செவ்வாய், ஜூன் 29, 2021

கனவு காணாதீர்கள்


அன்புள்ள மகனுக்கு ,
அன்பும் முத்தங்களும்.

'கனவு காணாதீர்கள்' என்ற தலைப்பில் கட்டுரை வரைய உதவச் சொன்னாய்.
இது என்ன விசித்திரமான தலைப்பு என்று சிந்தித்தேன்.

உண்மைதான் கனவு காணாதீர்கள்.

கனவுகள் உனக்கு இறக்கைகைகள் தராது.
இறக்கைகள் இருப்பதாக நம்பவைக்கும்.
பறவைகளோடு முகில்களில் பறக்கும் அனுபவத்தை கற்பிதம் செய்ய சொல்லும்.
ஆனால் ஆசையோடு விரித்துப்பாரு
விழுந்து அடிபடும்.

கனவுகள்
தவளைகளை பார்க்கும் போது முத்தமிடலாமா என்று தோன்றவைக்கும்.
கனவுகள் பழைய அரண்மனைகள் மீது ஈர்ப்பை உண்டாக்கும்.

கனவுகள் ஒரு போதை,
யதார்த்தத்திலிருந்து விலக்கி ஒரு பொய் சுவர்க்கத்தில் உன்னை ராஜாவாக்கும்.
எல்லாவற்றயும் யாரையும் நம்பவைக்கும் - கழுத்து அறுக்கப்பட்டாலும்.
ஆதலால் கனவு காணாதீர்கள்.

சினிமாக்களுக்குள் தொலைந்துபோவாய்
புத்தகங்களுக்குள் தொலைந்துபோவாய்
பாடல்களுள் தொலைந்துபோவாய் - ஏன்,
உனக்குள்ளே தொலைந்துபோவாய்
ஆதலால் கனவு காணாதீர்கள்.

கனவுகள் முருங்கை மரங்களை பார்க்கும் போது வேதாளங்களை தேடவைக்கும்,
கனவுகள் உன்னை ஒரு மாவீரன் என்று நம்பிக்கை தரும்,
கனவுகள் சிம்மாசனத்தையும் பதுமைகளையும் தேடவைக்கும்,
கனவுகள் கால்களின் கீழே குழி பறிக்கப்படுவதை பற்றி கவலைப்படாமல் கடல் அலைகளை சினேகம் கொள்ள வைக்கும்.
ஆதலால் கனவு காணாதீர்கள்.

ஏவாள் கடித்த ஆப்பிள் பழம் - கனவுதான்.
கனவுதான் சாத்தானின் தூதர்கள்.
எதற்கும் விலகியே இரு.

பழைய விளக்குகளை துலக்கவும்
பழைய திரைசீலைகளுடன் பேசவும்
பழைய பாய்களில் பயணிப்பதுபோன்று பாவ்லா செய்யவும்
கனவுகளே தூண்டும்.

பழையவற்றின் மீது ஒரு அதீத ஈர்ப்பை உண்டாக்கும்.
கனவுகள் அனுபவங்களை அர்த்தமற்றதாக்கி விடும்.
நிஜம் எப்பவும் கனவுகளை தீண்டியதுமில்லை தாண்டியதுமில்லை.
தேவையற்ற ஏமாற்றம் சுற்றி மிஞ்சும்.
கனவுகளை விலக்கியே இருந்து பழகுங்கள்.

கனவுகள் தொடர்ந்து துரத்தும் வல்லமை பெற்றவை.
நிம்மதியாய் கொஞ்சம் நீட்டிப்படுத்திருக்க சற்றேனும் சம்மதியா கனவுகள்.
இயங்க துரத்தும் ,
துரோகங்கள், வீழ்ச்சிகள், இகழ்வு தாண்டி - நகர சொல்லும்.
அவை வேண்டா.

மேற்சொன்ன விடயங்களை கொண்டு கட்டுரை வரை.
நான் சொன்னது போல் எல்லாக்கட்டுரைகளும் முகப்பு, நடு, முடிபு என்று பாகுபடுத்தி கோர்க்கவேண்டும்.
நீ செரியாகச் செய்வாய் - என் பிள்ளை.

அப்புறம் மிக முக்கியமாய்.
கனவு காண்.
நிறுத்திவிடாதே.
உன் கனவுகளை தொடர்ந்து எனக்கு எழுது.

அன்பின்,
அப்பா.
இ.த
பி்.கு: உங்களை துரத்தும் கனவு என்ன ?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக