அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூன் 14, 2013

ஆய பயன்

என் கொல் ?
74.5 இக்கும்
75 இக்கும்
இடையிலான அழுத்தத்தில்
பல மாணவர்களின்
மனச்சாட்சி
நசுங்கி சாகிறது

பேசாமல்
முப்பத்தி ஐந்தை
வறுமைக் கோடாக
அறிவித்து விடலாம்

சார்பு வேகத்தையும்
சமாந்தரக் கோடுகளையும்
சப்பித் துப்பியவர்களே
முச்சந்திகளில்
பெரும்பாலும் விபத்துக்குள்ளாகிறார்கள்
என்று எனக்கு ஒருமுறை
முச்சந்தி முரளியே சொல்லி இருக்குறார்


கற்றதனால் ஆய பயன்
தலை ‘கனக்க’ தொப்பி போடுவதில்
போய் முடிகிறது - பெரும்பாலும்

சமூகப் பொறுப்பு என்பதை
பள்ளங்களுக்குள்
விழாமல் நடப்பது என்றும்
நேர்மை என்பதை
வாய்ப்புக் கிடைக்காதவரை
ஏமாற்றாமல் இருப்பது என்றும்
நாணயமாய் நடத்தல் என்பதை
நா நயமாய் பேசல் என்றும்
மொழிபெயர்க்கின்றது கல்வி

புரிதல் பற்றிய
புரிதல் இன்றியே
எல்லாவற்றையும்
புரிய வைக்க முயல்கிறது கல்வி

நல்ல புரிதல் என்பது
ரசனையான கூடலுக்குப் பின்னான
ஆழ்துயில் போல
அமைதியும் மந்தகாசமும் தரும்
ஆனால்….
அவசர அவசரமாய் படித்து
அவசர அவசரமாய் பாஸ் பண்ணி
அவசர அவசரமாய் செத்தும் போகிறோம்
இடையில் நிறைய….

அதுசெரி,
புரிந்ததா என்பதைக் காட்டிலும்
புரிந்த மாதிரி
சலம்புபவர்க்கே
விலை அதிகம்

அதனால்
புரிதல் பற்றிய
புரிதல் இன்றியே
எல்லாவற்றையும்
புரிய வைக்க முயல்கிறது
கல்வி

விளம்பரங்களின்
மயக்கத்தில்
விலை பேசும் ஆற்றலை
நாம் என்றைக்கோ
மறந்துவிட்டோம்

சமூகப் பொறுப்பு என்பதை
பள்ளங்களுக்குள்
விழாமல் நடப்பது என்றும்
நேர்மை என்பதை
வாய்ப்புக் கிடைக்காதவரை
ஏமாற்றாமல் இருப்பது என்றும்
நாணயமாய் நடத்தல் என்பதை
நா நயமாய் பேசல் என்றும்
மொழிபெயர்க்கின்றது கல்வி
நிரவப் படாத பள்ளங்களும்
அதிகமான வக்கீல்களுமாய்
கூர்க்கிறது சமூகம்

இந்த அலட்டல்கள் பற்றி பிரக்ஞ்சை இன்றி
நீயா நானாக்களில் கலந்து கொள்ளாத
சமூகப் போராளிகளும்
விளம்பரம் இல்லாத நேர்மைகளும்
நாணயமான நாக்களும்
இந்த பூமிப் பந்தெங்கிலும்
மழைப் பன்னீரை தெளித்துக் கொண்டே இருக்கின்றன.

செவ்வாய், ஜூலை 03, 2012

ஆனந்தி பகுதி III

முந்தய பாகம்

காட்சி IV: மந்திராலோசனை, 1985, அதிபர் அலுவலக அறை - பரியோவான் கல்லூரி.

அதிபர் ஆனந்தராஜா
சேர் பேசாம விட்டுடுங்கோ,

அதெப்படி சேர் இன்விடேஷன் லெட்டர் வந்திருக்கு, ப்ரோப்பேர் ரிப்ளை அனுப்ப வேணும்.

ஆனா அதுக்கு ஆமிக் காரங்களோட, வேணாம் சேர்.

ஏன் சேர் வேணாம், இட் இஸ் ஜஸ்ட் கிரிக்கெட், வாட் இஸ் ராங் இன் இட் ?

இல்லை சேர் இப்ப எக்ஸாம் வருது….

அதிபர் ஆனந்தராஜா தன் நாற்காலியில் பின்னே சாய்ந்து கொண்டார், அந்த வயதான உதவி அதிபரை கூர்ந்து பார்த்துக் கொண்டே சொன்னார், சனிக் கிழமை விளையாடக் கேட்டிருக்கு, மோர் ஓவர் கிரிக்கெட் ஹாஸ் நத்திங் டு டூ வித் எக்ஸாம்.

உதவி அதிபருக்கு எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்ற வேகம், எதோ ஒரு ஆபத்தை உணர்த்த இடது கண் துடித்துக் கொண்டிருந்தது - அவரை அது மேலும் படபடப்பாக்கியது.

மற்றயவர்கள் இதில் பேசிப் பயனில்லை என்பது போல் அமைதி காத்தார்கள்.

இந்த நேரத்திலை இது வேணாம் சேர் அடுத்த டேர்ம் வைச்சுக் கொள்ளலாம்.

கேட்ட திகதியில இருந்து இரண்டு மாசம் கழிச்சு எண்டா நல்ல இருக்காதே சேர்.

அந்த உப அதிபருக்கு இந்தக் காரணங்கள் எடு படாது என்று புரிந்திருந்தது, ஆனால் ஏதாவது ஒரு காரணத்தில அதிபரை ஒப்புக்கொள்ள வைக்க வேணும் எண்டு போராடினார்.

வேறு வழியில்லை உடைத்துப் பேச வேண்டியதுதான்,

சேர், இங்க இப்ப நிலைமை செரி இல்லை, இயக்கங்கள் பல இருக்கு அவனுகள் ஆமிக்காரனுகள் போலீச எண்டு அங்கங்கை சொறியுரானுகள், எதுக்கு வீண் பிரச்சனை.

ஆனா இது வெறும் கேம் தானே சேர், எங்களை எங்கட சனத்துக்கு நல்லத் தெரியும், ஜே.ஆர் கல்வித்திட்டத்துக்கு எதிராக் குரல் கொடுத்தது, கொழும்பில இருந்து சனம் அடிவாங்கி ஓடி வரேக்கை உதவினது எண்டு எங்கட ஸ்டாண்ட் என்ன என்பதில் ஒரு குழப்பமும் இல்லையே.

இனி வேற வழி இல்லை, கடைசி ஆயுதத்தை கையில் எடுத்தார் உபஅதிபர்.

