முந்தய பாகம்.
காட்சி – III மன மாற்றம் – 85 ம் ஆண்டு பரியோவான் கல்லூரி விளையாட்டுப் போட்டி.
அன்றைக்கு விளையாட்டுப் போட்டிக்கு போறது பற்றி கலவையான உணர்வுகளுடன் சப்பாத்தை முடிச்சுப் போட்டுக்கொண்டு இருந்த சிறுவன் இந்தக் கதையை இணைக்கிற மையப் புள்ளி. நீல நிறத்தில் ஒரு கறா காற்சட்டை மஞ்சள் டீ-சேர்ட் கருப்பு சப்பாத்து. ஒல்லியான உடல்வாகு கொஞ்சம் ஒட்டினார்போன்ற கன்னங்கள் ஆனால் அந்தப் பையனிடம் எதோ இருக்கு என்பதை அவன் சுருங்குகின்ற நெற்றியும் விரிகின்ற கண்களும் காட்டிக் கொடுத்தன.
அம்மா கெரிஎண்டு வெளிக்குடுங்கோ அண்ணா ஓட முதல் போக வேணும்.
சிரித்துக்கொண்டே அம்மா அவன் தலையை கோதிக் கொண்டு செரி வா என்று கை பிடித்து அழைத்து செல்கின்றாள்.
அண்மையில் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கும் பில்லா படம் அந்தச் சிறுவனுக்கு நிறையவே பிடித்துப் போயிற்று. அவனுக்கு மிகவும் பிடித்த ரஜனிக்காந்த் நடித்த என்ற ஒன்று மட்டுமா இல்லை வேறு காரணங்கள் உண்டா என்பது இந்தக் கதைக்கு அவளவு முக்கியமில்லை. அனால் அந்தப் படத்தில் வரும் “மை நேம் இஸ் பில்லா…” பாடல் அவனின் தற்போதைய முணுமுணுப்பு பாடல் ஆகி இருந்தது வாசகர்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். வழி நெடுக அதை பாடிக்கொண்டு எதிர்க் காற்றை தன் முடிக் கற்றைகளால் அனுபவித்துக்கொண்டு வந்தான் அந்த சிறுவன்.
அம்மா இன்னும் எவளவு தூரம் ?
கிட்டத்தான் வந்திடும்.
அங்க ஐஸ் பழம் விப்பினாமா ? எனக்கு கட்டாயம் வாங்கித் தரவேணும்.
அதெல்லாம் கூடாது என்ன தண்ணியில செயுறானுகளோ….
அதெல்லாம் கூடாது என்ன தண்ணியில செயுறானுகளோ….
ஏமாற்றத்தை காட்டாது முகத்தை திருப்பிக்கொண்டு எதிரே ஓடும் தந்திக் கம்பங்களை வேறிக்குறான்…
இதுதான் அவன் பரியோவான் கல்லூரிக்கு போவது முதல் முறை. அதுவரை யாழ் இந்துக்கல்லூரிக்கு கிரிக்கெட் பார்க்க போயிருக்குறான். அல்லது யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி நடக்கும் போது அந்த மைதானத்துக்கு போயிருக்குறான். தன் தந்தை படித்த பள்ளிக்கூடம் என்பதால் யாழ் இந்து மீது ஒரு அபிமானம் உண்டு, அங்கு தன் மேற் படிப்பை கொள்ளலாம் எண்டு ஒரு எண்ணம அவனிடம் இருந்தது, அனால் அண்ணாக்கள் படிக்கும் பரியோவான் கல்லூரி இதுவே முதன் முறை பார்க்கப் போகிறான்.
ஒருவழியாக கல்லூரியை வந்தடைந்தது பேரூந்து, வெளி இருந்து பார்த்தால் கல்லூரியின் உட் கட்டமைப்பை புரிந்து கொள்ள முடியாது, அது அவன் ஆர்வத்தை அதிகரித்து. தாயின் கைகளை பிடித்து தரதர இழுத்துக்கொண்டு உள்ளே நுழைகிறான்.
இருக்கைகள் அற்ற யாழ் இந்து மைதானத்திற்க்கும் இந்த மைதானத்திற்க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. பெரிய படியமைப்பில் பவலியனும் அதற்கு குடை பிடிக்கும் மகோகனிகளும், பாக் ட்ரோப்பில் ஓல்ட் பார்க்கும், இடது புறம் ஒரே அளவில் உயர்ந்து வளர்ந்து நின்ற பெயர் தெரியாத இளம் பச்சை நிற மரங்களும், அழகாக வெட்டப் பட்ட சவுக்கு மர, குறோட்டன் அலங்காரங்களுடனான பாதை வழியும் எல்லாமே புதுசு. பெற்றோர் பழைய மாணவர்கள் இருக்க நீண்ட நீல நிற ஒயில் பெயின்ட் மரக் கதிரைகள் போட்டிருந்தார்கள். அதில் ஒரு கரையாக தாயும் மகனும் அமர்ந்து கொண்டார்கள் - பின்னால் இருந்த அந்த பழைய மண்டபம் அவனை அடிக்கடி திரும்பிப் பார்க்க வைத்தது.
மைதானத்தின் எதிர்க் கோடியில் அளவாக இருந்த ஒரு வீட்டைக் காட்டி, அதுதான் பிரின்சிப்பல் பங்களோ என்று அறிமுகப்படுத்தினார் அவன் தாயார். சினிமாவில் பார்த்த பங்களோகளினால் அதனை அவன் பங்களோ என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கல்லூரிக் கொடி அதன் பின்னால் எல்லா இல்ல கொடிகளும் பறக்கத் தாயாராய் இருந்தன.
அம்மா பெரியண்ண எந்த ஹவுஸ் ?
“ஜோன்சன்”
சின்னண்ணா ?
சகோதரங்கள் எல்லாம் ஒரே ஹவுஸ் தானடா…
அப்பா நான் சேர்ந்தால் நானும் ஜோன்சன் ஹவுசா ?
அப்பா நான் சேர்ந்தால் நானும் ஜோன்சன் ஹவுசா ?
அம்மா சிரித்துக் கொண்டே ஆமோதித்தார்.
திடீரெண்டு மைதானம் அமைதி கொண்டது, பிறகு ஒரே தாள கதியில் எல்லோரும் கை தட்டினார்கள். அவன் எழுந்து நின்று கொண்டான் - பிரின்சிப்பல் பங்களோவில் இருந்து ஒரு சில தலைகள் நகர்வது தெரிந்தது – மெதுவாக அவர்கள் உருவம் செரியாகப் புலப் பட்டது. நடுவில் அதிபர் ஆனந்தராஜா அருகில் பிரதம விருந்தினர், விளையாட்டுப் பொறுப்பாசிரியர், அத்தலட்டிக் காப்டன் மற்றும் சிலர். கை தட்டலுக்கு இசைவாய் அவர்கள் நடந்து வந்தது இவனுக்கு பிரமிப்பு ஊட்டியது - குறிப்பாய் கூட் சூட்டுடன் மிடுக்காய் கை தட்டல் தாள கதிக்கு இணங்க நடந்து வரும் அதிபர் அவன் மனம் முழுதும் வியாகபித்தார். அவன் வாய் அவனை அறியாமல் முணுமுணுத்தது - "மை நேம் இஸ் பில்லா...". அந்தத்தருணம் அவன் ஒப்புக் கொண்டான் அந்த வீடு பங்களோ தான்.
அம்மா நானும் அண்ணாவயோட படிக்கப் போறன்.
அவன் தலையை கோதிவிட்டுக் கொண்டே தாயும் புன்னகையால் ஆமோதித்தாள்.
அடுத்த பாகத்தில் முற்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக