சனி, பிப்ரவரி 25, 2012

சொல்லொணா.....



வாழ்க்கை
என்னை விட்டு
தூரச்செல்வதாக உணர்கிறேன்...
என்னை சுற்றி வெறுமை சூழ்ந்திருந்தது ...
அந்த அறையில் எல்லாப் பொருட்களையும்
தின்று நின்றது வெறுமை!
என்னிலிருந்து ஓரடி தள்ளி
வட்டமாய்
சில பாராட்டுப் பூங்கொத்துக்கள்....
நிஜமலர்களும் காகித மலர்களும்.....
இடையில் இருந்த அந்த ஒற்றை முள்ளை
வெறித்தவாறு நான்.....

--------- --------- ---------
  

என் சந்நிதிக்கு பூக்கள் கொண்டு
வரும் பக்தர்கள் எல்லாம்
கூடவே கோரிக்கைகளும்
கொண்டு வருகிறார்கள்;

என் நுகர்வின்பமே மகிழ்ச்சி
என்று யாரும் பூக்களை அர்சிப்பதில்லை.
'முத்தனாதன்கள்' பரவாயில்லை,
மெய்ப்பொருள்1 ஆகா சாமானியன் நான்.

---------         ---------         ---------    

அக்கரைப் பச்சைகளுக்காய் 
நான் தேர்ந்தெடுத்த பாதைகளெல்லாம்
ஒற்றையடி.
இந்த ஒற்றையடியில்
அவ்வப்போ குறுக்கே கடந்து போகும்
நெடுஞ்சாலைகள்
நடை பாதைகளில்லாமல்.

சந்திக்கு சந்தி
முச்சந்தி முரளிகளும்,
சோக்கல்லோ சண்முகங்களும்;
உலகின் எல்லா சித்தாந்தங்கள் பற்றிய கிண்டல்களுடன் முரளிகளும்
உலகின் எல்லாக் கேள்விகளுக்குமான பதில்களுடன் சண்முகங்களும்.

எனக்கும்,
எப்பவும் எதோ ஒரு வழி சொல்கிறார்கள்,
நான் வேண்டினாலும் வேண்டாவிட்டாலும்.

அந்த சந்தியை தாண்டாமல் அவர்கள் அங்கேயே.
நான் மட்டும் நகர்ந்த படி.
முன்னேயோ... பின்னேயோ...
நான் மட்டும் நகர்ந்த படி.


ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

காதற்குறிப்புரைத்தல்

உயில் - எழுத மறந்தது எனும் ஒரு அல்பத்தினை நானும் எனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து உருவாக்கி இருந்தோம். அதில் இடம்பெற்ற ஒரு பாடல் இது. தயாபரன் மற்றும் தீபனது இசையாக்கத்தில் கிரிசாந்த் பாடியபாடல். அன்றைய நிலைமையில் sound-engineering அறிவும் budget உம் கட்டுபடி ஆகாததால் மெருகில் குறை பொறுக்க. முன்னே காட்ச்சியை விரிக்கும் குரல் ரமணன் அண்ணாவினது.


பின் பார்த்ததும் அவள் முன் பார்த்ததும்
முன்னே வந்தென்னை காட்டச் சொன்னாள்
கை பார்த்ததும் அவள் வளை பார்த்ததும்
வளை கழன்றோட முன்னே கை சேர்க்கச் சொன்னாள்



இடை பார்த்ததும் அவள் மேல் பார்த்ததும்
கை இழுத்து போர்த்த சேலை விலக்கச் சொன்னாள்
மார் பார்த்ததும் அவள் பார் பார்த்ததும்
நான் மார் பார்த்ததும் அவள் பார் பார்த்ததும்
சேலை கரையிழுத்தென்னை விலக்கச் சொன்னாள்

கண் பார்த்ததும் அவள் தாள் பார்த்ததும்
விரல் எழுதிய சித்திரத்தில் காதல் சொன்னாள்
தாள் பார்த்ததும் அவள் தோள் பார்த்ததும்
தன்னை இழுத்து அணைத்து பொருதச் சொன்னாள்

விண் பார்த்ததும் அவள் கண் பார்த்ததும்
விண்ணை விட்டு தன்னைப் பார்க்கச் சொன்னாள்
கண் பார்த்ததும் அவள் கண் பார்த்ததும்
நான் கண் பார்த்ததும் அவள் கண் பார்த்ததும்
வார்த்தை இல்லாதொரு பாடல் சொன்னாள்
இமை பார்த்ததும் அவள் இரவி பார்த்ததும்
வில்லை வளைத்து நாண் ஏற்றச் சொன்னாள்

இ . த.







இதை விட ரசனையான ஒரு பாடல் பற்றிய வேறு பதிவு: மாணிக்கவாசகர், ஆண்டாள் மற்றும் குணா 

சனி, பிப்ரவரி 18, 2012

எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்.


எந்த ஒன்றைப் பற்றிப் பேசுகின்ற போதும்
இன்னொன்றை பற்றியும்
ஏன்
எல்லாவற்றைப் பற்றியும் கூடப்
பேச முடிகிறது

இது நண்பன் மீனி சொன்ன கவிதை....

எந்த ஒன்றையும் செய்கிற போது
இன்னொன்றையும்
என் எல்லாவற்றையும்
அவனே செய்யச் வேணும் எண்டு எதிர்பார்க்கப் படுகிறது;

எதிர்பார்ப்பின் சுமை ஏற்றல் எதிர்ப்பிலும் கொடுமையானது என்பது பலருக்கு புரிவதில்லை.

என்னிடம் ஒரு திட்டமிருக்கு நீங்கள் எல்லோரும் செய்யுங்கள் - முடியாட்சி
எங்களிடம் ஒரு திட்டமிருக்கு வாருங்கள் எல்லோரும் சேர்ந்து செய்வோம் - குடியாட்சி
என்னிடம் ஒரு திட்டமிருக்கு அதை நான் தனியே செய்கிறேன் - சுயாட்சி ?
எங்களிடம் நிறையத் திட்டமிருக்கு இதையும் சேர்த்து நீயே செய்துவிடு - ???

வியாழன், பிப்ரவரி 16, 2012

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது....

அன்புள்ள அம்மா அறிவது,

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது....
நான் ஒரே சூடில் சுருண்டு விடுகிறேன்,
அது சொல்லானாலும் செரி
பொறியானாலும் செரி.

ஒரு புரியா மனத்துயரில்
துவண்டு கிடக்கும் தருணத்தில்;
வார்த்தைகளில் இருக்கும் பொறுப்பு குறைந்து, தடித்து;
அறியாக் கோபம் பொங்க... பொங்க...
இதை எழுத முயல்கிறேன்.

அப்பாவின் அடிக்குப் பிறகு கேவுகிற போது...
அண்ணாவுடனான சண்டைக்குப் பின் மூலைக்குள் முடங்கும் போது...
என் தோல்வியடைந்த அரங்கேற்றங்களுக்குப் பின்......
அப்போதெல்லாம் நீ அரவணைத்து கூட வியப்பில்லை....

நான் சொல்லாத
பகிராத
துயரங்களையும்
கண்டு தலை வருடுகிறது உன் கைகள்;
ஏன்.. என்ன... என்றில்லா தொந்தரவற்ற மௌனம்....
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது....

கனத்த இதயத்தோடு
விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி இருக்கையில் தோன்றியது
"நாங்கள் பள்ளி போன பிறகு நீ என்ன செய்து கொண்டிருந்தாய் ?"
சமையலா.... பகல் முழுவதுமா....
மாதம் ஒருமுறை கல்கி...
எப்போவாவது ரமணிச்சந்திரன்.....
மீதி நேரம் ?

நீ அயர்ச்சி காட்டி சிடு சிடுத்து பார்த்தது குறைவு....
உனக்கு கோபமே வராது எண்டு சொல்லவில்லை
ஆனால் அதன் வீச்சும் நீட்சியும் குறைவே...

எங்கள் காயங்களுக்கெல்லாம் உன்னிடம் தான் வருகிறோம்
உன் காயங்களை யார் தடவி விடுவார் ? -
இது வரை இப்படி கேட்க்க தோன்றவில்லை....
அப்பாவுடனான சண்டைக்குப் பிறகு
உன் முகத்தில் வாட்டம் இருந்திருக்கலாம் - எனக்குப் பட்டதில்லை
உன் தலை இந்தப் பிஞ்சுக் கரங்களின் தடவலுக்காய் ஏங்கி இருக்கலாம் - எனக்கு தோன்றவில்லை

அன்று ஒருநாள் கொஞ்சம் பாதியில் பள்ளி விட,
விளையாடிவிட்டு கொஞ்சம் வேளைக்கு வந்திருந்தேன்;
உள்ளே சமையலறையில் கேட்ட அழுகை
உன்னுடயதா என்று பார்க்கும் திராணி இல்லை.

களத்து மேட்டில் வாளில்லா வீரன்
இந்த நகுலனின் கவிதை கூட ஏனோ உன்னை எனக்கு அறிவுறுத்துகிறது....

களத்துமேட்டில் 
வாளுருவி 
மீசைதிருகி 
நிற்கிறான் ஒரு மாவீரன் 
போகும் பறவைகளனைத்தும் 
அவன் தலை மீது 
மீசை திருகிய மாவீரன்
எச்சமிட்டன 
அவன் மீசையை 
எறும்புக்கூட்டங்கள் 
அரித்தன 
ஆனால் அவன் முகத்திலோ 
ஒரு மகா சாவதானம்.

இது ஒரு 
சிலையின் சோகமாயிருக்கலாம்....
இல்லை 
கலையின்  சோகமென்றும் 
சிலர் வாதிடலாம்...
முன்னிற்கும் 'தலை'யின் தாற்பரியம் 
எண்டும் பார்க்கலாம்...
ஆனால்த் தாயே 
உன் நிலையின் நிஜம் 
என்றே எனக்கு தோன்றுகிறது....

மற்றபடி, கால் நோ இப்ப எப்படி ? விரைந்து திரும்பி வந்து விடுகிறேன்.... 
முடிந்தால் எனக்கு கொஞ்சம் முட்டை மா செய்து அனுப்புங்கோ.

இப்படிக்கு,
இ.த.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மாவைப்பற்றி நான் ரசித்த பதிவிது: http://www.padalay.com/2012/02/blog-post_05.html

ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

தனியே எமக்கோர் குணமுண்டு.... முகவுரை

முகவுரை




இது ஒரு சிறுவன் சொன்ன கதை. நீலக் காற்சட்டையும் வெள்ளை சட்டையும், அதில் செவ்வகமாய் பாடசாலை சின்னமுமாய் - ஒரு துடிப்பான சிறுவன். கதை கேட்டவனும் அப்படியே அவனும் ஒரு சிறுவன் தான். இந்தக் கதையில் அந்த இருவருமே முக்கிய பாத்திரங்களே. என் வழமையான 'கதைகளில்' இருந்து வேறுபட்டு இது உண்மை சம்பவங்களின் அடிப்படையிலானது. கதையில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் யாரையோ குறிப்பிடுவனவையே.

இந்த Spartan 300 படம் பார்த்திருப்பீர்களே... இல்லாட்டிக் கூட பரவாயில்லை இந்தக் கதை கேளுங்கள், அது மாதிரி ஒரு கூட்டம் தீரர்களின் கதை.

அந்தக் கல்லூரியை ;சேர்ந்தவர்களை இந்து-காளைகள் (hindu-bulls) என்றே அழைப்பது பொருத்தம், அவர்கள் கல்லூரி சின்னத்தை முன்னிட்டு மட்டும் நான் அப்படி சொல்லவில்லை. அவர்களின் இயல்புப் பொருத்தமும் சேர்த்துதான்.

அதில் இளையவனாகத் தெரிந்த சிறுவனுக்கு அப்படிச் சொல்வதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை; கொஞ்சம் மமதை, நிறையப் பெருமை! அடக்கமாகச் சொல்வது போல் ஆர்ப்பாட்டமாக சொல்வதில் வல்லவன் அவன். அவன் மட்டுமா அந்தக் கூட்டமே அப்படித்தான்.

அதை ஆமோதித்த சிறுவன் இவனை விட கொஞ்சம் பெரியவன் என்பது என் ஊகம், மற்ற சிறுவனின் தொனியைப் பார்த்தால் அப்படித்தான் தெரிந்தது. இத்தனை சிறிய நிகங்கள் கொண்ட விரல்களை இந்த சிறுவனைத் தவிர வேறு யாரிடமும் பார்த்ததில்லை. அந்த சிறுவனுக்கு நகங்கள் மீது ஏன் இத்தனை கோபமோ - ஒரு வேளை தாள வாத்தியக்காரனோ இல்லை தந்தி வாத்தியக்காரனோ - அப்படித்தான் மற்ற சிறுவன் ஏதோ சொன்னானே - என்ன அது - ஆ... ட்ரவுசர் போட்ட புல்லாங்குழல்....

கதை சொல்லும் பெரியவன் ஆறாம் வகுப்பு கேட்க்கும் சின்னவனுக்கு பத்தாம் வகுப்பு - என்னது குழப்பமா இருக்கா அது அப்படித்தான். கதை சொல்லும் பெரிய சிறுவன் ஒரு கணணி மென் பொறியியல் வலுனன். இலங்கையின் தலை சிறந்த மென்பொருள் வடிவமைப்பு கம்பனியில் கூப்பிட்டு வேலைக்கமர்த்தப்பட்ட ஒரு வித்தைக்காரன் (நன்றி பிரேம்நாத் சார்). மொரட்டுவப் பல்கலைக்கழக இலத்திரனியல் பொறியியல் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்த ஒரே தமிழர். இந்த ஏங்க ஊரு பாட்டுக்காரன் பெயர் தயாபரன். கதை சொல்கிற போது ஒரு ஆறாம் வகுப்பு சிறுவனாகத்தான் சொன்னார் - கேக்கிறவன் ஒரு பத்தாம் வகுப்பு பெடியனாகத்தன் கேட்டான். அந்த இரவு முழுவதும் நினைவு மழை......(சக்திவேல் வார்த்தைகள் படி) நினைவிடை தோய்தல்....


கதை கேட்பவனே கதை சொல்லியும் ஆவான்.......

இந்த முகவுரைக்கும் கதைக்கும் இம்மியளவும் சம்பந்தம் இல்லை, ஆனா இதுதான் கதை ஜனித்த புள்ளி. இந்தக் கதையில் வரும் சித்தரிப்புகளுக்கும் வார்த்தைகளுக்கும் முழுமையான் சொந்தக்காரர் தயா அண்ணா தான். இதில் வரும் சம்பவங்களும் மனிதர்களும் எங்கள் கதாநாயகர்கள், பெருமையும் சிறப்புமாய் அவர்கள் கட்டிய கோட்டையில் தான் நாங்கள் கொடியலங்காரம் செய்தோம். சொன்னவர்களைக் காட்டிலும் சொல்லியதைக் காட்டிலும் நிறையக் கதைகள் இருக்கு. ஒரு இரவில் சில மணித்துளிகளில் கனவு மாதிரி கடந்த பசுமை நினைவுகளில் வேள்ளெனத் தெரிந்த புள்ளிகளை கோர்த்து கோலமிடுகிறேன்...

உங்கள் வாழ்த்துக்கள் பெரியவனுக்கும் வருத்தங்கள் சின்னவனுக்குமாய் இருக்கட்டும்.

தனியே எமக்கோர் குணமுண்டு....

முகவுரை


காட்டிடை கற்பகதரு.....

அது 1992, ஜூன் அல்லது ஜூலை என்று நினைகிறேன்.... பம்பலப்பிட்டி பிளட் பஸ் தரிப்பை ஆதிசேசன் படம் விரித்தது போல் நிழல் போர்த்து காத்து நிற்கும் மரங்களை வெப்பக் காற்று உலுக்கி எடுத்துக்கொண்டு இருந்தது. என்னத்தைப்பற்றி காற்று மரங்களிடம் விசாரித்து இருக்கும்.... சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த கோரத்தையா, இல்லை சற்று நேரத்தில் கதிரேசன் மண்டபத்தில் நிகழ இருக்கும் பிரமிப்பையா....

பம்பலப்பிட்டி பிளட்ஸ் பஸ் தரிப்பிடம்
கோவிலுக்கு கூட இவ்வளவு கூடியதில்லையே, கடைசியா ஆடிவேலுக்குதான் இதனை வேலைப் பளு இருந்தது, அப்படி ஒரு பள்ளிகூட விழாவிற்கு எதற்கு இதனை 'தலை'கள். அந்த சிங்களப் போலீஸ்காரருக்கு அயர்ச்சியும் அதிசயிப்பும் சேர்ந்து அதிர்ச்சி கூட. ஆண்கள் பாடசாலை எண்டுதானே சொன்னார்கள் எதற்கு இத்தனை பெண்கள். half saree அணிந்த வளையல் கரங்கள் அலைமோதியது அவருக்கு அதிர்ச்சியே. போலிஸ் பயிற்சியில் விடியக்காலையே எழுந்து வெறு வயிற்றோடு மைதானத்தில் சுமார் ஐந்தாறு சுற்றுகளை அரை மணி நேரத்துக்குள் ஓடத் தெரிந்த, விறைப்போடு சலூட் அடிக்க தெரிந்த, கள்ளனை கண்களால் அளவெடுக்க தெரிந்த அந்த நடுத்தர வயது போலீசுக்கு இந்த வளையல் கரங்கள் யாராக இருக்கும் எதுக்கு அலை மோதுகிறார்கள் எண்டு கண்டுபிடிக்க தெரியவில்லை.

அன்று சபையில் ஒரு அற்புதம் நிகழ்த்த இருக்கும் இளஞ்ஞனின் காதலிகளும் காதலிகள் ஆகப்போகிறவர்களுமே ஒரு கூட்டம் இருக்குமே. மற்றவர்களையும் சேர்த்தால். காக்கிக்கு இது புரிய வாய்ப்பில்லை.


மாலைக் கடைக்காரர்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது, குறிப்பாய் மல்லிகை சரம். மொட்டு மாலை விலை அதிகம் ஆனாலும் கிராக்கி இருந்தது. விரைவில் மல்லிகை விற்றுத் தீர்ந்ததால் மற்றைய பூச்சரங்களை வகை வகையாய் கோர்த்து வைத்தார்கள். கனகாம்பரம் கையிருப்பில் இல்லை, ஆனால் பலர் குறிப்பாக நடுத்தர வயதுப் பெண்கள் அதை இருக்கா இருக்கா எண்டு ஆவலோடு கேட்டு ஏமாந்து போனார்கள்.

பூக்கடைக் காரர்களுக்கு மட்டுமல்ல அந்த பலசரக்கு கடையிலும் நல்ல கூட்டம், பாக்கட்டில் வரும் தீன்பண்டங்கள், பிஸ்கட்கள், டொபிகள், மென்பானங்கள், கண்டோஸ் மற்றும் பெப்பர்-மின்ட்கள் விரைந்து விற்பனை ஆனது. பெரிய அளவில் இலாபம் தராத பண்டங்களே ஆயினும் நிறைந்து விற்றதில் முதலாளி மகிழ்வாயிருந்தார். ஆனாலும் கடைப் பையன்களிடம் கண்டிப்பாயே இருந்தார்.

வழக்கத்துக்கு மாறாய் நிறைந்த கூட்டம் தங்களுக்கு பலனளிக்காததில் பிச்சைக்காரர்கள் கூட்டம் நிறைய ஏமாற்றம் கொண்டது. கோவில் திருவிழாக் கூட்டம் அல்லது சமய விழாக் கூட்டம் என்றால் தங்களை வலுவாகக் கவனிக்கும். இந்தியாவிலிருந்து யாரும் பிரபலங்கள் வந்திருந்தால் தான் இப்படிக் கூட்டம் அலை மோதும் ஆனாக் கவனியாது. இது புதுசு, உள்ளூர் விழாதான் ஆனா இவ்ளவு ஆர்ப்பாட்டம். போன கிழமை கூட ஒரு உள்ளூர் பிரபலம் - டிவி எல்லாம் தெரிந்த முகம் ஒரு விழா நடத்த்தினாரே, ஆனா கூட்டம் இல்லையே. குறிப்பா இளைஞ்ஞர் கூட்டம் இந்த இடத்திற்கு புதுசு. கோவிலும், சினிமா இல்லாத பண்பாட்டு விழாக்களும் இளசுகளை அவளவாய் ஈர்த்ததில்லை.

வித்தக விநாயகர்
ஏன் இவ்வளவு கூட்டம்? ஒருவேளை இந்தக் கல்லூரியின் அமைப்பு:- நீலம், சிவப்பு, பச்சை எண்டு வகை வகையான டை அணிந்த பெண்கள் பாடசாலைகள் சுற்றி இருக்க என்பதாலோ.... ஒருவேளை அதைத் தான் தலைநகரின் மையப்பகுதியில் இருக்கும் தன்னிகரில்லாப் பாடசாலை எண்டு சொல்லுரானுகளோ?.... யாருக்கு தெரியும்வித்தக-விநாயகருக்கேவெளிச்சம்.

வாசலில் இருந்த பரபரப்பு உள்ளே பாதையில் தெரியவில்லை. அகன்றிருந்த பாதையும், அங்கால் பக்கம் இருந்த மண்டப வாசலும் உள்ளே நடக்கிற பரபரப்பை பெரிதுபடுத்தியது - ஒரு திரில் அனுபவமாய் - suspense effect இல்.

திறந்து விட்டிருந்த கிறில் கேட்டுக்கு இடையில் ஒரு மேசை, இரண்டு குத்து விளக்கு, நடுவே ஒரு கும்பம், சில வேட்டி கட்டின தலைகள் தெரிந்தன. ஒருவன் குத்து விளக்கை காற்றிடம் இருந்து காப்பற்ற கங்கணம் கட்டிக் கொண்டு போராடிக் கொண்டிருந்தான்.

இந்த ஆர்ப்பாட்டங்ககளுக்கு மத்தியில், அதை கண்டு கொள்ளாதவர் போல் எங்கட கதையின் நாயகன் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தார். பள்ளி உடுப்புத்தான், நல்லா கஞ்சி போட்டு தோச்சு அயன் பண்ணின மிடுக்கான சட்டை; கையில் ஒரு பையில் வேட்டி குருத்தா எண்டு நினைக்குறேன். பாடலில் லயித்திருந்தவர் நேற்று பயிற்சியில் சொன்ன மாதிரி ஒரு குறித்த வரியைப் பாட முயன்று கொண்டிருந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக பயின்ற சிறுவர்களும், பயிற்றுவித்த ஆசிரியர்களும், கூட்டி வந்த பெற்றாருமாய், எல்லோருமே வறுத்தெடுக்கப் பட்டார்கள். தொடர்ச்சியான கடும் பயிற்சி + ஒத்திகை. ஆனா இந்த நாடக் காரங்கள் பயிலும் போது தங்களை மாதிரி நண்டு சிண்டுகளை துரத்தி விட்டுடுவானுகள் என்பதுதான் அவனின் ஒரே வருத்தம். அதிலும் தமிழழகன் உருவமும் குரலும் அவர் பேசமுதலே பயம் பற்றிக் கொள்ளும். தெறித்து ஓடிவிடுவானுகள். சுபாஸ் பற்றி கண்டதை விட கதைகள் அதிகம் என்பதால் ஒரு முடிவற்ற குழப்பம் அவர் பற்றிய அபிப்பிராயத்தில் இருந்தது. எது எப்படியோ இண்டைக்கு அந்த நாடகத்தை பார்த்து விடலாம். எதோ ஒரு அரச நாடகம் என்பதை தாண்டி வேறேதும் தெரியாது, ஆர்வம் மனதை அரிக்கத் தொடங்கியது....

இவன் சுதர்சனை இன்னும் காணவில்லையே, எங்கயாவது மூலைக்க நிண்டு சுரம் பாடிப் பார்கிறானா - பாவி என்ன குரல் அவனுக்கு. உள்ளுக்குள் இருந்து ஒரு வெள்ளை நிற வான் வேகமாக கடந்து போனதில் சிந்தனை வேறு தளத்திற்கு தாவியது. அண்டைக்கு அப்படித்தான் ஒரு லே-லான்ட் பஸ் பிடிச்சு தமிழ்தினப் போட்டி போனது நினைவு வந்தது - கூடவே பூரிப்பும் பெருமையும்.

ஏறு போல் நடை

சுபாஷ் அண்ணா:
உதவி சிரேஷ்டமாணவ தலைவர் 93-94
தமிழ் அண்ணா:
சிரேஷ்டமாணவ தலைவர் 92-93
தமிழ்த் தினப்போட்டியில் மாவட்ட, மாகாண ஏன் அகில இலங்கையளவில் எங்களுக்கு எத்தனை பொற் பதக்கங்கள். மாவட்ட மட்டப் போட்டிக்கு போன போதுதான் பஸ் பிடிச்சு போனது. வழமையாக கடுமையாக இருக்கும் தமிழ் மற்றும் சுபாஸ் அண்ணாமார் சிரிச்சுக் கும்மாளம் அடிச்சுக் கொண்டு கூட்டிக்கொண்டு போனது ஒரு இன்ப அதிர்ச்சி. சிரேஷ்ட மற்றும் பிரபல்யமான (அடுத்த வருடம் உதவி சிரேஷ்ட மாணவதலைவர் ஆகப் போகிற) மாணவ தலைவர் என்பதாலேயே அவர்கள் மீது ஒரு பயம் கலந்த மரியாதை. முகுந்தன், லோசன் எண்டு ரெண்டு அண்ணாமார் - அவர்களிலும் சின்ன அனால் இவனிலும் பெரிய பெடியனுகள் தமிழோடும் சுபாஸோடும் நல்ல ஓட்டப் பேசிப் பழகினானுகள். விவாத அணிக்காரனுகள். சுபாசண்ணாவின் ஒரு காதல் கவிதையை லோசனும்முகுந்தனும் - தமிழுக்குகிண்டலும் கேலியுமாய் சொல்லிக்கொண்டு வந்தது ஆச்சரியமாயும் உற்சாகமாயும் இருந்தது. வயது வேறுபாடின்றி அவனுகள் சிரேஷ்டமாணவதலைவர்களையே கிண்டலடிப்பது இந்த ஆறாம் வகுப்பு சிறுவனுக்கு புதிதே. அவனுகள் எல்லாம் எதோ ஒரு பெருமையும் தினவையும் அந்த சிறுவனுக்குள் அவனுக்கு அறியாமலேயே ஊடிக்கொண்டிருந்தானுகள். (இவர்களைப்பற்றி இன்னும் விவரமாய் வருகிற தொடர்களில் பதிய இருப்பதால் இப்போ தவிர்த்து விடுகிறேன்)

பஸ் பிடிச்சுப் போனவனுகள் வரேக்க ஒரு ஒட்டோவும் பிடிக்க வேண்டி இருந்தது - பெற்ற பரிசுகளை பாராட்டுகளை அள்ளி வர. தமிழ்அழகனின் நாடகம் முதற் பரிசு பெற்றதோடு, பின்னர் மாகாண மற்றும் அகில இலங்கை மட்டம் வரை சென்று வெற்றி பெற்றது. மேலும் நடுவர்களின் பரிந்துரையின் பேரில் தமிழ் தின பரிசளிப்பு விழாவில் அரங்கும் ஏறியது. நாடகம் மட்டுமல்ல. கீழ் பிரிவு மேல் பிரிவு குழு தனிப் பாடல்கள் பேச்சு கவிதை கட்டுரை இன்னும் இன்னாவோ எல்லாம் - முதல் பரிசு புதல பரிசு முதல் பரிசு....

பரிசுகளை அறிவிப்பவர் முதலே எல்லா முதல் பரிசும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கே எண்டு சொல்லிருக்கலாம் போல.... அப்படி தொடர்ச்சியாக இந்துக்கலூரி முதலிடம் , இந்துக்கலூரியை சேர்ந்த இவர் முதலிடம் ...சொல்ல அவருக்கு அலுத்ததோ இல்லையோ கேட்ட எங்களுக்கு தித்திப்பு... மற்றவர்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது, அதிலும் சில பொறாமைக்காரர்கள் முகத்தில் ஒரு கலியாணத்திற்கு தாளிக்குமளவுக்கு கடுகு வெடித்தது எண்டால் பாருங்களேன். யார் கண்ணுக்கும் படாமல் சில காதல்களும் வெடித்தது.

"ஊ..." என்ற கத்தல்களும், சீண்டலும், குறிப்பாய் பெண்கள் கல்லூரிகளைப் பார்த்து கலர்ஸ் காட்டுறதும், அலம்பல், சிலம்பல், ஆர்ப்பாட்டம், பெருமை, வீறு, ஆனந்தம் எல்லாம். தரையில் கால்கள் நிற்கவில்லை. தங்கள் குழுவிற்கு பரிசு கிடைத்தது எண்டு தெரிந்ததும் கைதட்டி ஆரவாரப் படுத்தி கை குலுக்கி - சந்தோசம் + வெக்கம். நாம ஹீரோ நிஜமாயே ஹீரோவாய் உணர்ந்தார் - ஒருமுறை கொலரை செரிப்படுத்திக் கொண்டார் சுற்றும் முற்றும் பார்த்து விட்டும் மீண்டும் அமர்ந்தார். இப்போ மாணவதலைவர்கள் மீது வாஞ்சை வந்தது, அவனுகள் விவாதம், நாடகத்தில் காட்டிய ஆளுமை கருவத்தையும் சந்தோசத்தையும் தந்தது - இனிமேல் இவுனகள் என்ன சொன்னாலும் கேக்கலாம் எண்டு தோன்றிற்று.

இது தான் அரும்புகிற மீசை முறுகுகிற தருணம், மார் புடைத்து தோள் விடைத்து சிங்கங்கள் மாதிரி..... ஜிவ் எண்டு மண்டைக்குள் ஏறுகிற போதை சொல்லால் வடிக்கவொணா உணர்வு - ரதியும் மன்மதனும் நிறைய அம்புகளோடு களம் காணுகிற கணம். அவசரத்தில் ஒழுங்கில்லாமல் நடக்கிற போட்டிகளுக்காய் departmet காரர்களோடு ஆசிரியர்கள் சண்டை பிடிக்கிற தருணம். எனக்காக என் கல்லூரி, ஆசிரியர்கள் மாணவ தலைவர்கள் அண்ணாமார் பின்னே நிற்பார்கள் என்பது புரிகிற பொழுது.

இது என் கல்லூரி எண்டு உணர்வு மேலோங்குகிற தருணம், மண்டை கனக்கும், கைகள் பையில் தைக்கப்பட்ட சின்னத்தை முத்தமிடும், தலை கால் புரியாத வெறி அது - வேண்டியதே. இவன் என் கல்லூரியின் மாணவதலைவன் - இத்தனை பேரை கட்டி-மேய்த்து, சொல்லிக்கொடுத்து, பயிற்றுவித்து, உற்சாகப் படுத்தி, தட்டிக் கொடுத்து, தட்டிக் கேட்டு, இடையில் கன்டீனுக்கு கூட்டிப் போய், காசு கொண்டர மறந்தவனுகளுக்கும் சேர்த்து வாங்கி பகிர்ந்து உண்டு, பகிர பங்கு பெற சொல்லிக் கொடுத்து, வெற்றி வாங்கி, அதை கொண்டாட சொல்லிக் கொடுத்து, கொண்டாடி மகிழ்ந்து - இவன் அண்ணா - என்னை அடித்தாலும் மிரட்டினாலும் நான் பணிய வேண்டிய; பணிய விரும்புகிற அண்ணா எண்டு தோன்றுகிற தருணம். அவன் அடையாளப் படுத்திக் கொடுத்த மேடையில்த் தான் நான் ஏறி முழங்குகிறேன், அக்காமாரும் நடுவர்மாரும் எல்லாரும் அவன் வெற்றியையும் பெருமையும் ஏலவே எங்களுக்கு ஏற்றித்தான் பார்க்கிறார்கள்; கூடவே எதிர்பார்ப்பும். இந்த அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் தந்தவனுக்கு நான் பணிவது என் கடமை - எங்கள் எல்லார் வெற்றியையும் தட்டி குடுத்து பாராட்டிய அவன் வெற்றியை எப்படிக் கொண்டாடுவது - அவர்கள் பெயர்களை உரக்க கத்தினோம் -ஒரு லயத்தோடு
தமிழ் அண்ணா! தமிழ் அண்ணா! தமிழ் அண்ணா!
அறிவிப்பாளரோடு சேர்ந்து நாங்களும் உச்சரித்தோம் - சுபாஸ் அண்ணா- சுருதி சேர்த்தோம்- ஒரு புன்னகையோடு அதற்க்கு வழி விட்டார் அறிவிப்பவர். தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு தமிழ் தினப் போட்டிகளில் வகைப்பட்ட எல்லாப் பிரிவுகளிலும் விவாதம், இசை, நாடகம் எண்டு முத்தமிழிலும் ஈடு இணையற்ற வெற்றிகளைக் குவித்து விட்டுத்தான் இந்த விழாவிற்கு வருகிறது கல்லூரி. ஆனால் கண் பட்ட மாதிரி எங்கள் குழுப் பாடல் வகையில் அகில இலங்கை மட்டப் போட்டியில் ஒரு சின்ன சிக்கல் ஆகிவிட்டது.


வெள்ளி, பிப்ரவரி 03, 2012

மொட்டுக்கள் சில முட்களானதேன் ?



படம் வரையும் கல்வின்.
உகண்டா நாட்டினை சேர்ந்த கல்வின் (Calvin) எனும் சிறு வயதுப் போராளி தன் ஆயுதம் தாங்கிய வலியின் நினைவுகளை தூரிகளை கொண்டு மீட்டிருக்கிறான். Street Child Project எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் காப்பாற்றப் பட்டு வளர்த்தெடுக்கப் படும் இந்த ஓவியனுக்குள் இன்னமும் ஓயாமல் அலை அடிக்கிறது அவன் சிறுவயதில் கண்ட வன் முறைகள். இன்று எல்லாவற்றையும் மறந்து வெள்ளையாய் சிரிக்கிறான் என்றால் அது street child project இன் கர்த்தாக்களான இரண்டு under-grad வெண் பிள்ளைகள். அதில் ஒரு நண்பி என் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். நண்பியாக அறிமுகமாகி சகோதரியாக மலர்ந்திருக்கும் அந்த உறவு பெருமைக்குரியதாய் நான் மெச்சுவது. இந்த பத்தியை எழுதும் தருவாயில் அவர் குழப்பமான அரசியல் மேகங்கள் சூழ்ந்திருக்கும் உகண்டாவில், இந்த மாதிரி பல சிறுவர்களுடன் உறுதுணையாய் நிறைய தியாகங்களுடன் சேவையாற்றி வருகிறார். அந்த தங்கச்சியின் பெயர் ஜென்னி. தங்கச்சி என்பதை தன் ஆங்கில ஓசை நயத்துடன் அவர் உச்சரிப்பதே தனி அழகு.

முள்ளாகுகிற ஒரு மொட்டு......

இந்தப் படம் பார்த்த மாத்திரத்திலேயே என் அடிவயிற்றுக்குள் ஒரு நாக்குளியும் கழுத்துக்குள் ஒரு மிடறும்...... சட்டென்று சொந்தங்களும் நட்புகளும் நினைவில் வந்து போனார்கள். உகண்டா நாட்டில் (உம்) வற்புறுத்தி  இவர்கள் கையில் ஆயுதம் கொடுக்கப்பட்டது. அது வற்புறுத்தியோ விரும்பியோ ஆயுதம் தாங்குகிற பிஞ்சுக் கரங்களுக்கு, ஏன் மனசுக்கும் கூட வலிவு குறைவு. பட்டாம்பூச்சிகளுக்கு இறகுகளை பிய்த்து விடுதல் எத்தனை கொடுமையோ அதனிலும் கொடுமையானது அவற்றை குளவிகளாக்குவது.

ஒரு நல்ல படைப்பை பகிரத் தொடங்கின முயற்சி உலக மற்றும் உள்ளூர் அரசியலை சாடை பண்ணியது தற்செயல். இந்த ஓவியத்தை நான் ரசித்த முறையில் நீங்கள் ரசிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் நான் கவனித்த சில முக்கிய அம்சங்களை வரிசைப் படுத்த விரும்புகிறேன். மேலே வாசிக்க முதல் அந்த படத்தை ஆழ ரசித்து விடுங்கள்.

|
|
|
|
|
|
|
|
|

  1. அந்த சிறுவன் தாங்குகிற ஆயுதம் பெரும்பாலும் A.K.47 போல் தெரிகிறது, அதன் பிடியைப் பாருங்கள், பரிமாணப் படி அது கொஞ்சம் இடறுகிறதா.... இல்லை ஏதும் சொல்கிறதா ?
  2. மடித்து விட்ட சட்டைக் கைகளைப் பாருங்கள், தோள் மூட்டைப் பாருங்கள் - இந்த சீருடை அவனுக்குப் பெரிதில்லையா.....பொருந்தலையே!
  3. கன்னங்களின் மொழுக் மொளுக்கையும் மீறி  கண்களில் தெரிகிறது வன்மம் ?
  4. அந்த உதடுகளில் தொங்கிச் சரிந்து விழாமல் இருப்பது, கேள்வியா? பதிலா? சிரிப்பா? ஏளனமா?...... புரிந்தும் புரியாத அந்த கலவை உணர்வை யாராயினும் எனக்கு மொழிபெயர்க்க முடியுமா?
  5. பினாலே தெரிகிற அந்த ஒற்றை மரம் அல்லது துளிர்க்கும் இளைகளற்ற சிறு மரம் அவன் குறைஞ்ச பட்சம் ஆறு ஒற்றுமை எனக்கு தெரிகிறது....உங்களுக்கு?
  6. ஆ, அந்த நாணல்கள்..... எனக்கு எந்தக் கதையும் சொல்லவில்லை உங்களுக்கு ஆயினும் ஏதும் சொல்கிறதா?


கல்வின் உங்களுக்காய் காட்டுகிறான் தன் படைப்புகளை, உங்கள் அவசரம் அல்லது கவனமின்மை ஒரு நல்ல ஓவியனை ஆயுதமேந்த வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.