சேர் உங்கட டிசிசன் மொத்த JHONIONS மேல ஒரு பிம்பத்தை உருவாக்கும். யோசியுங்கோ சேர், அவசரப் பட வேணாம்.

அதிபர் ஆனந்தராஜா இந்தப் பதிலால் எந்த சலனமும் அடையவில்லை, அந்த அறயில் இருந்த ஏனயவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சி, இப்படி ஒரு போட்டை உப-அதிபர் போடுவார் எண்டு அவை எதிர் பார்க்கவில்லை.

தன முன் வழுக்கை தடவிக்கொண்டு ஒரு புன்னைகையோடு அதிபர் ஆனந்தராஜா சொன்ன வார்த்தைகள்,

“Johnians! Always play the game.”



முற்று வைக்கப்பட்டது.

முந்தய பாகம்

அதிபர் C.E. ஆனந்தராஜா பரியோவான் கல்லூரியின் மறக்க முடியாத குறிப்பிடத்தக்க அதிபர், யாழ்ப்பாணத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமை மிக்க கல்வியாளர். இலங்கை இராணுவத்துடன் கல்லூரி அணி ஒரு கிரிக்கட் போட்டி விளையாட ஒப்புக் கொண்டதால் அவர் கொல்லப்பட்டார். இந்த ஜூன் மாதம் இருபத்தி ஆறாம் திகதி அவரது இருபத்திஏழம் வருட நினைவு நாள். என் செவி வழி செய்திகளை கொண்டும் இணைய உசாத்துணைகளைக் கொண்டும் இந்தக் கதையை சிருஸ்டித்துள்ளேன், தரவுகளில் ஏதும் பிழை இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் - இது என் நினைவு தெரியாத காலத்து நிகழ்வு.

குறிப்பு: Johnians என்பது பரியோவான் கல்லூரி மாணவர்களை குறிக்கும்; பரியோவான் கல்லூரி கீதத்திலே இந்த வரிகள் வருகின்றன,
Your Alma Mater's ancient name,  
Johnians !Always play the game


உசாத்துணைகள்:

ஆனந்தி பகுதி II

முந்தய பாகம்.

காட்சி – III மன மாற்றம் – 85 ம் ஆண்டு பரியோவான் கல்லூரி விளையாட்டுப் போட்டி.

அன்றைக்கு விளையாட்டுப் போட்டிக்கு போறது பற்றி கலவையான உணர்வுகளுடன் சப்பாத்தை முடிச்சுப் போட்டுக்கொண்டு இருந்த சிறுவன் இந்தக் கதையை இணைக்கிற மையப் புள்ளி. நீல நிறத்தில் ஒரு கறா காற்சட்டை மஞ்சள் டீ-சேர்ட் கருப்பு சப்பாத்து. ஒல்லியான உடல்வாகு கொஞ்சம் ஒட்டினார்போன்ற கன்னங்கள் ஆனால் அந்தப் பையனிடம் எதோ இருக்கு என்பதை அவன் சுருங்குகின்ற நெற்றியும் விரிகின்ற கண்களும் காட்டிக் கொடுத்தன.

அம்மா கெரிஎண்டு வெளிக்குடுங்கோ அண்ணா ஓட முதல் போக வேணும்.

சிரித்துக்கொண்டே அம்மா அவன் தலையை கோதிக் கொண்டு செரி வா என்று கை பிடித்து அழைத்து செல்கின்றாள்.

அண்மையில் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கும் பில்லா படம் அந்தச் சிறுவனுக்கு நிறையவே பிடித்துப் போயிற்று. அவனுக்கு மிகவும் பிடித்த ரஜனிக்காந்த் நடித்த என்ற ஒன்று மட்டுமா இல்லை வேறு காரணங்கள் உண்டா என்பது இந்தக் கதைக்கு அவளவு முக்கியமில்லை. அனால் அந்தப் படத்தில் வரும் “மை நேம் இஸ் பில்லா…” பாடல் அவனின் தற்போதைய முணுமுணுப்பு பாடல் ஆகி இருந்தது வாசகர்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். வழி நெடுக அதை பாடிக்கொண்டு எதிர்க் காற்றை தன் முடிக் கற்றைகளால் அனுபவித்துக்கொண்டு வந்தான் அந்த சிறுவன்.

அம்மா இன்னும் எவளவு தூரம் ?

கிட்டத்தான் வந்திடும்.

அங்க ஐஸ் பழம் விப்பினாமா ? எனக்கு கட்டாயம் வாங்கித் தரவேணும்.

அதெல்லாம் கூடாது என்ன தண்ணியில செயுறானுகளோ….

ஏமாற்றத்தை காட்டாது முகத்தை திருப்பிக்கொண்டு எதிரே ஓடும் தந்திக் கம்பங்களை வேறிக்குறான்…

இதுதான் அவன் பரியோவான் கல்லூரிக்கு போவது முதல் முறை. அதுவரை யாழ் இந்துக்கல்லூரிக்கு கிரிக்கெட் பார்க்க போயிருக்குறான். அல்லது யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி நடக்கும் போது அந்த மைதானத்துக்கு போயிருக்குறான். தன் தந்தை படித்த பள்ளிக்கூடம் என்பதால் யாழ் இந்து மீது ஒரு அபிமானம் உண்டு, அங்கு தன் மேற் படிப்பை கொள்ளலாம் எண்டு ஒரு எண்ணம அவனிடம் இருந்தது, அனால் அண்ணாக்கள் படிக்கும் பரியோவான் கல்லூரி இதுவே முதன் முறை பார்க்கப் போகிறான்.



ஒருவழியாக கல்லூரியை வந்தடைந்தது பேரூந்து, வெளி இருந்து பார்த்தால் கல்லூரியின் உட் கட்டமைப்பை புரிந்து கொள்ள முடியாது, அது அவன் ஆர்வத்தை அதிகரித்து. தாயின் கைகளை பிடித்து தரதர இழுத்துக்கொண்டு உள்ளே நுழைகிறான்.

இருக்கைகள் அற்ற யாழ் இந்து மைதானத்திற்க்கும் இந்த மைதானத்திற்க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. பெரிய படியமைப்பில் பவலியனும் அதற்கு குடை பிடிக்கும் மகோகனிகளும், பாக் ட்ரோப்பில் ஓல்ட் பார்க்கும், இடது புறம் ஒரே அளவில் உயர்ந்து வளர்ந்து நின்ற பெயர் தெரியாத இளம் பச்சை நிற மரங்களும், அழகாக வெட்டப் பட்ட சவுக்கு மர, குறோட்டன் அலங்காரங்களுடனான பாதை வழியும் எல்லாமே புதுசு. பெற்றோர் பழைய மாணவர்கள் இருக்க நீண்ட நீல நிற ஒயில் பெயின்ட் மரக் கதிரைகள் போட்டிருந்தார்கள். அதில் ஒரு கரையாக தாயும் மகனும் அமர்ந்து கொண்டார்கள் - பின்னால் இருந்த அந்த பழைய மண்டபம் அவனை அடிக்கடி திரும்பிப் பார்க்க வைத்தது.



மைதானத்தின் எதிர்க் கோடியில் அளவாக இருந்த ஒரு வீட்டைக் காட்டி, அதுதான் பிரின்சிப்பல் பங்களோ என்று அறிமுகப்படுத்தினார் அவன் தாயார். சினிமாவில் பார்த்த பங்களோகளினால் அதனை அவன் பங்களோ  என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கல்லூரிக் கொடி அதன் பின்னால் எல்லா இல்ல கொடிகளும் பறக்கத் தாயாராய் இருந்தன.

அம்மா பெரியண்ண எந்த ஹவுஸ் ?

“ஜோன்சன்”

சின்னண்ணா ?

சகோதரங்கள் எல்லாம் ஒரே ஹவுஸ் தானடா…

அப்பா நான் சேர்ந்தால் நானும் ஜோன்சன் ஹவுசா ?

அம்மா சிரித்துக் கொண்டே ஆமோதித்தார்.

திடீரெண்டு மைதானம் அமைதி கொண்டது, பிறகு ஒரே தாள கதியில் எல்லோரும் கை தட்டினார்கள். அவன் எழுந்து நின்று கொண்டான் - பிரின்சிப்பல் பங்களோவில் இருந்து ஒரு சில தலைகள் நகர்வது தெரிந்தது – மெதுவாக அவர்கள் உருவம் செரியாகப் புலப் பட்டது. நடுவில் அதிபர் ஆனந்தராஜா அருகில் பிரதம விருந்தினர், விளையாட்டுப் பொறுப்பாசிரியர், அத்தலட்டிக் காப்டன் மற்றும் சிலர். கை தட்டலுக்கு இசைவாய் அவர்கள் நடந்து வந்தது இவனுக்கு பிரமிப்பு ஊட்டியது - குறிப்பாய் கூட் சூட்டுடன் மிடுக்காய் கை தட்டல் தாள கதிக்கு இணங்க நடந்து வரும் அதிபர் அவன் மனம் முழுதும் வியாகபித்தார். அவன் வாய் அவனை அறியாமல் முணுமுணுத்தது - "மை நேம் இஸ் பில்லா...". அந்தத்தருணம் அவன் ஒப்புக் கொண்டான் அந்த வீடு பங்களோ தான்.

அம்மா நானும் அண்ணாவயோட படிக்கப் போறன்.

அவன் தலையை கோதிவிட்டுக் கொண்டே தாயும் புன்னகையால் ஆமோதித்தாள்.

அடுத்த பாகத்தில் முற்றும்.

ஞாயிறு, ஜூன் 24, 2012

ஆனந்தி பகுதி I

Johnians! Always play the game.


காட்சி I: ஒற்றைப் பனை, செம்மணி வீதி 1982.

செம்மணி ரோட்டில் பயணித்துக்கொண்டிருந்த அந்த இரண்டு சைக்கிளும் மோன பாஷையும், மௌன பாஷையும் பேசிக்கொண்டிருந்தன. தூர ஏதாவது சயிக்கிளை கண்டதும், ஒன்று முன்னும் மற்றது பின்னும் என விலகுவதும் பின் நெருங்குவதுமாய் ஒரு நாடகம் ஒத்திகை பார்க்கப்பட்டது - யாரும் அறியாமல். பள்ளங்களில் விழுகிற போது கலகலத்தும் மீள மேடேறும் போது சிணுங்கியும் பரிபாசை பேசின. அந்த ரலி ஆண் சயிக்கில் லுமாலா பெண் சயிக்கிளிடம் அவ்வப்போ நெருங்கவும் லுமாலா அகப்படுவது போல் போக்கு காட்டி சட்டென்று விலகுவதும் எந்த சலிப்பும் இன்றி தொடர்ந்தது. கலகல என சிரித்தால் மாதிரி அதன் பெல் சத்தம் ரலியை மீள மீள வம்புக்கு இழுத்தது. உப்புக் காற்றின் வாசம் ஊர் நெருக்கத்தை உணர்த்தியதும் மெதுவாக அடங்கியது அந்த சலம்பல்.
என்னை ஏன் உனக்குப் பிடிக்கும் ?
பிரேக் கம்பிகளை அழுத்திய வாறே தோள்களைக் குலிக்கிக் கொண்டு சொன்னான்.
பச், தெரியேல்லை பிடிக்கும், அனா நிறைய.
ஊகும் காரணம் சொல்லு ? ஏன் ?
சயிக்கில் இன்னமும் வேகம் குறைந்தது. ஆழ மூச்சு விட்டன், அவளால் சூடு உணர முடிந்தது.
உன் பெயர்தான் காரணம், ஆனந்தி. ஆனந்தி எத்தனை அழகான ரம்மியமான பெயர். எல்லாக் காதலனுக்கும் அவன் காதலியின் பெயர் கவிதைதான் ஆனால் சிலருக்குத்தான் உண்மைப் பெயரே கவிதையாய் இருக்கும்.
அவள் உம் என்று முகத்தை வைத்துக் கொண்டாள்.
இவன் கலகல எனச் சிரித்துக்கொண்டே சொன்னான்.
எனக்கு எங்கட பிரின்சிப்பலைப் பிடிக்கும், அவர் பட்டப் பெயர் ஆனந்தி, அதால அந்தப் பெயரில ஒரு ஈடுபாடு. உன் பெயரும் ஆனந்தியாகப் போனதால் உன்னையும் பிடிக்கும் மேலும் ……….
அவள் முகம் சிவந்து வேட்கினாள், அவன் மேலும் என்று சொன்ன காரணம் அப்படிப் பட்டது.

நூறாவது முறையாக அந்தக் கேள்வி, அதற்க்கு பதில் சொல்லி முடிக்க அவனும் அவளும் பிரிகிற பனை வளவு வந்தது. அது ஒரு கல்லு ரோடு, அவளின் மனத்துடிப்பை புரிந்துகொண்டு லுமாலாவின் கறள் பிடித்த மட்காட் சடசட என சத்தேமேழுப்பியது. அந்த ஒழுங்கை முடுக்கில் ஒரு பனை இதை சட்டை செய்யாமல் தேமே என்று ஓங்கி வளர்ந்து நின்றது.
சில மாதங்களுக்கு முன்னர் …………

காட்சி II: 1982 வடக்கின் பெரும்போர்! யாழ் மத்திய கல்லூரி மைதானம்.



