செவ்வாய், ஜூன் 29, 2021

அக்கா புராணமும் சாமியார் பஜனையும்


சிவமயம்
அக்கா புராணமும் சாமியார் பஜனையும்
------------------------------------

நான் உணரும் அவதானிக்கும் விடயங்களில் இருந்து உய்த்தறிதல் என்பது கற்றலின் மிக அடிப்படையான விடயம். உய்த்தறிதலில் abductive reasoning என்றொரு வகையுண்டு. இது பெரும்பாலும் அறியப்பட்ட deductive மற்றும் inductive இலிருந்து நுட்பமான முறையில் வேறுபடுகிறது. abductive reasoning ஒரு அவதானிப்போ அல்லது ஒரு தொகை அவதானிப்பிலிருந்து இலகுவான அதேசமயம் அதிக சாத்தியமுள்ள ஒரு முடிபுக்கு வருதல் ஆகும். deductive மற்றும் inductive போலல்லாது இது ஒரு சாத்தியத்தையே முன்வைக்குறதன்றி, அதை நிறுவுவதில்லை பரிசோதிப்பதுமில்லை. பெரும்பாலும் பரிசோதனை அல்லது நிறுவலுக்கான வாய்ப்பு இல்லாத இடங்களில் இம்முறையை கைக்கொள்ளுவது வழமை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின் நடுப்பகுதியில் அமெரிக்க தத்துவவியலாளர் சார்ள்ஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் என்பவரே இந்த முறையை முதன்முதலில் ஆவணப்படுத்துகிறார். இம்முறையை நாம் நாளாந்தம் பயன்படுத்தும் நல்ல உதாரணங்களாக, நீதிமன்ற ஜூரிகளின் முறைமையையும், வைத்தியரின் நோய் கண்டறியும் முறைமையையும் கொள்ளலாம். abductive reasoning முடிப்புகளை "best available" or "most likely" என்று டிஸ்கியோடே அறிவிக்க வேண்டியிருக்கு. ML , AI கூட இதுதான் பண்ணுகிறது.

Paranormal / அமானுஸ்ய விடயங்களை, தத்தம் அறிவு, புரிதல், பரிசோதிக்கும் வாய்ப்பு, முன்முடிப்புகள், அதுசார்ந்த பயம், ஆர்வம் போன்ற அதீத உணர்வுகள் என்ற பின்புலத்தில் ஆராய முற்படும் போது, கடவுள் என்றோ பேய் என்றோ ஒரு abductive reasoning செய்குறார்கள். இந்த அமானுஸ்யத்தை தொழில் முறைப்படுத்துபவர்கள் மற்றும் இதை ரசிப்பவர்கள் (நம்பிக்கையோடு) இதை பிரசாரிக்கும் போது இதை deductive மற்றும் inductive reasoning முறைக்குள் கொண்டுவருகிறார்கள் இல்லை ஆனால் அந்த முறையில் முடிப்புசெய்யப்பட்ட விடயங்களுக்கு சமமாக இதை பிரசாரிக்கவும் விளைவாக புனைந்து சொல்லவும் முயல்கிறார்கள். இந்த குழப்பவாதிகளாலே சுவாரசியமான abductive reasoning வகைகளை கூட எள்ளுகிற நிலை இங்கு இருக்கு. இந்த எள்ளல் முறையாக abductive reasoning செய்ய முயலுறுகிறவர்களை கூட காயப்படுத்தி ஒதுக்குற விளைவை உண்டு பண்ணுகிறது.

இதில் இன்னொரு சுவாரசிய முரணும் உண்டு. abductive reasoning செய்பவர்கள் சிலர் தங்களுக்கு தவத்தலோ மெடிடேசனாலோ அல்லது யோகம் சித்து கலை பயிற்சியாலோ, குருவருள் இறையருள் திருவருளாலோ மற்றவர்களை விட ஒரு சூப்பர் natural நிலை வந்துவிடுவதாகவும் அதனால் அவர்களுக்கு இந்த reasoning abductive அல்ல inductive ஆகிவிடுகிறது என்று ஒரு வாதத்தை முன் வைக்கிறார்கள். இதை முற்றாக ஒதுக்க முடியாது. ஒரு மிகச்சவாலான, inductive reasoning வழிவந்த, ஏலவே பரவலாக விஞ்ஞான முறைமைகள் நம்புகிற விடயத்தை முரண்படுகிற. ஒரு தியரியை ஆரம்பத்தில் எல்லோரும் இலகுவில் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டோம். சிலர் அதை abductive reasoning என்றோ அல்லது falacy என்றோ கலாய்த்திருக்க கூடும்.

ஆனால் ஒரு விடயம் ஆயிரமாண்டுகளாக abductive reasoning ஏரியாவிலேயே: இருக்குறபோது, அதன் உபகூறுகளை deductive / experimental கொண்டு காலகாலம் தெளிவூட்டி முரண்படுகிறபோது இது reasoning கூட அல்ல இது ஒரு reasoning bias என்றாகிறது என்கிற வாதத்தையும் மறுக்கவியலாது. reasoning bias என்றால் தான் நம்புகிற விடயத்தை ஒரு வகையான உய்த்தல் முறைமைகளையும் தான் நம்பாத விடயங்களுக்கு இன்னொரு வகையான உய்த்தல் முறைமைகளையும் பயன்படுத்தலாகும். கடவுளை மறுப்பவர்கள் கடவுள் பற்றி ஒருவர் சித்தாந்தத்தை வைக்க முயலும்போதே சங்கி என்பதும், கடவுளை நபுகிறவர் கடவுள் ஏன் இல்லை என்று கருத்தை முன்வைக்க முயலும் போதே anti indian என்றும் உடனடியாக உடனடியாக கலாய்த்தல் reasoning bias. இரெண்டையுமே ஒரே மாதிரியாக கலாய்ப்பவர்கள் அல்லது இரெண்டையுமே ஒரே மாதிரியாக கேட்பவர்கள் reasoning bias இல்லாதவர்கள். ஆனால் எதையுமே பாரபட்சமின்றி இறங்கி கலாய்ப்பவர்களிடமும் எல்லாவற்றயும் கண்மூடி கேட்டிருப்பவர்களிடமும் rethinking இற்கான சாத்தியங்கள் எவ்வாறு வேறுபடும் என்பது பற்றி வேறொரு பொழுதில் பார்க்கலாம். Now back to reasoning bias.

பல்வேறுபட்ட ஆராச்சிகள் Paranormal / அமானுஸ்ய நம்பிக்கையாளர்களிடம் reasoning bias இருக்கும் என்று நிறுவுகின்றது. மேலும் இவர்கள் தற்போதைய கற்றல் முறைமையில் ஆற்றல் குறைந்தவர்களா இருக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்று objective ஆக deductive மற்றும் inductive reasoning முறைக்குள் நிறுவுகிறார்கள். அப்ப சமயவாதிகள் எல்லாரும் ஆற்றல் குறைந்தவர்களா ? இங்கதான் ட்விஸ்டு, கடவுளை மறுப்பவர்களுக்கு working memory performance குறைவாக இருக்கும் சாத்தியம் அதிகம் என்று ஒரு ஆராச்சி கட்டுரை நிறுவுகிறது. working memory performance ஐ RAM இற்கு ஒப்பிடலாம். இது நினைவாற்றல் அல்ல.

செரி இப்ப சொல்லுங்க நீங்க ரஜனி fana கமல் fana ?

அப்பா மீது ஒரு குற்றப்பத்திரிகை:


நட்ட நாடு ஹாலில்
கைகள் பிசைந்தபடி
அப்பா தலைகுனிந்து நின்று
அன்றுதான் நான் பார்த்தேன்,

கத்தரிக்காய் சூத்தை
ஆச்சி பாவம் எண்டு 1750 ரூபாய்க்கு முழுதுமே மீன் வாங்கியது
ஏலவே வாழை பழமிருக்க பாப்பா பழமொண்டு பெரிசா வாங்கியந்தது

நட்ட நாடு ஹாலில்
கைகள் பிசைந்தபடி
அப்பா தலைகுனிந்து நின்று
அன்றுதான் நான் பார்த்தேன்,

புதுசா டவுசர் சேர்ட் எடுத்துக்கொடுத்தா அதை அலுமாரிக்குள்ள எங்காவது வைச்சுட்டு பழசையே போட்டு திரிவது
சுந்தரலிங்கம் மாமாவை முன்னறிவிப்பின்றி மத்தியானம் சாப்பிட கூட்டி வந்தது
கிளினிக்குக்கு வந்த ஆச்சிக்கு ஆசுபத்திரிக்காசையும் குடுத்து பஸ்ஸுக்கும் காசு குடுத்து விட்டது.

நட்ட நாடு ஹாலில்
கைகள் பிசைந்தபடி
அப்பா தலைகுனிந்து நின்று
அன்றுதான் நான் பார்த்தேன்,

தண்ட ஆட்களுக்கு ஏமாளியா உதவுறது
விவரம் பத்தாதது
முணுக்கெண்டு கோபம் வாறது

நட்ட நாடு ஹாலில்
கைகள் பிசைந்தபடி
அப்பா தலைகுனிந்து நின்று
அன்றுதான் நான் பார்த்தேன்,

தனக்கென்று சேமிக்க தெரியவில்லை
தனக்கென்று ஆசைப்பட தெரியவில்லை
தனக்கென்று எதுவுமே தெரியவில்லை
அம்மாக்களுக்கு தெரிவதில்லை அப்பாவால் மௌனமாக இருக்க முடிகிறது
அம்மாக்களுக்கு தெரிவதில்லை அப்பாவால் விலகி இருக்க முடிகிறது
அம்மாக்களுக்கு தெரிவதில்லை அப்பாவால் பிடியை விட முடிகிறது
#fathersday #2021

வைரமுத்து : Repeatu



வைரமுத்து பற்றி நேற்று சிலாக்கியமா பேசினோம், அதில அவருக்கு பிடித்த சில உவமைகள் மீள பயன்படுத்துவார் என்று ஒரு குறிப்பை முன்வைத்திருந்தேன்:
மீன் அழுகை:
------------
"தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல" - சங்கமம்
"கடலில் மீனொன்னு அழுதா கரைக்கு சேதி வந்து சேருமா??" - பூமி
நீரும் மாரும்:
------------
"நீராக நானிருந்தால் – உன்
நெத்தியில நானிறங்கி
கூரான உன் நெஞ்சில் – குதிச்சி
அங்க குடியிருப்பேன்" - முதல்வன்

"மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே" - கருத்தம்மா

அப்புறம் sensuality பற்றி பேச்சு வந்தது.
அதில, அவள் "கன்னியென்பதை இந்தமழை கண்டறிந்து சொன்னதுவே", இதில ஒரு டவுட்டு கிளப்பியிருந்தேன்;
அதெப்படி மங்கை என்று பெண் பருவம் சொன்னா ஓகே, கன்னி ?? How is it possible ?

It is possible.
புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ, புரியாதவன் புரிஞ்சவன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க.

இந்த இடத்தில வைத்தியர் பிரசன்னா ரெண்டு விடயங்களை குறிப்பிட்டார்.
ஒண்டு பெண்களும் sensuality புரிதலும் சம்பந்தமா ஒரு புள்ளிவிவரம்: 70:30.
இதுக்குமேல நான் அதை இங்க சொல்லி யாரிடமும் சாபம் வாங்க தயாரா இல்லை.

மற்றது, சுட சுட நனைந்தது என்ன ? என்று கேட்டிருந்தார்.
தோசைக்கல்லா என்று கேட்டிருந்தேன்,
இல்லையென்றார்.
வியர்வை என்றேன்,
இல்லை இது பெண்பாடுகிற வரி, தனியா தலைப்பு போடுங்க வந்து பாடமெடுக்குறேன் என்கிறார்.
வேற ?

கனவு காணாதீர்கள்


அன்புள்ள மகனுக்கு ,
அன்பும் முத்தங்களும்.

'கனவு காணாதீர்கள்' என்ற தலைப்பில் கட்டுரை வரைய உதவச் சொன்னாய்.
இது என்ன விசித்திரமான தலைப்பு என்று சிந்தித்தேன்.

உண்மைதான் கனவு காணாதீர்கள்.

கனவுகள் உனக்கு இறக்கைகைகள் தராது.
இறக்கைகள் இருப்பதாக நம்பவைக்கும்.
பறவைகளோடு முகில்களில் பறக்கும் அனுபவத்தை கற்பிதம் செய்ய சொல்லும்.
ஆனால் ஆசையோடு விரித்துப்பாரு
விழுந்து அடிபடும்.

கனவுகள்
தவளைகளை பார்க்கும் போது முத்தமிடலாமா என்று தோன்றவைக்கும்.
கனவுகள் பழைய அரண்மனைகள் மீது ஈர்ப்பை உண்டாக்கும்.

கனவுகள் ஒரு போதை,
யதார்த்தத்திலிருந்து விலக்கி ஒரு பொய் சுவர்க்கத்தில் உன்னை ராஜாவாக்கும்.
எல்லாவற்றயும் யாரையும் நம்பவைக்கும் - கழுத்து அறுக்கப்பட்டாலும்.
ஆதலால் கனவு காணாதீர்கள்.

சினிமாக்களுக்குள் தொலைந்துபோவாய்
புத்தகங்களுக்குள் தொலைந்துபோவாய்
பாடல்களுள் தொலைந்துபோவாய் - ஏன்,
உனக்குள்ளே தொலைந்துபோவாய்
ஆதலால் கனவு காணாதீர்கள்.

கனவுகள் முருங்கை மரங்களை பார்க்கும் போது வேதாளங்களை தேடவைக்கும்,
கனவுகள் உன்னை ஒரு மாவீரன் என்று நம்பிக்கை தரும்,
கனவுகள் சிம்மாசனத்தையும் பதுமைகளையும் தேடவைக்கும்,
கனவுகள் கால்களின் கீழே குழி பறிக்கப்படுவதை பற்றி கவலைப்படாமல் கடல் அலைகளை சினேகம் கொள்ள வைக்கும்.
ஆதலால் கனவு காணாதீர்கள்.

ஏவாள் கடித்த ஆப்பிள் பழம் - கனவுதான்.
கனவுதான் சாத்தானின் தூதர்கள்.
எதற்கும் விலகியே இரு.

பழைய விளக்குகளை துலக்கவும்
பழைய திரைசீலைகளுடன் பேசவும்
பழைய பாய்களில் பயணிப்பதுபோன்று பாவ்லா செய்யவும்
கனவுகளே தூண்டும்.

பழையவற்றின் மீது ஒரு அதீத ஈர்ப்பை உண்டாக்கும்.
கனவுகள் அனுபவங்களை அர்த்தமற்றதாக்கி விடும்.
நிஜம் எப்பவும் கனவுகளை தீண்டியதுமில்லை தாண்டியதுமில்லை.
தேவையற்ற ஏமாற்றம் சுற்றி மிஞ்சும்.
கனவுகளை விலக்கியே இருந்து பழகுங்கள்.

கனவுகள் தொடர்ந்து துரத்தும் வல்லமை பெற்றவை.
நிம்மதியாய் கொஞ்சம் நீட்டிப்படுத்திருக்க சற்றேனும் சம்மதியா கனவுகள்.
இயங்க துரத்தும் ,
துரோகங்கள், வீழ்ச்சிகள், இகழ்வு தாண்டி - நகர சொல்லும்.
அவை வேண்டா.

மேற்சொன்ன விடயங்களை கொண்டு கட்டுரை வரை.
நான் சொன்னது போல் எல்லாக்கட்டுரைகளும் முகப்பு, நடு, முடிபு என்று பாகுபடுத்தி கோர்க்கவேண்டும்.
நீ செரியாகச் செய்வாய் - என் பிள்ளை.

அப்புறம் மிக முக்கியமாய்.
கனவு காண்.
நிறுத்திவிடாதே.
உன் கனவுகளை தொடர்ந்து எனக்கு எழுது.

அன்பின்,
அப்பா.
இ.த
பி்.கு: உங்களை துரத்தும் கனவு என்ன ?



வெள்ளி, டிசம்பர் 15, 2017

கனவு


மச்சி
சொல்லுடா
நேற்று ஒரு செம்ம சீனு மச்சி
சீனா ?
இரவு ஒரு பத்து பதினொன்று இருக்கும்.
ம்ம்ம்
நிலவு, முழு நிலவில்லை, டிம்மா மங்கியமாதிரி ஒரு மாதிரி ரொமான்டிக்கா!!!
ரொமான்டிக்கா....?
அவள் வந்தாள்டா 
அவளா ?
ஓம் அவளேதான். வயசு பதினாறு இருக்கும் செரியா சொல்ல தெரியேல்ல. சம்திங் லைக் தட்.
பதினாறு வயசா ? மைனர் காதலா ?
இல்லைடா ஆனா இளவயசு மச்சி
ஓகே....
முகம் brightaa அப்பிடியே 1000 வாட் பல்ப் இல்லை அது சுடும் ஒரு நிலவு மாதிரி குளிர்மையான ஒரு ஒளி அழகுடா, சும்மா நிலவு எண்டா தேய்ந்து வளரும், இது பொங்கி வரும்  ஒளி, நிலவு ஒளி, பெரிய சைஸ் நிலவு ஒளி மாதிரி முகம்.
confusion of the institution
அவள் சிரிச்சாடா மச்சி 
சிரிச்சிட்டாளா - அப்பா அவளவுதான்.
அவ சிரிச்சா அது கூட ஒரு புதுமையான நிலவுடா 
இந்த நிலவ விட்ட வாயேண்டா
அது அவளை
அவளை
அவளை அப்படியே கை கூப்பி கும்பிடலாம் 
கும்.. கும்பிட.... கும்பிடலாம்....medical miracle
ஓமடா தெய்வீக சிரிப்பு
சுமார் ஒரு மின்னல் மாதிரி வந்தாளடா 
வாம்மா மின்னலு - நீ சொல்லு
நான் எழுந்து உக்காந்தன்
நீ ரொம்ப லேட்டுடா
அவள் சொன்னாள்
சொல்லிட்டாளா.....
ம்ம்ம் சொன்னாள் - தன்னை பாரெண்டு.
அடி ரா,அடிரா,அடிரா.....
அவள் அழகெனும் தெய்வமடா 
மறுபடியுமா.... ஆளை விடுடா சாமி!!!


மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்,
வயதுபதி னாறியிருக்கும் இளவயது மங்கை,
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்,
துங்கமணி மின்போலும் வடிவந்தாள் வந்து,
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ!
அடடா அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன். (1)


Read more at: https://tamil.oneindia.com/art-culture/essays/2000/bharathi-231100.html


வெள்ளி, செப்டம்பர் 01, 2017

செவ்வரி ஓடிய பாதங்களுக்கு....

பதுக்கென்று பாஞ்ச பல்லி
பாதகமாய் சேதி சொல்ல
எதுக்கென்று தெரியாமல்
எனக்குள்ள நான் ஒழிய
களுக்கென்று சிரித்த
காரிகையே - உந்தன்
கணுக்கால் இருந்து நீளும்
காலிருக்கே - அம்மாடி
மணிக் கணக்காய் பார்த்தபடி மாய்ஞ்சிருப்பேன்!

நீளம் அது நீளம்
நீலாம்பரி வெள்ளைப்
பாதமது பாதம்
பதித்தற்கே சிவந்து நிற்கும்;
வரி வரியாய் சிவந்த ரேகை
வளவளத்த பாதையிலே;
காலன் புரையன் என்ற
நா(ள)கங்கள் ஓடி நிற்கும்

முணுக்கென்று வளந்து நிக்கும்
மீசை முடி முள் குத்தும்
கருக்காய் வளர்ந்த தேகம்
காய்ந்து கிராப்பெடுக்கும்
சுருக்காய் நீ வந்து
சுளுக்கெடுக்கும் சிரிப்போடு
படுக்காயோ பாதகத்தி
பல்லிளிக்கப் பண்ணுவையோ!



ஞாயிறு, ஜூலை 05, 2015

ஆர்த்து எழு ! பகுத்தறிவு பூண!

பொருளுக்கு பாடவென புலவோர் பலரிருக்க
பொருளாய் பாடவந்த புலவோரே
அருளாய் பாடவல்ல அரங்கத் தலைமை
வெறும் பொழுதாய் பாடுகின்ற புலவன் நான்
உங்களோடு
பொறுத்தருளும் – ஐயன்மீர்
ஆனாலும் அவ்வப்போ – நல்ல
பொழுதுக்கும் பாடுவேன் நான்.

கொஞ்சும் சலங்கை
பட்டுச்சரிகை
கிட்ட வந்து கைபிடித்து குசலம்
நீங்கள் எங்க – ஓ அந்த ஊரே
அங்க போஸ்ட்மாஸ்டர் பொன்னம்பலத்தை தெரியுமே
எங்கள் பெரியப்பாவின் ஒன்னு விட்ட சித்தப்பா மகன் – என்று
கிட்ட வந்து கைபிடித்து குசலம்
நல்லாத்தான் போய்க்கொண்டு இருக்கு இந்த ரெண்டு நாளும்
அனால் என்ன
Monday யை நினைச்சாதான்
மண்டை விறைக்குறது
இருந்தாலும்
சில
Mondays தாங்கும் இந்த நினைவு.

ஆர்த்து எழு !
பகுத்தறிவு பூண!

பகுத்தறிவு பற்றி – கொஞ்சம்
பகுத்து அறிவோமா ?

பகுத்தல் தான் அறிவதற்கான வழி.
அறிந்த பின்,
தொகுத்தல் தான் அதன் வெளிப்பாடு.
இப்படி,
அறிந்தவன் தொகுத்ததுதான்
கல்வி
அதை நாம் பகுத்து உணர கேட்பதுதான்
கேள்வி

பகுத்தறிவு பற்றி – கொஞ்சம்
பகுத்து அறிவோமா ?

கல்வியில் சிறந்த தமிழ் நாடே,
கொஞ்சம் கேள்வியிலும் நீ சிற.

கேட்கத் தெரிந்தவன் – காதுகளால்
கேட்கத் தெரிந்தவன் தான்
கேட்க்க முடியும்
கேள்வியை - செரிவர
“கடவுளை காட்ட முடியுமா?” என்று கேட்டவன்
கடவுளை அறிந்தான்
“ஆப்பிள் எதற்கு கீழே விழுகிறது?” என்று கேட்டவன்
ஈர்ப்பை அறிந்தான்
மனிதர்களின் இறப்பை கேள்வி கேட்டவன்
ஞானம் பெற்றான்.
“யாராய் கேக்குறாய் வரி ?” “எதற்கு கேக்குறாய் வரி?” என்று கேட்டவன்
சுதந்திரத்தின் அடையாளம் ஆனான்.

உன்னுடைய கேள்வியும் – அதன் மீதான தேடலும் தான்
உன்னுடைய அறிவையும் அடையாளத்தையும்
தீர்மானிக்கின்றன

ஆண்டவனாய் இருந்தாலும் – அவனை
அறிந்தவன் என்று சொன்னாலும் – நம்மை
ஆள்பவனாய் இருந்தாலும் – ஈன்று
பெற்று வளர்த்தவனாய் இருந்தாலும் – ஆய்ந்து
கல்வி கற்று தருபவனாய் இருந்தாலும்

கேளு,
உந்தன் கேள்விக்குள்,
எல்லாரும், எல்லாமும் உட்பட்டத்துதான்.

இது விளம்பர உலகம்,
கேள்விதான் - இங்கு
வாழ்வதற்கான வழி

கடவுளை,
கடனை (கிரடிட் கார்ட்)
கற்பை – ஏன்
எளிமையைக் கூட
கூவிக் கூவி விற்கிறார்கள்.
நாங்கள் தான் தெரிந்து வகை ஆட வேண்டும்.

“அன்பு நண்பர்காள்,
ஆர்த்து எழுங்கள்
பூணலாம் பகுத்தறிவு
அடையலாம் பெரும் சிறப்பு”

என்று அறைகூவ
எனக்கு அச்சமாய் இருக்குறது
விளம்பரங்களின் வியபகத்தில்
கூசிப்போன காதுகளில்
நானும் பத்தோடு பதினொன்றாக
சம்மதமில்லை

எங்கள் காது வந்து சேர்கின்ற – இற்றை
அழைப்புகள் எல்லாம்
உள்ளுக்குள்
பூடகமாய் ஒன்றை
பூட்டியே வைத்திருக்கின்றன.

கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர் - என்பதுதான்
இறை உணர்வு.
ஆனால் இங்கே,
அதிகம் விற்க்கப்படதுவும் - கேள்விகள் ஏதுமின்றி
அதிகம் வாங்கப்பட்டதுவும்
இறை உணர்வுதான்

இராமர் ஆண்ட இடம் இது – மசூதியை
இடித்து விட்டு
கோவில் கட்டு – என்றால்
உனதிறைவன்
உலகையே ஆண்டவன் என்றல்லா நபியிருந்தோம்
என்று திருப்பிக் கேளு

போத்தீஸ் விளம்பரங்கோளோடு
போட்டி போடும் – அலங்கார
போதகர்களா – உங்களுக்குப்
போகம் அறுத்து
காட்டிடுவார் பேரின்பம் ?

அல்லா பெயரால் அடி என்றால் –
கேள்வி இன்றி அடித்துவிடு,
சொன்னவனை
பாதகமில்லை
ஏழைகளின் வீட்டிற்கு இறைவன்
ரொட்டி வடிவில் மட்டும்தான் வருவான்
கூடவே
துப்பாக்கிகளையும் தருபவன் சாத்தான்.

முடியப் போகிறது உலகம்
கூடச்சேர்
உன்னை மட்டும் காப்பாற்றுகிறேன் – என்பவனிடம்
உலகுக்கே சிலுவை சுமந்தவனை
உந்தன் மத்த்துக்காய் மட்டும் – என்று
மட்டுப்படுத்ததே – என்று
மறுத்துவிடு.

வாக்கு கேட்டு வருபவனிடம்
கொள்கைகளை கேளுங்கள்
கொள்ளையில் பங்கில்ல

இலவசம் தான் – எங்கள்
கொள்கை என்றால் –
ஆகிடுங்கள் உசார்
அதற்கும் சேர்த்து
நீங்கள் தான் கட்டவேண்டு வரி.

அன்பானவர்களே
உங்கள் குழந்தைகளுக்கு
கேள்வி கேக்க
கற்று கொடுங்கள்.

கேள்வி எப்படி உரிமையோ
பதில் அப்படிக் கடமை
என்பதை சொல்ல மறவாதீர்.

கேட்பது என்பது கலை. – அதைப்
பயின்றால் உயரும் உங்கள் நிலை.

ஆர்த்து எழு – நண்பனே,
எழுந்து கேளு உந்தன் தலைமுறைக்கான கேள்விகளை
கேட்பதனால் பூணலாம் பகுத்தறிவு
பூண்பதினால் செய்யலாம் பெரும் செயல்கள்
செய்வதனால் காணலாம் புது விடிவு.

ஞாயிறு, மே 10, 2015

காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி…

காதலாகி…

கண்டனன்.
கனலாக உருகி மனம் கன்னினன்!
கொண்டனன்
முன்னும் பின்னும் மனைமாட ஒரு குழப்பம்!
ஈர்த்தனள்
இன்னது என்று சொல்லொணா இயல்பினால்
உணர்ந்தனன்
தன் வயதின் வினாவுக்கு ஒரு விடை
காதல் – ஆகி!

கசிந்து…

சிரித்தனர்
முன்னும் பின்னுமாய் நண்பர்கள்
பேசினர்
சிலேடை, சின்னதாய் கவ்வ வெட்கம்
பார்த்தனர்
அங்கும் இங்குமாய் என்று ஊர் சொல்ல
மறை(ந்)த்தனர்
தலை, மறுக்காமல் மனது மெல்ல நகை கொள்ள
கசிந்தது – சேதி!

கண்ணீர் மல்கி…

கொண்டனர் - உரு
குலச் சாதி சனம்
விண்டனர்
தங்கள் விருப்பதற்கு - ஒரு வன்மத்தை
மாய்த்த்தனர்
இருவரும் இது பொறுக்காது
வருந்தினர்
பொய் மானத்தால் கொண்ட இழப்பை எண்ணி
கண்ணீர் மல்கி….

வியாழன், மே 07, 2015

மங்களா ஹோல்ட்!!!

சிரிக்க வைச்சா சிரியுங்கோ, தயவு செய்து மாறிக் கீறி சிந்திச்சுடாதேங்கோ…
கவிஞ்ஞர் கே.கா: கலோ அண்ணை.
வாலிபன்: கலோ?
கே.கா: அண்ணை, நான் கவிஞ்ஞர் கே.கா பேசுறன். ஆசிதிரிலேயாவிலிருந்து.
என்னடா புதிசா ஒரு புனை பெயர் சொல்லுறாய்?
எல்லாம் ஒரு பாதுகாப்புதான்.
அதை விடுங்கோ, அண்ணை எனக்கு ஒரு சந்தேகம். முதல் தெரிவே இப்படி முச்சு முட்டுதே. ரண்டாம் மூணாம் தெரிவு எல்லாம் எப்படி இருக்கும் ? பாவம் அண்ணை உள்ளூர் பெடியள். இல்லை ஒரு வேளை நாமக்குதான் செலக்ட் பண்ண தெரியலையோ ?

டேய்! டேய்! ஸ்பீக்கர் போன்டா. (பாய்ந்து கட் பண்ணிய படி). ஹி ஹி, (இழித்தபடி பின்னல் திரும்பி), சொறி அம்மா இவனை யார் எண்டே எனக்கு தெரியாது.

கனம் வகுப்பு ஆசிரியருக்கு,
எனது பாட்டி மைதிலி அவர்கள் சிவனடி சேர்ந்துள்ளார்கள் என்று உதயன் பேப்பர் வழி அறிந்து விடுமுறை கேட்டு இருந்தேன். ஆனா நீங்கள் எனக்கு அதை வழங்க வில்லை. எனக்கு ஒரு கேள்வி, சிம்பிள், ஏன் ?
ஏன் மைதிலி பாட்டிக்கு மட்டும் லீவு தரவில்லை. மைதிலி பாட்டி மீது எனக்கு அன்பில்லை எண்டு நீங்கள் சொல்ல முடியாது . ஏன் எண்டால் நான் அவாக்கு வெத்திலை சீவல் எல்லாம் வாங்கி தந்திருக்குறன். நீங்கள் முன்னம் கோபால் தாத்தா அந்தியட்ட்க்கே நீங்கள் லீவு தந்தனீங்கள், கஜா மாமா கலியாணத்துக்கு கூட லீவு எடுத்து ‘கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு …’  எண்டு ஸ்டேட்டஸ் போட்டு செலேப்ரெட் பண்ணினான். அதேன் அன்றைக்கு மூணுவிட்ட சீத்தா பாட்டி செத்ததக்கு கூட லீவு தந்தனியல், இவ எண்ட சொந்தப் பாட்டி, ஆனா லீவு தரலையே ?

……….
இப்படிக்கு,
உங்கள் அன்பு மாணவன்
கே.கே

பக்கத்து வகுப்பு ஆசிரியர்
அன்பின் கேகே,
நான் ஒருவாட்டி முடிவு பண்ணினா
என் பேச்சை நானே கேட்கமாட்டன்,
அதனால் தாங்கள் கேட்டாலும் ஊகும்.
* * *
நீங்கள் எனது வகுப்பில் அதிகம் கவனிக்காது இருப்பதால்
உமக்கு எனது பாடங்கள் மூன்றே மாதத்தில் மறந்து விடும்
எனவே எமது வகுப்பில்  நீங்கள் பங்காளிகள் அல்ல வெறும் பார்வையாளர்கள்
அதனால் உமக்கு நான் பதில் தர தேவையில்லை.
நல்லா மார்க்ஸ் எடுக்கிற மாணவர்கள் லீவு கேட்க மாட்டினம்
* * *

சங்கம்: வறுத்த படாத (பாடு படும்) உள்ளூர் வாலிபர்கள்
நிகழ்வு: பாராட்டு விழா
உள்ளூர் வாலிபர்களின் ஆபத்பாண்டவராக இருக்கும் புரோக்கர் பொன்னுசாமி அவர்களின் அம்பது உள்ளூர் திருமணங்களை நடத்தி வைத்த நிகழ்வை பாராட்டி எடுக்கும் விழா.
தலைமை: கஜேந்திரன் -சுங்க அதிகாரி (சிரேஷ்ட உள்ளூர் மாப்பிளை)
பாராட்டுரை: அதி சிரேஷ்ட உள்ளூர் மாப்பிளை கீர்த்தி (பல வெளிநாடுகள் கண்டவர், வல்லவர், நல்லவர், நாலும் தெரிந்தவர்)
ஒருங்கிணைப்பாளர்: கனிஷ்ட உள்ளூர் மாப்பிள்ளை டாக்டர் வருண்.




வெள்ளி, ஜூன் 14, 2013

ஆய பயன்

என் கொல் ?
74.5 இக்கும்
75 இக்கும்
இடையிலான அழுத்தத்தில்
பல மாணவர்களின்
மனச்சாட்சி
நசுங்கி சாகிறது

பேசாமல்
முப்பத்தி ஐந்தை
வறுமைக் கோடாக
அறிவித்து விடலாம்

சார்பு வேகத்தையும்
சமாந்தரக் கோடுகளையும்
சப்பித் துப்பியவர்களே
முச்சந்திகளில்
பெரும்பாலும் விபத்துக்குள்ளாகிறார்கள்
என்று எனக்கு ஒருமுறை
முச்சந்தி முரளியே சொல்லி இருக்குறார்


கற்றதனால் ஆய பயன்
தலை ‘கனக்க’ தொப்பி போடுவதில்
போய் முடிகிறது - பெரும்பாலும்

சமூகப் பொறுப்பு என்பதை
பள்ளங்களுக்குள்
விழாமல் நடப்பது என்றும்
நேர்மை என்பதை
வாய்ப்புக் கிடைக்காதவரை
ஏமாற்றாமல் இருப்பது என்றும்
நாணயமாய் நடத்தல் என்பதை
நா நயமாய் பேசல் என்றும்
மொழிபெயர்க்கின்றது கல்வி

புரிதல் பற்றிய
புரிதல் இன்றியே
எல்லாவற்றையும்
புரிய வைக்க முயல்கிறது கல்வி

நல்ல புரிதல் என்பது
ரசனையான கூடலுக்குப் பின்னான
ஆழ்துயில் போல
அமைதியும் மந்தகாசமும் தரும்
ஆனால்….
அவசர அவசரமாய் படித்து
அவசர அவசரமாய் பாஸ் பண்ணி
அவசர அவசரமாய் செத்தும் போகிறோம்
இடையில் நிறைய….

அதுசெரி,
புரிந்ததா என்பதைக் காட்டிலும்
புரிந்த மாதிரி
சலம்புபவர்க்கே
விலை அதிகம்

அதனால்
புரிதல் பற்றிய
புரிதல் இன்றியே
எல்லாவற்றையும்
புரிய வைக்க முயல்கிறது
கல்வி

விளம்பரங்களின்
மயக்கத்தில்
விலை பேசும் ஆற்றலை
நாம் என்றைக்கோ
மறந்துவிட்டோம்

சமூகப் பொறுப்பு என்பதை
பள்ளங்களுக்குள்
விழாமல் நடப்பது என்றும்
நேர்மை என்பதை
வாய்ப்புக் கிடைக்காதவரை
ஏமாற்றாமல் இருப்பது என்றும்
நாணயமாய் நடத்தல் என்பதை
நா நயமாய் பேசல் என்றும்
மொழிபெயர்க்கின்றது கல்வி
நிரவப் படாத பள்ளங்களும்
அதிகமான வக்கீல்களுமாய்
கூர்க்கிறது சமூகம்

இந்த அலட்டல்கள் பற்றி பிரக்ஞ்சை இன்றி
நீயா நானாக்களில் கலந்து கொள்ளாத
சமூகப் போராளிகளும்
விளம்பரம் இல்லாத நேர்மைகளும்
நாணயமான நாக்களும்
இந்த பூமிப் பந்தெங்கிலும்
மழைப் பன்னீரை தெளித்துக் கொண்டே இருக்கின்றன.

ஞாயிறு, ஜூன் 09, 2013

நீக்கமற…

நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்ட
பள்ளிப்பருவத்து நண்பன் ஒருவனை
ஆரத் தழுவ முடியவில்லை
நெஞ்சில் நெருடுகிறது ஒரு பல்லுக்காயம்

நண்பரோடு கூடைப்பந்து
ஆடிக் களைக்கலாம் எண்டால்
ஓடி வழியும் வியர்வை
நகங்களின் கூர்மை சொல்லிச் செல்கிறது

சமூக அநீதி கண்டால் கோபம் ?
ஊகும், தள்ளிப் போகிறது
மிருதுவானவற்றோடு சேர்ந்து
நானும் மிருதுவாகிப் போனேன் போலும்.
செங்கொடி மேடைகளில்
உறுத்துப் பேச முடியாதபடி
உதடுகள் கடிபட்டுப் போய் இருக்கின்றன


நண்பர்களுடனான அதீத அரட்டை
ஆடிக்கொண்டிருக்கும் உந்தன் முத்துச்சிமிக்கியை
நினைவுக்கு கொணர்கிறது

சற்றே தாமதமாகும் அலுவலக கூட்டங்கள்
ஆவி பறந்து ஆறிப்போய்க் கொண்டிருக்கும்
ஒரு குவளை தேநீரையும்
இரு குவளைக் கண்களையும்
படம் காட்டுகின்றன

ஆடி அசைகின்ற உந்தன் பின்னல்
ஆக்சிலேற்றரோடு எந்தன் கால்களை - ஒரு
ஆசுவாச உடன்பாட்டிற்கு சம்மதிக்க வைத்திருக்கிறது

எந்தன் பருவத்தில் கொண்ட கோலமெல்லாம்
உந்தன் புருவத்தின் மையில் கரைந்து போகின்றன

அகந்தை அகற்றிய ஆத்மாவை
பரமாத்மா ஆட்கொள்ளல் போல
நான் இழந்த நிற்கும் (எந்தன்) மிச்சத்தை
நீயே முழுதும் ஆட்கொண்டிருக்குறாய்.

அடையாளம் தொலைத்த இந்த நிலையை - எல்லாரும்
அடையாளப்படுத்திக் கேலி சொல்கின்றார்
பின்னூட்டங்-களையும் விருப்பு-களையும்
தாண்டிய ஒரு வாசிப்புக்காகவே
இப்போதெல்லாம் எழுத முயல்கிறேன்

குனிந்த மர நிழலும் குனித்த புருவமும் - கண்ட பிறகு
குதிரைகளின் கனைப்பும்
நரிகளின் ஊளையும் ஒன்றே.

இதற்க்கு முன்னான என்னை
எங்கு தேடினாலும்
நீயே நிறைந்திருக்குறாய் எங்கும்

அந்த பள்ளிக்கூட ஹொக்கி அணியின் நிழல் படத்தில்
பின் வரிசையில் நடுவில் நிற்கும் இளைஞனுக்கும்
எனக்குமான வித்தியாசம் மகிழ்வையே தருகிறது
இதற்க்கு முன்னான என்னை
எங்கு தேடினாலும்
நீயே நிறைந்திருக்குறாய் எங்கும்,
நீக்கமற!

---------------------------------------------------------------------------------
இதை நான் அந்த சம்பவத்து மொன்னமே எழுதினான் எண்டு சொன்னா நம்பவா போறீங்க ?
---------------------------------------------------------------------------------

புதன், அக்டோபர் 24, 2012

விண்ணைத் தாண்டி வருவாயா ? !


அதே வழமையான புன்னைகை
அதே வழமையான விசாரிப்புகள்
கடந்து போகிறோம்
பூடகங்களோடும்
புதிர் போடலோடும்

அந்தச் சிக்கலை
அவுழ்க்கவும் ஆகாது
வெட்டவும் ஒண்ணாது
மனதும் மூளையும்
மயங்கிக்கிடக்கிறது

நீ
கைப் பையை திறந்தாலோ
நான்
பர்சை திறந்தாலோ
கதை சுபம்தான்

உள்ளே தூங்கி கிடக்கு
எங்களுக்கான காதல் கடிதங்கள்.

முடறு வரை
வந்தவார்த்தை
முழுங்கப் படுகிறது
தடுப்பது
சுயமா பயமா
தெரியவில்லை



விளிம்பில் நிற்கிறது மனசு
எட்டிப் பார்த்தல் விழுந்து விடும்
ஒரே கிண்ணியில் எதிர் எதிராக இல்லை
இரு வேறு கிண்ணிகள் அருகருகா - பயம்
நான் முதலா ? நீ முதலா ? - தயக்கம் (சுயம்)

அதே வழமையான புன்னைகை
அதே வழமையான விசாரிப்புகள்
கடந்து போகிறோம்
பூடகங்களோடும்
புதிர் போடலோடும்

இரண்டு கெட்டிக்காரர்களுக்கு
காதல் கடினமாகிறது
காதலில்
கெட்டித்தனத்தை காட்டுவதால்
காதலிப்பதில்
காட்ட வேண்டியதை
காதலிக்கப் படுவதில்
காட்டுகிறார்கள்

அதே வழமையான புன்னைகை
அதே வழமையான விசாரிப்புகள்
கடந்து போகிறோம்
பூடகங்களோடும்
புதிர் போடலோடும்

அந்தச் சிக்கலை
அவுழ்க்கவும் ஆகாது
வெட்டவும் ஒண்ணாது
மனதும் மூளையும்
மயங்கிக்கிடக்கிறது

இவங்களுக்கு வேற வேலை இல்லை ? பகுதி இரண்டு


இவங்களுக்கு வேற வேலை இல்லை இருக்கு!
பாகம் இரண்டு - காடு திறந்து கிடக்கின்றது
கண்கள் நிறைய கனவுகளோடும், பாக்கெட் நிறைய போறோகிறாம்களோடும், மெல்லிய பதைபதைப்போடும் இந்த போட்டியில் பங்குகொள்ளும் ஹீரோ , ஹீரோயின்களுக்கு,

ஏலவே யாழ் ஐடி இல் ‘சேர்’மார்களையும், அண்ணா அக்கா மார்களையும் கண்டு பிரமித்து மகிழ்ந்து இருக்கும் உங்களுக்கு உங்கள் கூட்டாளி இந்த வால்ப் பயல் வாலிபனின் வணக்கங்கள் அல்லது  பாராட்டுகள் எப்படி வேணும் எண்டாலும் வைச்சுக் கொள்ளுங்கள்.

எப்படி பேசுவது, என்ன பேசுவது, எதை பேசுவது போன்ற பலவற்றை ஏலவே நிறைய பகிர்ந்துவிட்டார்கள். நான் இந்த டெக்னிக்கல் மாட்டார் பேசப் போவதில்லை,

மச்சி வெற்றி தோல்விகளை ஒதுக்கி விட்டு, சும்மா பூந்து வா – அனுபவி, அவதானி.

சயந்தன் பேசுகிற போது எப்படி conjunction ஐ லாவகமாகப் பயன் படுத்துகிறார், விமல் என்ன நிறத்து கால் சட்டைக்கு என்ன நிறத்தில் சேர்ட் போடுகிறார், கவுரி அக்காவின் நேர் கொண்ட பார்வை - அதில் கனிவு, பாலா ஒன்றை சொல்வதற்கு முன் சிந்திப்பதற்கு என்று யாருக்கும் தெரியாமல் எப்படி நேரத்தை களவாடுகிறார், சர்வேஸ் தமிழ் மொழியிலேயே தொழில்நுட்பத்தை எப்படி நாசூக்காக பேசிவிடுகிறார். இப்படி கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு – தேடிப்பார்.

புதிய மனிதர்களோடு தயக்கம் இன்றி பழகு - முகம் மலர்ந்து முகமன் கூறு, உற்சாகமாகப் பேசு, அழுத்தமாக கை குலுக்கு.

சித்திரம், செந்தமிழ், ஆங்கிலம், design patterns, optimization, smart coding எல்லாம் பழக்கம்தான் - பழக வரும். உன் மீது நம்பிக்கை கொண்டு குறைந்தது ஓராயிரம் கண்களாவது உலகெங்கும் உன்னிப்பாய் இந்த நிகழ்வை அவதானிக்குறது - உன் நீட்சி ஏலவே பெரிது.

நல்ல பெடியன் நாய்ப் பழக்கம் எண்டு ஒரு வழக்கு உண்டு - அது புளோக்கர்களுக்கு சாலப்பொருந்தும். இளையராஜவில் இருந்து இஸ்றேல் பிரதமர் வரை என்ன செய்ய வேணும் எண்டு சொல்லுவது எங்கள் வழக்கம் -
              கண்டு கொள்ளாதே -
               உனக்கு என்ன செய்ய வேணும் எண்டு தெரியும்
                        - சும்மா புகுந்து விளையாடு.

"நாங்கெல்லாம் அப்பவே அந்தமாதிரி இப்ப கேக்கவா வேணும்."

அன்பின்,
வாலிபன்

பி.கு: cheers-girls இக்குகாக வரச்சொல்லி உந்தன் பாட்டிமாருக்கு கடிதம் எழுதிய அப்பாவி நாந்தான்.

முந்தய பாகம் 

வெள்ளி, அக்டோபர் 19, 2012

சோகமா ஒரு வாரம்


ஓரடி மாலை,
ஒரு ரோசாப் பூ,
கொஞ்சம் இயக்கப் பாடல்,
சோகமா ஒரு வாரம்.

கிரடிட் கார்ட் பில்,
காஸ் விலை ஏற்றம்,
மன அழுத்தம்,
மெல்ல மறந்து போகும்.

ஓரடி மாலை,
ஒரு ரோசாப் பூ,
கொஞ்சம் இயக்கப் பாடல்,
சோகமா ஒரு வாரம்.

வடை பாயசம் படைச்சு
விரதம் இருக்க
மாவீரர் ஒண்டும்
நல்லூர் முருகனோ
சுடலை வயிரவரோ இல்லை அடா!

கடைசியில்
அடிச்சது விட்டு,
அடிக்காம விட்டு,
அகப்பட்டு செத்ததெல்லாம்;
அம்புட்டுத்தானா?

நீ வாழ செத்தவன் சொல்கிறேன் கேள்
யாராவது வாழ நீ வாழப்பா.
என்னை நீ நினைத்திருப்பாய் 
என்பதற்கா என் சாவு - இல்லையடா
ஏதோ ஒன்றை நடந்திடாதா 
என்பதற்காய் என் சாவு.

அள்ளுப் பட்டுப் போய்
கொத்துக் கொத்தா செத்ததெல்லாம்
நீ அழுது முடங்க வல்ல.

கண்கள் துடைத்து எழுந்துவா -
கைகள் தேய்த்தவடி.
வெட்டி முறித்து வேலை செய்.
அதை கொட்டி களித்துக் கொண்டாடு -
தப்பில்லை.

பாதி வயித்துக் கஞ்சிக்கு
பார் பார்த்து நிக்கும் உந்தன் முட்டைக்
கோது வயித்துக் குஞ்சுக்கு
கொஞ்சமாவது கொடுத்து அனுப்பு.

அள்ளி முடிச்சு அறுவடை செய்
சீவி முடிச்சு சிங்காரி - அதுக்கு முதல்
பள்ளிக்கு கொஞ்சம் பகிர்ந்தனுப்பு.

கட் அவுட் கொண்டு வந்தால் -விகிதாசாரப்படி
கட் அவுட் கொண்டு வந்தால்
கட் - அவுட் ஆயிடுவமோ

துள்ளி எழு
துடை விளக்கு சிமினி
அள்ளிக் கட்டி
அளவில்லாமல் படி
அறுவடைக்கு காலம் வரும்

அண்டைக்கு

கட்டு படைக் கோயில் - எமக்கு
கனகு, மல்லி எண்டு
கொட்டு பூக்குவியல்.
பாடு புதுராகம்.
கொண்டாடு - 
சோகமா ஒரு வாரம்
சுகமாக.



திங்கள், அக்டோபர் 15, 2012

இவங்களுக்கு வேற வேலை இல்லை ?

இவங்களுக்கு வேற வேலை இல்லை இருக்கு!

பாகம் ஒன்று - கூண்டை விட்டு…..

இலங்கை வடக்கே வாழும் வயோதிகர்களுக்கு, அம்மம்மா, அம்மப்பா -களுக்கு , அப்பப்பா அப்பம்மா -களுக்கு, அம்மா அப்பா -மார்களுக்கு,

இதுவரை வெள்ளவத்தை பஸ் வண்டித்தரிப்பிடம், கட்டுப்பத்தை, கத்தரிக்காய், காதல், வயதுப் பிரச்சனைகள் போன்ற வாலிப விடயங்களை மட்டும் விசாரித்து, விமர்சித்து எழுதி வந்த இந்த ஏதென்சு நகரத்து வாலிபன் முதல் முறையாய், பனை மரக் காடுகளில் மரத்துப்போன மனங்களும் விறைத்துப்போன கால்களுமாய் வாலிபம் கடந்த உங்களுக்காய் எழுதும் மடல்?, காகிதம்!, இல்லை விண்ணப்பம் என்று வைத்துக் கொள்ளலாம். இடைக்கு இடை எணை, அப்பு, ஆச்சி, ஆன்ரி, அங்கிள் எண்டு போட்டுக் கொள்ளுங்கோ.

வயது முடிந்த காலத்தில் வெத்திலை இடிச்சுக் கொண்டோ, இல்லை வயிரவ கோவிலடியில் விளக்கு ஏத்திக் வைச்சுக் கொண்டோ, இல்லை வாசகசாலையில் அரட்டை அடிச்சுக் கொண்டோ, ‘சிவனே‘ என்று நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் அ(ம்மா/ப்பா)(மா/பா) களுக்கு. வணக்கம்! (எணை காது நல்லாக் கேக்குதே?)

சுப்பர் சிங்கர்களுக்குள் புதைந்துபோன அம்மாக்களுக்கு வணக்கம். டீவிப் பெட்டியில் காட்டப்படாத இரத்தமும் சதையுமான ஒரு அழகான உலகம்- மனிதர்கள் போதாது வெறித்துப் போய் இருக்கின்றது. (வெளிய வந்தாத்தானே - முட்டாளாவதில் மகிழ்வது பெண்களாத்தான் இருக்கும், இப்ப கூடப் பாருங்கோ உங்கட ஆக்கவுடமையை பற்றி ஆதங்கப்படுவது புரியாமல் உங்கட அறிவுடமையை கேலி செய்வதாய் கோபப்படுகிறீங்க).

வேலை, விளைமீன் குழம்பு, சீலாமீன் பொரியல், கோயில் 8ம் திருவிழா மேளக்கச்சேரி, ஏறி வரும் விலை வாசி என்று பரபரத்துப் போன அப்பாக்களுக்கு வணக்கம். வாழ்க்கை என்பது என்ன என்பதே உங்களில் பெரும்பாலானர்களுக்கு நாப்பதுக்கு பிறகு மறந்து விடுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. சமூக வாழ்க்கை என்பது உங்களில் பலருக்கு கோயில் என்பதோடு நின்று போய்விடுகிறதோ என்ற நான் நிறைய அங்கலாத்திருக்குறேன்.

முடங்கிப்போன பெரியவர்கள், முயக்கம் இல்லாத தாய் தந்தையர், இளையதலை முறை ?

வாழ்வு என்பது வெற்றி தோல்வி என்ற முடிவைக் காட்டிலும் முயற்சியில் இருக்குன்றது என்று முயன்று வென்றவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

ஒரு பெரிய போராட்டம் அடித்து நொறுக்கப் பட்ட பின்னரும், கூட்டம் கூட்டமாய் இன சனம் அழிந்த பின்னரும் இந்த சமூகத்தின் எல்லாத் தேவை மட்டங்களில் (maslow’s hierarchy of needs)  இருக்கும் சில இளைஞர்கள் ஒரு கனவை (“Making Yarl the next Silicon Valley") நோக்கி நகரமுயல்கிறார்கள் –. உங்கள் ஊருக்கு உங்கள் பிள்ளைகள் ஒரு தேர் எடுத்து வந்திருக்குறாங்கள் – “Yarl Geek Challenge", கொஞ்சம் கை கொடுக்க வறீங்களா (ஒக்டோபர் மாசம் இருபத்தி ஆறாம் திகதியில் இருந்து இருபத்தி ஓம்பதாம் திகதி வரை)?



சுப்பர் சிங்கரில் யாழினி எடுபட்டது பற்றியும், அனு எடுபடாதது பற்றியும் அங்கலாய்த்துக் கொண்டு இருப்பீர்கள். ஒரு ரியால்லிடி ஷோவை நேரடியாய் யாழ் மண்ணில் காணும் வாய்ப்புக் கிடைச்சிருக்கு. அதுவும் உங்கள் பக்கத்து வீட்டுப் பெடியோ இல்லை, அடுத்த ஒழுங்கை குமரோ, தங்கள் அறிவுடமையையும் ஆக்கவுடமையையும் ஒருங்கே காட்டும் ஒரு போட்டி. உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக நீங்கள் இதுவரை கண்டிராத இலங்கையின் தலை சிறந்த மூன்று தனியார் தகவல் தொழில் நுட்ப கம்பனிகள் (Virtusa, WSO2, and hSenid) முதன் முறையாக ஒன்றிணையும் ஒரு மாபெரும் நிகழ்வு -  யாழின் மண்டைக்காய்கான தேடல். (நாமெல்லாம் மொழி பெயர்த்தா இலியட் ஓடிசி கூட 6 page 2 column research paper தான்)

       என்னதான் பண்ணணுவானுகள் ?
ஊரில மண்டை காஞ்சவனுகள் சிலர் சேர்ந்து, மூலை(ளை) முடுக்குகளில் கொம்புட்டார் வைச்சு நோண்டிக் கொண்டோ, விறாந்தில படித்துக் கொண்டு விலாசமா ஒரு கொம்பனிக்கு சீ.ஈ.ஓ கனவு கண்டுகொண்டோ, கணக்கு எண்டால் கணக்கு பண்ணுறதைக் கூட மறந்து விடும் - பேய்க்காய்களுக்கு ஒரு போட்டி - இந்த டிவியில எல்லாம் நடத்துற போட்டிகள் மாதிரி - ரியாலிட்டி ஷோ - "உங்களில் யார் அடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ்?" கணக்கா. ஐந்தாறு சுற்று - ஒவ்வொரு சுற்றிலயும் - வடி கட்டி, வடி கட்டி ஒருத்தருக்கு.... 

        என்ன வெள்ளவத்தையில பிளட்சா (flats -  அடுக்கு மாடி மனை) ?

சீ சீ அதிலும் பெரிசா, கம்பனியே வைச்சு தந்தாலும் தருவானுகள் - நாட்டின் பெரிய கொம்பனியில வேலை , இப்படி பல உள் மற்றும் வெளிக் குத்து இருக்கு.

யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மொரட்டுவ போன்ற பல மாவட்டங்களுக்கும் யாழ் ஐரி பஸ் ஒண்டு போய் ரவுண்டு கட்டி வாக்கெடுத்து (ஒரு விளம்பரந்தேன்), சுமார் பதினாலு அணிகள் - பல்கலை கழகங்கள், பிரபல்யமான தனியார் கல்வி அமைப்புகள் எண்டு பலத்தில் இருந்தும் பங்கு கொள்கின்றன. நல்லவேளை நான் பார்டிசிப்பன்ட் இல்லை, இல்லை வண்டவாளம் தண்டவாளம் ஏறி இருக்கும்.

வெண்ட அணியின் அம்மாக்கள் சீலைத் தலைப்பால் வாயை பொத்தி அழுவது, அப்பாக்கள் சியர் கேர்ல்ஸ் மாதிரி உற்சாகப் படுத்துவது, தங்கள் குடும்ப சோகக் கதை சொல்லி எல்லாரையும் நெகிழ வைப்பது, நடுவர்களின் பிறந்த நாளை சர்ப்ரைசா கொண்டாடுறது, வயில்ட் காடு ரவுண்டு, சிறப்பு அதிதிகளா மார்க் சுக்கர்பெர்க், லாரி சோடா மன்னிக்கவும் லாரி பேஜ் போன்றோர் வரலாம் இல்லை அவைய விடப் பெரிசா உள்ளூர் ஆட்டக்காரன் யாரவது வரலாம் (கரகாட்டக்காரன் காலத்திலிருந்து வெளியூர் ஆட்டக்காரனை உள்ளூர் ஆட்டக்காரங்கள் மதிக்குறதில்லையே).இது போன்ற ரியாலிட்டி சோக்கே-ஆன (சோக்கான) அம்சங்கள் எதிர்பார்க்கலாம். (கவிதைக்கு பொய் அழகு)

(ஆமா டிடி வருவாங்களா? சிவகார்த்திகேயன் மாதிரி ஒராள் நடத்த வருது எண்டு சொல்லறாங்களே சயந்தன் உண்மையா ?)  

எது எப்பிடியோ நடுவர்களுக்குள்ளும், பங்குபற்றுபவர்களுக்கும் நடுவர்களுக்கும் இடையிலும் சூடான வாக்கு வாதம் guaranteed! 

கொம்புயூட்டர் போட்டியா? எங்களுக்கு ஒரு இழவும் விளங்காது, போற வயசில, இருக்குற பிரச்னைக்குள்ளையும், வேற வேலை இல்லை எண்டுறவைக்கு,
          ஏதோ கர்நாடக சங்கீதம், சுருதி , இராகம் விளங்கியே பாட்டுக் கேக்குரனியள்? போய்ப் பாருங்கோ விளங்கலாம் இல்லாட்டியும் பரவாயில்லை. சங்கட சதுர்த்திக்கு பிள்ளையார் கோவிலுக்கு சுண்டல் கிடைக்கும், சுரண்டல் குறையும் எண்டே போறனியள் - நம்பிக்கை, அது மாதிரி சும்மா போய்ப் பாருங்கோ.

இனி- பாகம் இரண்டு: காடு திறந்து கிடக்கின்றது.

பி.கு: நண்பர்களே, சும்மா உடான்ஸ் அடிப்பதோடு என் பணி நின்று விடுகிறது - ஆனால் இந்த நிகழ்வுக்காய் சயந்தன், பாலா,  சர்வேஸ் எண்டு ஒரு சிறிய அணி அநியாயத்துக்கு  உழைச்சிருக்கு, ஆதலால் இந்த போஸ்டுக்கு லைக் பண்ணுறது, பின்னூட்டம், ஊக்கசத்து எல்லாம் விட்டுட்டு;   அவைக்கு தேடித் பிடித்து ஒரு வாழ்த்து சொல்லுங்கோ - புண்ணியமாப் போகும். அவைய இங்க பிடிக்கலாம் : https://www.facebook.com/groups/264218806991707/.

புதன், அக்டோபர் 10, 2012

எங்களுக்கே எங்களுக்கு என்று ஒரு....

இது குற்றப்பத்திரிகை அல்ல, பொதுமைப் படுத்தி பிரச்சனையின் இன்னொரு கோணத்தை அலசுவதே நோக்கம் - அவரவர் நியாயங்கள் அவரவர்க்கு.
தமிழர் என்றொரு இனம் உண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு  - நாமக்கல் வி. இராமலிங்கம்பிள்ளை
அண்மையில் நண்பன் பாரதி இப்படி ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தான்
இன்று ஒரு தமிழ்க் கடைக்கு போயிருந்தேன். ஒரு சுவரொட்டியில் "மாவீரர் மாதத்தில் களியாட்டத்தை புறக்கணிப்பீர் " என்றும் அதனைத் தொடர்ந்து உணர்ச்சிப் பிராவகமாய் ஒரு கட்டுரையும் இருந்தது.
சத்தியமா முழுவதும் வாசிக்கலீங். அதற்குள்ளாகவே அம்மா " உதை எதுக்கு வாசிக்கிறாய்?.... உனக்கென்ன லூசா?? வந்த வேலையை கவனி என்று சத்தம் போட்டார்கள்.
நானும் அம்மா கேட்ட முதல் கேள்விக்கு பதில் சொல்லாமல் ( இருந்தால் தானே சொல்ல.. :) ) "லூசில்லை" என்பதை கூட அழுத்தமில்லாமல் ( எல்லாம் ஒரு சந்தேகந்தான் :) ) சொல்லிவிட்டு வந்த வேலையை கவனித்தேன்.
ஆனாலும் அந்த சுவரொட்டியில் பெரிய எழுத்துருவில் இருந்த "அடங்க மறு" , "திருப்பி அடி" ஆகிய இரு சுலோகங்கள் எனக்குப் புரியவில்லை.
வாங்கிய பொருள்களுக்குரிய பணத்தை கொடுக்கும்போது கடைக்காரரிடம் அண்ணை!! நாங்க "ஆருக்கு அடங்க மறுக்கனும்?? ஆருக்கு திருப்பி அடிக்கனும்?? " என்று கேட்டேன். அதற்கு அவர் "நாயகன்" கமல் பாணியில் தெரியலயேப்பா.. என்று விட்டு... பில்லை தந்துவிட்டு நெற்றியை சுருக்கி மூக்குக் கண்ணாடிக்குள்ளால் என்னைப் பார்த்தார். அப்ப பின்னால் நின்ற ஒரு அக்கா தன் புருசனிடம் எந்த சுலோகதுக்கு இந்த தம்பி அர்த்தம் கேட்கிறார் என வினவ புருசன் முகத்தில் கலவரம் :). நானும் பில்லை வாங்கிக் கொண்டு வெளிய வந்தாலும் இன்னுமொரு விசயம் எனக்குப் புரியல..... கடந்த காலங்களில் இருந்து வந்த மாவீரர் வாரம்" எப்போது "மாவீரர் மாதம்" ஆனது??
எந்த அணியாவது வாயை திறங்கப்பா....
சில தினங்களுக்கு முன் ஜேகே யாழ்பாணத்து தொண்ணூறுகளின் கிரிக்கெட் பற்றி ஒரு பதிவு இட்டிருந்தார், அதில் இப்படி ஒரு கனவை பதிகிறார் 
 சில நாடுகளின் வீரர்கள் ஆடும் ஆட்டத்தை பார்க்கும்போது கோபம் இன்னமும் எகிறுகிறது. இது காண்டி அண்ணாவின் இடம். டூ டவுணாக வரவேண்டியவன் கௌரி, இந்த பார்ட்னர்ஷிப் போட்டிருக்கவேண்டியவர்கள் கௌரியும் கார்த்திக்கும் என்றெல்லாம் ஒவ்வொருமுறையும் சில இன்டர்நேஷனல் ஆட்டங்களை பார்க்கும் பொது எண்ணம் வருகிறது. கூடவே அடிமனதில் இருந்த கனவுகளும் எகிற, கோபம் இன்னமும் அதிகரிக்கிறது. இது சிறுபிள்ளைத்தனமான சிந்தனை என்று புத்தி கூறுபவர்கள், மீண்டும் இந்த இரண்டு பாகங்களையும் வாசித்துப்பாருங்கள். இது தான் எங்களின் அணிகள். இவர்கள் தான் நாங்கள் கொண்டாடிய வீரர்கள். இது தான் எங்கள் கிரிக்கட்! கிரிக்கட் ஒரு விளையாட்டாய், கிரிக்கட் ஒரு அரசியலாய் .. இதெல்லாமே தாண்டி “என் கிணறு என் கனவு எது சரியோ எது பிழையோ இதுவே நாம்” என்ற கேதாவின் கவிதை போல … இந்த கிரிக்கட் ஒரு தசாப்தத்தின் வாழ்க்கை … எங்களின் வாழ்க்கை! இதுவே நாம்!

இந்த கனவுகள் கொண்டுதான் சிலர் மேலே சொன்ன போராட்டங்கள் நியாயப்படுத்துகிறார்கள், அதனால் இப்படி உணர்ச்சிகளை கிளறாதீர்கள் என்று காட்டம் காட்டும் நண்பர்கள் எனக்கு நிறைய இருக்குறார்கள் (எனக்கு என்று வந்து வாய்க்கிறார்கள்).
இப்படி உணர்ச்சிகளை மீட்டுவதன் மூலம் கொஞ்சம் மனதுக்கு ஆறுதல் கிடைக்கலாம், ஆனால் வாழ்வுக்கு மாற்றம்  ? என்று தர்க்கம் பண்ணுவார்கள் இந்த பண்டிதர்கள் - கவையில்லை, வாழ்வு முழுவதுமே அறிவு மட்டும் கொண்டு வாழ்ந்திட முடியாது என்று இவர்களை மறுப்பார்கள் இன்னொரு சாரார்.

மனிதனை அவன் தேவைகளை கண்டறிவதன் மூலம் உற்சாகப் படுத்தலாம் என்கிறார் மாச்லோ எனும் மனோதத்துவர். இவரது இந்த தேற்றம் இன்றளவும் மனித வள முகாமை கல்விகளில் பிரபல்யம். மனிதனது தேவைகள்:
->பௌதீக தேவைகள்
  -> பாதுகாப்பு
    -> அன்பும் அங்கீகாரமும்
      -> சமுக அந்தஸ்து
        –> சுயமறிதல்
என்ற ஐந்து அடுக்கு மாளிகை என்கிறார் இவர். இந்த வரிசையிலேயே மனிதனது தேவைகள் வளரும் , ஒன்று கிட்டியதும் கொஞ்சக் காலம் அதில் திளைத்து சலித்து மற்றதை தேடும். இந்த ஒவ்வொரு தேவை வகையை மேலும் வகைப்படுத்தலாம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தேவைகள் பெருவாரியாக இந்த 5-கட்டு அமைப்பில் அடங்கிவிடும்.



முல்லைத்தீவில், அதை அண்டிய சின்ன சின்ன சிதிலங்களில்
எஞ்சி இருக்கும் மனிதம் பசித்திருக்கு -
பசித்து மட்டுமே இருக்கு.
பசிக்கிற வயிற்றை தடவிக் கொடுக்க
கைகள் அற்ற கூட்டம் அது-
 எந்த செல்லோ/குண்டோ வெட்டி எறிந்திருக்கும்.
எழுந்து நடந்து வேலை செய்ய கால்கள் அற்ற கூட்டம்.
பசி வந்து பத்தோடு கூட சில பந்துக்களையும் எடுத்துப்போய் இருக்கும். இவர்களது தேவைகள் பௌதீக அளவில் நிற்கின்றன, அதை தாண்டாமல் மற்றைய தேவைகளின் நியாயம்/ இருப்பு புரியாது.

உன்னிகிர்ஷணன் பாடினாலும் படாட்டாலும்,
இளையராஜா இசை அமைத்தாலும் அமைக்காவிட்டாலும்,
சசிக்குமார் படம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும்,
வெறு வயிறு  -
    ஏவறை கூட வருவதற்கு ஏதும் சுரக்க வழி இல்லா வயிறுகளுக்கு,
எகிப்தின் பருத்திப் புரட்சியும், அமெரிக்க ஏகாதிபத்தியமும்,
எரிந்த நூலகமும் – ஊகும் கவையில்லை.
கிரிக்கெட் நடந்தாலும் நடக்காவிட்டாலும், அதில் நம்மாள் இருந்தாலும் இருக்காட்டியும் - ஊகும்.
------------------------------------------------------

யாழ்ப்பாணம், அதன் சுற்று வட்டாரம், மட்டக்கிளப்பு திருகோணமலை நகரங்களிலும் - பௌதீக தேவைகள் கொஞ்சமாய் எண்டாலும் பூர்த்தி ஆன மனிதர்கள். வெளியே நடப்பது தெரிய முயல்கிறார்கள். வீட்டுக்குள் அங்கீகாரம் தேட ஏதாவது செய்து நிரூபிக்க விரும்பலாம். பெரும்பாலும் பௌதீக தேவைகளை மேன்மைப் படுத்தும் முயற்சியும் அதன் வழி அன்பையும் அங்கீகாரத்தையும் அடைய முயல்கிறார்கள் - இவர்களுக்கு உன்னிகிர்ஷ்ணன் பாடுவதை எப்பவாவது கேட்டுப் பார்க்கலாம் என்று ஆர்வம் இருக்கும் பட்ஜெட் உதைக்கும். இரண்டுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டு எப்படியாவது பெடி கம்பஸ் போய் மேல வந்திடலாம் என்று நேர்த்தி வைச்சுக் கொண்டிருக்கும். 
------------------------------------------------------
கொழும்பும், மேற் சொன்ன நகரங்களில் ஆங்காங்கும் - அந்தஸ்தை நிரூபிக்க அலைமோதும் மக்களைக் காணலாம். இந்துமா மன்றம், ரோட்டறிக் கழகம், கம்பன் கழகம், தமிழ்ச் சங்கம், பழைய மாணவர் சங்கம் இன்ன பிற தொண்டு மற்றும் சமூக அமைப்புகள் வழி தங்களுக்கான சமூக அந்தஸ்தை தேடிக் கொண்டிருக்கும் இன்னொரு படி நிலை மக்கள்.
   இவர்களுக்கு உன்னி பாடினால் நல்லது என்று தோன்றும் - இல்லை அது தேவை அற்றது என்றும் தோன்றும். இரண்டாகப் பிரிந்து நின்று வாதித்து, ஸ்டேடஸ் போட்டு, கொமெண்ட் பண்ணி, லைக் பண்ணி தங்கள் சமூக அடையாளத்தை தேடி அல்லது உருவாக்க முயல்வார்கள். இவர்களுக்கு உரிமையும் உணர்வும் ஒரு தலையாய பிரச்சனை. அதில் நிலைப்பாடுகள் வேறுபடலாம். 
------------------------------------------------------
வெளிநாடுகளில் தங்கி விட்டவர்கள், அவர்கள் அனுப்பும் ரூபாயில்லாத காசில் வாழும் மனிதர்களும் இந்த சமூக அந்தஸ்து தேவை படிநிலையில் இருப்பார்கள். ஆனால் வெளிநாடுகளில் தங்கி விட்டவர்கள் ஒரு தனி வகை - காரணம் அவர்கள் அந்த ஊரிலும் இந்த ஊரிலும் என இரண்டு இடத்திலும் சமூக அந்தஸ்தை தேடுவார்கள் - அதற்கான தேவை அடுத்த சந்ததி வரை தொடரும் அதற்கப்பால் என்பது பற்றி இவர்களுக்கு இருக்குற பயம் கேள்வி - புலி வால் பிடித்த மாதிரி - துரத்திக் கொண்டே இருக்கும் / இழுத்துக்கொண்டே இருக்கும்.
  கவிதை எழுதுவர், ஒபாமாவுக்கு பெட்டிசன் போடுவர், ஊருக்கு கோபுரம் திருத்துவார், ஊரில் வீட்டுக்கு கூரை திருத்தி western bathroom கட்டுவர், உனது நாடு எது என்ற கேள்விக்கு இலங்கை என்று சொல்லவும் மனம் இவர்க்கு ஒப்பா, இங்கிலாந்து என்று சொன்னால் கேட்பவன் ஒப்பான், - குறைந்தது இதற்காவது தனி ஈழம் அவசியமாகிறது இவர்க்கு.
  சீமானை பேச அழைப்பர் தாமரையை (கவிதை) பாட அழைப்பர் - இன்னும் பலர் வந்து போவர் - ஊரில் போய் படாதீங்கோ – கப்பில் (GAP) உடுப்பு வேண்டாதீங்கோ என்டுவர் - இதெல்லாம் பயனில்லை என்று ஒரு கிளை தத்துவம் வரும், இன்னமும் இது கிளைக்கும் ஒரே நோக்கத்திற்க்காய் வேறு வேறாய் வழி தேடும் / காட்டும் - அதன் வழி தனக்கு ஒரு அங்கீகாரம் தேடும்.
------------------------------------------------------
கடைசிப் படிநிலை தன்னை உணருதல், கொஞ்சம் ஆன்மீக வகையறா. இது பற்றறுத்தல் என்று கொள்ளலாம் - நிறையப்பேர் இங்கு வரை போவதில்லை – பிரமச்சரியம் –> இல்லறம் –> வானப்பிரஸ்தம் –> துறவறம்  என்ற வாழ்வு முறை இந்த தேவை பரிமாணத்தை புரிந்து அமைக்கப்பட்டது என்று தமிழ் படித்தவர்கள் மேடையில் பேசக் கேட்கலாம்.
------------------------------------------------------
இதே பிரச்னையை, game theory பார்வையிலும் அலசலாம், மேற் சொன்ன players உட்பட வேறு சில players கொண்ட ஒரு சிக்கலான ஆட்டம் தான் எங்கள் இனப்பிரச்சனை. இது பற்றி விரிந்து வாய்ப்புக் கிடைத்தால் எழுத முயல்கிறேன் (draft இலேயே நிறைய நாளாக் கிடக்கு).

மாஸ்கோ சொன்ன கூம்பை கொஞ்சம் எங்கள் நிலைப்பாட்டுக்காய் தத்துவம் மாறாது வளைத்து இருக்குறேன். 

ஒரு பரபரப்பற்ற மழை நாள்





இன்-பொக்ஸ் இன்கிரிமெண்ட் ஆகாத
ஒரு பரபரப்பற்ற நாள்

எந்த 'இழவுக்கோ'
வானம் கருமை பூசிக்கொண்டு
சோம்பி இருந்தது

பின்னேரம் நாலு மணி -
ஆனால் அதிகாலையும் அந்தியும் கலந்து
மிக்சிங் ஒருமாதிரி அம்மல் தந்து

மெல்லிய தலைவலி
கண்கள் பூஞ்சி பூஞ்சி சொக்கிற்று.
பெய்தேன் என்றும் இல்லாமல்
பெய்யவில்லை என்றும் இல்லாமல்
மழை ஒப்புக்கு சப்புக்கு
வானத்தின் துக்கத்தோடு சேர்ந்து கொண்டது

ஒரு கோப்பி சூடா -
நாக்கு சப்புக் கொட்ட முடியாமல்
சொண்டுகள் காய்ந்து போய் இருந்தன

போர்வையின் கணகணப்பை ஒதுக்கி
எழும்பி கோப்பி போட
அலுப்பாய் இருந்தது.

இப்போதெல்லாம்
பரபரப்பற்ற நாட்களில்
சாப்பாடு செமிக்குதில்லை,
கண்கள் அயருதில்லை

இது ஒரு அப்பழுக்கற்ற ஒய்வு நாள்
என்பதை
மனது நம்ப மறுக்குது.

காற்று வீசாமல் பெய்கிற மழை
தேத்தண்ணிக்கு தண்ணி கலந்து தந்த மாதிரி
ஒரு அஜீரணம்.

அந்த பரபரப் பற்ற நாளை
எந்த பரபரப்பும் இல்லாமல்
அனுபவிக்க முடியாமல் போனோமே
என்ற அங்கலாய்பின் பரபரப்பில்
தவித்துக்கொண்டிருந்த மனசு

சோம்பல் முறித்து
நெட்டி முறித்து
எழுந்ததும்
மழை
கொட்டோ கொட்டு என்று கொட்டியது.

திங்கள், செப்டம்பர் 10, 2012

நித்தம் நித்தம் நெல்லு சோறு…

                                                      மொட்டைக் கறுப்பன்
ஹேய் ஒதயா, ஹொவ் டூ வீ ஈட் திஸ் ?


அது ஒரு வெயில் கால சனி மதியம், தெரிந்தவர், தெரிந்தவருக்கு தெரிந்தவர் என்று ஒரு சிறு கூட்டம், பெயர் தெரியாமல் மதமத என்று உயர்ந்து வளர்ந்த ஒரு மரம் , கீழே ஒரு கொட்டில் - அந்த வளாகத்தில் வாழுபவர்களுக்காய், ஒரு நீல நிறத்தில் பூப் போட்ட பிளாஸ்டிக் மேசை விரிப்பு, விதம் விதமாய் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பண்டங்கள், கோக், ஸ்பிரைட், தேசிக்காய் சோடா (லேமேனேட்) மற்றும் மெலிதாக சீவிப் பொரித்த உருளைக்கிழங்கு - சிப்ஸ்.

வெள்ளை நிறத்தில் மல்லிகைப் பூவாய் பூத்து சிரிக்கிற கோதுமைப் புட்டு (ஆல் பெர்பஸ் வீட் மாவில் செய்தது), பொரித்த சோயா, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, என்பவற்றை; கடுகு சீரகம், கருவேப்பிலை முறுகலாகப் பொரித்த வெங்காயம் சேர்ந்த தாளித்தோடு பிரட்டி (முக்கிய குறிப்பு நல்லெண்ணெயில் பொரித்தது), இஸ்பானியக் கடையில் வாங்கிய இளந்தேங்காய் உடைத்து திருவிய பூவும் சேர்ந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் மல்லிகைப் பூவாய் பூத்து சிரிக்கிற கோதுமைப் புட்டு, பொரித்த மிளகாய் சம்பல் என்பவற்றோடு சம்பந்தமே இல்லாமல் ரயித்தாவையும் போட்டுக் கொண்டு வந்து “ஹேய் ஒதயா, ஹொவ் டூ வி ஈட் திஸ் ?” என்று கேட்ட காரோலினுக்கு வயது அடுத்த மாதம் இருபத்தி ஆறு ஆகப் போகின்றது என்பது சொல்லாமலே தெரிந்தது.

எண்ட பெயரை மென்று துப்பினதைக் காட்டிலும் புட்டுப் பிரட்டலுக்கு தயிர் – கடுப்பு.

டேய் எங்கடா எழும்பிட்டாய் ?


உரும்பிராய் சிறிச் சித்தப்பாவின், குரல் அத்தனை கனமும் அதிர்வும் கொண்டது, சொல்லை மீறி நகர முடியா வசீகரம் அந்தக் கடினக் குரலுக்குள் இருக்குற கனிவு.

சாப்பிட்டுடன் சித்தப்பா.

பாயாசம் ?

அதை பேணியில விட்டுக் குடிக்குறன்.

விசரா உனக்கு, இலையிலையே விட்டு வடை இல்லை அப்பளம் போட்டு சாப்பிட்டா அது பாயாசம் இல்லை அது xxxxx


சந்தமா ஒரு வசை. கூட சாப்பிட்டுக் கொண்டிருந்த சகலபாடிகள், வயதொத்த உறவுகள் கொல் என்று சிரித்தனர். சித்தப்பாவின் உறுமல் அவை அடக்கம் - வாலைச் சுருட்டிக்கொண்டு இருந்து விட்டேன் - எனக்கு பாயாசமே பிடிக்காது இதில் இலையில வேறையா. குசினி வாசல்ப் படியில் அம்மா தெரிந்தார் - அவர் கண்களில் தெரிந்தது பழிவாங்கும் உணர்ச்சியா இல்லை களிவிரக்கமா செரியா சொல்ல முடியாது.

டேய் ‘பாயாசம்’ எண்டு சொல்லிப்பார் - எவ்வளவு இனிமை; ஆயாசம் போன மாதிரி, மொடுக் எண்டு ‘’ எண்டு சொல்லப் படாது – பாஆஆயாஆஆசம் ஒரு ஆலாபனை மாதிரி - பத்மநாபன் பீபீ வாசிச்ச மாதிரி - இனிமை.
அண்ணி கொஞ்சம் பாயசம் கொண்டாங்கோ, வடையும், இரண்டுமே சூடா” -

சித்தப்பா அம்மாவிடம் சொல்லி விட்டு திரும்பி எங்களை ஒரு நோட்டம் விட்டார். சித்தப்பா ஒரு மூடுக்கு வந்துட்டார் எண்டு அவர் கண்கள் சொன்னது - குனிந்த மர நிழலில் குரு போல.

அது சாந்தினி அக்காவின் சாமத்திய வீடு, இடம் பெயர்ந்திருந்த காலகட்டம், சமையல் பந்தி எல்லாம் நாங்கள் பெடியள் கொஞ்சப்பேர் சித்தப்பா தலைமையில். ஆண் பந்தி மூன்று பெண் பந்தி இரண்டு பரிமாறி இல்லை போட்டு, சாக்கில இலை எடுத்து, கடைசிப் பந்திக்கும் வருற மாதிரி வாழக்காய் பொரியல், அப்பளம் அளவாய் பரிமாறி. இப்ப கடைசியா நாங்கள் ஒரு பத்துப்பேர்.

வெள்ளை போம் பிளேட்டில் வெள்ளை பிளாஸ்டிக் கரண்டிக்கு கீழே ரயித்தாவுக்குப் பக்கத்தில் சோகமாய் தேமே என்றிருந்த புட்டுப் பிரட்டல் வெள்ளித்தட்டிற்க்காய் ஏங்குவது போல் பட்டது. பார்க்கப் பாவமாய் இருந்தது. சம்பல் சிவப்பைப் பார்த்ததும் அது ஸ்பயிசி என்று எண்ணி இருக்கும் கரோலின் - அதான் பாதுகாப்புக்கு எண்டு கொஞ்சம் ரயித்தாவை எடுத்துதிருக்கும் - கோபி அண்ணாவின் ஆட்டுக்கறி சாப்பிட்டால் உறைப்பிலையே சிவந்து செத்துப் போனாலும் போயிடும் அந்த மத்திய அமெரிக்க குளிர் தேசத்து வெளிர் பெண்மை. மூன்று ஷாட் வோட்கா அடிச்ச  பிறகு கூட டான்ஸ் புளோரில் எல்லை தெரிந்த பெண்மை சம்பலிற்கு பயப்பிடிவது சிரிப்பாய் இருந்தது.

திஸ் ரெட் திங் இஸ் கால்ட் சம்பல், மேட் வித் scraped கொகனட். யூ கான் மிக்ஸ் இட் வித் தே யெல்லோ திங்கி கால்ட் புட்டு. யூ டோன்ட் நீட் யோகட். இ மேட் இட் சூட்டபில் போர் யூ - லெஸ் ஸ்பயிசி.

இஸ் இட் லைக் சட்னி ?

அட ஆத்தா இது வேற , உனக்கு எப்படி புரிய வைக்க , சம்திங் லைக் தட் என்று மழுப்புவதை தவிர வேறு வழி இல்லை.


அந்த செவ்வாழைக் குலைக்கு புட்டு சாப்பிட சொல்லிக் குடுக்குறதுக்குள்ள எனக்கு பசி வந்திடும், சாப்பாடின்ட ரிஷிமூலம் நதி மூலம் கேட்டு ஒரு காய் காச்சுடும். எப்படி சொல்வேன் உண்மையை - ஒரு நல்லா மினுக்கின வெள்ளித் தட்டில், புட்டின் பிம்பத்தை பார்த்தபடி, புட்டை சம்பலோட இறுக்கிப் பொத்திப் பிடிச்சு அள்ளி சாப்பிட வேணும் - கோதம்மா புட்டு விக்கும் மறக்காம தண்ணி எடுத்து வைச்சுக் கொண்டு சாப்பிட வேணும். கடைசியா கொஞ்சம் சீனியும் தேங்காப்பூ கூட சேர்த்து பொத்திப் பிடிச்சு அமம்மா தருவா – டேசார்ட்.

திஸ் இஸ் ரியலி நைஸ் , வெரி ஸ்பயிசி - பட் டிலிசியஸ். ஹொவ் டூ யூ மேக் திஸ் ?

அது சொன்னா விடிஞ்சிடும், விட்டுடு தாயே. தக்காளி சோறு ஆசை காட்டி காய் வேட்டி விட்டேன்.

- அடுத்த பந்தியில்-

சனி, செப்டம்பர் 08, 2012

எளியவனாப் பிறந்தாலும்...

அன்புள்ள அண்ணாமாருக்கு வணக்கம்,
தேத்தண்ணி முதல் சாயம்,
இறால்ப் பொரியல் பங்கீடு
இரவுக்கும் பதுக்கப்படும்
வெங்காயப் பொரியல்
போன்ற ஒதுக்கீட்டின் பாரபட்சமும்,

உன் அளவில்லாதவைகள்
எனக்கான அன்பளிப்புகள்
என்ற சலிப்பும்,

எனக்கு உன்மீது
பொறாமை
கொளச்செய்தன - இன்றுவரை.
ஆழ ஒரு ஆதங்கம் – மாற்றில்லை
ஆனால்…..


யாழ்ப்பாணத்தின்
கன தம்பிமாரின்
டீ-90 மோட்டச் சயிக்கிளுக்கும்
சிங்கப்பூர் செயினுக்கும்
லிங்கம் கூல் பாரில்
Birth-day பார்டிக்கும்

வெளியே குளிர் காயும்
அண்ணன்களைக் கண்டபின்னும்
’எளியவனாப் பிறந்தாலும்
இளையவனாப் பிறக்காத’ என்ட
வழக்கு மாறாதது
வழக்காடு மன்றங்கள்
இனி விசாரிக்க வேண்டியது.

என்ன இருந்தாலும்
யாழ்ப்பாணத்தாருக்கு
தம்பி எண்டா தனிப் பாசம்!


அம்மாவின்,
அக்காவின்,
தம்பிகளின்,
தங்கைகளின்,
எல்லார் கவலைகளும்,
அத்தனையும்,
மடுத்தபின்னும்
திறந்தே இருக்கின்றது உந்தன் செவி
திறவாமல் இருக்கிறது உந்தன் வாய்.
எத்தனையோ பாவமன்னிப்புகள்
 - நீ வழங்கி இருக்கிறாய்
எத்தனையோ வழக்குகளில்
 - நீ உடைத்து தீர்ப்பு சொல்லி இருக்குறாய்
உன் பிராது ஏதும்,
உன் அழுகை ஏதும்
தலைவாசல் பஞ்சாயத்துகளில் அரங்கேறியதில்லை
- நான் அறிந்த வரை.

எங்களுக்கெல்லாம்
நீ பாவமே செய்யாத பரமாத்துமா;
விட்டுக் கொடுப்பது உன் பிறவிக்குணம்;
உனக்கு பதில் தெரியாத கேள்விகளோ
நீ தீர்க்க முடியாத சிக்கல்களோ
எனக்கு தெரிந்து இல்லை
உடம்பு மடை திறந்த நாளுக்கு பிறகு கூட
நீயே எங்கள் சுப்பர் ஹீரோ



எனக்கு கூட அவ்வப்போ தோன்றும்
உனக்கு யார் சிவி எழுதியது
உந்தன் ட்ரிப்களுக்கு கைச்செலவுக்கு யார் தந்து பணம் ?
டபிள் நோட் போட யாரிடம் கற்றுக் கொண்டாய் ?
ஆனால் அண்ணாக்கள் எல்லாம்
இதை தம்பிகளுக்கு சொல்லித்தர
தெரிந்து கொண்டே பிறக்கிறார்கள் என்று
சும்மா இருந்து விட்டேன்.

”அண்ணாக்கள் அழுவதில்லை” என்று
அரேபிய தேசத்து ஒட்டகக்காரர்களிடம்
ஒரு வழக்கிருக்காம்,
அழுவதில்லையா?
இல்லை அழத் தெரியாதா ?

உந்தன்
தோற்றுவாய்,
ஆற்றுப்படுக்கை,
பலிபீடம்
என்று எதைப்பற்றியும் கவலையின்றி
கருவறைக்குள் இருத்திவிடுகுறோம்
இல்லை தேரேற்றி விடுகிறோம்.

உந்தன் தோற்றுவாய், எது ?
உனக்கான ஆற்றுப்படுக்கை, என்ன ?
உந்தன் பலிபீடம் எங்கே ?
என்று எதைப்பற்றியும் கவலையின்றி
கருவறைக்குள் இருத்திவிடுகுறோம்
இல்லை தேரேற்றி விடுகிறோம்.
கடைசிவரை
சுண்டல் பற்றிய கனவுகளுடன்
எங்களுக்கு உறக்கம் வருகிறது
கட்டாயம் சுண்டலும்
சில சமயம் அவலும் கிடைக்குறது.

ஆமாம்
இருப்புக்கு வாறதில் சாமிக்கு
அலுப்பேதும் இருக்குமோ?
சண்டீசுவரருக்கு மூண்டு முறை
கைதட்டினாப் போச்சு.

வில்லங்கம் பண்ண மாட்டியள் – எண்டால்
விகல்ப்பம் இல்லாம ஒண்டு சொல்லுவன்
அண்ணா செய்த புரட்சிக்கும்
தம்பி செய்த புரட்சிக்கும்
வித்தியாசம் இருக்கு பாருங்கோ.

செவ்வாய், ஜூலை 03, 2012

ஆனந்தி பகுதி III

முந்தய பாகம்

காட்சி IV: மந்திராலோசனை, 1985, அதிபர் அலுவலக அறை - பரியோவான் கல்லூரி.

அதிபர் ஆனந்தராஜா
சேர் பேசாம விட்டுடுங்கோ,

அதெப்படி சேர் இன்விடேஷன் லெட்டர் வந்திருக்கு, ப்ரோப்பேர் ரிப்ளை அனுப்ப வேணும்.

ஆனா அதுக்கு ஆமிக் காரங்களோட, வேணாம் சேர்.

ஏன் சேர் வேணாம், இட் இஸ் ஜஸ்ட் கிரிக்கெட், வாட் இஸ் ராங் இன் இட் ?

இல்லை சேர் இப்ப எக்ஸாம் வருது….

அதிபர் ஆனந்தராஜா தன் நாற்காலியில் பின்னே சாய்ந்து கொண்டார், அந்த வயதான உதவி அதிபரை கூர்ந்து பார்த்துக் கொண்டே சொன்னார், சனிக் கிழமை விளையாடக் கேட்டிருக்கு, மோர் ஓவர் கிரிக்கெட் ஹாஸ் நத்திங் டு டூ வித் எக்ஸாம்.

உதவி அதிபருக்கு எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்ற வேகம், எதோ ஒரு ஆபத்தை உணர்த்த இடது கண் துடித்துக் கொண்டிருந்தது - அவரை அது மேலும் படபடப்பாக்கியது.

மற்றயவர்கள் இதில் பேசிப் பயனில்லை என்பது போல் அமைதி காத்தார்கள்.

இந்த நேரத்திலை இது வேணாம் சேர் அடுத்த டேர்ம் வைச்சுக் கொள்ளலாம்.

கேட்ட திகதியில இருந்து இரண்டு மாசம் கழிச்சு எண்டா நல்ல இருக்காதே சேர்.

அந்த உப அதிபருக்கு இந்தக் காரணங்கள் எடு படாது என்று புரிந்திருந்தது, ஆனால் ஏதாவது ஒரு காரணத்தில அதிபரை ஒப்புக்கொள்ள வைக்க வேணும் எண்டு போராடினார்.

வேறு வழியில்லை உடைத்துப் பேச வேண்டியதுதான்,

சேர், இங்க இப்ப நிலைமை செரி இல்லை, இயக்கங்கள் பல இருக்கு அவனுகள் ஆமிக்காரனுகள் போலீச எண்டு அங்கங்கை சொறியுரானுகள், எதுக்கு வீண் பிரச்சனை.

ஆனா இது வெறும் கேம் தானே சேர், எங்களை எங்கட சனத்துக்கு நல்லத் தெரியும், ஜே.ஆர் கல்வித்திட்டத்துக்கு எதிராக் குரல் கொடுத்தது, கொழும்பில இருந்து சனம் அடிவாங்கி ஓடி வரேக்கை உதவினது எண்டு எங்கட ஸ்டாண்ட் என்ன என்பதில் ஒரு குழப்பமும் இல்லையே.

இனி வேற வழி இல்லை, கடைசி ஆயுதத்தை கையில் எடுத்தார் உபஅதிபர்.

சேர் உங்கட டிசிசன் மொத்த JHONIONS மேல ஒரு பிம்பத்தை உருவாக்கும். யோசியுங்கோ சேர், அவசரப் பட வேணாம்.

அதிபர் ஆனந்தராஜா இந்தப் பதிலால் எந்த சலனமும் அடையவில்லை, அந்த அறயில் இருந்த ஏனயவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சி, இப்படி ஒரு போட்டை உப-அதிபர் போடுவார் எண்டு அவை எதிர் பார்க்கவில்லை.

தன முன் வழுக்கை தடவிக்கொண்டு ஒரு புன்னைகையோடு அதிபர் ஆனந்தராஜா சொன்ன வார்த்தைகள்,

“Johnians! Always play the game.”



முற்று வைக்கப்பட்டது.

முந்தய பாகம்

அதிபர் C.E. ஆனந்தராஜா பரியோவான் கல்லூரியின் மறக்க முடியாத குறிப்பிடத்தக்க அதிபர், யாழ்ப்பாணத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமை மிக்க கல்வியாளர். இலங்கை இராணுவத்துடன் கல்லூரி அணி ஒரு கிரிக்கட் போட்டி விளையாட ஒப்புக் கொண்டதால் அவர் கொல்லப்பட்டார். இந்த ஜூன் மாதம் இருபத்தி ஆறாம் திகதி அவரது இருபத்திஏழம் வருட நினைவு நாள். என் செவி வழி செய்திகளை கொண்டும் இணைய உசாத்துணைகளைக் கொண்டும் இந்தக் கதையை சிருஸ்டித்துள்ளேன், தரவுகளில் ஏதும் பிழை இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் - இது என் நினைவு தெரியாத காலத்து நிகழ்வு.

குறிப்பு: Johnians என்பது பரியோவான் கல்லூரி மாணவர்களை குறிக்கும்; பரியோவான் கல்லூரி கீதத்திலே இந்த வரிகள் வருகின்றன,
Your Alma Mater's ancient name,  
Johnians !Always play the game


உசாத்துணைகள்: