுக்கு ஊரில் ‘இராசியில்லா ஒரு இராஜகுமாரன்’ என்று இளக்காரம் இருப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் எங்கிருந்தோ ஒரு நண்பன் ஆழப் பயணிப்பான் இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் தாண்டி மூன்றாம் பரிணாமத்தில் அபிமன்யுக்கான கீதைகளை கண்டு சொல்வான், கருத்துகளால் உன்னை வடிவைமைப்பதே என் தொழில் என்று காசேதும் பாராமல் கண்ணியமாய் சொல்லுவன். என்ன சொல்ல குறும்புக்காரனொருவன் புரியாத கடுப்பினிலே இது வேறேதோ அடிகோலல் என கும்மி அடிப்பான். கவிஞ்ஞர்களை கண்டு கொள்ளாத தேசம் களை இழக்கும் என்று யாரும் அவனுக்கு சொன்னதில்லை. என்ன செய்ய இலயானுக்கு ஆறுகாலா எட்டுக் காலா என்று தெரியாத ‘சொறியனிடம்’ புரியாமல் படித்த மக்காள் ஏரோப்பிளேன் ஓடின எருமைக்கு இரண்டு வாலாம்  எண்டு கதை அளக்க தவறுவதில்லை.
போய் முடிவான் எனத்தெரிந்தும் போர்க்களத்தில் புகுத்திவிட நானொன்றும் பார்த்தனில்லை” என்று தன் வீரியம் மிக்க அறிவுக்கும் கோரமான யதார்த்தத்திற்கும் நடுவில் திரிசங்கு சொர்க்கமென அந்தராடுகையை – கையாலத்தனமா, கையிலை காணமுதல் எனக்கு அது கைவருமா என்று ஒரு சாதா தகப்பன் தனக்குள் அழுவது சீரியலுக்குள் செண்டிமன்ட் தேடும் சாரிகளுக்கு விளங்க வாய்ப்பில்லை.

இதைச் சொன்னால் என்ன நினைப்பார்கள், தன்னைப் பழசென்று பகிடி பண்ணி தலைமுறை இடைவெளி கொஞ்சம் தள்ளி இரு என்பார்களோ என்று கவிஞ்ஞன் கரைந்துள்ளான். விம்மல் கேட்கிறது. தன் கனவை புரியாது செரி என்றும் பிழை என்றும் தகிக்க வைக்கும் மனிதருக்காய் பயந்து தன் வழி போகவிடுங்கள் என்று கேட்கிறான்

“என்கிணறு என் கனவு எது சரியோ எது பிழையோ”
அப்புறம் இதுக்கெல்லாம் அலட்டாமல் “இதுதான் நான்” என்கின்றான்.
கொஞ்சம் ஆசையாய் தன்னைப்போல் இன்னொருவனை தேடி எதுவோ நீ என்கின்றான்.

ஒரு தகப்பனின் நியாயமான ஆசை, மெதுவாக நிராசை ஆகிவிடும் என்று புரிகிறது - பயம் கவ்வி பற்களால் இதயம் காயம் ஆகி இரத்தம் வடிகிறது, எதுக்கும் வழி இன்றி நிற்கையிலே அக்கறைக்கு இக்கரையே பச்சை என்றார் – போடாங்…… அப்ப சொந்தக் கரையிலேயே சொகமா இருந்திருக்கலாமே ஊரில் சில காய்ஞ்ச இலைகளின் கண்ணீர் துடைத்த படி. - அட இதுக்குத்தான் வந்தமென்று இறுமாப்பும் இல்லாமல், எதுக்குத்தான் வந்தம் என்ற எதுவும் தெரியாமல், இருப்பார் ஒருபுறம் அட ஏனோ வந்துவிட்டம் எப்ப பூவாம் என்ற ஏக்கத்தில் பல பேர் வெளிய சொல்லார் அதில் சிலர் - இன்டர் நெட் செரியா இழுக்காது என்று இடைக்காட்டு மழை நனைய மறந்து விட்டோர் மனசாட்சி இது கவிதை.

ஏற்கனவே சொன்னார்ப் போல் பழசு என்பார் மாற்றம் என்பார் முகாலயனின் காலத்து முலாம் பூசுவார், உணர்ச்சிவசப்படும் அபூதிகள் என்பார் - அப்பரின் பேரில் தண்ணீர்ப் பந்தல் வைப்பதிலும் - அந்த உணர்ச்சி வசப்படுதலிலும் ஒரு சுகமிருக்கு. வீட்டில புட்டுத்தான் ஆனா என்ன பய புள்ளைக வேளியில சாப்பிட எண்டா பர்கர் விரும்புதுகள் என்பது மாற்றம், புட்டா, பாரதியா, வாலிபன் கவிதைகளா வாட் டாட் என்பது வலி இது வேறு வலி ஊரில இருந்தாலும் இந்த வலி இருக்கும் ஆனாலும் இந்தளவு வலி இருக்கா. பின்வீட்டுக் கோடியிலே வளந்து நிக்கும் வாழை, அதன் குட்டி யூரியா விருப்பம் எண்டு சொல்லுறது இடைவெளி தலைமுறையால் - பழசு இல்லை ஆழ வேர் விடு எண்டு ஆலோசனை கூறும் – இடைவெளி. ஆனால் பிடிங்கி வைச்ச ஆல்ப்ஸ் பனி  மலைத் தோட்டத்தில் முளை விட்ட வாழை பாதி ஆப்பிள் ஆகி நிப்பது வலி அது உள்ளீடற்ற ‘வெறுங் கனவு’.

திரவியம் தேட, கலை செல்வங்கள் சேர்க்க அட்டுத்திக்கிலும் அலை கடல் கடக்கையில் காண்பது மாற்றம், பெல் பாட்டம் போய் ட்ரவுசர் நேரானது மாற்றம் - இருபதுக்குப் பிறகு மகன் பேசும் தத்துவங்கள் அவன் அணியும் சட்டைகள் இடைவெளி - துரத்தல் தாங்காது தன்னைத்தானே பெயர்த்து எடுத்து …… வேணாம் இது சொல்லால் புரிவதில்லை. எங்கோ ஒரு தொலைவில் ஒரு வாசகன் மனதில் கற்கள் உருளும் என்ற நம்பிக்கையில், தேனுக்காக பறந்து போகும் ஒரு வண்ணத்துப்பூச்சி வாசிக்கும் என்ற நம்பிக்கையில் காற்றின் தீராத பக்கங்களில் தன் க(வி)தையை எழுதி செல்கிறது இந்த இறகு.

அந்தக் கவிதை: இங்கே 

19 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கவிதையின் வலியை விட அதை தப்பர்த்தம் பண்ணி கும்மி அடிபவர்கள் தரும் வலி அதிகம் :(
கேதார் உண்மையில் ஒரு வளர்ந்து வரும் கவிஞன்..கம்பன் விழாவில் ஒரு தரம் சொல்லாடல் கேட்க சந்தர்பம் கிடைத்தது..ஆச்சரியமாய் இருந்தது..
"ஆனால் பாவம் கவிதை எழுதும் வரை கவிஞ்ஞன் ஞானி எளிதி முடித்தபின் அவன் ஒரு குழந்தை கிலுகிலுப்பை, சிறு இனிப்பு, முத்தம், பாராட்டு சீராட்டு என ஏங்கும் சிறு குழந்தை. ".
உங்கள் வலியும் புரிகிறது..

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//உங்கள் வலியும் புரிகிறது..// அது கவிஞ்ஞரின் பொது வலி - மனித குலமே அப்படித்தான் - பசங்க படத்தில சொல்லுவார்களே ஒவ்வொரு உசிரும் ஒரு சின்னப் பாராட்டுக்குத்தான் ஏங்கிக் கிடக்கெண்டு. அதில் எனக்கு வெட்கமோ தயக்கமோ இல்லை. புரிந்து கொண்டதற்கு உங்கள் கூர்மையை பாராட்டலாம். ஆனால் பெயர் தெரியாத ஒருவரை எப்படிப் பாராட்ட ?

பெயரில்லா சொன்னது…

திரும்பவுமா..சொல்வதாயில்லை ..:)
dont publish not a comment

ஜேகே சொன்னது…

கேதா கவிதையை அருகில் இருந்து வாசித்து விமர்சிக்கும் பேறு பெற்ற இருவரில் நானும் ஒருவன் என்பது ப்ளஸ் பாயிண்ட் ... அதுவே பொதுவெளியில் கருத்து தெரிவிக்கும் பொது மைனஸ் ஆகிவிடுவதுமுண்டு. கவிதையும் தெரியும் பொருளை விட தெரியாத பொருளை தேடுவதே ஒரு நல்ல ரசிகனின் வேலை. தேடுவது தெரிந்துவிட்டால் வேறு ஒன்றை தேட வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு இறைத்தாலும் வற்றாகிணறு போல ஊறினால் அது கவிதை. சில நேரங்களில் கவிஞனுக்கு தெரியாமல் ஊருவதுமுண்டு. கேதாவின் இந்த கவிதை ஒரு நிலாவறை. தீரா நதி என்பார்களே .. அது

//கவிதையின் வலியை விட அதை தப்பர்த்தம் பண்ணி கும்மி அடிபவர்கள் தரும் வலி அதிகம் ://
இது கேதா சொன்னதா நீங்கள் சொன்னதா என்று தெரியவில்லை .. நல்ல கவிஞனுக்கு வலிக்காது .. கவிதை பல பாதைகளை திறந்துவிடுவதில் சந்தொஷமடையவே செய்வான். உங்கள் கவிதைகளுக்கு பலமுறை நான் முயல் பிடித்தபோது உணர்ந்திருப்பீர்கள்! இதிலே தப்பார்த்தம் என்று ஒன்றுமில்லை .. அவரவர் பார்வை தான் .. ஷ்ரோடிங்கர் பூனை தான் .. வியால மாற்றத்தில் பூனை மாட்டார் மேலும் வரும்!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

மறுப்பதற்கு இல்லை ஜேகே- இது உயர்வு தாழ்வு சொல்லல் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்டது உங்கள் அனுபவத்தையும் ஆளுமையையும் காட்டுது - இதையும் நான் கோத்து விடுரன் எண்டு சொல்ல ஒரு கூட்டம் இருக்கு என்ன செய்ய ?

///கவிதையின் வலியை விட அதை தப்பர்த்தம் பண்ணி கும்மி அடிபவர்கள் தரும் வலி அதிகம் // இது யாரோ அனானி சொன்னது - அதில் எனக்கும் உடன்பாடு உண்டு - உங்கள் டொக் டொக் நினைவிருக்கும்.

முயல் பிடிக்குறது தப்பர்த்தம் இல்லை ஆனால் முயல் மட்டும் பிடிக்குறது தப்பாட்டம் - // அருகில் இருந்து வாசித்து விமர்சிக்கும் // விளைவு.

கவிதை எழுதி முடித்த பிறகு கவிஞன் ஒரு குழந்தை என்பது உலகளாவிய பொது விதி.

பூனை என்ன நீங்கள் யானை டைனோசர் கூட எடுப்பியல் அதான் பயமே - வி.மா ஆவலுடன் எதிர் பார்க்குறேன்.

