சனி, மார்ச் 31, 2012

வசதிக்கான மறதி; மறதி எனும் வசதி;


போத்தலுக்குள் இருக்கும் தோய்ப்பனோடு (பயிற்றம் பணியாரம்)
ஊரின் நினைவும் குறைந்து கொண்டே போனது
நிலத்தின் கீழே விரைந்து ஓடுகிற இரயிலோடு
என் கவனமும் விரைந்து தொழிலில் கலந்து போனது
கோவில் கும்பாபிசேகம்,
சங்கட சதுர்த்தி,
எரிந்தடங்கிய தீ
எல்லாமும்.

அவ்வப்போ இணைய செய்திகள்,
facebookஇல் பகிரப்பட்ட video இக்கள்
எப்பவோவாவது சில கவிதை கதை கட்டுரைகள்
ஊரின் மங்கலான ஒரு புகைப்படத்தை நினைவுக்கு கொணரும்-
சோட்டி போட்ட பேபி மாமிகள் கடைசியாக் கையாட்டியது;
சக்திவேல் மாமாவின் பழைய ரலி சயிக்கில்;
பல்லிளித்த குதிரையில் வரும் பிள்ளையாரை,
அய்யர் வெட்டிய வாழையை-
'அரக்கன் கொன்ற பிள்ளையாராய்' வர்ணிக்கும் ஞானம் அண்ணை;
எல்லாப் படங்களிலும் மெதுவாகப் புகை படிகிறது.

மறந்து போன நண்பன்,
சாட்டில் வந்து
ஹாய் சொல்லும் போது,
அருமையாக நானும் வெட்டியாக இருக்கும் போது,
சம்பாசிக்குறோம்.
தன் மறந்துபோகும் படங்களை தூசு தட்ட முயலுகிறான்.
நிறைய நினைவு படுத்தினாலும்
பழைய காட்ச்சிகள் சில மனதில் வருமாட்டேன் என்கிறது.
இப்போ முயலுவதற்கு கூட முயல்வதில்லை.
கிரெடிட் கார்ட் மாசாமாசம் கட்டுவதற்கு மறக்க கூடாது எனும் பதட்டம் எனக்கு.

சில சமயங்களில் அந்த படங்களை
என் எழுத்தின் வழி சித்திரமாய் தீட்ட முயலுகுறேன்.
(சக்தி அண்ணையும் இதையே இப்படி சொல்லி இருக்குறார்.)

எப்போதாவது தூக்கத்தில் வரும் அந்த பழங்கனவும்
தூக்கமும்
மெதுமெதுவாய் என்னை விட்டு தொலைவுக்கு.
கண்களை விற்று தூக்கமோ,
தூக்கத்தை விட்டு கண்களையோ
கட்டாயம் வாங்கி ஆகவேண்டி இருக்கு.

முழுமை இலக்கியம்....

ஜேகே அன்னையின் கணவன் மனைவி கதை ஒட்டி எழுந்த ஒரு காரசாரமான விவாதத்தை சுற்றி வாலிபன் பண்ணிய உல்லுல்லாயி.

சக்தி அண்ணை: ஜேகே 'ங்க' இடிக்குது.

ஜேகே: என்ன கையப்பிடிச்சு இழித்தியா?

வாலிபன்: அண்ணை, முழுமைக்கு செரியா பிரதிபலிக்கோணும்.

ஜேகே: என்ன கையப்பிடிச்சு இழித்தியா?

சக்தி: ஏங்க நான் செரியத்தானே பேசுறன்.

வாலிபன்: எனக்கு அப்படித்தான் தோணுது, எதுக்கும் இன்னொருக்கா கேளுங்கோ.

மல்டி பரல் தாக்குதல்
சக்தி: பொன்னியின்செல்வன் இலக்கிய....

ஜேகே: என்ன கையப்பிடிச்சு இழித்தியா?

கேதா: "வாங்க" நம்மூர் தமிழ்தான்.

வாலிபன்: பிரச்சனை அதில்லை தம்பி, கையப்பிடிச்சு இழுக்கலாமா இல்லை காலைப் பிடிச்சு வாரலாமா..... அடச்சே நம்மளையே குழப்பிடாங்களே....

யாரோ: புளோக்கர்களுக்குள் போட்டி இருக்கலாம் இந்த மாதிரி பூசல் இருக்கப் படாது...

இன்னொருவர்: வாங்க என்பது நமது வழக்கே, நானும் அப்படித்தான் சொல்லுறனான். ஜேகே கைப்பிடித்து இழுக்கவேயில்லை.

மற்றொருவர்: எப்படி எழுதுறார் எண்டது முக்கியமில்லை என்ன எழுதுறார் என்டதுதான் முக்கியம். எதுக்கு இப்படி தேவையில்லாம சண்டை.

இலங்கைத்தமிழன்: இந்த facebook grp ஐ மறுத்து பிரசாரியுங்கோ.

வாலிபன்: அண்ணை நான் 'ங்க' பற்றி தெரியாது எண்டு சொன்னன், முழுமை பற்றி மட்டும் சொன்னன், சக்தி அண்ணனின் நோக்கம் உன்னதமானது எண்டு எனக்கு படுது, செரியும் கூட.

என்ன கையப்பிடிச்சு இழுத்துயா ?
ஜேகே:சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, என்ன கையைப்பிடித்து இழுத்தியா?

சக்தி அண்ணை: டென்சனாகி, டேய் பெடியளா, இன்னிமே என்னை ஏதாவது பஞ்சாயத்து எண்டு கூப்பிடீங்க... மவனே அப்படியே ஓடிப் போயுடுங்க. சுகந்தி எனக்கு வந்த நிலமையப் பார்த்தியா, இதான் சின்னப் பசங்களோட சேரப்படாது எண்டுறது.

கேதா: (வாலிபனிடம்) அண்ணை இந்த இந்தியத் தமிழ்....

வாலிபன்: (சோகமாக) தங்கச்சிக்கு நாய் கடிச்சுட்டுதப்பா.......

கேதா: (மிரட்சியுடன்) அண்ணை நீங்களுமா.

ஞாயிறு, மார்ச் 25, 2012

ஒரு பெரும் செயல்!

யாழ் ஐ.டி எனும் தன்னார்வு முனைப்பு அமைப்பு பற்றி என்னை தனிப்பட்ட முறையில் தெரிந்த பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். எழுத்தின் வழி மட்டும் வாலிபனை வால் பிடிக்கும் யாரவது இருப்பின், முன்பு ஒரு பதிவிலும் தொடர்பான பின்னூட்டத்திலும் யாழ் ஐ.டி பற்றி குறிப்பிட்டதை கண்டிருப்பீர். அதை அதிகம் தெரியாமல் இந்த கடிதத்தை வாசிப்பவர்கள் அதன் அறிமுகத்திற்க்காய் கிழே சொடுக்கவும்,
  1. அதிகார பூர்வ வலைத்தளம்: http://yarlithub.org/
  2. ஒரு ரசனையான அறிமுகம்: http://yarlithub.org/WhoWeAreTamil.php அல்லது http://www.padalay.com/2011/12/yarl-it-hub-silicon-valley.html
  3. இதன் கனாக் காணருடன் ஒரு நேர்முகம்: http://www.padalay.com/2012/03/01-03-2012.html
  4. ரசிகையின் அங்கலாய்ப்பு: http://www.rasikai.com/2012/03/blog-post_08.html
  5. கனவுகளுக்கான நம்பிக்கை: http://sayys365.blogspot.com.au/2012/03/yit-meet-up-analytical-game-part-2.html
  6. கேலிச்சித்திரம்: http://www.rasikai.com/2012/02/blog-post_27.html
இத்தனை (6) அழகியலுக்கும், இத்தனை காலத்திற்கும் பிறகு எழுதுவதற்கு என்ன இருக்கு, இது விட்டில்த்தனமா, வியாபாரமா, இல்லை வியாகூலமா ?
Simple, என் கண்கள் சொருக மறந்ததற்க்கும், ஒரே கனவு திரும்ப திரும்ப தொல்லை பண்ணுவதற்கும், pizza செரிக்காமல் போனதற்கும், மனச்சாட்சியுடன் ஏற்ப்பட்ட மணமுறிவுக்கும் மருந்து தேடும் முயற்சி.

YIT அல்லது இதுமாதிரியான ஆக்க முயற்சிகளை நோக்கி நீளும் எல்லாத் தமிழ்ப் பெரும் கைகளுக்கும் இந்தக் கடிதம் முகவரி இடப்படுகிறது.........

yarl it
"ஒற்றுமைக்குள் உய்யவே நாடெல்லாம் - ஒரு பெரும் செயல் செய்வாய், வா! வா! வா!"
பெரும் குழப்பத்துக்கும், மயக்கத்துக்கும் மத்தியிலே, கண்கள் நிறைய கனவும் தோள்கள் நிறைவும் தினவும் கொண்ட, மேலே நகரும் வழி தெரியாத / இல்லாத, என் ஆருயிர் பொறியியல் தம்பிகளுக்கு,
ஏறக்குறைய அதே நிலைப்பாட்டில் இருக்கும் அண்ணன் எழுதிக் கொள்வது.

எங்கெங்கே எல்லாம் தர்மம் வலுவிழந்து அதர்மம் தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் நான் அவதரிக்கிறேன் என்று கண்ணன் சொன்னதாக கீதை சொல்கிறது. இதுக்குள் இருக்கும் சடங்குகளை ஒதிக்கி விட்டு சங்கதியை பாரு. எப்பெப்போ சவால் முன் வருகிறதோ அப்பப்போ உன்னை ஹீரோ ஆக்கிக்கொள்ள (ஒரு பெரும் செயல்) ஒரு வாய்ப்பு. சவால் அதிகமாக அதிகமாக உனக்கு கிடைக்க இருக்கும் வெகுமதியும் அதிகரிக்கும் - exponentially.

தயாராகு, இத்தனை கால ஆகுதியும், இதனை கால காத்திருப்பும் வழி சமைத்து, இதோ அலிபாபா குகை, திறக்கத் தயாராக - நீ தயாராகு. குகையை தேடி மந்திரம் கற்று புதையலை வெல்ல நீ தயாராகு. கைகளை பரபர என்று தேய்த்து, கண் இடுக்கி, புத்தி ஒருகண் சேர்த்து, கால் உதைத்து ஒரு பெரும் செயல் செய, ஒரு பெரும் விழாக் கொண்டாட தயாராகு. வெற்றிக்குப்பின் சரசங்களையும் சம்பிரதாயங்களையும் வைத்துக் கொள்ளலாம். இப்போதைக்கு கிளியின் கழுத்தில் அம்பு நுனி நுழைய வேண்டிய பகுதியில் மட்டும் உன் கவனம் இருக்கட்டும்.

ஆண்டாண்டு காலமாக உன் அண்ணன், அண்ணனுக்கு அண்ணன், பாட்டன், அவன் பாட்டனுக்கு பாட்டன் எல்லாம் செய்த வித்தை தான் உன் இரத்தம் நாடி நரம்பு எல்லாம் ஊறிப்போன சித்து - இந்தக் கணக்கு. இது பப்பால ஏத்தும் வழக்கமான பம்மாத்து இல்லை; உசுப்பேத்தும், உணர்ச்சிகளை கிளற வைக்கும், உள்ளீடற்ற அரசியல் அல்ல, முறையான சான்றுகளுடனும் செரியான புள்ளிவிவரங்களுடனும் நிரூபிக்க கூடிய உன் சமூகத்தின் இயல்பு.

ஒவ்வொரு சமூகத்திற்கும் அதுக்கெண்டு தனியான இயல்பு உண்டு- அது தான் அதை சமூகமாக group selection வழி நவீன கூர்ப்பு தத்துவத்திற்கு அமைய வாழ வைத்தது. இதில் பெருமைக்கும் சிறுமைக்கும் ஆன எல்லா குணாம்சங்களும் உள்ளடக்கம்.

வாழுவியல் ஆதாரங்கள்:
உனக்கு நினைவிருக்கா, சின்ன வயதில் தேத்தண்ணி குடிக்கும் ஒரு பின்னேரம், அம்மா பகோடாவை ஆளாளுக்கு பிரித்த பகிந்த படி, வேம்பு சாமரம் வீசும் மண் முத்தம், ஊஞ்சலிலும் சூடான சீமந்துக் குந்திலும் நாங்கள் எல்லாம் தேயிலையின் வாசத்தை நுகர்ந்தபடி, என்ன பேசுவோம் எண்டு: நடிகைகளோ, நாலாம் வீட்டின் நாலு பேருக்கு தெரியாத சங்கதியோ, விரிவான நாட்டு நடப்போ அல்ல; புதிர்கள், கணக்குகள், கணக்குகள், புதிர்கள்.

ஆடுகடிக்காமல் புல்லும், புலி கடிக்காமல் ஆடும் அந்தக் கரைக்கு போவது எப்படி?; பத்துக்குள் ஒரு எண்ணை மனதுக்குள் நினைத்துக்கொள் அதை ரண்டால் பெருக்கி ரெண்டைக் கூட்டி மூன்றால் பெருக்கி கூட்டி விடை சொல் - நீ நினைத்தது இதுதானே; ஏழு நாணயங்கள் ஒரு முள்ளுத் தராசு ஒரு நாணயம் மட்டும் பளுவில் குறைவு இரண்டே தவணையில் எப்படி கண்டு பிடிப்பது. பெரும்பாலான எம்மைப் போன்ற யாழ்ப்பாணத்து சிறார்களுக்கு இந்தக் கணக்குகளும் புதிர்களும் அத்துப் படி என்பது நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியது இல்லை. ஆனால் நாஙள் இவற்றைப் பேசி நிறைய வருடங்களுக்கு பிறகு கணணி விஞ்ஞானம் கற்கும் போது, algorithm படிக்கும் போது, தொடர்ந்து இந்தத் துறையில் பணியாற்றுகையில் problem solving இன் விற்பனை விலை தெரியும் போது, இந்த அத்திவாரத்தை குடும்ப வழமைக்குள் வித்திட்டவர்களை - எங்கள் மூதைகளை - கண்மூடி பிரார்த்தித்துக் கொண்டேன்.

பின்னொரு மழை நாளில், வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு பொரித்த பருப்பு வடையும் வெறும் தேத்தண்ணியும் சுவைத்தபடி, ஊறும் நிலத்தின் மேல் சாக்கு விரித்து அதன் மேல் பாய் விரித்து, இரவிரவாய் சிமினி விளக்கு வைத்துக்கொண்டு அம்மமாவுடன் முன்னூற்றிநாலு விளையாடியது மறந்திருக்க மாட்டாய். அவவோடு விளையாடுவது இலகல்ல, துரும்பு எண்ணோணும், மேசை கவனம் வேணும், மடித்த பிடி பாக்க ஏலாது, போன பிடியில் இந்த கார்டை போட்ட படியால், டயமண்ட் ஒப்பின் பண்ணும போது களித்த படியால் ஆடித்தன் ஜெக் எங்க இருக்கெண்டு ஊகிக்க தெரியாமல் முழிக்க முடியாது. அதுவும் கணக்கு, மனக் கணக்கு - find - S algorithm / decision tree / probability : machine learning இன் அடிப்படை எல்லாம் 304, அந்த lectures முழுதும் அம்மம்மா நினைவாய், அவ்வப்போ அவ சுடும் தோய்ப்பனும்.

வேலி போடும் போது, பொங்கலுக்கு உலக்கை வைச்சு சிவப்பும் வெள்ளயுமா கோலம் போடும் போது, சயிக்கில் கம்பி, முள் முருங்கை செத்தல் பிடி -> வெடி, சாமிக்கு வாகனம் கட்டும் போது, சகடயில பெரிய திருவாசிய பலன்சு பண்ணேக்கை, லவுஸ் ஸ்பீக்கர் போட்டு கோவிந்தராஜனை அலறவிடேக்க, பழைய ரேடியோ உடைச்சு மைக் செய்யேக்க, பங்கர் வேட்டேக்க, அதுக்கு குத்தி அடுக்கி மண் மூட்டை வைச்சது, துலா, கப்பி - அதுக்கு எண்ணை விடுறது, oven இல்லாமல் கேக் சுட்ட அம்மா, tin-milk ஐ உரலில் தேய்த்து ஓப்பின் பண்ணும் வித்தை, உப்பு போட்ட ஜாம் போத்தல் விளக்கு........ எண்டு எங்களை எதோ இதுக்கே நேர்ந்து விட்ட மாதிரி நாங்கள் விஞ்ஞானமும், கணக்கும், பொறியியலும் சேர்ந்த வாழுவியலை வாழ்ந்தோம். இந்த வித்தை, இந்த சித்து எங்களுக்கு எங்கள் பாட்டிக்கு அம்மாக்கு ஆட்டுக்குட்டிக்கு எண்டு எல்லத்தரப்பிலும் சொல்லி, பயின்று, கை வந்தது. உன் நாடி நரம்பு புத்தி சித்தம் எல்லாம் ஊறிப்போன ஒன்று. இது உன் வலிவு என்பதை விட உன் இயல்பு - தயவு செய்து புரிந்துகொள்.

அனால் இந்த பழம் பெருமை, ஏறு பட்டி தலை நார் எல்லாம் merit list தாண்டி என்னத்தை செயதம் எண்டு கேக்குறியா. கவலைப் படாதே எங்கள் கனவுகள் engineering entrance குறிப்பாய் merit list என்று ஒடுக்கமானதல்ல. வைரமுத்து சொன்னப்போல
"எம் கண்களில் இருக்குற கனவும் தோள்களில் இருக்குற தினவும் ஒரு கிரகத்தையே படைக்க வல்லது".

நாடும், நாடு கடந்தும் என்ன ஒரு கிரகமே உனக்கு சொந்தமாகும் வழி சொல்கிறேன் கேள்.

ஆதாரங்கள் தொடரும்.....


ஒளி படத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா

....... ....... ...... ....... ....... ......
....... ....... ...... ....... ....... ......
வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழும சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற்றுவாய் வா வா வா
ஒற்று மைக்கு ளுய்யவே - நாடெல்லாம்
ஒருபெ ருஞ்செயல் செய்வாய் வா வா வா
- சுப்பிரமணிய பாரதி

வெள்ளி, மார்ச் 23, 2012

கருடா சவுக்கியமா ?

கருடா சவுக்கியமா ?
                                             இனி பிரச்சனை இல்லை....

அடேய் மச்சோ,

என்ன கதை ? எப்ப திரும்ப ஊருக்கு வாராய் ?
கடைசியா வரேக்கை என்னோட குருணாகல் வருவதா சொல்லி இருந்தாய், இப்பதான் பிரச்சனை முடிஞ்சுதே, பிறகு என்ன ?
திரும்பவும் அப்பா சொன்னார் அம்மா சொன்னார் எண்டு பிஸ்கற் குடுக்காத?
உன்னை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போய் தோசை சுட்டு தர நினைத்திருந்தேன், என்ட அம்மேவுக்கு தோசை சுட தெரியாது எண்டு நீ சொன்னாவாவது நம்புவாவா பார்ப்பம்.
மச்சி படிச்சுட்டு அங்கேயே செட் ஆகிடாதே, ஜார்ஜியாவில ஆளைப் பிடிச்சாலும் இங்க கூட்டிக்கொண்டு வந்துடு, நான் இங்கிலிசு படிக்கலாம் இல்லை ;).

எப்பவாவது ஒருநாள் நீ சொன்ன மாதிரி கெப்பட்டிப்பொல பற்றி படம் எடுத்து ஒஸ்கார் மாதிரி விருதுகள் வேண்டுவாய் எண்டு நம்புகிறேன். மறக்காம எனக்கு ஒரு வேசம் கொடு. உண்ட அபிமான ரஜனி படம் ஒண்டு பார்த்தனான் - ரோபோ - நல்ல முசுப்பாத்தி. எனக்கும் இப்ப அந்தாளிண்ட படங்கள் பிடிக்குது.

எங்கள் எல்லோருக்கும் சமாதானமா சேர்ந்து வாழத்தான் ஆசை, ஆனா உங்கட தலைவர் மட்டும் வேணாம். அதை விட்டுட்டு ஒன்னா வாழலாம். இப்பதான் எல்லாம் செரி ஆகிட்டுதே, இனி நாங்கள் ஒண்டா இருக்கலாம், நீ இங்கயும் நான் அங்கயும் வந்து போகலாம். முரளி மாதிரி ஒரு நல்ல ஸ்பின்னர் உங்க பக்கமிருந்து வேணும். நீ அடிக்கடி சொல்லுவியே MIT டோனி சொல்லுமாப் போல எங்கட நாட்டில இஞ்சினியர்ஸ் நிறையப் பேர், அதை செரியா பயன்படுத்தி நாட்டை முன்னேற்றணும் எண்டு. வா மச்சோ சேர்ந்து செய்யலாம்.

இப்போ முன்ன மாதிரி இல்லை, பிரச்சனை தீர்ந்துடிச்சு, சென்றி பொயின்ட் எல்லாம் எடுத்தாச்சு, கொழும்பில குண்டு வெடிக்காது, உங்க பக்கம் குண்டு போட மாட்டம். நாங்க உங்கட ஊருக்கு வரலாம், நல்லூர் கும்பிடலாம், சேர்ந்து கள்ளு குடிக்கலாம், நீ நம்ம மலைக்கு வரலாம், மானோடு விளையாடும் பௌத்த பிக்குகளையும், நீர் மட்டம் இறங்காத தாம்பாளம் இருக்கும் குகைகளில் விஷ்ணுவையும் புத்தரையும் பார்த்தபடி லயித்து இருக்கலாம். பொல் சம்பல், பொல் ரொட்டி, இடியாப்பம், சாம்பார் எல்லாம் சேர்ந்து சாப்பிடலாம்.

உங்க ஊருக்கு ரோட்டு போட்டிருக்குறம், புது புது கட்டடம் எல்லாம் கட்டுறம். ஆ இப்ப கரண்ட் கூட இருக்கே: நீ அடிக்கடி சொல்லுவியே, நீ பதினைந்து வயது வரை கரண்ட் இல்லாமல் படித்து எலக்றோனிக் இஞ்சினியர் ஆகினாய் எண்டு. இனி பிரச்சனை இல்லை.

இப்ப அண்மைக்காலமாக எங்கட நாட்டின் மீது எல்லா வெளி நாடுகளும் கண் வைக்குது. எங்களுக்குள் முண்டப் பாக்குது, ஆனா இப்பதான் நாங்க ஒண்டா சேர்ந்து முன்னேறனும். பிரச்சனை தீர்ந்த பிறகு மீண்டும் சேராமல் இருக்க பழசை இல்லாததும் போல்லாததுமாய் இட்டுக் கட்டி சொல்லுவானுகள். உலகமெல்லாம் அட்டூழியம் பண்ணும் அமெரிக்காவையோ , இல்லை எங்களை பகடை ஆக்கும் இந்தியாவையோ சுயநலம் கொண்ட சீனாவையோ நாங்கள் வேண்டாவோ நாடவோ தேவையில்லை. எங்கள் கலாச்சாரம் பண்பாடு அவர்களுக்கு புரியாது. ஏற்கனவே கொழும்பெல்லாம் கிளப்புகள், தியட்டர் எல்லாம் இந்தியப் படங்கள் எங்கள் கலாசாரத்தை சீரளிக்குது. இதை சேர்ந்து போராடோணும்.

அடுத்த முறை வரும்போதாவது, என்னோடு நாடு சுற்ற வருவோணும். கட்டாயம் வீட்டை கூப்பிட்டு பாயசம் தருவியல்ல ? அந்த உங்க ஊரு சூப் ஒண்டு சொல்லுவியே இறால், நண்டு எல்லாம் போட்டு - பாட்டெல்லாம் இருக்கெண்டுவாய், அதுவும் சாப்பிடோ ணும்.

நீ திரும்ப வருவாய் என்ற நம்பிக்கை உடன், 
பொதுவான கனவுகளுடன்,
நண்பன்,
சரக்க தனசூரிய.

பி.கு: அந்த தமிழ் பிகரு மட்டர் என்ன ஆச்சு ? விவரம் கிடைச்சுதா.

புதன், மார்ச் 21, 2012

கண் சிமிட்டும் விண்மீன்கள்


தீவிரமாக நடந்து கொண்டிருக்கும்
எல்லாப் பஞ்சாயத்தின் பின்னணியிலும்
ஒரு காதல் ஜோடியாவது
மௌன பாஷையில் பேசிக்கொண்டிருக்கும்.


வால் முளைத்த வெள்ளியின் பாச்சலைப் பற்றி
அலட்டாமல், வாலுள்ள குரங்குகள்
நாவல் பழங்களை தேடிக்கொண்டு;
கீழே ஒரு வாலில்லா ஜீவன்
குருவியின் வாயில் தனக்கான பழங்களை தேடிக் கொண்டு.

விளம்பர பதாதைகளில்
அழகு நங்கையர் எல்லாம்
என்னை காதல் (?) பார்வை பார்க்கிறார்கள்
அவ்வளவு அழகாவா இருக்குறேன் நான் ?

வெள்ளி, மார்ச் 16, 2012

காதலிக்க நேரமில்லை.

காதலிக்க நேரமில்லை.
                                          காதல் கூர்ப்படைதல்....   


கடைசியாக 
காதலிக்கலாம் என்று 
தீர்மானித்தேன் !


அதற்காக
இவ்வளவுநாளும் காதல் வேண்டம் என்று 
தவம் கொண்டிருக்கவில்லை.


இனி காதலை தேடி அலைந்தாவது 
கைப்பற்ற தீர்மானித்தேன்.


இனி கரட்டை சாப்பிட்ட பின்னர்தான் 
இந்த கழுதை நகர்வது என்று தீர்மானித்தது.


காலத்திற்கு காலம் 
சந்தைகளை மாற்றினார்கள்:
OL - AL - campus என்று...
தூரம் கூடிக்கொண்டே போனது;
வலிவும் கூடவே ஓடும் வலியும்.
கரட்டும் மாறியது,
அதன் சுவை என்றும் ஒரே மாதிரித்தான் அறிமுகப் படுத்தப்படும்.
வடிவம் மாறினாலும் வடிவு மாறவில்லை.


இது ஒரு அருமையான கார்டூன்,
புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள்
இனி காதலிக்கலாம் என்று 
தீர்மானித்தேன் !


தரம் பத்து: கல்யாணி...
நிறைந்து மலர்ந்து நிற்கும் 
நித்தியகல்யாணி செடி - அவள்;

கல்யாணி.
நிறைந்து மலர்ந்து நிற்கும் 
நித்தியகல்யாணி செடி - அவள் 
ஒரு முறை சிரித்த போது,
இனி தான் மலர்வதில்லை என்று
சத்தியம் செய்தது.


கொஞ்சம் அழகு
கொஞ்சம் அறிவு
கொஞ்சம் பண்பு
கொஞ்சம் பணிவு

கொஞ்சும் அழகு
கொஞ்சும் அறிவு
கொஞ்சும் பண்பு
கொஞ்சும் பணிவு


கல்யாணி: "உன் பெயரே கவிதை" என்ற கவிதைக்கு பொருளடக்கம்.
விசாரித்ததில் இப்போ அவள் இங்கிலாந்தில் இல்லறத்து அடக்கம்.
O/L இல் அவளை காதலித்த ராஜராஜன் 
A/L லிலேயே காணாது போனான்.
வேறு விபரம் தெரியவில்லை.


தரம் பன்னிரண்டு:
முதன் முதலில் அவளைப் பார்த்த போது 
எனக்கு அவளைப் பிடித்திருந்தது.
கதுப்புகள் கணை மூட்டின,
வயிற்றுக்குள் ஒரு ஆட்டுக்கல் உருள 
இதயம் இரத்தத்திற்கு பதிலாய் தேன் பாச்சியது.


அவளை எனக்கும் பிடித்திருந்தது.
அவளை எனக்கும் பிடித்திருந்தது என்பது 
என் 'நான்' க்கு பிடிக்கவில்லை.
அது அவளுக்கு பிடித்திருந்தது, 
அனால் அதத்தான் பிடிக்காதது போல் பண்ணினாள்.
அவளுக்கும் 'நான்' பிடித்திருந்தது.
(குசி படத்தின் ஈகோ பிடித்த கழுதை நினைவுக்கு வருதா? என்ன இல்லையா :( )


ஒரு பாடசாலைப் போட்டிக்கு வந்திருந்தாள்.
ஒரே போட்டியில் இருவரும்.
அவளுக்கு இரண்டாம் இடம்.
எனக்கு ஆறுதல்ப் பரிசுமில்லை,
ஆறுதல்ப் படுத்துவாரும் இல்லை.
ஆறவுமில்லை.


அரங்கேறிய வேறொரு நாள்,
அறுவை நிகழ்வில்,
அவள் - நான்;
அவள் சிவந்து போனாள்.
நான் வழமை போல 
அதை கண்டுகொள்ளாது என் அருவைகளோடு,
விவாதிகளுக்கான சாபம் என்று நினைக்குறேன்.
கொஞ்சம் அதிகமோ என்று இன்று குறை பட்டுக்கொண்டாலும்,
அன்று அது ஆசுவாசப்படுத்தியது.
கூட்டம் விசிலடித்தது.
அரசால் களும் புரசால் களும் ஆரம்பித்தன;
அதற்குப்பின்,
அடிக்கடி பேசிக்கொண்டோம்,
அடிக்கடி முரண் பட்டோம்.
முரண்பாடுகள் இருவரையும் 
அருகருகே 
மிக அருகருகே 
கொணர்ந்து மோத விட்டது.
மேலும் நெருங்கினோம்,
மேலும் முரண் பட்டோம்.
எனக்கும் அவளைப்போல் 
அவளோடு முரண்படுபவர்களோடும், அவளோடும் - முரண் படுவது பிடித்திருந்தது.
நாங்கள் நட்புடன் என்றோம்,
ஊர் பின்னாலே பேசியது,
நண்பர்கள் முன்னாலே சிரித்தார்கள்.


ஒரு சில மாத உறவை A/L paper class தின்று போனது.
Applied maths உம் inorganic chemistry உம் 
அவள் மறந்தே போனாள்.


A/L முடிந்த பிறகு நண்பர்கள் சொன்னார்கள்,
எனக்கு ஆறுதல் பரிசுகூட கிடைக்காத போட்டியில்,
முதல் பரிசு பெற்ற நண்பன், 
என்னோடு சேர்ந்து அவளோடு முரண் பட்ட நண்பன்,
paper class காலங்களில் அவ(ளை)லை ஞாபகம் வைத்திருந்திருக்கிறான்.


நேற்று அந்த நண்பன் தனது நாலாவது காதலியை, அல்லது நண்பியை அல்லது GFஐ அறிமுகப்படுத்தினான்.
அவளைப்பற்றி அவனிடம் கேக்க எனக்கு தயக்கம்,
அவன் எந்த வித்தியாசமும் இன்றி புதியவளின் கரம் கோர்த்து நின்றான்.

பூமி தொடர்ந்தும் சுற்றிக்கொண்டு இருந்தது.

எழுதியது: செப்டெம்பர் 2005 


பாரதியின் சுயசரிதை: பிள்ளைக் காதல்.
அன்ன பொழுதில் உற்ற கனவினை
அந்தமிழ் சொல்லில் எவ்வண்ணம் சொல்லுகேன் ?
சொன்ன தீய கனவு அங்கு துயிலிடை தோய்ந்ததன்று - நனவிடை தோய்ந்ததால்;
மென் நடை கனியின் சொற் கருவிழி, மீனி எங்கும் நறு மலர் வீசிய கன்னி என்று உறு தெய்வதம் ஒன்றினைக் கண்டு காதல் வெறியில் கலந்தனன்.

வியாழன், மார்ச் 15, 2012

ஜெனீவா

சாத்தான் வேதம் ஓதுகிறது.
சட்டம்பி ஆள் சேர்கிறார்.
பிள்ளையையும்  கிள்ளி
தொட்டிலையும் கிள்ளினவன்
களையையும் கிள்ளுவான் எண்டு
ஒரே நாள் உண்ணாவிரத்தில்
உரிமை பெற்றுத்தந்தவர்கள்
பிரமிப்பை கொடுக்குறார்கள்.
முளையைக் கிள்ளாவிட்டால் செரி என்று
இன்னமும் முனைப்பாய் அலைகிறது முத்துக்குமரன் ஆவி.

தங்களூர் சிலையைக்
காக்காத காத்தவராயன்கள்
கடல் கடந்த தலையை
மீட்காத சுந்தர பாண்டியர்கள்
கட்டும் உலையை
உடைக்க வழி தெரியாதோர்
எங்களூர் பகைக்கு
வழி சொல்வாரோ ?
அவர்கள் கலையை
வாங்குவதோடு நின்றிருக்கலாம்.

ஏறின பாண் விலையும்
ஏறப்போற பாண் விலையும்
ஆசியாக் கப்புக்குள் ஒளிந்து போக,
பழைய காயங்களும்
புதிய மருந்துகளும் பற்றிய பிரக்ஜை
நீங்களும் வெல்லலாம் ஒருகோடி என்ற
மாயைக்குள் ஒடுங்க.

பிரம்படி யார் யார் முதுகுக்கு விழும்
என்று தெரியாமலேயே
பிரம்படி பற்றி ஒரே அதிரடி.
கிரிக்கட் வெற்றிகளையும்
மனிதஉரிமை தண்டனைகளையும்
ஒப்பு நோக்கும் பட்(டின/டண)த்தார்.

குழல் ஊதி ஊதி பிதுங்கிய வாயுடன் கிருஷ்ண-பரமாத்மா,
உருண்டைக் கண்களும் செஞ்சாய உதடுகளுமாய் மன்மதன்.
போகலாமா வேணாமா எனும் குழப்பத்தில் நந்தனார்.
எழுதி எழுதி சலித்தவற்றை,
சலித்து சலித்து எழுதினவற்றை,
எழுதாமல் இருக்கும் வழி
தெரியாமல் நான்.

எது எப்படியோ,
சாமி இருப்புக்கு வந்தா
சுண்டல் கொடுத்துதானே ஆகவேணும்.
தூக்கி சுத்தின சாமிய உள்ள வைச்சு பூட்டிவிட்டு
கொடுக்கிற சுண்டல
வீட்ட கொண்டு போறதுதானே வழமை.
எங்க எல்லாரும் சேர்ந்து சொல்லுங்கோ,
............இக்கு அரோகரா.

வியாழன், மார்ச் 01, 2012

சொல்லொணா உரை: இது பதிவல்ல.

ஜேகே இந்த மூன்று பத்திகளும் தனித்தனி - வேறு வேறு கவிதை - ஆனால் 'சொல்லொணா' எனும் தலைப்புக்குள் வரும். நான் விரத்தியான ஒரு தனிமை இரவுப் பொழுதில் எழுதியது முதல் பத்தி, பின் கம்பளி, கனவு, கைகளோடு தூங்கிப்போனேன், மறுநாள் FB இல் பகிர்ந்தால் ஒரே 'உச்சு' மழை, அதன் தொடர்ச்சியாய் மற்றவற்றை வேறு பொழுதுகளில் எழுதினேன்.

பேசாப் பொருளை கவிதையில் பேசலாம் என்றால் சொல்லொணா உணர்வுகள் / விடயங்களை / துயரங்களை கவிதையில் சொல்ல நான் முயல்வது ஒன்றும் தப்போ வியப்போ இல்லையே.

கவிதைக்கு அந்தக் கவிஞ்ஞனே பொருள் சொல்லுவதன் வலி பற்றி நேற்றுத்தான் கேதா சாட்டில் கொட்டித் தீர்த்தான் - கிழக்கிந்தியக் பெரும்பான்மை விதிக் காத்து அடிச்சுக் குதறிய வலி அவனுக்கு.

நீங்கள் கிழக்கிந்தியக் கம்பனி என்கிறீர்கள், நான் விதி என்றேன், அவன் எங்களூர் பெரும்பான்மை என்றான், சிலர் தானே புயல் என்று நினைத்தாலும் ஆச்சரியப்பட முடியாது இல்லையா.கவிதையை முகூர்த்தம் பார்த்து புணராவிட்டால் இதுதான் கதியோ....

நானே கவிதைக்கு உரை சொல்வது அழகாயிராது, ஆனால் இதை (முதல் பத்தியை) FB இல் பகிர்ந்த போது ஒரு சுவாரசியமான அனுபவம் ஏற்பட்டது, அதைப் பகிர்கிறேன் :=

நண்பன் சிவா: U doing alright man??? What's ur number ? 
தொடர்ந்து என்னிடம் ஒருமணி நேரம் பேசினான். என்னை கொஞ்சம் கிளப்புக்குகளுக்கு போய்வரச் சொன்னான்.
(ஒருக்கா பெரதேனியா சுற்றுலாப் போனபோது நான் இயக்கிய படங்களிற்கு இவன்தான் இசைஅமைப்பாளன், நல்லாப் பாடுவான், தேவாரம் கல்லூரி கீதம் தாண்டி முத்தமிழ் விழா இவன் ஏன் ஏறவில்லை என்று இன்று யோசிக்கிறேன். என் இசைஅறிவு இவன் திறமை அளந்து சொல்லுமளவுக்கு இல்லை, ஆனா நாங்கள் ஒரு நாப்பது அம்பது பெடியள் செமத்தியா ரசிக்கப் பாடினான்.)

ஒரு சகோதரி சாட்டில் வந்து, நக்கலா, ஏன் பொழுது போகலையா என்று கேட்டார், என் நிலைமை சொன்னதும் வைத்தியராகி heal பண்ண முயன்றார் - வைதியருக்கே வைத்தியம் பண்ணுற மாதிரி ஒரு சிக்கலான விஷயம் -முயன்றார்.

நானே பாதிக்கப் பட்டாலும், பாதிப்புகளைப் பற்றி எழுதினாலும் இல்லை பகிடியை எழுதினாலும் எல்லாமே பகிடியாய் தான் பாக்குறானுகளோ என்று பயம் கவ்விக்கொண்டது.

நண்பன் கோபி வழமை போல பக்கத்திலைக்கு பாயசம் கேட்டான்.

நான் பலரது 'உச்'சுக்களை தவிர்க்கும் பொருட்டும் மற்றவர்க்கு உற்சாகம் தரும் பொருட்டும் இப்படி பகிர்ந்தேன் "நிஜமான பூக்களை பார்க்க கற்றுக் கொள்கிறேன் ...."

டாக்குத்தர் மனோவும் கஜனும் சூப்பர் மச்சி என்றார்கள்,

டாக்குத்தர் மனோ இப்படி சந்தோசித்தார்
"சூப்பர் மச்சி..
//அந்த அறையில் எல்லாப் பொருட்களையும் தின்று நின்றது வெறுமை!//
//நிஜமலர்களும் காகித மலர்களும்.....
இடையில் இருந்த அந்த ஒற்றை முள்ளை வெறித்தவாறு நான்//..இங்கு சொல்லப்பட்டதைவிட இதன் மூலம் வாசகனுக்குள் விரியும் சொல்லப்படாத விடயங்கள் பல.. மேலும் தொடர வாழ்த்துக்கள்.."

மனோ அந்தக் கவிதையின் பத்தியை மேலும் நீட்டி முழக்கச் சொன்னான் - அதை வலிந்து வரவழைக்க நான் ஒன்றும் பிறவிக் கவிஞன் அல்லவே.

"இதயம் கனத்தால் வருவது கவிதை......" என்றேன் நான்.

உடனே கோபி "கனத்த இதயத்துடன் தனித்திரு என்று நண்பன் மனோ சொல்லாமல் சொல்கிறான்." என்கிறான்.

சிவா: நீ தவிப்பதும், அதனால் கவிப்பதுவும் அப்படியே அதை இங்கு பதிப்பதுவும்....அதை நாங்கள் மதிப்பதுவும்.... எல்லாமே நன்றாக நடக்கிறது என்றான்.

இதற்கிடையில் சிவா இன்னொரு குண்டை தூக்கிப் போட்டான்: "இவன் போற ஸ்டைலப் பார்த்தா சோனியா காந்தியத்தான் பொண்ணா எடுக்கோணும் எண்டு" இதுக்கு கோபி வேற தன்னுடைய மூன்று+ வருட ஆராய்ச்சி அறிவைப் பயன்படுத்தி ஒரு தூபம் போட்டான் பாருங்க... அடே அப்பா ஐய்த்தலக்கடி கும்மா எண்டுற மாதிரி: " ஓ, அதுவா அந்த முள்ளு. முள்ளு என்னும் போதே புரிந்தது, ஏதோ வில்லங்கம் என்று" என்றான்.

இத்தனிக்கும் பிறகு நான் எழுதத்தான் வேணுமா என்று நினைக்கும் போது யாரவது வந்தது பப்பாவில் ஏத்த முயல நான் முருங்கை மரம் எறிவிடுவேன். ஹிஹி இது அடிக்கடி நடக்குற ஒன்று........

ஆரம்பத்தில் எனக்கு மட்டும் எழுதி மடித்து வைத்தது, ஒரு சில நண்பர்களுக்கு தெரிவு செய்து வாசித்துக் காட்டி, FB இல நோட்டுப் போட்டு, அதில் ஒரு spoof தொடர் ஹிட் ஆகி... கொஞ்சம் கிக்காகி... பலமுறை ப்ளாக் பற்றி யோசிச்சு, நேரம் மறுக்க, வாத்தியார் வெருட்ட.... ஜேகேவின் படலை என்னை புளோக்கு இழுத்து வந்தது. ஆரம்பத்தில் கமெண்டும் லைக்கும் எனக்கு போதை தந்தது, மிக விரைவில் அது சலித்தது, ஏன்? எதற்கு? யாருக்கு? இந்த வாலிபன் வேடம் - ஒரு கனத்த கேள்விக்காட்டுக்குள் தொலைந்து, எனக்கே எனக்கு எழுதுகிறேன் என்று சால்ஜாப்பு சொல்லி, மெதுவாய் விழித்த போது படிப்பில் கொஞ்சம் கவனம் குலைந்தது தெரிந்தது - அப்போ "பயணிகள் கவனிக்கவும்" - பாலகுமாரனின் சின்ராசுவை பார்த்து தெளிந்து கொண்டேன் - உங்களுக்கும் உதவும் என்று நினைக்கிறேன்.
பயணிகள் கவனிக்கவும் சின்ராசு சொன்னது:

"இதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் அனுபவம் வேணும் அக்கா. கவிதை, ரசனை, காதல், இலக்கியம் இதெல்லாம் எல்லாருக்கும் வந்துடாது அக்கா. கொஞ்சப் பேருக்குத்தான் வரும். நூத்தில பத்துப்பேர் தான் இதில மாட்டுவான். தொண்ணூறு பேர் செரிதான் போடா எண்டுவானுக. இது வந்தா நல்லாவும் இருக்கும் பாடாய்ப் படுத்தவும் செய்யும்....."            

பாலகுமாரன் உங்கள் கொல்லைப்புறத்தில் வந்ததில்லை என்று தெரிகிறது, எனக்கு அவர் சுஜாத்தாவை விட ஒருபடி மேல். நீங்கள் அதில் உடன்படத் தேவையில்லை, ஆனால் அவரை வாசித்தால் நான் சும்மா என்பதாவு உங்களுக்கு புரியும்.

இதை வாசிப்பவர்கள் யாரவது இந்த பத்து வீதத்தில் இருந்தால் நிச்சயமாய் பாலகுமாரனது இரும்புகுதிரைகள் (இரும்புக்குதிரைகள் அல்ல) வாசிக்கவும்.