ஏறத்தாள ஒருவருடத்துக்கு முன்னர் எரிந்து அணையாத நூலகம், முனியப்பர், கோட்டை, பண்ணைக்கடல், எல்லாம் வெறித்துப் போய் இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் ‘மத்தி’யில் மத்திய கல்லூரி மைதானத்தில் நிறைந்திருந்த மனிதர்களின் முழுக் கவனத்தையும் உள்வாங்கி அந்த அராவரத்தை விழுங்கி நின்ற இரண்டு இளைஞ்ஞர்களில் ஒருவனைத் தான் கடந்த காட்சியில் சந்தித்தீர்கள்.
சில மணி நேரங்களுக்கு முன்னர்……..

அது ஒரு ஞாயிறு நண்பகல், சில பந்துகளுக்கு முன்னர்தான் பரியோவானின் நபிக்கை நட்ச்சத்திரமான ஒப்பிநிங் பட்ச்மனும் ஆட்டமிழந்து விட்டதால் மத்திய கல்லூரிக்கு வாய்ப்புகள் இன்னமும் பிரகாசமாகி விட்டது. எஞ்சி இருக்கும் பந்து வீச்சாளர்களையும், நம்பத்தக்க கல்லூரியின் டி.எஸ்.பீயும் மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி இறுதி செசனை சமாளிப்பது என்று வீரர்களும் கோச்சும் சில முக்கிய ஆசிரியர்களும், குறிப்பிடத்தக்க பழைய மாணவர்களும் ஆளுக்கொரு அபிப்பிராயத்தை சொல்லிக்கொண்டு இருந்தனர், வீரர்களுக்கான அறை களை இழந்து இருந்தது. எல்லார் முகத்திலும் கேள்விக்குறி. பிக் மேட்ச் மதிய உணவு விசேசம், பல்வகை பறப்பும் நடப்பும் சுட்டும் வறுத்தும் படைத்திருப்பார். இளம் பெடியள் நேற்று கூட மிக ஆர்வமாய் இருந்தனர், இன்று தோல்வி பயம் கவ்விக் கொள்ள உணவுக்கு செல்லும் ஆர்வமுமில்லை. ஏற்கனவே ஆட்டமிழந்து வந்து விட்டவர்கள் குற்ற உணர்ச்சியை அந்த அறையின் அமைதி இன்னமும் அதிகரித்தது. இயலாமையும் தன் மீதான வெறுப்பும் மிக ஒப்பிநிங் பட்ச்மன் பட்டை பல்லை நெருமியவாறு நிலத்தில் குத்திக்கொண்டு இருந்தார்.

வெளியில் ஒருகும்பல் கத்தத் தொடங்கியது "பாசே பசில வடே பரியோவான்…." அதற்க்கு மேல் அவர்களுக்கு கேட்க்க இஷ்டமில்லை.

உதவி தலைமை ஆசிரியர் வந்து நேரம் போகுது சாப்பிட வரச்சொன்னார், சாதரனமாயே கொஞ்சம் குத்தலாப் பேசும் அவர் இன்னமும் ஏதும் சொள்ளமுதல் வேண்டா வெறுப்பா எல்லாரும் சாப்பிட போனார்கள். விரைந்து உணவை முடித்துக் கொண்டு அதிகம் ஆருடனும் பேசாமல் மீண்டும் வீரர் அறைக்கு வந்து விட்டார்கள். அடுத்து ஆட வேண்டிய இருவரும் பாட் அணிந்து தயாராயினர். அப்ப அறைக்குள் நுழைந்த ஆளுமைக்கு பெயர் ஆனந்தராஜா - கண்ணாடி முன்வளுக்கை அமைதியும் ஆழமும் கொண்ட கண்கள். ஆட்களுடன் அறையும் எழுந்து நின்றது. என்ன சொல்லப் போகிறார் எதற்கு இங்கு வந்திருக்குறார்.

come-on guys cheer up…. we can still do it….. some people come to the filed to win, some people come for losing… but we – Johnians! Always play the game..

அறையின் எல்லா சுவர்களிலும் பட்டுத்தெறித்த அந்த வார்த்தைகள் மீண்டும் கூடத்தில் வந்து விழுந்து பரந்தது, எந்த ஒன்று அங்கு இவளவு நேரமும் இல்லாமல் இருந்தததோ அதை யாரோ குடம் குடமாய் கொணர்ந்து கொட்டினாற்ப் போல் இருந்தது. அடுத்து ஆடத்தயாரான வீரர்களில் ஒருவரான கல்லூரியின் டிஎஸ்பி கைகளை நீட்டி உரத்து சொன்னான் “Johnians! Always play the game.” அதிபர் ஆனந்தராஜா அதை பற்றிக் கொள்கிறார். அணித்தலைவர் மற்றைய வீரர்கள், குறை சொல்லும் உதவி அதிபர், பயிற்றுவிப்பாளர் எல்லாரும் ஒருங்கே கைகளை இணைத்து சேர்ந்து கோஷமிட்டனர் - Johnians! Always play the game. அந்த அறை மீண்டும் உயிர் பெற்றது…. வெளியில் இப்போ இன்னொரு கும்பல் பாடத் தொடங்கியது, மைதானத்திற்கு வர இருக்கும் துடுப்பாட்ட வீரர்களை வரவீர்க்கும் முகமாக – We will… We will… ROCK U!. தும்தும்தும் தகர ட்ரம் அதிர்ந்தது, மீண்டும் We will… We will… ROCK U!. தும்தும்தும்.

துடுப்பாட்ட வீரர்கள் கைகளை சுழற்றிக் கொண்டு களம் காணத் தயாராகுகிறார்கள், டிஎஸ்பியை அணுகிய அதிபர் அவன் தோள்களைத் தட்டி சொன்னார் – it is your day தம்பி, remember Johnians! Always play the game.

இவ்வளவு நேரமுமிருந்த குழப்பம் நீங்கி கண்களில் தீர்க்கமும் ஒளியும் தெரிய அவன் தலையை ஆமோதித்து அசைத்து சொன்னன் Johnians! Always play the game………..வசனம் முடிக்க முதல் அதிபர் திரும்பி மேல் மாடிக்கு நகர்கிறார்…. இவன் ஆனந்தி என்று காதலுடன் வாய் மொழிய வேம்படி கல்லூரி மாணவிகள் கூஊஊஊ…. என்று கத்த, பதிலுக்கு சுண்டுக்குளி மாணவிகள் இவன் பெயரை ஆர்ப்பரிக்க, வாய் ஆனந்தி என்று முணுமுணுத்ததை யாரும் கவனியாது விட…. வடக்கின் பெரும் போர் என்று வர்ணிக்கப் படும், நூற்றாண்டு பழைய பரியோவான் கல்லூரி மத்திய கல்லூரிக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின், 1982ம் ஆண்டிற்கான வருடாந்த துடுப்பாட்டப் போட்டியின் (cricket) இறுதி கட்டம் ஆரம்பமானது.


ஏறத்தாள ஒருவருடத்துக்கு முன்னர் எரிந்து அணையாத நூலகம், முனியப்பர், கோட்டை, பண்ணைக்கடல், எல்லாம் வெறித்துப் போய் இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் ‘மத்தி’யில் மத்திய கல்லூரி மைதானத்தில் நிறைந்திருந்த மனிதர்களின் முழுக் கவனத்தையும் உள்வாங்கி அந்த அராவரத்தை விழுங்கி நின்றனர் அந்த இருவரும்.

தொடரும்…….


Johnians என்பது பரியோவான் கல்லூரி மாணவர்களை குறிக்கும், பரியோவான் கல்லூரி கீதத்திலே இந்த வரிகள் வருகின்றன
Your Alma Mater's ancient name,. Johnians !Always play the game
உசாத்துணை:

வெள்ளி, மே 04, 2012

ஒரு போராளியின் கதை - II: தேரை நினைவு

முந்தய பாகம்
ஒரு போராளியின் கதை: பகுதி இரண்டு -தேரை நினைவு.




ஊருக்குப் போய்ப் பார்த்தா உற்றாரில் சிலரில்லை
வீட்டுக்கு போய்ப் பார்த்தா உத்தரத்தில் மீதியில்லை
பேருக்கு கூட கோயில் கோபுரத்தில் மிச்சமில்லை
ஆட்டுக்கு மட்டும் கொம்பென்னும் இளைக்கவில்லை


உற்றாரில்லாட்டியும் உறவென்னும் மிச்சமிருக்கு
உத்தரமில்லாட்டியும் நாய்க்கென்னும் சோறிருக்கு
கோபுரம் இல்லாட்டியும் குயில மணி ஓயவில்லை
கொம்பு இளைக்காத்தால வீம்பென்னும் போகவில்லை






காடு மேடு போன கால்கள் கன்னியை தேடுது
நித்திரை மறந்த கண்கள் அவள் சித்திரத்தை தேடுது
கடும்பாறை மனசு வெடிச்சு பூ ஒன்று பூத்தது - அவள்
நினைவில ஒன்று எந்தன் நினைவலையில் வந்தது


அவள் நினைவில ஒன்று எந்தன் நினைவலையில் வந்தது
கடும்பாறை மனசு வெடிச்சு பூ ஒன்று பூத்தது.


நினைவில் பூத்த பூ

தோகை மயிலவள் தொலையாமல் இருப்பாளோ? - இல்லை
போர் மேகம் வந்ததனால் தொலைவுக்குப் போனாளோ?
நாகை கருங்கூந்தல் நரையோடி இருக்குமோ?
கார்மேகம் என (என்னை) இன்னும் எண்ணி இருப்பாளோ?


தோகை மயிலவள் தொலையாமல் இருப்பாளோ?
கார்மேகம் என என்னை எண்ணி இருப்பாளோ?


பிள்ளைப் பராயம் கல்வியோடு போகவில்லை
விடலைப் பருவம் விரும்பியபடி அமையவில்லை
காளைப் பருவமது கடும் யுத்தம் புரிந்தபடி
கடைசிப் பருவம் அவள் கனவுகளில் கழியட்டும்.




தாய் மண்ணை தனயர் நாம் சுமந்திட்ட வரலாறு
பத்து மாதமல்ல பயிற்ரிரண்டு வருடங்களாய்: கரு வயிற்றில் - அந்தப்
புந்தி உடைத்து புகழ் கொண்டார் உலகமெல்லாம் - அந்தப்
பந்திக்குப் போகமால் குளவி செய்வீரோ அக்குருதி ?


பாரெல்லாம் பரந்தவனே - இந்தப்
போராளியின் கதை கேட்டாயா ?
கார் மேக வண்ணா - இனி
போராடா வருவாயா ?


கார் மேக வண்ணா - 
இனிப்போர் ஆட, வருவாயா ?

இனிப் போராடலாம்......


அடுத்த பாகத்தில் போராடலாம் இனி.

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

ஒரு போராளியின் கதை.


"நான் கவிதை எழுதி நிறைய நாளாயிட்டுது" எண்டு கடந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். இன்னமும் நான் ஏதும் அண்மையில் கவிதையாய் எழுதவில்லை. இது ஒரு பழங்கவிதை. எழுதி பல வருடங்கள் இருக்கும்.
இன்னமும் நான் எழுதியதில் முழுமையான கவிதை என்று நம்பும் ஒரு சிலவில் இது ஒன்று.


எனக்கு கவிதை என்பது
பிள்ளையார் பிடிக்கிற மாதிரி
பிள்ளையார் தவிர வேறு
எல்லார் மாதிரியும் வரும்
நான் எதை பிடிக்க முயன்றேன்
என்பதை சொல்லாத வரை
எல்லாம் கவிதை என்று
நம்ப சிலர் இருக்குறீர்கள் என்ற நபிக்கையுடன்.
இது ஒரு போராளியின் காதல் கதை!

வெள்ளி, மார்ச் 23, 2012

கருடா சவுக்கியமா ?

கருடா சவுக்கியமா ?
                                             இனி பிரச்சனை இல்லை....

அடேய் மச்சோ,

என்ன கதை ? எப்ப திரும்ப ஊருக்கு வாராய் ?
கடைசியா வரேக்கை என்னோட குருணாகல் வருவதா சொல்லி இருந்தாய், இப்பதான் பிரச்சனை முடிஞ்சுதே, பிறகு என்ன ?
திரும்பவும் அப்பா சொன்னார் அம்மா சொன்னார் எண்டு பிஸ்கற் குடுக்காத?
உன்னை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போய் தோசை சுட்டு தர நினைத்திருந்தேன், என்ட அம்மேவுக்கு தோசை சுட தெரியாது எண்டு நீ சொன்னாவாவது நம்புவாவா பார்ப்பம்.
மச்சி படிச்சுட்டு அங்கேயே செட் ஆகிடாதே, ஜார்ஜியாவில ஆளைப் பிடிச்சாலும் இங்க கூட்டிக்கொண்டு வந்துடு, நான் இங்கிலிசு படிக்கலாம் இல்லை ;).

எப்பவாவது ஒருநாள் நீ சொன்ன மாதிரி கெப்பட்டிப்பொல பற்றி படம் எடுத்து ஒஸ்கார் மாதிரி விருதுகள் வேண்டுவாய் எண்டு நம்புகிறேன். மறக்காம எனக்கு ஒரு வேசம் கொடு. உண்ட அபிமான ரஜனி படம் ஒண்டு பார்த்தனான் - ரோபோ - நல்ல முசுப்பாத்தி. எனக்கும் இப்ப அந்தாளிண்ட படங்கள் பிடிக்குது.

எங்கள் எல்லோருக்கும் சமாதானமா சேர்ந்து வாழத்தான் ஆசை, ஆனா உங்கட தலைவர் மட்டும் வேணாம். அதை விட்டுட்டு ஒன்னா வாழலாம். இப்பதான் எல்லாம் செரி ஆகிட்டுதே, இனி நாங்கள் ஒண்டா இருக்கலாம், நீ இங்கயும் நான் அங்கயும் வந்து போகலாம். முரளி மாதிரி ஒரு நல்ல ஸ்பின்னர் உங்க பக்கமிருந்து வேணும். நீ அடிக்கடி சொல்லுவியே MIT டோனி சொல்லுமாப் போல எங்கட நாட்டில இஞ்சினியர்ஸ் நிறையப் பேர், அதை செரியா பயன்படுத்தி நாட்டை முன்னேற்றணும் எண்டு. வா மச்சோ சேர்ந்து செய்யலாம்.

இப்போ முன்ன மாதிரி இல்லை, பிரச்சனை தீர்ந்துடிச்சு, சென்றி பொயின்ட் எல்லாம் எடுத்தாச்சு, கொழும்பில குண்டு வெடிக்காது, உங்க பக்கம் குண்டு போட மாட்டம். நாங்க உங்கட ஊருக்கு வரலாம், நல்லூர் கும்பிடலாம், சேர்ந்து கள்ளு குடிக்கலாம், நீ நம்ம மலைக்கு வரலாம், மானோடு விளையாடும் பௌத்த பிக்குகளையும், நீர் மட்டம் இறங்காத தாம்பாளம் இருக்கும் குகைகளில் விஷ்ணுவையும் புத்தரையும் பார்த்தபடி லயித்து இருக்கலாம். பொல் சம்பல், பொல் ரொட்டி, இடியாப்பம், சாம்பார் எல்லாம் சேர்ந்து சாப்பிடலாம்.

உங்க ஊருக்கு ரோட்டு போட்டிருக்குறம், புது புது கட்டடம் எல்லாம் கட்டுறம். ஆ இப்ப கரண்ட் கூட இருக்கே: நீ அடிக்கடி சொல்லுவியே, நீ பதினைந்து வயது வரை கரண்ட் இல்லாமல் படித்து எலக்றோனிக் இஞ்சினியர் ஆகினாய் எண்டு. இனி பிரச்சனை இல்லை.

இப்ப அண்மைக்காலமாக எங்கட நாட்டின் மீது எல்லா வெளி நாடுகளும் கண் வைக்குது. எங்களுக்குள் முண்டப் பாக்குது, ஆனா இப்பதான் நாங்க ஒண்டா சேர்ந்து முன்னேறனும். பிரச்சனை தீர்ந்த பிறகு மீண்டும் சேராமல் இருக்க பழசை இல்லாததும் போல்லாததுமாய் இட்டுக் கட்டி சொல்லுவானுகள். உலகமெல்லாம் அட்டூழியம் பண்ணும் அமெரிக்காவையோ , இல்லை எங்களை பகடை ஆக்கும் இந்தியாவையோ சுயநலம் கொண்ட சீனாவையோ நாங்கள் வேண்டாவோ நாடவோ தேவையில்லை. எங்கள் கலாச்சாரம் பண்பாடு அவர்களுக்கு புரியாது. ஏற்கனவே கொழும்பெல்லாம் கிளப்புகள், தியட்டர் எல்லாம் இந்தியப் படங்கள் எங்கள் கலாசாரத்தை சீரளிக்குது. இதை சேர்ந்து போராடோணும்.

அடுத்த முறை வரும்போதாவது, என்னோடு நாடு சுற்ற வருவோணும். கட்டாயம் வீட்டை கூப்பிட்டு பாயசம் தருவியல்ல ? அந்த உங்க ஊரு சூப் ஒண்டு சொல்லுவியே இறால், நண்டு எல்லாம் போட்டு - பாட்டெல்லாம் இருக்கெண்டுவாய், அதுவும் சாப்பிடோ ணும்.

நீ திரும்ப வருவாய் என்ற நம்பிக்கை உடன், 
பொதுவான கனவுகளுடன்,
நண்பன்,
சரக்க தனசூரிய.

பி.கு: அந்த தமிழ் பிகரு மட்டர் என்ன ஆச்சு ? விவரம் கிடைச்சுதா.

வியாழன், மார்ச் 15, 2012

ஜெனீவா

சாத்தான் வேதம் ஓதுகிறது.
சட்டம்பி ஆள் சேர்கிறார்.
பிள்ளையையும்  கிள்ளி
தொட்டிலையும் கிள்ளினவன்
களையையும் கிள்ளுவான் எண்டு
ஒரே நாள் உண்ணாவிரத்தில்
உரிமை பெற்றுத்தந்தவர்கள்
பிரமிப்பை கொடுக்குறார்கள்.
முளையைக் கிள்ளாவிட்டால் செரி என்று
இன்னமும் முனைப்பாய் அலைகிறது முத்துக்குமரன் ஆவி.

தங்களூர் சிலையைக்
காக்காத காத்தவராயன்கள்
கடல் கடந்த தலையை
மீட்காத சுந்தர பாண்டியர்கள்
கட்டும் உலையை
உடைக்க வழி தெரியாதோர்
எங்களூர் பகைக்கு
வழி சொல்வாரோ ?
அவர்கள் கலையை
வாங்குவதோடு நின்றிருக்கலாம்.

ஏறின பாண் விலையும்
ஏறப்போற பாண் விலையும்
ஆசியாக் கப்புக்குள் ஒளிந்து போக,
பழைய காயங்களும்
புதிய மருந்துகளும் பற்றிய பிரக்ஜை
நீங்களும் வெல்லலாம் ஒருகோடி என்ற
மாயைக்குள் ஒடுங்க.

பிரம்படி யார் யார் முதுகுக்கு விழும்
என்று தெரியாமலேயே
பிரம்படி பற்றி ஒரே அதிரடி.
கிரிக்கட் வெற்றிகளையும்
மனிதஉரிமை தண்டனைகளையும்
ஒப்பு நோக்கும் பட்(டின/டண)த்தார்.

குழல் ஊதி ஊதி பிதுங்கிய வாயுடன் கிருஷ்ண-பரமாத்மா,
உருண்டைக் கண்களும் செஞ்சாய உதடுகளுமாய் மன்மதன்.
போகலாமா வேணாமா எனும் குழப்பத்தில் நந்தனார்.
எழுதி எழுதி சலித்தவற்றை,
சலித்து சலித்து எழுதினவற்றை,
எழுதாமல் இருக்கும் வழி
தெரியாமல் நான்.

எது எப்படியோ,
சாமி இருப்புக்கு வந்தா
சுண்டல் கொடுத்துதானே ஆகவேணும்.
தூக்கி சுத்தின சாமிய உள்ள வைச்சு பூட்டிவிட்டு
கொடுக்கிற சுண்டல
வீட்ட கொண்டு போறதுதானே வழமை.
எங்க எல்லாரும் சேர்ந்து சொல்லுங்கோ,
............இக்கு அரோகரா.

புதன், நவம்பர் 23, 2011

தெய்வத்தால் ஆகாது .......

வரலாற்றில் இருந்து தான் கதைகள் பிறக்கின்றன.
வரலாற்றின் நிஜக் கருவில் இருந்து அவரவர் நியாயப் படுத்தலில் தான் கதைகள் பிறக்கின்றன / கட்டப்படுகின்றன.

"கதை கதை யாம் காரணமாம் , காரணத்தின் தோரணமாம்" எண்டு அமமா (அம்மம்மா) சொன்னது ஆழ்ந்த அர்த்ததுடனே. தோரணமாக காரணங்கள் கட்டப்பட்டுள்ளது எங்கள் கதைகளிலெலாம்.

இந்த கதைக்கு எந்த வரலாறு மூலம் எண்டு தெரியாது , ஆனா மறுபடி மறுபடி இது தான் எங்கள் வரலாறாக இருந்திருக்கிறது.

எங்களை அரக்கர்கள் எண்டினம்,
நாங்கள் கருப்பாக தடியாக இருப்பதாலா ,
அல்லது,
தோற்றுப் போனதாலா;
அல்லது,
வெல்ல வழியற்றுப் போனதாலா;
அல்லது,
கேக்க நாதியில்லாமல் போனதாலா;
அல்லது,
எங்கள் குணமே அரக்க குணம் தானா;
அல்லது,
நாங்கள் குறைவாக பெற்றுக் கொண்டதாலா;
தெரியவில்லை !

நாங்கள்
அரக்கர் எண்டு சொல்லித்தான் 
அமுதம் வஞ்சிக்கப் பட்டது.

அவர்கள்
தேவர்கள் எண்டு சொல்லித்தான்
அவர்களுக்கு தரப்பட்டது.

அமுதத்தை இழந்ததால் அரக்கர்களா ?
இல்லை
அரக்கர் என்டதால் இழந்தமா ?
தெரியாது!

தெய்வத்தால் ஆகாது ,
எனினும்;
முயற்சி மெய் வருந்த,
கூலி தரும்.
-என்பர் / எண்டம் (எண்டு சொன்னம்)
நாங்கள்
மெய் வருந்தி
செய்த முயற்சிக்கு
கூலி விசம்.

தெரிந்தே தந்தான் 
திருமால்
தலையை எங்களுக்கு.

கொள்ளாமல் 
விண்டாள் விடம்
வாசுகி எங்கள் மீது.

"அள்ளி முடிந்தவன் 
ஆபத்தானவன்; அத்து மீறினவன்.
அதை அவிழ்த்து விட்டவன் 
ஆபத்பண்டவன்"
என்ட கதையாய்.....

நம்பியாரை மயக்க
ஜெயமாலினியை ஆட வைத்தனர்.
பிறகு சில்க் சிமிதா
கடைசியில்
அம்பிகா , ராதா , மீனா என 
கதா நாயகிகள் கூட
வரிசை கட்டினர்.

ஒரு வகையில் 
விபசாரம் செய்துதான்
நாயகர்கள்
தங்கள்
விஸ்தீரணம்
காட்டினர்.

அன்றைக்கும் அப்படித்தான்,
பாற்கடலில் இருந்து
ஒரு பௌர்ணமி வந்தது
- அலைமகள்
எம் கனவை
கலை மகள்.

அமுதம் அவர்களுக்கு;
சிவன் உண்டது போக
ஆலகாலம் எங்களுக்கு;
அலை மகள் தனக்கு
என பங்கு பிரித்தான்
பரந்தாமன்.

அமுத வரிசையில்
அலைமகள் ஆசை காட்டி
பொறுமை 
சாந்தி
சமாதானம்
எண்டு பேசி
பின் நிறுத்தினாள்.

திருமால் தானே
தருவார்
எண்டுநம்பினம்.
அவர்களுக்கே 
கொடுத்து தீர்த்தான்
அரி.

தெய்வத்தால் ஆகாது.
எனினும்,
மெய் வருத்தி செய்த முயற்சி ?

வெள்ளி, நவம்பர் 18, 2011

எனக்கும் அரசியல் தெரியும் ? - 7ம் அறிவு இருக்கு ?

எழாம் அறிவுடை நம்பி  எனும் ஜேகே இன் பதிவும், இன்ன பிற எழாம் அறிவு படம் உருவாக்கிய சர்ச்சைகளின் விளைவுக் குழப்பத்தில் நான் பதிந்தது

எழாம் அறிவுடை நம்பி என்னுள், அறிவுடை நம்பி கலிய பெருமாள் இந்திரன் , அறிவுடை நம்பி கலிய பெருமாள் சந்திரன் எண்டு இரண்டு துருவங்களை, உண்டு பண்ணி, ஒரு பெரிய பட்டி மண்டபம் நடந்து கொண்டிருக்கு - ஏலவே இங்கு (blog மற்றும் FB இல்) நடப்பதையும் தாண்டி, நடுவர் தீர்ப்பு சொன்னால் - ஒரு முடிவான கருத்தை நேரம் பொறுப்பது பொறுத்து பதியுறன். 
நானே எனக்குள் சில தெளிவு கொள்ளாததால் - என் உணர்வுகளை ஆட்கொள்ளும் சுழல்களை முடிந்த வரை பகிர்கிறேன் - இது கொஞ்சம் சிக்கல் - இடியப்பதிலிரிந்து சிக்கல் எடுக்குற மாதிரி - will c. 

பொதுவா இந்த மாதிரி கதைகளும் கவிதைகளும் இன்னொமொரு கோணத்தை வாசகனுக்கு அடையாளப்படுத்துகின்றன, தவிர முடிவு என்று பரிந்துரைப்பதில்லை - அது அதன் நோக்கமல்ல. முடிவு வாசகனின் உள்வாங்கல் மற்றும் அனுபவம் + கொள்ளளவு பொறுத்தது. ((என்) பதிவுகளை எப்படி வாசிக்க வேணும் எண்டு இங்க ஒரு கவிதை சொல்லி இருக்குறன்.)

நிற்க, எழாம் அறிவு ஒரு விடியலை பெற்றுத்தரும் எண்டோ; சினிமா நடிகர்களின் நடிப்புக்கும், மேடை நடிகர்களின் நடிப்புக்கும் உணர்விழக்கும் கூட்டம் (உணர்ச்சி வசப்படல் என்பது வேறு வகை) எங்கள் 'நாளையை' வடிவமைக்கும் எண்டோ நான் நினைக்கவில்லை. ஆயினும் பெரும்பான்மை ஆகி நிற்கும் அந்த தமிழ் பேசும் (எழுதும் வாசிக்குமா எண்டு தெரியேல்லை) நல்லுலகம் (?) 'நாளையை' - இன்றைய ஜனநாயகத்தில் தீர்மானிக்கிறது என்பதே நிஜம். தமிழ்நாட்டின் அரசியல் 'நாளை' - தமிழினது நாளையிலும், ஈழதமிழர் நாளையிலும் ஒரு முக்கிய செல்வாக்கு காரணி எண்டு நான் நினைக்குறன்.

ஒரு entertainer + உணர்வாளன் தன் எல்லைகளுக்குள், தன் கொள்ளளவுக்குள், தன் உணர்வை பதிந்திருக்குறான் எண்டே நான் எழாம் அறிவை பார்க்கிறேன்.

வாழ்வு முழுவதையும் அறிவு கொண்டு வாழ்ந்திடலாமா - முடியுமா ? + தேவையா ?, உணர்வாதல் பிழையா - என் சுழல்கள்.

என் நண்பன் ஒருவன் சொல்வது மாதிரி, போர் முனைகளில் புத்தனையும் காந்தியையும் தேடுதல் செரியா, போரை புத்தத்தையும் காந்தியத்தையும் கொண்டு ஆராய்தல் முறையா - என் சுழல்கள்.

களத்திற்கு தேவையான போது, கத்தி செய்து குடுக்காத நான், கத்தி எடுத்து களம் போகாத நான், கத்தி ஊரைக் கூட்டாத நான், கடமையே கண்ணா படிச்சுக் கொண்டிருந்த நான், கெட்ட பின் சூரிய நமஸ்காரமா, சந்திரனுக்கு அபிசேகமா, ஜடாயுவுக்கு அருச்சனையா எண்டு ஆராயலாமா தெரியேல்லை. 


நானும் சம்பந்தப்பட்ட ஒரு பெரும் தவறில் நியாயம் சொல்ல எனக்கு அருகதை இல்லை எண்டே நம்புகிறேன். என்னுடைய நியமங்கள் எனக்கு மட்டும், உங்களையும் அந்த வட்டத்துக்குள் வாருங்கள் எண்டு அழைக்க என் வட்டம் பற்றி எனக்குள் ஒரு தெளிவு இன்னமும் வரவில்லை.

என் அறிவும் தர்க்கமும் கொண்டு என்னால் ராமனுக்கு சூர்பனைகயை கூட கட்டி வைச்சிட முடியும். அதனால் 'இறந்த'-காலத்தை ஒரு மௌன சாட்சியாக பார்த்தபடி, தொலைந்து போன நித்திரையில், அடிக்கிற மாதிரி துடிக்கிற இதயத்தில், பனிக்கிற கண்களால், கனவொன்றை கட்டி வைச்சிருக்குறன், தவிர்க்க முடியாமல் அதன் நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள். அந்த கனவு நனாவாக்க 'நாமார்க்கும் குடியல்லோம்' எண்ட என் கிழவனின் உரப்புக்காய் வேண்டுகிறேன். 

இது ஒரு வாக்கு மூலம், யாரையும் எடை பார்க்கும் எண்ணமோ, கொள்கைப் பிரச்சாரமோ கிடையாது. எழுதுவதும் வாசிப்பதும், கூட உணர்ச்சி வசப்படுதலும் எண்டுதோடு நிண்டுவிடுகிறேன் (இந்தக் கதையில் வாற குமரன் மாதிரி) எண்ட என் நண்பன் கோபியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடச்ச பிறகு நானும் இதுதான் எண்டு ஒண்டை இது பற்றி சொல்லுவன் - அதுவரை கனவுகளும் அதை நனவாக்கும் கனவுகளும் நானும்....

வெள்ளி, பிப்ரவரி 04, 2011

கண்ணீருக்கு கட்டி வைத்திருக்கிறேன் அணை


ஒரு பூகம்பத்தை தாங்கிய 
பொறுமை 

ஒரு தலைமுறையையே 
தாங்கிய வலிமையை,
தாங்கிய தாய்மை 

பல அரியணைகளை அசைத்துப் பார்த்த 
ஆளுமையை
ஆதரித்த அம்மா 

உனக்கு 
மருந்துக்கு கூட
ஆசனம் தராத அண்ணா 
வந்தாரை எல்லாம் வரவேற்றாராம் 

"போடா!
பருந்துக்கு கூட பயப்படாது 
எங்களூர் கோழிக்குஞ்சு" - என்று விட்டாய்.

பாசமறுப்பதால் தான் அது 
பாசக்கயிறு - அதுக்கும் 
பாசம் வந்திருக்கும் 
உன்னை தீண்டிய போது .

சிவப்பும் மஞ்சளுமாய் 
எனக்கொரு கனவிருக்கு 
பச்சை வயல் பரப்புகளில் 
வெள்ளை மனங்களோடு ......

அந்தக் கனவை வென்ற பிறகு 
கதறும் வரை ,
கட்டி வைத்திருக்கிறேன் - என் 
கண்ணீருக்கு அணை.

திங்கள், ஜனவரி 17, 2011

பிஞ்சு பிச்சா தான் உண்டு.....


வெட்டி எடுத்த கரும்பு
வட்டில் எடுத்த அரிசி
கட்டில் இருந்த செங்கல்
முற்றில் வந்து அடுப்பாகி .... எண்டு
நெப்பில் இருந்த பொங்கலை - இந்த
காட்டில் இட்டு சேர்க்க
மண்ணில் ஆடும் பிஞ்சு - வேலிக்
கம்பில் ஒன்றை பிச்சா (தான்) உண்டு.