Gobi சொன்னது…

கேதாவின் கவிதைக்கான தளத்தில் பதிய என்னால் முடியவில்லை.
என்னுடைய நேர்மையான கருத்து: இதை சிலாகிக்கும் நிலையில் நான் இல்லை என்பதே. காரணம் இப்படி எல்லாம் யோசிக்க என்னால் முடியவில்லை. ஆனால் இங்கே சொன்ன வலிகள் எனக்குள் இருகின்றன, இருக்கும். ஆனால் இதுதான் சரி, இதுதான் நல்லது என்று சொல்ல ஒன்றும் இல்லை. இந்த மனப்போரட்டங்களுக்கு அடிப்படை காரணம், // பெல் பாட்டம் போய் ட்ரவுசர் நேரானது மாற்றம் - இருபதுக்குப் பிறகு மகன் பேசும் தத்துவங்கள் அவன் அணியும் சட்டைகள் இடைவெளி// இந்த மாதிரித்தான். பலவிடயங்கள் மாறும். என்னது தான் நல்ல கலாச்சாரம், இது சரியல்ல என்பது வெறும் மடமை. எமக்கு, இந்த கவிதையில் பாடியவை எல்லாம் ஈர்ப்பு. அதற்க்கு காரணம், வாழ்க்கையை, அதன் முக்கிய தருணங்களான சிறுபருவதிலும், வாலிபத்திலும் இந்த தளத்திலேயே பார்த்தோம். அது செம்மண் ஈரத்தோடு செங்குருதியில் ஒட்டிவிட்டது. வாலிபம் தாண்டி வாழ்க்கை வந்தது, சௌகரியத்தை தேடினோம், opportunity எண்டு சொன்னோம், ஊர் ஓடின ஓட்டத்தில் ஓடினோம், எதற்கு ஓடினோம், ரிஸ்க் இல்லாமல் ஒரு வாழ்வை அதுவும் நிறைய வளங்களோடு. இது தப்பு என்று சொல்வதற்கும் இல்லை. அவனவன், அவனவன் விருப்பத்தை செய்கிறான். அது அவனது தனியுரிமை.

கமலஹாசன் சொன்னது போல, நூறு வருசத்துக்கு முன், கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறினாள், ஐம்பது வருடத்திற்கு முன் கணவன் இறந்தால் மறுமணம் செய்வதே பாவம், இன்று ஒருமாதத்தில் கூட மறுமணம் நடக்கிறது. இன்னும் ஐம்பது ஆண்டுகளில் அந்த செம்மண் புழுதியில் இவன் பேரன் காலையில் சீரியல் பிரேக் பாஸ்ட் உம், லஞ்சுக்கு பீசா அல்லது பெர்கரும் கூட சாப்பிடகூடும். காலங்களும் காட்சிகளும் மாறுவது தானே. இதெல்லாம் நமது மொழியின் மீதான காதலிலோ அல்லது காலச்சாரம் மீதான பற்றிலோ இருப்பதல்ல. மனிதன் மிகவும் சுயநலமான ஒரு மிருகம், அது தனது தேவைக்கு ஏற்ப எல்லாவற்றையும் மாற்றும் அதற்க்கு காரண காரியங்களும் தேடிக்கொள்ளும். இன்னும் 30 அல்லது 40 ஆண்டுகள் உயிருடன் இருந்தால் மாற்றங்களை அசைபோடுவோம். மற்றப்படி, நமக்கு எது சந்தோசத்தை தருகிறதோ அவற்றை செய்து கொள்வோம்.

பெயரில்லா சொன்னது…

"கவிதையும் தெரியும் பொருளை விட தெரியாத பொருளை தேடுவதே ஒரு நல்ல ரசிகனின் வேலை"
படலைகாரரின் கருத்தில் ஒரு பாதியோடு நான் ஒத்துபோகிறேன் இல்லாவிட்டால் கம்பன் ராமயணதுக்கும் திருக்குறளுக்கும் உரை/பொருள் எழுதுவது நின்றிருக்கும்..ஆனால் பொருளையே மாற்றி கம்பன் ராமனை பற்றி பாடவில்லை பாடியது அகலிகையைப் பற்றி என்று உரை/பொருள் எடுப்பது தப்பு என்று தான் நான் சொல்ல வந்தது...

Sorry நான் ரசிகனுமல்ல,எழுத்தாளனுமல்ல, போகிறபோக்கில் வாசிக்கும் வாசகன் மட்டுமே ...

Mano Karan சொன்னது…

கவிதை என்பது கவிஞன் ஒருவனின் உணர்வுவெளிப்பாட்டின் ஒரு வடிவம். அதை அது எழுதப்பட்ட தளத்தில் இருந்து வாசகன் ஒருவன் வாசிக்கும்போதே அதனை முழுமையாக ரசிக்க முடியும், அதன் ஆத்மார்த்த தன்மையை உணரமுடியும். ஆனால் பல வாசகர்கள் அவ்வாறு அல்லாமல் வேறு தளத்திலுள்ள தமது பல உணர்வுகளையும் அக்கவிதை மீது ஏற்றி அதை வாசிக்கும்போது அக்கவிதை உயிரற்றதாகி தனது ஆத்மார்த்த தன்மையை இழக்கின்றது. அதுவே கேதாவின் கவிதையை வாசித்த சிலருக்கு ஏற்பட்ட குழப்பம் என்று நான் நினைக்கின்றேன். அக்கவிதை சாதாரண ஒரு தகப்பனுக்கு உள்ள ஏக்கத்தை மிக அழகாக விழுமிய முரண்பாடுகளினூடாக வெளிக்கொணர்ந்துள்ளது. அதைவிடுத்து அதன்மேல் கலாச்சார வேறுபாடுகள், மாற்றங்கள்... என வேறு தளத்தில் நின்று விமர்சிப்பது எனக்கு வேடிக்கையாக உள்ளது.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//ஆனால் இதுதான் சரி, இதுதான் நல்லது என்று சொல்ல ஒன்றும் இல்லை.// nailed it machi, exactly the same I feel. இதில் இரண்டு பக்கமுமே சப்புக் கட்டத் தேவையில்லை.

ஆனால், நீ ஊரிலே இருக்கும் போது மாற்றம் மெதுவாக நிகழும் - உன் அடுத்த சந்ததி இவ்வளவு அந்நியமாகிப் போகாது. கமலின் உதாரனத்திலேயே கூட திருமண சம்பிரதாயங்கள் மாற நிறைய னால் எடுக்கும் - ஊரில் எண்டால். அனா வெளியில் அது நீ பெயர்கிற போதே எல்லாம் மாறி நிக்கும். மெது மெதுவா கண்ணுக்கு புலப்பட மாறது ஒரே நாளில் எல்லாம் மாறி நிக்கும் - வாழ்நாளுக்கும் இதுதான் என்பது அடி வயிற்றை கவ்வும். சின்னனிலிருந்தே பழகி பார்த்து நினைத்த கனவுகள் ஒரே நாளில் நிறம் மாறிப் போவது சொல்லொணா துயர். இதில் எங்கள் விருப்பங்களுக்குள் அகப்படாது வெளியே இருந்து தள்ளிவிட்ட காரின்களும் இருப்பதால் வரும் ஒரு விரக்தி. இந்தியாவிலிருந்து, பாக்கிஸ்தானில் இருந்து, மத்திய கிழக்கில் இருந்து பரதேசம் போவதற்கும் எங்கள் துரத்தலும் ஓட்டமும் வேறு.

Ketha சொன்னது…

அண்ணை இந்த வலி எனக்கும் பரிச்சயமானது. இருந்தாலும் இந்த விவாதங்களின் தோற்றுவாயாக எனது கவிதை இருப்பதால் சில விடயங்கள் சொல்லியாக வேண்டியுள்ளது. இது ஒரு உணர்ச்சிக்குவியலாக பார்க்கப்ப்படுமானால் அது ஒரு கவிஞனாக எனது தோல்வி. இந்த தகப்பன் எண்கள் எல்லாரிடத்திலேயும் கொஞ்சமேனும் ஒளிந்திருக்கிறான். அவன் தர்க்க நியாயங்களையும், சாத்தியக்கூறுகளையும் நித்தமும் எடைபோட்டு, முடிவெடுக்கும் புத்திசாலி மூளையையும், பழைய நினைவுகள் எனும் வற்றா சுவையூற்றில் மூழ்கி திளைத்து, தன் தலைமுறைகள் அதில் மீண்டும் மூழ்கி சுவைபெற வேண்டும் எனும் கனவில் உழலும் சிறுபிள்ளை மனதையும் கொண்டிருக்கிறான். தான் நடந்த பாதைகளையும், நடக்க நினைத்த பாதைகளையும் தன் மகன் நடந்து முடிக்க வேண்டுமென்ற கனவு எல்லா தகப்பன்களிடமும் ஒளிந்திருக்கிறது.
தலைமுறை இடைவெளி தரும் வலியைவிட, மாற்றங்கள் தரும் வலியை விட, புலப்பெயர்வால் வரும் தலைமுறை மாற்றம் வேறுபட்டது. தாய்மொழி வேறு, விழுமியங்கள் வேறு. இது மாறுபட்ட தலைமுறையல்ல, புதிய தலைமுறை.

இது நடைமுறைக்கு சாத்தியமற்ற வெறுங்கனவு. கூட்டின் சுகத்தை உணரவேண்டும் என்பதற்காக எந்த பறவையும் தன் குஞ்சுகளின் சிறகுகளை பிடுங்குவதில்லை. அவை தம் போக்கில் பறந்து கூடுவரும் என்று காத்திருப்பதே சாத்தியம்.

ஜேகே சொன்னது…

கேதா .. நான் சொன்ன விஷயம் சரியாக போய் சேரவில்லை என்று நினைக்கிறேன். இது வெறும் உணர்ச்சி குவியல் இல்லை என்று தெரிந்து உணர்ச்சிகளை கொட்டியதாலேயே இந்த கவிதை சிறந்த கவிதையாகிறது. அதை புரியாமல் வேறு யாரேனும் எழுதியிருந்தால் வெறும் குப்பையாகி போய் இருக்கும் என்றே சொன்னேன் .. இதிலே எங்கே வாய் ஸ்லிப் ஆனது என்று எனக்கே புரியவில்லை! எனக்கு மட்டும் புதுசா பாஸ்?

//உதாரனத்திலேயே கூட திருமண சம்பிரதாயங்கள் மாற நிறைய னால் எடுக்கும்//
தல .. in the broader conceptல இந்த நிறைய நாள், கொஞ்ச நாள் விஷயம் பெரிய விஷயம் இல்லை. ஆனால் ஒரு தளத்துக்குள்ளே இருக்கும் போது பெரியவிஷயம். எந்த ஒரு தலைமுறை மாற்றத்துக்கும் ஒரு trigger இருக்கும். இல்லாவிட்டால் மாற்றமே இடம்பெறாது. அந்த trigger பெரிதாக போன சந்தர்ப்பங்கள் தான் "காவிரிப்பூம்பட்டினம் கடல் கோள்", மொகாலையர் வருகை(அக்பரை பற்றி சொல்ல ஆசை, ஆனால் அடிவாங்குவேன்:)), அப்புறம் ஆங்கிலேயர் .. சிலது நாமே வரவழைத்த வினை, பலது தாமாக வந்த வினை. அந்த அடிப்படையில் தான் சோழன் காலத்து தந்தை கவிதை ஒன்றை பார்க்கும் ஆவலை சொல்லியிருந்தேன். அந்த கவிதைக்கும் இந்த கவிதைக்கும் இடையில் உள்ள இடைவெளியை பார்க்கும் curiosity இந்த கவிதையை வாசித்ததால் வந்தது. ஆக அதுவும் இந்த கவிதை வாசிப்பு தளத்துக்குள்ளேயே இருக்கிறது என்பது என் அபிப்பிராயம்.

//கவிதை என்பது கவிஞன் ஒருவனின் உணர்வுவெளிப்பாட்டின் ஒரு வடிவம். அதை அது எழுதப்பட்ட தளத்தில் இருந்து வாசகன் ஒருவன் வாசிக்கும்போதே அதனை முழுமையாக ரசிக்க முடியு//
மிக தவறான கருத்து என்பது என்னுடைய அபிமானம். உதாரணத்துக்கு ஒரு மகாகவி கவிதை

மப்பன்றிக் கால மழை காணா மண்ணிலே
சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது
ஏர்ஏறாது காளை இழுக்காது,
எனினும் அந்தப்
பாறை பிளந்து பயன் விளைப்பான்
என் ஊரான்
ஆழத்து நீருக் ககழ்வான்
நாற்று
வாழத்தான் ஆவி வழங்குவான்
ஆதலால்
பொங்கி வளர்ந்து பொலிந்தது பார்
நன்னெல்லு.

இது எழுதப்பட்டது. கவிதை எழுதிய தளத்தை விட எழுதா தளத்தில் இதன் அழகு இன்னமும் மெருகேறுகிறது. கவிஞனின் தளத்தில் தான் கவிதை வாசிக்கப்படவேண்டுமென்றால் அது வெறுமனே ஒரு கவிதையே ஒழிய அதை தாண்டி ஒன்றுமில்லை. கேதாவின் கவிதை ... கண்டங்கள் பல, காலங்கள் பல தாண்டக்கூடியது.

வாலிபன் அண்ணே .. நான் "வரப்புயர" என்று எழுதவேண்டும் என்று யோசிக்க, நீங்கள் நான் ஏதோ வயலுக்கு வேலி அடைச்சு காணி பிடிக்கபோறேன் என்று நினைத்ததால் தான் முழுக்க பாட வேண்டி வந்திட்டு!

செழியன் சொன்னது…

சில கவிதைகள் அடடா நல்லாயிருக்கே!!எனத்தோன்றும்! சில எங்களுக்குள் உள்ள உணர்ச்சிகளை தட்டி எழுப்பி ஏதோ செய்யும்!!மனதை விட்டு அகல மறுக்கும்!!என்னைப் பொறுத்தவரை கேதாவின் கவிதை இரண்டாம் ரகம்!!
உங்களின் விமர்சனத்தில் கவிஞர்களுக்கேயுரிய பொங்கும் சொல்லாடல் இருக்கிறது!!

// பாவம் கவிதை எழுதும் வரை கவிஞ்ஞன் ஞானி எழுதி முடித்தபின் அவன் ஒரு குழந்தை கிலுகிலுப்பை, சிறு இனிப்பு, முத்தம், பாராட்டு சீராட்டு என ஏங்கும் சிறு குழந்தை. //
சிலருக்கு குழந்தையின் சிரிப்பை,குறும்பை ரசிக்கப் பிடிக்கும்! சிலருக்கு குழந்தையை கிள்ளி விடப் பிடிக்கும்!என்ன செய்ய!!:)

ஏ.எ.வாலிபன் சொன்னது…

சந்தோசம் கேதா நீ திரும்பவும் கவிதையாய் உன் உணர்வுகளை பதிந்து இருக்குறாய். //இது மாறுபட்ட தலைமுறையல்ல, புதிய தலைமுறை.// ஜேகே எதிர்பார்த்தமாதிரி இதை மறுக்குது.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

கவில்லை ஜேகே, நல்ல ஒரு மகா கவி கவிதை பகிர வந்ததால் முழுப் பாட்டென்ன கச்சேரியே எண்டாலும் எனக்கு ஓகே.

// in the broader conceptல இந்த நிறைய நாள், கொஞ்ச நாள் விஷயம் பெரிய விஷயம் இல்லை.// அப்படி அல்ல, பெரும் துயர்கள் எல்லாம் ஒரே மீதிரியானவை என்ற ஒரு பொதுமைப் பாடு இந்த இடத்திற்கு பொருந்தா. பூம்புகார் அழிந்த பின் அழுத அழுகை இதே மாதிரி இருக்காது - அது உள்ளூர் தந்தை இப்ப அழுது கொண்டிருப்பான்.

அண்மைக் காலமாய் உணர்ச்சி வயப்படல், உணர்வாதல் பற்றி பெரும் விமர்சனம் ஒன்று முன் வைக்கப்படுகிறது - அதில் தப்பென்ன இருக்கு எண்டு விளங்கேல்லை.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி செழியன், கேதா இன்னமும் முறையாக மினக்கட்டால் இன்னமும் நல்ல வரலாம் - சும்மா விளையாடவே இதை அவன் எடுத்துப் போவது ஜேகே நான் என நிறையப் பெருக்கு வருத்தம்.

ஜேகே சொன்னது…

//அண்மைக் காலமாய் உணர்ச்சி வயப்படல், உணர்வாதல் பற்றி பெரும் விமர்சனம் ஒன்று முன் வைக்கப்படுகிறது - அதில் தப்பென்ன இருக்கு எண்டு விளங்கேல்லை.//

உணர்ச்சி கவிதைக்கு எதிரியல்ல. "Poetry as an emotion response to the concerns which move him" என்று பாரதி கவியை பற்றி பேராசிரியர் சிவத்தம்பி "பூவரசம் வேலியும், புலுனிக் குஞ்சுகளும்" நூல் முன்னுரையில் தெரிவித்திருப்பார். நான் அதோடு ஒத்துபோகிறேன். கவிதையில் உணர்ச்சி அதற்கு மெருகு சேர்க்கும். ஆனால் அதை புரிந்தது உணர்ச்சி சேர்க்கவேண்டும் என்பது என் பார்வை. கேதா புரிந்தது செய்வதாலேயே அவனை கவிஞன் என்கிறேன். Facebook இல் இதே சாயத்தில் வந்த கவிதைகள் பலவற்றை அதன் மிகை உணர்ச்சியாலையே குப்பை என்று ஒதுக்கிவிட்டு போயிருக்கிறேன். (முன்னமேயே சொன்னது போல, நான் ஒதுக்குவதால் உலகம் அழியபோவதுமில்லை, ஆனால் அது எனக்கு அவசியம்)!

கர்ணனிடம் அத்தனை வரங்களையும் முப்பது வருஷத்துக்கு பிறகு சந்தித்து வாங்கிவிட்டு, செத்தவுடன் குய்யோ முய்யோ என்று குந்தி அழுகையில், கர்ணனுக்கு அது அங்கீகாரம் தான். குந்தியின் அழுகையிலும் நிஜம் இல்லாமல் இல்லை. ஆனால் எனக்கு சிரிப்பும் கொஞ்சம் கோபமும் தான் வருகிறது.!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//கர்ணனிடம் அத்தனை வரங்களையும் முப்பது வருஷத்துக்கு பிறகு சந்தித்து வாங்கிவிட்டு, செத்தவுடன் குய்யோ முய்யோ என்று குந்தி அழுகையில், கர்ணனுக்கு அது அங்கீகாரம் தான். குந்தியின் அழுகையிலும் நிஜம் இல்லாமல் இல்லை. ஆனால் எனக்கு சிரிப்பும் கொஞ்சம் கோபமும் தான் வருகிறது.!// செமை நச்

எஸ் சக்திவேல் சொன்னது…

கேதா கவிஞ்ஞன் இலிருந்து 'கவிஞர்' இற்குத் தாவி விட்டார். (பாஸ் பண்ணி விட்டார்), என்வே கவிஞர் கேதா என்றே அழைப்போமா?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

அட அவரை அப்படி சொன்னால் கொஞ்சம் உரிமை குறையுற மாதிரி இருக்குமே.....

கருத்துரையிடுக