புதன், அக்டோபர் 10, 2012

எங்களுக்கே எங்களுக்கு என்று ஒரு....

இது குற்றப்பத்திரிகை அல்ல, பொதுமைப் படுத்தி பிரச்சனையின் இன்னொரு கோணத்தை அலசுவதே நோக்கம் - அவரவர் நியாயங்கள் அவரவர்க்கு.
தமிழர் என்றொரு இனம் உண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு  - நாமக்கல் வி. இராமலிங்கம்பிள்ளை
அண்மையில் நண்பன் பாரதி இப்படி ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தான்
இன்று ஒரு தமிழ்க் கடைக்கு போயிருந்தேன். ஒரு சுவரொட்டியில் "மாவீரர் மாதத்தில் களியாட்டத்தை புறக்கணிப்பீர் " என்றும் அதனைத் தொடர்ந்து உணர்ச்சிப் பிராவகமாய் ஒரு கட்டுரையும் இருந்தது.
சத்தியமா முழுவதும் வாசிக்கலீங். அதற்குள்ளாகவே அம்மா " உதை எதுக்கு வாசிக்கிறாய்?.... உனக்கென்ன லூசா?? வந்த வேலையை கவனி என்று சத்தம் போட்டார்கள்.
நானும் அம்மா கேட்ட முதல் கேள்விக்கு பதில் சொல்லாமல் ( இருந்தால் தானே சொல்ல.. :) ) "லூசில்லை" என்பதை கூட அழுத்தமில்லாமல் ( எல்லாம் ஒரு சந்தேகந்தான் :) ) சொல்லிவிட்டு வந்த வேலையை கவனித்தேன்.
ஆனாலும் அந்த சுவரொட்டியில் பெரிய எழுத்துருவில் இருந்த "அடங்க மறு" , "திருப்பி அடி" ஆகிய இரு சுலோகங்கள் எனக்குப் புரியவில்லை.
வாங்கிய பொருள்களுக்குரிய பணத்தை கொடுக்கும்போது கடைக்காரரிடம் அண்ணை!! நாங்க "ஆருக்கு அடங்க மறுக்கனும்?? ஆருக்கு திருப்பி அடிக்கனும்?? " என்று கேட்டேன். அதற்கு அவர் "நாயகன்" கமல் பாணியில் தெரியலயேப்பா.. என்று விட்டு... பில்லை தந்துவிட்டு நெற்றியை சுருக்கி மூக்குக் கண்ணாடிக்குள்ளால் என்னைப் பார்த்தார். அப்ப பின்னால் நின்ற ஒரு அக்கா தன் புருசனிடம் எந்த சுலோகதுக்கு இந்த தம்பி அர்த்தம் கேட்கிறார் என வினவ புருசன் முகத்தில் கலவரம் :). நானும் பில்லை வாங்கிக் கொண்டு வெளிய வந்தாலும் இன்னுமொரு விசயம் எனக்குப் புரியல..... கடந்த காலங்களில் இருந்து வந்த மாவீரர் வாரம்" எப்போது "மாவீரர் மாதம்" ஆனது??
எந்த அணியாவது வாயை திறங்கப்பா....
சில தினங்களுக்கு முன் ஜேகே யாழ்பாணத்து தொண்ணூறுகளின் கிரிக்கெட் பற்றி ஒரு பதிவு இட்டிருந்தார், அதில் இப்படி ஒரு கனவை பதிகிறார் 
 சில நாடுகளின் வீரர்கள் ஆடும் ஆட்டத்தை பார்க்கும்போது கோபம் இன்னமும் எகிறுகிறது. இது காண்டி அண்ணாவின் இடம். டூ டவுணாக வரவேண்டியவன் கௌரி, இந்த பார்ட்னர்ஷிப் போட்டிருக்கவேண்டியவர்கள் கௌரியும் கார்த்திக்கும் என்றெல்லாம் ஒவ்வொருமுறையும் சில இன்டர்நேஷனல் ஆட்டங்களை பார்க்கும் பொது எண்ணம் வருகிறது. கூடவே அடிமனதில் இருந்த கனவுகளும் எகிற, கோபம் இன்னமும் அதிகரிக்கிறது. இது சிறுபிள்ளைத்தனமான சிந்தனை என்று புத்தி கூறுபவர்கள், மீண்டும் இந்த இரண்டு பாகங்களையும் வாசித்துப்பாருங்கள். இது தான் எங்களின் அணிகள். இவர்கள் தான் நாங்கள் கொண்டாடிய வீரர்கள். இது தான் எங்கள் கிரிக்கட்! கிரிக்கட் ஒரு விளையாட்டாய், கிரிக்கட் ஒரு அரசியலாய் .. இதெல்லாமே தாண்டி “என் கிணறு என் கனவு எது சரியோ எது பிழையோ இதுவே நாம்” என்ற கேதாவின் கவிதை போல … இந்த கிரிக்கட் ஒரு தசாப்தத்தின் வாழ்க்கை … எங்களின் வாழ்க்கை! இதுவே நாம்!

