வெள்ளி, மார்ச் 23, 2012

கருடா சவுக்கியமா ?

கருடா சவுக்கியமா ?
                                             இனி பிரச்சனை இல்லை....

அடேய் மச்சோ,

என்ன கதை ? எப்ப திரும்ப ஊருக்கு வாராய் ?
கடைசியா வரேக்கை என்னோட குருணாகல் வருவதா சொல்லி இருந்தாய், இப்பதான் பிரச்சனை முடிஞ்சுதே, பிறகு என்ன ?
திரும்பவும் அப்பா சொன்னார் அம்மா சொன்னார் எண்டு பிஸ்கற் குடுக்காத?
உன்னை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போய் தோசை சுட்டு தர நினைத்திருந்தேன், என்ட அம்மேவுக்கு தோசை சுட தெரியாது எண்டு நீ சொன்னாவாவது நம்புவாவா பார்ப்பம்.
மச்சி படிச்சுட்டு அங்கேயே செட் ஆகிடாதே, ஜார்ஜியாவில ஆளைப் பிடிச்சாலும் இங்க கூட்டிக்கொண்டு வந்துடு, நான் இங்கிலிசு படிக்கலாம் இல்லை ;).

எப்பவாவது ஒருநாள் நீ சொன்ன மாதிரி கெப்பட்டிப்பொல பற்றி படம் எடுத்து ஒஸ்கார் மாதிரி விருதுகள் வேண்டுவாய் எண்டு நம்புகிறேன். மறக்காம எனக்கு ஒரு வேசம் கொடு. உண்ட அபிமான ரஜனி படம் ஒண்டு பார்த்தனான் - ரோபோ - நல்ல முசுப்பாத்தி. எனக்கும் இப்ப அந்தாளிண்ட படங்கள் பிடிக்குது.

எங்கள் எல்லோருக்கும் சமாதானமா சேர்ந்து வாழத்தான் ஆசை, ஆனா உங்கட தலைவர் மட்டும் வேணாம். அதை விட்டுட்டு ஒன்னா வாழலாம். இப்பதான் எல்லாம் செரி ஆகிட்டுதே, இனி நாங்கள் ஒண்டா இருக்கலாம், நீ இங்கயும் நான் அங்கயும் வந்து போகலாம். முரளி மாதிரி ஒரு நல்ல ஸ்பின்னர் உங்க பக்கமிருந்து வேணும். நீ அடிக்கடி சொல்லுவியே MIT டோனி சொல்லுமாப் போல எங்கட நாட்டில இஞ்சினியர்ஸ் நிறையப் பேர், அதை செரியா பயன்படுத்தி நாட்டை முன்னேற்றணும் எண்டு. வா மச்சோ சேர்ந்து செய்யலாம்.

இப்போ முன்ன மாதிரி இல்லை, பிரச்சனை தீர்ந்துடிச்சு, சென்றி பொயின்ட் எல்லாம் எடுத்தாச்சு, கொழும்பில குண்டு வெடிக்காது, உங்க பக்கம் குண்டு போட மாட்டம். நாங்க உங்கட ஊருக்கு வரலாம், நல்லூர் கும்பிடலாம், சேர்ந்து கள்ளு குடிக்கலாம், நீ நம்ம மலைக்கு வரலாம், மானோடு விளையாடும் பௌத்த பிக்குகளையும், நீர் மட்டம் இறங்காத தாம்பாளம் இருக்கும் குகைகளில் விஷ்ணுவையும் புத்தரையும் பார்த்தபடி லயித்து இருக்கலாம். பொல் சம்பல், பொல் ரொட்டி, இடியாப்பம், சாம்பார் எல்லாம் சேர்ந்து சாப்பிடலாம்.

உங்க ஊருக்கு ரோட்டு போட்டிருக்குறம், புது புது கட்டடம் எல்லாம் கட்டுறம். ஆ இப்ப கரண்ட் கூட இருக்கே: நீ அடிக்கடி சொல்லுவியே, நீ பதினைந்து வயது வரை கரண்ட் இல்லாமல் படித்து எலக்றோனிக் இஞ்சினியர் ஆகினாய் எண்டு. இனி பிரச்சனை இல்லை.

இப்ப அண்மைக்காலமாக எங்கட நாட்டின் மீது எல்லா வெளி நாடுகளும் கண் வைக்குது. எங்களுக்குள் முண்டப் பாக்குது, ஆனா இப்பதான் நாங்க ஒண்டா சேர்ந்து முன்னேறனும். பிரச்சனை தீர்ந்த பிறகு மீண்டும் சேராமல் இருக்க பழசை இல்லாததும் போல்லாததுமாய் இட்டுக் கட்டி சொல்லுவானுகள். உலகமெல்லாம் அட்டூழியம் பண்ணும் அமெரிக்காவையோ , இல்லை எங்களை பகடை ஆக்கும் இந்தியாவையோ சுயநலம் கொண்ட சீனாவையோ நாங்கள் வேண்டாவோ நாடவோ தேவையில்லை. எங்கள் கலாச்சாரம் பண்பாடு அவர்களுக்கு புரியாது. ஏற்கனவே கொழும்பெல்லாம் கிளப்புகள், தியட்டர் எல்லாம் இந்தியப் படங்கள் எங்கள் கலாசாரத்தை சீரளிக்குது. இதை சேர்ந்து போராடோணும்.

அடுத்த முறை வரும்போதாவது, என்னோடு நாடு சுற்ற வருவோணும். கட்டாயம் வீட்டை கூப்பிட்டு பாயசம் தருவியல்ல ? அந்த உங்க ஊரு சூப் ஒண்டு சொல்லுவியே இறால், நண்டு எல்லாம் போட்டு - பாட்டெல்லாம் இருக்கெண்டுவாய், அதுவும் சாப்பிடோ ணும்.

நீ திரும்ப வருவாய் என்ற நம்பிக்கை உடன், 
பொதுவான கனவுகளுடன்,
நண்பன்,
சரக்க தனசூரிய.

பி.கு: அந்த தமிழ் பிகரு மட்டர் என்ன ஆச்சு ? விவரம் கிடைச்சுதா.

14 கருத்துகள்:

ஜேகே சொன்னது…

துணிஞ்சவனுக்கு பஞ்சு மெத்தையும் தூக்குமேடை .. நீ அடிச்சு விளையாடு மாப்ள!!

பை த பை, ஒரு டெக்னிகல் கோஷ்யன் ... வேற்றுமொழிகாரன் பேசுவதை தமிழில் எழுதும்போது என்ன வழக்கு பாவிப்பது? சுத்த தமிழா இல்ல பெத்த தமிழா?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நான் சிங்களத்தில் கொஞ்சம் வீக், அதால மொழிநடையில இருக்கும் குறையை ஒத்துக் கொள்ளுறன். அவர்கள் தமிழில் பேசுவது போல எழுதுவது எனக்கு கடினமான ஒன்று, நிற்க இது ஆங்கிலத்தை தமிழுக்கு மொழிபெயர்த்ததாக கொள்ளலாம் இல்லை.

ஜேகே சொன்னது…

ஆங்கிலத்தை மொழிபெயர்த்தாலும் என்ன மொழிநடை பாவிக்கவேண்டும் என்பது தான் என் கேள்வி :)

ஏ.எ.வாலிபன் சொன்னது…

விட மாட்டீங்களா, அது எழுத்தாளர் சௌகரியம், கொஞ்சம் சிங்கள வாசனை அடிக்க எழுதுவது சந்தர்ப்பத்துக்கு பொருந்தும். முடியாட்டி என்ன பண்ணுறது, அது தான் எழுத்தாளர் தனக்கு வராது எண்டு மூக்கால அழுறாரே.

ஜேகே சொன்னது…

எனக்கு "என்ர அம்மாளாச்சி" எழுதும்போது வெள்ளை காறி பேசுவதை தமிழில் எழுதவேண்டியிருந்தது .. குழம்பிவிட்டேன் .. அதால தான் கேட்கிறேன் .. உள்குத்து ஒன்றும் கிடையாது ;)

ஏ.எ.வாலிபன் சொன்னது…

உள் குத்து இருந்தாலும் ஒண்டுமில்லை, சும்மா கலகலப்பா பேசுறதே கைகலப்பா போயிடுமோ எண்டு பயமா இருக்கில்லை.

Kannan சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Mano சொன்னது…

சிங்களவர்களுடனான நட்பு நாம் அவர்களுடன் அரசியல் கதைக்கும் வரை மட்டுமே தொடரும். அதைப் பற்றிக் கதைத்தபிறகு நாங்க எப்பிடித்தான் பழகியிருந்தாலும் நம்மளை சந்தேகக் கண்கொண்டே பார்ப்பார்கள். அந்நிலை கடந்த இவ்வாறான நட்புகளை வெறும் கற்பனைக் கதைகளில் மட்டுமே காணக்கூடியதாக இருப்பதே இன்றுள்ள கசப்பான உண்மை..

எஸ் சக்திவேல் சொன்னது…

வெள்ளைக்காரர் கதைப்பது, ஒரு உதாரணம் (மட்டும்)

http://amuttu.net/viewArticle/getArticle/6

'அம்மையே, என்னுடைய சுண்டெலி மூளையில் இவையெல்லாம் புரிய தாமதமாகிறது. ஆனால் உங்கள் துறை என்ன செய்கிறது? புவியீர்ப்பை சுத்தம் செய்கிறதா அல்லது வீடு வீடாய் கொண்டுபோய் அதை இறக்குகிறதா? இது மிகப் பெரிய அநியாயமாகப் படவில்லையா?'

ஏ.எ.வாலிபன் சொன்னது…

சக்தி அந்தக் கதை நல்ல தொடுப்பு, நன்றி.

Gobi சொன்னது…

இந்த கதைக்கு உள்ளே ஏதாவது மறைமுக பொருள் இருக்குதா? அல்லது அரசியல் சாயம் இருக்குதா தெரியவில்லை. இடையிடையே கலவரங்கள் வந்தாலும் 1980 வரைக்கும் நாம் இப்படித்தானே இருந்தோம். இடையில் ஒரு 30 வருடம் பிரகளப்பட்டது ஒரு பொழுது போக்கிற்க்காகவா? அல்லது யாரோ ஒரு சிலரின் அரசியல் நகர்விற்க்காகவா? இல்லை, போரில் பிறந்து வளர்ந்த புது தலைமுறை நமக்கு பிரச்சினையின் அடி ஆழம் தெரியவில்லையா? அல்லது பிரச்சினையே வேண்டாம், வருமானத்தை தேடி சிலவழிக்க ஒரு வழி காட்டுங்கப்பா என்ற நிலைக்கு வந்து விட்டோமா (வெளிநாட்டுக்கு வந்து அதைதானே செய்யிறம், சம்பளத்தையோ/வருமானத்தையோ எடுக்கிறது, பிறகு அவ்வளத்தையும் எதையாவது ஒன்றில் செலவழித்து விடுவது, இதுவே ஒரு புதிய உலக வாழ்வியல் தத்துவமாக உருவாகி நிற்கிறது.,). அங்கை தொடக்கி அங்கே வர 200000 உயிர், பலகோடி பொருள் செலவு, இதை உருவாக்கினவங்க தொடக்கம், இன்னும் ஒரு ரவுண்டு போய்வர துடிக்கும் நாட்டில இருக்கிற நாடு கடந்த எல்லா அறிஞர்களும் இந்த உலக மகா கணக்கை ஒருக்கா விளங்கப்படுதுங்கப்பா?

Open Talk சொன்னது…

///எங்கள் எல்லோருக்கும் சமாதானமா சேர்ந்து வாழத்தான் ஆசைஇ ஆனா உங்கட தலைவர் மட்டும் வேணாம். அதை விட்டுட்டு ஒன்ன வாழலாம். இப்பதான் எல்லாம் செரி ஆகிட்டுதே//

76இல இந்தத் தலைவர உருவாக்கிவிட்டது யாரெண்டு ஒருக்கா கேட்டுச் சொல்லுறீங்களோ? எங்க தலைவர் வேணாம் சரி, ஆனா அவங்க தலைவர மட்டும் அவங்கக்கு வேணும் எண்டு அடம்பிடிக்கிறது எப்பிடி. நம்மள இப்பிடி நிலைமைக்கு ஆளாக்கின அவங்க தலைவங்க இன்னும் இருக்கிறாங்களே?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

கோபி, Open Talk உங்கள் இருவரது உணர்வுகளையும் மதிக்குறேன். உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் எனக்கு கிடைப்பின் கட்டாயமா பகிர்கிறேன்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

மனோ நீ சொன்ன கருத்துப் பட ஜேகே அண்மையில் ஒரு FB status போட்டிருக்கார், முடிஞ்சா பாரு.

கருத்துரையிடுக