புதன், அக்டோபர் 24, 2012

விண்ணைத் தாண்டி வருவாயா ? !


அதே வழமையான புன்னைகை
அதே வழமையான விசாரிப்புகள்
கடந்து போகிறோம்
பூடகங்களோடும்
புதிர் போடலோடும்

அந்தச் சிக்கலை
அவுழ்க்கவும் ஆகாது
வெட்டவும் ஒண்ணாது
மனதும் மூளையும்
மயங்கிக்கிடக்கிறது

நீ
கைப் பையை திறந்தாலோ
நான்
பர்சை திறந்தாலோ
கதை சுபம்தான்

உள்ளே தூங்கி கிடக்கு
எங்களுக்கான காதல் கடிதங்கள்.

முடறு வரை
வந்தவார்த்தை
முழுங்கப் படுகிறது
தடுப்பது
சுயமா பயமா
தெரியவில்லைவிளிம்பில் நிற்கிறது மனசு
எட்டிப் பார்த்தல் விழுந்து விடும்
ஒரே கிண்ணியில் எதிர் எதிராக இல்லை
இரு வேறு கிண்ணிகள் அருகருகா - பயம்
நான் முதலா ? நீ முதலா ? - தயக்கம் (சுயம்)

அதே வழமையான புன்னைகை
அதே வழமையான விசாரிப்புகள்
கடந்து போகிறோம்
பூடகங்களோடும்
புதிர் போடலோடும்

இரண்டு கெட்டிக்காரர்களுக்கு
காதல் கடினமாகிறது
காதலில்
கெட்டித்தனத்தை காட்டுவதால்
காதலிப்பதில்
காட்ட வேண்டியதை
காதலிக்கப் படுவதில்
காட்டுகிறார்கள்

அதே வழமையான புன்னைகை
அதே வழமையான விசாரிப்புகள்
கடந்து போகிறோம்
பூடகங்களோடும்
புதிர் போடலோடும்

அந்தச் சிக்கலை
அவுழ்க்கவும் ஆகாது
வெட்டவும் ஒண்ணாது
மனதும் மூளையும்
மயங்கிக்கிடக்கிறது

இவங்களுக்கு வேற வேலை இல்லை ? பகுதி இரண்டு


இவங்களுக்கு வேற வேலை இல்லை இருக்கு!
பாகம் இரண்டு - காடு திறந்து கிடக்கின்றது
கண்கள் நிறைய கனவுகளோடும், பாக்கெட் நிறைய போறோகிறாம்களோடும், மெல்லிய பதைபதைப்போடும் இந்த போட்டியில் பங்குகொள்ளும் ஹீரோ , ஹீரோயின்களுக்கு,

ஏலவே யாழ் ஐடி இல் ‘சேர்’மார்களையும், அண்ணா அக்கா மார்களையும் கண்டு பிரமித்து மகிழ்ந்து இருக்கும் உங்களுக்கு உங்கள் கூட்டாளி இந்த வால்ப் பயல் வாலிபனின் வணக்கங்கள் அல்லது  பாராட்டுகள் எப்படி வேணும் எண்டாலும் வைச்சுக் கொள்ளுங்கள்.

எப்படி பேசுவது, என்ன பேசுவது, எதை பேசுவது போன்ற பலவற்றை ஏலவே நிறைய பகிர்ந்துவிட்டார்கள். நான் இந்த டெக்னிக்கல் மாட்டார் பேசப் போவதில்லை,

மச்சி வெற்றி தோல்விகளை ஒதுக்கி விட்டு, சும்மா பூந்து வா – அனுபவி, அவதானி.

சயந்தன் பேசுகிற போது எப்படி conjunction ஐ லாவகமாகப் பயன் படுத்துகிறார், விமல் என்ன நிறத்து கால் சட்டைக்கு என்ன நிறத்தில் சேர்ட் போடுகிறார், கவுரி அக்காவின் நேர் கொண்ட பார்வை - அதில் கனிவு, பாலா ஒன்றை சொல்வதற்கு முன் சிந்திப்பதற்கு என்று யாருக்கும் தெரியாமல் எப்படி நேரத்தை களவாடுகிறார், சர்வேஸ் தமிழ் மொழியிலேயே தொழில்நுட்பத்தை எப்படி நாசூக்காக பேசிவிடுகிறார். இப்படி கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு – தேடிப்பார்.

புதிய மனிதர்களோடு தயக்கம் இன்றி பழகு - முகம் மலர்ந்து முகமன் கூறு, உற்சாகமாகப் பேசு, அழுத்தமாக கை குலுக்கு.

சித்திரம், செந்தமிழ், ஆங்கிலம், design patterns, optimization, smart coding எல்லாம் பழக்கம்தான் - பழக வரும். உன் மீது நம்பிக்கை கொண்டு குறைந்தது ஓராயிரம் கண்களாவது உலகெங்கும் உன்னிப்பாய் இந்த நிகழ்வை அவதானிக்குறது - உன் நீட்சி ஏலவே பெரிது.

நல்ல பெடியன் நாய்ப் பழக்கம் எண்டு ஒரு வழக்கு உண்டு - அது புளோக்கர்களுக்கு சாலப்பொருந்தும். இளையராஜவில் இருந்து இஸ்றேல் பிரதமர் வரை என்ன செய்ய வேணும் எண்டு சொல்லுவது எங்கள் வழக்கம் -
              கண்டு கொள்ளாதே -
               உனக்கு என்ன செய்ய வேணும் எண்டு தெரியும்
                        - சும்மா புகுந்து விளையாடு.

"நாங்கெல்லாம் அப்பவே அந்தமாதிரி இப்ப கேக்கவா வேணும்."

அன்பின்,
வாலிபன்

பி.கு: cheers-girls இக்குகாக வரச்சொல்லி உந்தன் பாட்டிமாருக்கு கடிதம் எழுதிய அப்பாவி நாந்தான்.

முந்தய பாகம் 

வெள்ளி, அக்டோபர் 19, 2012

சோகமா ஒரு வாரம்


ஓரடி மாலை,
ஒரு ரோசாப் பூ,
கொஞ்சம் இயக்கப் பாடல்,
சோகமா ஒரு வாரம்.

கிரடிட் கார்ட் பில்,
காஸ் விலை ஏற்றம்,
மன அழுத்தம்,
மெல்ல மறந்து போகும்.

ஓரடி மாலை,
ஒரு ரோசாப் பூ,
கொஞ்சம் இயக்கப் பாடல்,
சோகமா ஒரு வாரம்.

வடை பாயசம் படைச்சு
விரதம் இருக்க
மாவீரர் ஒண்டும்
நல்லூர் முருகனோ
சுடலை வயிரவரோ இல்லை அடா!

கடைசியில்
அடிச்சது விட்டு,
அடிக்காம விட்டு,
அகப்பட்டு செத்ததெல்லாம்;
அம்புட்டுத்தானா?

நீ வாழ செத்தவன் சொல்கிறேன் கேள்
யாராவது வாழ நீ வாழப்பா.
என்னை நீ நினைத்திருப்பாய் 
என்பதற்கா என் சாவு - இல்லையடா
ஏதோ ஒன்றை நடந்திடாதா 
என்பதற்காய் என் சாவு.

அள்ளுப் பட்டுப் போய்
கொத்துக் கொத்தா செத்ததெல்லாம்
நீ அழுது முடங்க வல்ல.

கண்கள் துடைத்து எழுந்துவா -
கைகள் தேய்த்தவடி.
வெட்டி முறித்து வேலை செய்.
அதை கொட்டி களித்துக் கொண்டாடு -
தப்பில்லை.

பாதி வயித்துக் கஞ்சிக்கு
பார் பார்த்து நிக்கும் உந்தன் முட்டைக்
கோது வயித்துக் குஞ்சுக்கு
கொஞ்சமாவது கொடுத்து அனுப்பு.

அள்ளி முடிச்சு அறுவடை செய்
சீவி முடிச்சு சிங்காரி - அதுக்கு முதல்
பள்ளிக்கு கொஞ்சம் பகிர்ந்தனுப்பு.

கட் அவுட் கொண்டு வந்தால் -விகிதாசாரப்படி
கட் அவுட் கொண்டு வந்தால்
கட் - அவுட் ஆயிடுவமோ

துள்ளி எழு
துடை விளக்கு சிமினி
அள்ளிக் கட்டி
அளவில்லாமல் படி
அறுவடைக்கு காலம் வரும்

அண்டைக்கு

கட்டு படைக் கோயில் - எமக்கு
கனகு, மல்லி எண்டு
கொட்டு பூக்குவியல்.
பாடு புதுராகம்.
கொண்டாடு - 
சோகமா ஒரு வாரம்
சுகமாக.திங்கள், அக்டோபர் 15, 2012

இவங்களுக்கு வேற வேலை இல்லை ?

இவங்களுக்கு வேற வேலை இல்லை இருக்கு!

பாகம் ஒன்று - கூண்டை விட்டு…..

இலங்கை வடக்கே வாழும் வயோதிகர்களுக்கு, அம்மம்மா, அம்மப்பா -களுக்கு , அப்பப்பா அப்பம்மா -களுக்கு, அம்மா அப்பா -மார்களுக்கு,

இதுவரை வெள்ளவத்தை பஸ் வண்டித்தரிப்பிடம், கட்டுப்பத்தை, கத்தரிக்காய், காதல், வயதுப் பிரச்சனைகள் போன்ற வாலிப விடயங்களை மட்டும் விசாரித்து, விமர்சித்து எழுதி வந்த இந்த ஏதென்சு நகரத்து வாலிபன் முதல் முறையாய், பனை மரக் காடுகளில் மரத்துப்போன மனங்களும் விறைத்துப்போன கால்களுமாய் வாலிபம் கடந்த உங்களுக்காய் எழுதும் மடல்?, காகிதம்!, இல்லை விண்ணப்பம் என்று வைத்துக் கொள்ளலாம். இடைக்கு இடை எணை, அப்பு, ஆச்சி, ஆன்ரி, அங்கிள் எண்டு போட்டுக் கொள்ளுங்கோ.

வயது முடிந்த காலத்தில் வெத்திலை இடிச்சுக் கொண்டோ, இல்லை வயிரவ கோவிலடியில் விளக்கு ஏத்திக் வைச்சுக் கொண்டோ, இல்லை வாசகசாலையில் அரட்டை அடிச்சுக் கொண்டோ, ‘சிவனே‘ என்று நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் அ(ம்மா/ப்பா)(மா/பா) களுக்கு. வணக்கம்! (எணை காது நல்லாக் கேக்குதே?)

சுப்பர் சிங்கர்களுக்குள் புதைந்துபோன அம்மாக்களுக்கு வணக்கம். டீவிப் பெட்டியில் காட்டப்படாத இரத்தமும் சதையுமான ஒரு அழகான உலகம்- மனிதர்கள் போதாது வெறித்துப் போய் இருக்கின்றது. (வெளிய வந்தாத்தானே - முட்டாளாவதில் மகிழ்வது பெண்களாத்தான் இருக்கும், இப்ப கூடப் பாருங்கோ உங்கட ஆக்கவுடமையை பற்றி ஆதங்கப்படுவது புரியாமல் உங்கட அறிவுடமையை கேலி செய்வதாய் கோபப்படுகிறீங்க).

வேலை, விளைமீன் குழம்பு, சீலாமீன் பொரியல், கோயில் 8ம் திருவிழா மேளக்கச்சேரி, ஏறி வரும் விலை வாசி என்று பரபரத்துப் போன அப்பாக்களுக்கு வணக்கம். வாழ்க்கை என்பது என்ன என்பதே உங்களில் பெரும்பாலானர்களுக்கு நாப்பதுக்கு பிறகு மறந்து விடுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. சமூக வாழ்க்கை என்பது உங்களில் பலருக்கு கோயில் என்பதோடு நின்று போய்விடுகிறதோ என்ற நான் நிறைய அங்கலாத்திருக்குறேன்.

முடங்கிப்போன பெரியவர்கள், முயக்கம் இல்லாத தாய் தந்தையர், இளையதலை முறை ?

வாழ்வு என்பது வெற்றி தோல்வி என்ற முடிவைக் காட்டிலும் முயற்சியில் இருக்குன்றது என்று முயன்று வென்றவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

ஒரு பெரிய போராட்டம் அடித்து நொறுக்கப் பட்ட பின்னரும், கூட்டம் கூட்டமாய் இன சனம் அழிந்த பின்னரும் இந்த சமூகத்தின் எல்லாத் தேவை மட்டங்களில் (maslow’s hierarchy of needs)  இருக்கும் சில இளைஞர்கள் ஒரு கனவை (“Making Yarl the next Silicon Valley") நோக்கி நகரமுயல்கிறார்கள் –. உங்கள் ஊருக்கு உங்கள் பிள்ளைகள் ஒரு தேர் எடுத்து வந்திருக்குறாங்கள் – “Yarl Geek Challenge", கொஞ்சம் கை கொடுக்க வறீங்களா (ஒக்டோபர் மாசம் இருபத்தி ஆறாம் திகதியில் இருந்து இருபத்தி ஓம்பதாம் திகதி வரை)?சுப்பர் சிங்கரில் யாழினி எடுபட்டது பற்றியும், அனு எடுபடாதது பற்றியும் அங்கலாய்த்துக் கொண்டு இருப்பீர்கள். ஒரு ரியால்லிடி ஷோவை நேரடியாய் யாழ் மண்ணில் காணும் வாய்ப்புக் கிடைச்சிருக்கு. அதுவும் உங்கள் பக்கத்து வீட்டுப் பெடியோ இல்லை, அடுத்த ஒழுங்கை குமரோ, தங்கள் அறிவுடமையையும் ஆக்கவுடமையையும் ஒருங்கே காட்டும் ஒரு போட்டி. உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக நீங்கள் இதுவரை கண்டிராத இலங்கையின் தலை சிறந்த மூன்று தனியார் தகவல் தொழில் நுட்ப கம்பனிகள் (Virtusa, WSO2, and hSenid) முதன் முறையாக ஒன்றிணையும் ஒரு மாபெரும் நிகழ்வு -  யாழின் மண்டைக்காய்கான தேடல். (நாமெல்லாம் மொழி பெயர்த்தா இலியட் ஓடிசி கூட 6 page 2 column research paper தான்)

       என்னதான் பண்ணணுவானுகள் ?
ஊரில மண்டை காஞ்சவனுகள் சிலர் சேர்ந்து, மூலை(ளை) முடுக்குகளில் கொம்புட்டார் வைச்சு நோண்டிக் கொண்டோ, விறாந்தில படித்துக் கொண்டு விலாசமா ஒரு கொம்பனிக்கு சீ.ஈ.ஓ கனவு கண்டுகொண்டோ, கணக்கு எண்டால் கணக்கு பண்ணுறதைக் கூட மறந்து விடும் - பேய்க்காய்களுக்கு ஒரு போட்டி - இந்த டிவியில எல்லாம் நடத்துற போட்டிகள் மாதிரி - ரியாலிட்டி ஷோ - "உங்களில் யார் அடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ்?" கணக்கா. ஐந்தாறு சுற்று - ஒவ்வொரு சுற்றிலயும் - வடி கட்டி, வடி கட்டி ஒருத்தருக்கு.... 

        என்ன வெள்ளவத்தையில பிளட்சா (flats -  அடுக்கு மாடி மனை) ?

சீ சீ அதிலும் பெரிசா, கம்பனியே வைச்சு தந்தாலும் தருவானுகள் - நாட்டின் பெரிய கொம்பனியில வேலை , இப்படி பல உள் மற்றும் வெளிக் குத்து இருக்கு.

யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மொரட்டுவ போன்ற பல மாவட்டங்களுக்கும் யாழ் ஐரி பஸ் ஒண்டு போய் ரவுண்டு கட்டி வாக்கெடுத்து (ஒரு விளம்பரந்தேன்), சுமார் பதினாலு அணிகள் - பல்கலை கழகங்கள், பிரபல்யமான தனியார் கல்வி அமைப்புகள் எண்டு பலத்தில் இருந்தும் பங்கு கொள்கின்றன. நல்லவேளை நான் பார்டிசிப்பன்ட் இல்லை, இல்லை வண்டவாளம் தண்டவாளம் ஏறி இருக்கும்.

வெண்ட அணியின் அம்மாக்கள் சீலைத் தலைப்பால் வாயை பொத்தி அழுவது, அப்பாக்கள் சியர் கேர்ல்ஸ் மாதிரி உற்சாகப் படுத்துவது, தங்கள் குடும்ப சோகக் கதை சொல்லி எல்லாரையும் நெகிழ வைப்பது, நடுவர்களின் பிறந்த நாளை சர்ப்ரைசா கொண்டாடுறது, வயில்ட் காடு ரவுண்டு, சிறப்பு அதிதிகளா மார்க் சுக்கர்பெர்க், லாரி சோடா மன்னிக்கவும் லாரி பேஜ் போன்றோர் வரலாம் இல்லை அவைய விடப் பெரிசா உள்ளூர் ஆட்டக்காரன் யாரவது வரலாம் (கரகாட்டக்காரன் காலத்திலிருந்து வெளியூர் ஆட்டக்காரனை உள்ளூர் ஆட்டக்காரங்கள் மதிக்குறதில்லையே).இது போன்ற ரியாலிட்டி சோக்கே-ஆன (சோக்கான) அம்சங்கள் எதிர்பார்க்கலாம். (கவிதைக்கு பொய் அழகு)

(ஆமா டிடி வருவாங்களா? சிவகார்த்திகேயன் மாதிரி ஒராள் நடத்த வருது எண்டு சொல்லறாங்களே சயந்தன் உண்மையா ?)  

எது எப்பிடியோ நடுவர்களுக்குள்ளும், பங்குபற்றுபவர்களுக்கும் நடுவர்களுக்கும் இடையிலும் சூடான வாக்கு வாதம் guaranteed! 

கொம்புயூட்டர் போட்டியா? எங்களுக்கு ஒரு இழவும் விளங்காது, போற வயசில, இருக்குற பிரச்னைக்குள்ளையும், வேற வேலை இல்லை எண்டுறவைக்கு,
          ஏதோ கர்நாடக சங்கீதம், சுருதி , இராகம் விளங்கியே பாட்டுக் கேக்குரனியள்? போய்ப் பாருங்கோ விளங்கலாம் இல்லாட்டியும் பரவாயில்லை. சங்கட சதுர்த்திக்கு பிள்ளையார் கோவிலுக்கு சுண்டல் கிடைக்கும், சுரண்டல் குறையும் எண்டே போறனியள் - நம்பிக்கை, அது மாதிரி சும்மா போய்ப் பாருங்கோ.

இனி- பாகம் இரண்டு: காடு திறந்து கிடக்கின்றது.

பி.கு: நண்பர்களே, சும்மா உடான்ஸ் அடிப்பதோடு என் பணி நின்று விடுகிறது - ஆனால் இந்த நிகழ்வுக்காய் சயந்தன், பாலா,  சர்வேஸ் எண்டு ஒரு சிறிய அணி அநியாயத்துக்கு  உழைச்சிருக்கு, ஆதலால் இந்த போஸ்டுக்கு லைக் பண்ணுறது, பின்னூட்டம், ஊக்கசத்து எல்லாம் விட்டுட்டு;   அவைக்கு தேடித் பிடித்து ஒரு வாழ்த்து சொல்லுங்கோ - புண்ணியமாப் போகும். அவைய இங்க பிடிக்கலாம் : https://www.facebook.com/groups/264218806991707/.

புதன், அக்டோபர் 10, 2012

எங்களுக்கே எங்களுக்கு என்று ஒரு....

இது குற்றப்பத்திரிகை அல்ல, பொதுமைப் படுத்தி பிரச்சனையின் இன்னொரு கோணத்தை அலசுவதே நோக்கம் - அவரவர் நியாயங்கள் அவரவர்க்கு.
தமிழர் என்றொரு இனம் உண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு  - நாமக்கல் வி. இராமலிங்கம்பிள்ளை
அண்மையில் நண்பன் பாரதி இப்படி ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தான்
இன்று ஒரு தமிழ்க் கடைக்கு போயிருந்தேன். ஒரு சுவரொட்டியில் "மாவீரர் மாதத்தில் களியாட்டத்தை புறக்கணிப்பீர் " என்றும் அதனைத் தொடர்ந்து உணர்ச்சிப் பிராவகமாய் ஒரு கட்டுரையும் இருந்தது.
சத்தியமா முழுவதும் வாசிக்கலீங். அதற்குள்ளாகவே அம்மா " உதை எதுக்கு வாசிக்கிறாய்?.... உனக்கென்ன லூசா?? வந்த வேலையை கவனி என்று சத்தம் போட்டார்கள்.
நானும் அம்மா கேட்ட முதல் கேள்விக்கு பதில் சொல்லாமல் ( இருந்தால் தானே சொல்ல.. :) ) "லூசில்லை" என்பதை கூட அழுத்தமில்லாமல் ( எல்லாம் ஒரு சந்தேகந்தான் :) ) சொல்லிவிட்டு வந்த வேலையை கவனித்தேன்.
ஆனாலும் அந்த சுவரொட்டியில் பெரிய எழுத்துருவில் இருந்த "அடங்க மறு" , "திருப்பி அடி" ஆகிய இரு சுலோகங்கள் எனக்குப் புரியவில்லை.
வாங்கிய பொருள்களுக்குரிய பணத்தை கொடுக்கும்போது கடைக்காரரிடம் அண்ணை!! நாங்க "ஆருக்கு அடங்க மறுக்கனும்?? ஆருக்கு திருப்பி அடிக்கனும்?? " என்று கேட்டேன். அதற்கு அவர் "நாயகன்" கமல் பாணியில் தெரியலயேப்பா.. என்று விட்டு... பில்லை தந்துவிட்டு நெற்றியை சுருக்கி மூக்குக் கண்ணாடிக்குள்ளால் என்னைப் பார்த்தார். அப்ப பின்னால் நின்ற ஒரு அக்கா தன் புருசனிடம் எந்த சுலோகதுக்கு இந்த தம்பி அர்த்தம் கேட்கிறார் என வினவ புருசன் முகத்தில் கலவரம் :). நானும் பில்லை வாங்கிக் கொண்டு வெளிய வந்தாலும் இன்னுமொரு விசயம் எனக்குப் புரியல..... கடந்த காலங்களில் இருந்து வந்த மாவீரர் வாரம்" எப்போது "மாவீரர் மாதம்" ஆனது??
எந்த அணியாவது வாயை திறங்கப்பா....
சில தினங்களுக்கு முன் ஜேகே யாழ்பாணத்து தொண்ணூறுகளின் கிரிக்கெட் பற்றி ஒரு பதிவு இட்டிருந்தார், அதில் இப்படி ஒரு கனவை பதிகிறார் 
 சில நாடுகளின் வீரர்கள் ஆடும் ஆட்டத்தை பார்க்கும்போது கோபம் இன்னமும் எகிறுகிறது. இது காண்டி அண்ணாவின் இடம். டூ டவுணாக வரவேண்டியவன் கௌரி, இந்த பார்ட்னர்ஷிப் போட்டிருக்கவேண்டியவர்கள் கௌரியும் கார்த்திக்கும் என்றெல்லாம் ஒவ்வொருமுறையும் சில இன்டர்நேஷனல் ஆட்டங்களை பார்க்கும் பொது எண்ணம் வருகிறது. கூடவே அடிமனதில் இருந்த கனவுகளும் எகிற, கோபம் இன்னமும் அதிகரிக்கிறது. இது சிறுபிள்ளைத்தனமான சிந்தனை என்று புத்தி கூறுபவர்கள், மீண்டும் இந்த இரண்டு பாகங்களையும் வாசித்துப்பாருங்கள். இது தான் எங்களின் அணிகள். இவர்கள் தான் நாங்கள் கொண்டாடிய வீரர்கள். இது தான் எங்கள் கிரிக்கட்! கிரிக்கட் ஒரு விளையாட்டாய், கிரிக்கட் ஒரு அரசியலாய் .. இதெல்லாமே தாண்டி “என் கிணறு என் கனவு எது சரியோ எது பிழையோ இதுவே நாம்” என்ற கேதாவின் கவிதை போல … இந்த கிரிக்கட் ஒரு தசாப்தத்தின் வாழ்க்கை … எங்களின் வாழ்க்கை! இதுவே நாம்!

இந்த கனவுகள் கொண்டுதான் சிலர் மேலே சொன்ன போராட்டங்கள் நியாயப்படுத்துகிறார்கள், அதனால் இப்படி உணர்ச்சிகளை கிளறாதீர்கள் என்று காட்டம் காட்டும் நண்பர்கள் எனக்கு நிறைய இருக்குறார்கள் (எனக்கு என்று வந்து வாய்க்கிறார்கள்).
இப்படி உணர்ச்சிகளை மீட்டுவதன் மூலம் கொஞ்சம் மனதுக்கு ஆறுதல் கிடைக்கலாம், ஆனால் வாழ்வுக்கு மாற்றம்  ? என்று தர்க்கம் பண்ணுவார்கள் இந்த பண்டிதர்கள் - கவையில்லை, வாழ்வு முழுவதுமே அறிவு மட்டும் கொண்டு வாழ்ந்திட முடியாது என்று இவர்களை மறுப்பார்கள் இன்னொரு சாரார்.

மனிதனை அவன் தேவைகளை கண்டறிவதன் மூலம் உற்சாகப் படுத்தலாம் என்கிறார் மாச்லோ எனும் மனோதத்துவர். இவரது இந்த தேற்றம் இன்றளவும் மனித வள முகாமை கல்விகளில் பிரபல்யம். மனிதனது தேவைகள்:
->பௌதீக தேவைகள்
  -> பாதுகாப்பு
    -> அன்பும் அங்கீகாரமும்
      -> சமுக அந்தஸ்து
        –> சுயமறிதல்
என்ற ஐந்து அடுக்கு மாளிகை என்கிறார் இவர். இந்த வரிசையிலேயே மனிதனது தேவைகள் வளரும் , ஒன்று கிட்டியதும் கொஞ்சக் காலம் அதில் திளைத்து சலித்து மற்றதை தேடும். இந்த ஒவ்வொரு தேவை வகையை மேலும் வகைப்படுத்தலாம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தேவைகள் பெருவாரியாக இந்த 5-கட்டு அமைப்பில் அடங்கிவிடும்.முல்லைத்தீவில், அதை அண்டிய சின்ன சின்ன சிதிலங்களில்
எஞ்சி இருக்கும் மனிதம் பசித்திருக்கு -
பசித்து மட்டுமே இருக்கு.
பசிக்கிற வயிற்றை தடவிக் கொடுக்க
கைகள் அற்ற கூட்டம் அது-
 எந்த செல்லோ/குண்டோ வெட்டி எறிந்திருக்கும்.
எழுந்து நடந்து வேலை செய்ய கால்கள் அற்ற கூட்டம்.
பசி வந்து பத்தோடு கூட சில பந்துக்களையும் எடுத்துப்போய் இருக்கும். இவர்களது தேவைகள் பௌதீக அளவில் நிற்கின்றன, அதை தாண்டாமல் மற்றைய தேவைகளின் நியாயம்/ இருப்பு புரியாது.

உன்னிகிர்ஷணன் பாடினாலும் படாட்டாலும்,
இளையராஜா இசை அமைத்தாலும் அமைக்காவிட்டாலும்,
சசிக்குமார் படம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும்,
வெறு வயிறு  -
    ஏவறை கூட வருவதற்கு ஏதும் சுரக்க வழி இல்லா வயிறுகளுக்கு,
எகிப்தின் பருத்திப் புரட்சியும், அமெரிக்க ஏகாதிபத்தியமும்,
எரிந்த நூலகமும் – ஊகும் கவையில்லை.
கிரிக்கெட் நடந்தாலும் நடக்காவிட்டாலும், அதில் நம்மாள் இருந்தாலும் இருக்காட்டியும் - ஊகும்.
------------------------------------------------------

யாழ்ப்பாணம், அதன் சுற்று வட்டாரம், மட்டக்கிளப்பு திருகோணமலை நகரங்களிலும் - பௌதீக தேவைகள் கொஞ்சமாய் எண்டாலும் பூர்த்தி ஆன மனிதர்கள். வெளியே நடப்பது தெரிய முயல்கிறார்கள். வீட்டுக்குள் அங்கீகாரம் தேட ஏதாவது செய்து நிரூபிக்க விரும்பலாம். பெரும்பாலும் பௌதீக தேவைகளை மேன்மைப் படுத்தும் முயற்சியும் அதன் வழி அன்பையும் அங்கீகாரத்தையும் அடைய முயல்கிறார்கள் - இவர்களுக்கு உன்னிகிர்ஷ்ணன் பாடுவதை எப்பவாவது கேட்டுப் பார்க்கலாம் என்று ஆர்வம் இருக்கும் பட்ஜெட் உதைக்கும். இரண்டுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டு எப்படியாவது பெடி கம்பஸ் போய் மேல வந்திடலாம் என்று நேர்த்தி வைச்சுக் கொண்டிருக்கும். 
------------------------------------------------------
கொழும்பும், மேற் சொன்ன நகரங்களில் ஆங்காங்கும் - அந்தஸ்தை நிரூபிக்க அலைமோதும் மக்களைக் காணலாம். இந்துமா மன்றம், ரோட்டறிக் கழகம், கம்பன் கழகம், தமிழ்ச் சங்கம், பழைய மாணவர் சங்கம் இன்ன பிற தொண்டு மற்றும் சமூக அமைப்புகள் வழி தங்களுக்கான சமூக அந்தஸ்தை தேடிக் கொண்டிருக்கும் இன்னொரு படி நிலை மக்கள்.
   இவர்களுக்கு உன்னி பாடினால் நல்லது என்று தோன்றும் - இல்லை அது தேவை அற்றது என்றும் தோன்றும். இரண்டாகப் பிரிந்து நின்று வாதித்து, ஸ்டேடஸ் போட்டு, கொமெண்ட் பண்ணி, லைக் பண்ணி தங்கள் சமூக அடையாளத்தை தேடி அல்லது உருவாக்க முயல்வார்கள். இவர்களுக்கு உரிமையும் உணர்வும் ஒரு தலையாய பிரச்சனை. அதில் நிலைப்பாடுகள் வேறுபடலாம். 
------------------------------------------------------
வெளிநாடுகளில் தங்கி விட்டவர்கள், அவர்கள் அனுப்பும் ரூபாயில்லாத காசில் வாழும் மனிதர்களும் இந்த சமூக அந்தஸ்து தேவை படிநிலையில் இருப்பார்கள். ஆனால் வெளிநாடுகளில் தங்கி விட்டவர்கள் ஒரு தனி வகை - காரணம் அவர்கள் அந்த ஊரிலும் இந்த ஊரிலும் என இரண்டு இடத்திலும் சமூக அந்தஸ்தை தேடுவார்கள் - அதற்கான தேவை அடுத்த சந்ததி வரை தொடரும் அதற்கப்பால் என்பது பற்றி இவர்களுக்கு இருக்குற பயம் கேள்வி - புலி வால் பிடித்த மாதிரி - துரத்திக் கொண்டே இருக்கும் / இழுத்துக்கொண்டே இருக்கும்.
  கவிதை எழுதுவர், ஒபாமாவுக்கு பெட்டிசன் போடுவர், ஊருக்கு கோபுரம் திருத்துவார், ஊரில் வீட்டுக்கு கூரை திருத்தி western bathroom கட்டுவர், உனது நாடு எது என்ற கேள்விக்கு இலங்கை என்று சொல்லவும் மனம் இவர்க்கு ஒப்பா, இங்கிலாந்து என்று சொன்னால் கேட்பவன் ஒப்பான், - குறைந்தது இதற்காவது தனி ஈழம் அவசியமாகிறது இவர்க்கு.
  சீமானை பேச அழைப்பர் தாமரையை (கவிதை) பாட அழைப்பர் - இன்னும் பலர் வந்து போவர் - ஊரில் போய் படாதீங்கோ – கப்பில் (GAP) உடுப்பு வேண்டாதீங்கோ என்டுவர் - இதெல்லாம் பயனில்லை என்று ஒரு கிளை தத்துவம் வரும், இன்னமும் இது கிளைக்கும் ஒரே நோக்கத்திற்க்காய் வேறு வேறாய் வழி தேடும் / காட்டும் - அதன் வழி தனக்கு ஒரு அங்கீகாரம் தேடும்.
------------------------------------------------------
கடைசிப் படிநிலை தன்னை உணருதல், கொஞ்சம் ஆன்மீக வகையறா. இது பற்றறுத்தல் என்று கொள்ளலாம் - நிறையப்பேர் இங்கு வரை போவதில்லை – பிரமச்சரியம் –> இல்லறம் –> வானப்பிரஸ்தம் –> துறவறம்  என்ற வாழ்வு முறை இந்த தேவை பரிமாணத்தை புரிந்து அமைக்கப்பட்டது என்று தமிழ் படித்தவர்கள் மேடையில் பேசக் கேட்கலாம்.
------------------------------------------------------
இதே பிரச்னையை, game theory பார்வையிலும் அலசலாம், மேற் சொன்ன players உட்பட வேறு சில players கொண்ட ஒரு சிக்கலான ஆட்டம் தான் எங்கள் இனப்பிரச்சனை. இது பற்றி விரிந்து வாய்ப்புக் கிடைத்தால் எழுத முயல்கிறேன் (draft இலேயே நிறைய நாளாக் கிடக்கு).

மாஸ்கோ சொன்ன கூம்பை கொஞ்சம் எங்கள் நிலைப்பாட்டுக்காய் தத்துவம் மாறாது வளைத்து இருக்குறேன். 

ஒரு பரபரப்பற்ற மழை நாள்

இன்-பொக்ஸ் இன்கிரிமெண்ட் ஆகாத
ஒரு பரபரப்பற்ற நாள்

எந்த 'இழவுக்கோ'
வானம் கருமை பூசிக்கொண்டு
சோம்பி இருந்தது

பின்னேரம் நாலு மணி -
ஆனால் அதிகாலையும் அந்தியும் கலந்து
மிக்சிங் ஒருமாதிரி அம்மல் தந்து

மெல்லிய தலைவலி
கண்கள் பூஞ்சி பூஞ்சி சொக்கிற்று.
பெய்தேன் என்றும் இல்லாமல்
பெய்யவில்லை என்றும் இல்லாமல்
மழை ஒப்புக்கு சப்புக்கு
வானத்தின் துக்கத்தோடு சேர்ந்து கொண்டது

ஒரு கோப்பி சூடா -
நாக்கு சப்புக் கொட்ட முடியாமல்
சொண்டுகள் காய்ந்து போய் இருந்தன

போர்வையின் கணகணப்பை ஒதுக்கி
எழும்பி கோப்பி போட
அலுப்பாய் இருந்தது.

இப்போதெல்லாம்
பரபரப்பற்ற நாட்களில்
சாப்பாடு செமிக்குதில்லை,
கண்கள் அயருதில்லை

இது ஒரு அப்பழுக்கற்ற ஒய்வு நாள்
என்பதை
மனது நம்ப மறுக்குது.

காற்று வீசாமல் பெய்கிற மழை
தேத்தண்ணிக்கு தண்ணி கலந்து தந்த மாதிரி
ஒரு அஜீரணம்.

அந்த பரபரப் பற்ற நாளை
எந்த பரபரப்பும் இல்லாமல்
அனுபவிக்க முடியாமல் போனோமே
என்ற அங்கலாய்பின் பரபரப்பில்
தவித்துக்கொண்டிருந்த மனசு

சோம்பல் முறித்து
நெட்டி முறித்து
எழுந்ததும்
மழை
கொட்டோ கொட்டு என்று கொட்டியது.