இந்த கனவுகள் கொண்டுதான் சிலர் மேலே சொன்ன போராட்டங்கள் நியாயப்படுத்துகிறார்கள், அதனால் இப்படி உணர்ச்சிகளை கிளறாதீர்கள் என்று காட்டம் காட்டும் நண்பர்கள் எனக்கு நிறைய இருக்குறார்கள் (எனக்கு என்று வந்து வாய்க்கிறார்கள்).
இப்படி உணர்ச்சிகளை மீட்டுவதன் மூலம் கொஞ்சம் மனதுக்கு ஆறுதல் கிடைக்கலாம், ஆனால் வாழ்வுக்கு மாற்றம்  ? என்று தர்க்கம் பண்ணுவார்கள் இந்த பண்டிதர்கள் - கவையில்லை, வாழ்வு முழுவதுமே அறிவு மட்டும் கொண்டு வாழ்ந்திட முடியாது என்று இவர்களை மறுப்பார்கள் இன்னொரு சாரார்.

மனிதனை அவன் தேவைகளை கண்டறிவதன் மூலம் உற்சாகப் படுத்தலாம் என்கிறார் மாச்லோ எனும் மனோதத்துவர். இவரது இந்த தேற்றம் இன்றளவும் மனித வள முகாமை கல்விகளில் பிரபல்யம். மனிதனது தேவைகள்:
->பௌதீக தேவைகள்
  -> பாதுகாப்பு
    -> அன்பும் அங்கீகாரமும்
      -> சமுக அந்தஸ்து
        –> சுயமறிதல்
என்ற ஐந்து அடுக்கு மாளிகை என்கிறார் இவர். இந்த வரிசையிலேயே மனிதனது தேவைகள் வளரும் , ஒன்று கிட்டியதும் கொஞ்சக் காலம் அதில் திளைத்து சலித்து மற்றதை தேடும். இந்த ஒவ்வொரு தேவை வகையை மேலும் வகைப்படுத்தலாம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தேவைகள் பெருவாரியாக இந்த 5-கட்டு அமைப்பில் அடங்கிவிடும்.முல்லைத்தீவில், அதை அண்டிய சின்ன சின்ன சிதிலங்களில்
எஞ்சி இருக்கும் மனிதம் பசித்திருக்கு -
பசித்து மட்டுமே இருக்கு.
பசிக்கிற வயிற்றை தடவிக் கொடுக்க
கைகள் அற்ற கூட்டம் அது-
 எந்த செல்லோ/குண்டோ வெட்டி எறிந்திருக்கும்.
எழுந்து நடந்து வேலை செய்ய கால்கள் அற்ற கூட்டம்.
பசி வந்து பத்தோடு கூட சில பந்துக்களையும் எடுத்துப்போய் இருக்கும். இவர்களது தேவைகள் பௌதீக அளவில் நிற்கின்றன, அதை தாண்டாமல் மற்றைய தேவைகளின் நியாயம்/ இருப்பு புரியாது.

உன்னிகிர்ஷணன் பாடினாலும் படாட்டாலும்,
இளையராஜா இசை அமைத்தாலும் அமைக்காவிட்டாலும்,
சசிக்குமார் படம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும்,
வெறு வயிறு  -
    ஏவறை கூட வருவதற்கு ஏதும் சுரக்க வழி இல்லா வயிறுகளுக்கு,
எகிப்தின் பருத்திப் புரட்சியும், அமெரிக்க ஏகாதிபத்தியமும்,
எரிந்த நூலகமும் – ஊகும் கவையில்லை.
கிரிக்கெட் நடந்தாலும் நடக்காவிட்டாலும், அதில் நம்மாள் இருந்தாலும் இருக்காட்டியும் - ஊகும்.
------------------------------------------------------

யாழ்ப்பாணம், அதன் சுற்று வட்டாரம், மட்டக்கிளப்பு திருகோணமலை நகரங்களிலும் - பௌதீக தேவைகள் கொஞ்சமாய் எண்டாலும் பூர்த்தி ஆன மனிதர்கள். வெளியே நடப்பது தெரிய முயல்கிறார்கள். வீட்டுக்குள் அங்கீகாரம் தேட ஏதாவது செய்து நிரூபிக்க விரும்பலாம். பெரும்பாலும் பௌதீக தேவைகளை மேன்மைப் படுத்தும் முயற்சியும் அதன் வழி அன்பையும் அங்கீகாரத்தையும் அடைய முயல்கிறார்கள் - இவர்களுக்கு உன்னிகிர்ஷ்ணன் பாடுவதை எப்பவாவது கேட்டுப் பார்க்கலாம் என்று ஆர்வம் இருக்கும் பட்ஜெட் உதைக்கும். இரண்டுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டு எப்படியாவது பெடி கம்பஸ் போய் மேல வந்திடலாம் என்று நேர்த்தி வைச்சுக் கொண்டிருக்கும். 
------------------------------------------------------
கொழும்பும், மேற் சொன்ன நகரங்களில் ஆங்காங்கும் - அந்தஸ்தை நிரூபிக்க அலைமோதும் மக்களைக் காணலாம். இந்துமா மன்றம், ரோட்டறிக் கழகம், கம்பன் கழகம், தமிழ்ச் சங்கம், பழைய மாணவர் சங்கம் இன்ன பிற தொண்டு மற்றும் சமூக அமைப்புகள் வழி தங்களுக்கான சமூக அந்தஸ்தை தேடிக் கொண்டிருக்கும் இன்னொரு படி நிலை மக்கள்.
   இவர்களுக்கு உன்னி பாடினால் நல்லது என்று தோன்றும் - இல்லை அது தேவை அற்றது என்றும் தோன்றும். இரண்டாகப் பிரிந்து நின்று வாதித்து, ஸ்டேடஸ் போட்டு, கொமெண்ட் பண்ணி, லைக் பண்ணி தங்கள் சமூக அடையாளத்தை தேடி அல்லது உருவாக்க முயல்வார்கள். இவர்களுக்கு உரிமையும் உணர்வும் ஒரு தலையாய பிரச்சனை. அதில் நிலைப்பாடுகள் வேறுபடலாம். 
------------------------------------------------------
வெளிநாடுகளில் தங்கி விட்டவர்கள், அவர்கள் அனுப்பும் ரூபாயில்லாத காசில் வாழும் மனிதர்களும் இந்த சமூக அந்தஸ்து தேவை படிநிலையில் இருப்பார்கள். ஆனால் வெளிநாடுகளில் தங்கி விட்டவர்கள் ஒரு தனி வகை - காரணம் அவர்கள் அந்த ஊரிலும் இந்த ஊரிலும் என இரண்டு இடத்திலும் சமூக அந்தஸ்தை தேடுவார்கள் - அதற்கான தேவை அடுத்த சந்ததி வரை தொடரும் அதற்கப்பால் என்பது பற்றி இவர்களுக்கு இருக்குற பயம் கேள்வி - புலி வால் பிடித்த மாதிரி - துரத்திக் கொண்டே இருக்கும் / இழுத்துக்கொண்டே இருக்கும்.
  கவிதை எழுதுவர், ஒபாமாவுக்கு பெட்டிசன் போடுவர், ஊருக்கு கோபுரம் திருத்துவார், ஊரில் வீட்டுக்கு கூரை திருத்தி western bathroom கட்டுவர், உனது நாடு எது என்ற கேள்விக்கு இலங்கை என்று சொல்லவும் மனம் இவர்க்கு ஒப்பா, இங்கிலாந்து என்று சொன்னால் கேட்பவன் ஒப்பான், - குறைந்தது இதற்காவது தனி ஈழம் அவசியமாகிறது இவர்க்கு.
  சீமானை பேச அழைப்பர் தாமரையை (கவிதை) பாட அழைப்பர் - இன்னும் பலர் வந்து போவர் - ஊரில் போய் படாதீங்கோ – கப்பில் (GAP) உடுப்பு வேண்டாதீங்கோ என்டுவர் - இதெல்லாம் பயனில்லை என்று ஒரு கிளை தத்துவம் வரும், இன்னமும் இது கிளைக்கும் ஒரே நோக்கத்திற்க்காய் வேறு வேறாய் வழி தேடும் / காட்டும் - அதன் வழி தனக்கு ஒரு அங்கீகாரம் தேடும்.
------------------------------------------------------
கடைசிப் படிநிலை தன்னை உணருதல், கொஞ்சம் ஆன்மீக வகையறா. இது பற்றறுத்தல் என்று கொள்ளலாம் - நிறையப்பேர் இங்கு வரை போவதில்லை – பிரமச்சரியம் –> இல்லறம் –> வானப்பிரஸ்தம் –> துறவறம்  என்ற வாழ்வு முறை இந்த தேவை பரிமாணத்தை புரிந்து அமைக்கப்பட்டது என்று தமிழ் படித்தவர்கள் மேடையில் பேசக் கேட்கலாம்.
------------------------------------------------------
இதே பிரச்னையை, game theory பார்வையிலும் அலசலாம், மேற் சொன்ன players உட்பட வேறு சில players கொண்ட ஒரு சிக்கலான ஆட்டம் தான் எங்கள் இனப்பிரச்சனை. இது பற்றி விரிந்து வாய்ப்புக் கிடைத்தால் எழுத முயல்கிறேன் (draft இலேயே நிறைய நாளாக் கிடக்கு).

மாஸ்கோ சொன்ன கூம்பை கொஞ்சம் எங்கள் நிலைப்பாட்டுக்காய் தத்துவம் மாறாது வளைத்து இருக்குறேன். 

12 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Too heavy and too much depth!

எஸ் சக்திவேல் சொன்னது…

>உனது நாடு எது என்ற கேள்விக்கு இலங்கை என்று சொல்லவும் மனம் இவர்க்கு ஒப்பா, இங்கிலாந்து என்று சொன்னால் கேட்பவன் ஒப்பான், -

கடும் ஆட்சேபணை. இங்கிலாந்து என்று இருக்கும் இடத்தில் (ஏதோ ஒரு புலம் பெயர் நாடு) அன்றூ variable போடவும்.

------------------------
சரி சீரியஸ் ஆனாப் பேசினா இதில் ஒரு phd செய்யுமளவிற்கு விடயங்கள் உள்ளது. 'பிஜி' இந்தியர்களைக் காணும்போது மனசு பிசைகிறது. மொழியிழந்து, நாடிழந்து, சுயம் இழந்து.... வேண்டாம் இப்ப இந்தக் கதை. மொழி, சுயம் விடயத்தில் நம்பிக்கை தருபவர்கள் இலங்கையில் வாழும் (நாம் இன்னும் இந்தியத் தமிழர்கள் என்று அழைக்கும்) மலையத் தமிழர்கள்தான். அவர்கள் சுயத்தையும் மொழியையும் இழக்கவில்லை. ஆனால் அவர்கள் நிலை திருப்தியா? (யாருக்குத் திருப்தி என்று இடக்காகக் கேட்க மட்டும் முடிகிறது).

மற்றும்படிக்கு உன்னியோ இளையராஜாவோ.. - போங்கப்பா போங்க , அவங்க 'பாட்டை' அவங்க பாக்கட்டும். (வேண்டுமென்றேதான் தமிழ்நாட்டு slang). நாங்கள் எங்கள் பாட்டைப் பார்ப்போம். எங்கள் பாட்டு 'றம்பக்' கேவலமாகி விட்டது.

BTW, நாங்களும் தமிழ்நாட்டில் 'காட்டுக் கூச்சல்' மட்டும் போடும் கூட்டத்தைப் பார்த்துக் கொப்பி அடிக்கிறோமா?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//கடும் ஆட்சேபணை. இங்கிலாந்து என்று இருக்கும் இடத்தில் (ஏதோ ஒரு புலம் பெயர் நாடு) அன்றூ variable போடவும். // அதான் என்ன என்று வாசகருக்கே விளங்குதே - ஒரு ரைமிங்கிக்கு அப்படி போட்டா.

//BTW, நாங்களும் தமிழ்நாட்டில் 'காட்டுக் கூச்சல்' மட்டும் போடும் கூட்டத்தைப் பார்த்துக் கொப்பி அடிக்கிறோமா?//

எனக்கு என்னமோ எல்லா ஊரிலும் எல்லா இனங்களிலும் எல்லாக் குணங்களையும் அடையாளம் காணலாலாம் என்று படுது.

என்னைக் கேட்டால் இலங்கைத் தமிழர் பிரச்சனை, இனப்பிரச்சனை என்ற வட்டத்தை தாண்டி நிறைய நாட்கள் ஆயிட்டுது.

kichaa சொன்னது…

very well anlaysed and written. cant agree more with your points

kichaa சொன்னது…

very well analysed and written. couldn't agree more with your points

எஸ் சக்திவேல் சொன்னது…

கடும் ஆட்சேபணை.- I had put that just in a 'light' mood;

பெயரில்லா சொன்னது…

நல்லதொரு பகிர்வும் பார்வையும், அருமை ... !

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி கிச்சா மற்றும் இக்பால்.

செழியன் சொன்னது…

அருமையான பதிவு!அண்ணை ஒரு management குப்பியே எடுத்திட்டீங்க! நீங்க இப்ப இருக்கிறது ஐந்தாம் மாடியா? இல்ல நாலாம் மாடியா? :)
உங்கட Management Hierarchy ல தான் கேட்கிறன்!

//இந்த கனவுகள் கொண்டுதான் சிலர் மேலே சொன்ன போராட்டங்கள் நியாயப்படுத்துகிறார்கள், அதனால் இப்படி உணர்ச்சிகளை கிளறாதீர்கள் என்று காட்டம் காட்டும் நண்பர்கள் எனக்கு நிறைய இருக்குறார்கள் (எனக்கு என்று வந்து வாய்க்கிறார்கள்). //
உணர்வுகளும் கனவுகளும் இல்லாவிட்டால் மனிதனாகப் பிறந்ததுக்கே அர்த்தம் இல்லை!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி செழியன்.
//உணர்வுகளும் கனவுகளும் இல்லாவிட்டால் மனிதனாகப் பிறந்ததுக்கே அர்த்தம் இல்லை!// நச்

சுபானு சொன்னது…

ஆழமான பதிவு.

Open Talk சொன்னது…

@எஸ்.சக்திவேல்: //சுயம் விடயத்தில் நம்பிக்கை தருபவர்கள் இலங்கையில் வாழும் (நாம் இன்னும் இந்தியத் தமிழர்கள் என்று அழைக்கும்) மலையத் தமிழர்கள்தான். //

இலங்கை மலையகத் தமிழர்கள் தங்கள் சுயத்தை இழக்காது இருப்பதற்கு இலங்கைத் தமிழர்களே காரணம் என்பது எனது கருத்து. ;)

கருத்துரையிடுக