வெள்ளி, ஜூன் 14, 2013

ஆய பயன்

என் கொல் ?
74.5 இக்கும்
75 இக்கும்
இடையிலான அழுத்தத்தில்
பல மாணவர்களின்
மனச்சாட்சி
நசுங்கி சாகிறது

பேசாமல்
முப்பத்தி ஐந்தை
வறுமைக் கோடாக
அறிவித்து விடலாம்

சார்பு வேகத்தையும்
சமாந்தரக் கோடுகளையும்
சப்பித் துப்பியவர்களே
முச்சந்திகளில்
பெரும்பாலும் விபத்துக்குள்ளாகிறார்கள்
என்று எனக்கு ஒருமுறை
முச்சந்தி முரளியே சொல்லி இருக்குறார்


கற்றதனால் ஆய பயன்
தலை ‘கனக்க’ தொப்பி போடுவதில்
போய் முடிகிறது - பெரும்பாலும்

சமூகப் பொறுப்பு என்பதை
பள்ளங்களுக்குள்
விழாமல் நடப்பது என்றும்
நேர்மை என்பதை
வாய்ப்புக் கிடைக்காதவரை
ஏமாற்றாமல் இருப்பது என்றும்
நாணயமாய் நடத்தல் என்பதை
நா நயமாய் பேசல் என்றும்
மொழிபெயர்க்கின்றது கல்வி

புரிதல் பற்றிய
புரிதல் இன்றியே
எல்லாவற்றையும்
புரிய வைக்க முயல்கிறது கல்வி

நல்ல புரிதல் என்பது
ரசனையான கூடலுக்குப் பின்னான
ஆழ்துயில் போல
அமைதியும் மந்தகாசமும் தரும்
ஆனால்….
அவசர அவசரமாய் படித்து
அவசர அவசரமாய் பாஸ் பண்ணி
அவசர அவசரமாய் செத்தும் போகிறோம்
இடையில் நிறைய….

அதுசெரி,
புரிந்ததா என்பதைக் காட்டிலும்
புரிந்த மாதிரி
சலம்புபவர்க்கே
விலை அதிகம்

அதனால்
புரிதல் பற்றிய
புரிதல் இன்றியே
எல்லாவற்றையும்
புரிய வைக்க முயல்கிறது
கல்வி

விளம்பரங்களின்
மயக்கத்தில்
விலை பேசும் ஆற்றலை
நாம் என்றைக்கோ
மறந்துவிட்டோம்

சமூகப் பொறுப்பு என்பதை
பள்ளங்களுக்குள்
விழாமல் நடப்பது என்றும்
நேர்மை என்பதை
வாய்ப்புக் கிடைக்காதவரை
ஏமாற்றாமல் இருப்பது என்றும்
நாணயமாய் நடத்தல் என்பதை
நா நயமாய் பேசல் என்றும்
மொழிபெயர்க்கின்றது கல்வி
நிரவப் படாத பள்ளங்களும்
அதிகமான வக்கீல்களுமாய்
கூர்க்கிறது சமூகம்

இந்த அலட்டல்கள் பற்றி பிரக்ஞ்சை இன்றி
நீயா நானாக்களில் கலந்து கொள்ளாத
சமூகப் போராளிகளும்
விளம்பரம் இல்லாத நேர்மைகளும்
நாணயமான நாக்களும்
இந்த பூமிப் பந்தெங்கிலும்
மழைப் பன்னீரை தெளித்துக் கொண்டே இருக்கின்றன.

ஞாயிறு, ஜூன் 09, 2013

நீக்கமற…

நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்ட
பள்ளிப்பருவத்து நண்பன் ஒருவனை
ஆரத் தழுவ முடியவில்லை
நெஞ்சில் நெருடுகிறது ஒரு பல்லுக்காயம்

நண்பரோடு கூடைப்பந்து
ஆடிக் களைக்கலாம் எண்டால்
ஓடி வழியும் வியர்வை
நகங்களின் கூர்மை சொல்லிச் செல்கிறது

சமூக அநீதி கண்டால் கோபம் ?
ஊகும், தள்ளிப் போகிறது
மிருதுவானவற்றோடு சேர்ந்து
நானும் மிருதுவாகிப் போனேன் போலும்.
செங்கொடி மேடைகளில்
உறுத்துப் பேச முடியாதபடி
உதடுகள் கடிபட்டுப் போய் இருக்கின்றன


நண்பர்களுடனான அதீத அரட்டை
ஆடிக்கொண்டிருக்கும் உந்தன் முத்துச்சிமிக்கியை
நினைவுக்கு கொணர்கிறது

சற்றே தாமதமாகும் அலுவலக கூட்டங்கள்
ஆவி பறந்து ஆறிப்போய்க் கொண்டிருக்கும்
ஒரு குவளை தேநீரையும்
இரு குவளைக் கண்களையும்
படம் காட்டுகின்றன

ஆடி அசைகின்ற உந்தன் பின்னல்
ஆக்சிலேற்றரோடு எந்தன் கால்களை - ஒரு
ஆசுவாச உடன்பாட்டிற்கு சம்மதிக்க வைத்திருக்கிறது

எந்தன் பருவத்தில் கொண்ட கோலமெல்லாம்
உந்தன் புருவத்தின் மையில் கரைந்து போகின்றன

அகந்தை அகற்றிய ஆத்மாவை
பரமாத்மா ஆட்கொள்ளல் போல
நான் இழந்த நிற்கும் (எந்தன்) மிச்சத்தை
நீயே முழுதும் ஆட்கொண்டிருக்குறாய்.

அடையாளம் தொலைத்த இந்த நிலையை - எல்லாரும்
அடையாளப்படுத்திக் கேலி சொல்கின்றார்
பின்னூட்டங்-களையும் விருப்பு-களையும்
தாண்டிய ஒரு வாசிப்புக்காகவே
இப்போதெல்லாம் எழுத முயல்கிறேன்

குனிந்த மர நிழலும் குனித்த புருவமும் - கண்ட பிறகு
குதிரைகளின் கனைப்பும்
நரிகளின் ஊளையும் ஒன்றே.

இதற்க்கு முன்னான என்னை
எங்கு தேடினாலும்
நீயே நிறைந்திருக்குறாய் எங்கும்

அந்த பள்ளிக்கூட ஹொக்கி அணியின் நிழல் படத்தில்
பின் வரிசையில் நடுவில் நிற்கும் இளைஞனுக்கும்
எனக்குமான வித்தியாசம் மகிழ்வையே தருகிறது
இதற்க்கு முன்னான என்னை
எங்கு தேடினாலும்
நீயே நிறைந்திருக்குறாய் எங்கும்,
நீக்கமற!

---------------------------------------------------------------------------------
இதை நான் அந்த சம்பவத்து மொன்னமே எழுதினான் எண்டு சொன்னா நம்பவா போறீங்க ?
---------------------------------------------------------------------------------