புனைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 21, 2012

யாக்கைகள் கொண்டொரு யாகம் - II

முந்தய பாகம்
ஒரு தென்றல்க் காற்று
அந்த மரத்தின் ஒவ்வொரு இலைகயையும்
திருப்பிப் பார்த்ததுக்கொண்டிருந்தது.

ஒரு புது கொப்பியின்
எல்லா வரிகளிலும்
முத்து முத்தாக
கவிதை எழுத முயன்று கொண்டிருந்தான்.

நீ என்ன வேணும் எண்டாலும் எழுதிக்கொள்
என்ற அர்ப்பணிப்பில்
கொப்பியின் ரசனை தெரிந்தது.

கைகள் முயல்கள்
தலை எலி
நெஞ்சு பட்டம்
இடுப்பு சமுத்திரம்
கால்கள் வேர்கள்.

முயல்கள்
அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன
பயமா? பசியா?

எலி
திடீரெண்டு மறைவதுவும் பின் எழுவதுவும்
நிற்காமல் அலைந்துகொண்டிருந்தது.

சமுத்திரத்தில்
பௌர்ணமிகாலத்து அலை.

வேர்கள்
ஆழ ஊடுருவி
இறுகப் பற்றிக் கொண்டிருந்தன.

பட்டம்
சாய்வாகவும் குத்தாகவும்
காற்றின் போக்கில் பறந்து கொண்டிருந்தது.
தவறுகளும் செரி
தண்டனைகளும் செரி
அத்தனை இனிப்பு.

அறுபத்தி மூன்று கலைகளும்
ஒன்று சேர்ந்தது என்பதால்தான்,
பேரின்பம் கூட இதன் மீது பயம் கொள்கிறது.

சரணாகதியும் ஆட்கொள்ளலும்,
சரியை மார்க்கம்,
கிரியை மார்க்கம்,
யோக மார்க்கம்,
ஞான மார்க்கம்,
எல்லா மார்க்கத்தின் வழியும்
அததற்க்கான முக்திகளும்.
இதுவும் பேரின்பம் தான்.
ஆனால்
கடவுள் வேறு
பக்தன் வேறல்ல.

உலகில்
அதிகம் காமிக்கப் பட்டதும்
அதிகம் காமிக்கப் படாததும் – இதுதான்.

காமத்தின் பால்ப் பட்டு
அவர்கள் செய்ததெல்லாம்
காமத்துப்பாலிலும் சொல்லாதது.

முந்தய பாகம்

வியாழன், மே 31, 2012

யாக்கைகள் கொண்டொரு யாகம்.



நெற்றியின் மத்தியில்
நெரிகின்ற புருவங்களுக்கிடையில்
கனன்று எழுந்தது தீ.
காதின் மடல்களில்
ஊர்ந்தன ஓராயிரம் அக்கினி குஞ்சுகள்.

கன்னம் கதப்பில் வெந்தது.

வியர்வைக் குளியலிலும்
அடங்காத வெம்மை.

சுமார் முப்பது இலட்சம் வீரர்கள்,
பெரும் படை எடுப்பு,
கெதிப் பாச்சல்,
ஒரு வீரனையாவது
எதிரியின் எல்லைக்கப்பால் சேர்க்க.



நாளைக்கு என்று சேர்க்கும்
பெரும் சொத்து.

இயற்கை எல்லா உயிர்க்கும்
பிழைப்பு சொன்ன வழி.

இரண்டு உயரமுக்க மண்டலங்களில் இருந்தும்
புயல் வீசியது.
வெள்ளம் பெருக்கெடுத்தது -
ஓராயிரம் ஊற்றுக் கண்களில் இருந்து.
சட்டென்று பெய்தது மழை,
உள்ளே ஓடியது ஒரு மின்னல்.
கன்னங்களில் வெய்யில்.



என் கன்னிமையும் உன் கன்னிமையும்
களவாடிக் கொண்டோம்,
அனால் இது கற்பியல்
களவியல் அன்று.

ஒரு பெரும் பூக்குவியல்,
இரண்டு பூங்குன்று,
இரண்டு கருவண்டுகள்,
ஒரு மரமும் அதன் வேர்க்கான வழிகளும்.
பூக்களைத்தான் பறியுங்கள் என்ற அழைப்பும்.



குரங்கின் கைப் பூமாலை – சீ… சீ…
காட்டுப் பன்றியும் கத்தரிப்பூ தோட்டமும் – சீ… சீ…
இது ஒரு புரட்சி!
அங்கொரு தீண்டலும், இங்கொரு சிணுங்கலும்,
மேதினி எங்குமாய் ரதோற்சவம்,
அடக்கி வைத்ததெல்லாம்
பொறுக்காமல் வெடித்தது.
வெந்து தணிந்தது காடு - இது ஒரு புரட்சி.



முதிரை தாளம் போட்டது,
வாய்கள் மௌத் ஒர்கன்,
மூக்கு ஒத்து ஊதியது,
இன்னும் சில………..
பெயர் தெரியா…….
(வாத்தியங்கள் கருவிகள் )
இச்சை வற்றிவர
ஒரு இன்னிசைக் கச்சேரி.


அந்த தொழிற்ச்சாலையில்
இரண்டு தொழிலார்கள் மாத்திரம்.
ஏற்றுமதி இறக்குமதி.
உயிர்த் தொழிற்சாலை.


உயிர்த் தொழிற்சாலை.
ஏற்றுமதியும் அதுவே
இறக்குமதியும் அதுவே.
இருவரும் ஒரு முதலாளிக்கு
தேர்வு நடத்துகின்றனர்.



நான் என்னை உனக்கு காமிக்க,
நீ உன்னை எனக்கு காமிக்க, – இல்லை
நான் உன்னை உனக்கு காமிக்க,
நீ என்னை எனக்கு காமிக்க, -
இல்லை இரண்டுமாய் – அது காமம்.

சனி, மே 26, 2012

ஓட ஓட ஓட தூரம் கொறயலை....

எல்லாப் படங்களிலும்
எதோ ஒரு தருணம்
இறந்து தொங்கிக்கொண்டிருக்குறது.

அந்த புகைப் படத்தின் மூலையில்
நிறமிழந்த பகுதிக்குள் ஒளிந்திருக்கு
என்னைத் துரத்தும் இருட்டு.

ஆணியில் தொங்கும்
அந்த மரச் சட்டங்களுக்குப் பின்னால்
ஒரு சிலந்தி இல்லாத வலையில்
யாருக்காக என்று தெரியாமல் இறந்து கிடந்தது
ஒரு கட்டெறும்பு.

மரச்சட்டங்களுக்கிடையில்
ஒரு நீர்க்காட்டின் படம்.
இங்கே ஒரு நீர்க்காடு இருந்தது என்பதை
நிலவரிக் கோடுகள் சான்று சொன்னது.
நீர் வற்றி காடு ஒற்றை மரமாய்.



நீர்க்காட்டின் நடுவே நின்ற
அந்த ஒரே மரத்திற்கு எஞ்சிய சில கிளைகளில்
மிஞ்சி இருந்தன சில இலைகள்
எந்த சூரியனுக்காகவோ ?
மூலையில் நிறமிழந்து போனது
சூரியனாய்க் கூட இருக்கலாம்.

தலைவாருகிற போது
எதிரே நிலைக்கண்ணாடியில் ஒரு நீர்க்காடு.
என் கண்ணோரம் ஒரு அருவி,
அரிச்சந்திரன் கட்டின தாலி மாதிரி எனக்கு மட்டும் தெரியும்.
என் நெஞ்சோரம் ஒரு நெருஞ்சி,
சகுந்தலை மோதிரம் மாதிரி எனக்கு மட்டுமே நினைவிருந்தது.


அரசனாய் இருந்து வெட்டியானாய்,
வெட்டியானிலிருந்து மீண்டும் அரசனாய்.
ம்கூம் , கலி என்னை விட்ட பாடில்லை.
துரத்திக் கொண்டே இருந்தது அந்த அந்தகாரம்.




ஏடும்
எழுத்தாணியும்
சில கவிதைகளும்
நானும்;
கூடவே அந்த இருட்டும்.

வெள்ளி, மே 04, 2012

ஒரு போராளியின் கதை - II: தேரை நினைவு

முந்தய பாகம்
ஒரு போராளியின் கதை: பகுதி இரண்டு -தேரை நினைவு.




ஊருக்குப் போய்ப் பார்த்தா உற்றாரில் சிலரில்லை
வீட்டுக்கு போய்ப் பார்த்தா உத்தரத்தில் மீதியில்லை
பேருக்கு கூட கோயில் கோபுரத்தில் மிச்சமில்லை
ஆட்டுக்கு மட்டும் கொம்பென்னும் இளைக்கவில்லை


உற்றாரில்லாட்டியும் உறவென்னும் மிச்சமிருக்கு
உத்தரமில்லாட்டியும் நாய்க்கென்னும் சோறிருக்கு
கோபுரம் இல்லாட்டியும் குயில மணி ஓயவில்லை
கொம்பு இளைக்காத்தால வீம்பென்னும் போகவில்லை






காடு மேடு போன கால்கள் கன்னியை தேடுது
நித்திரை மறந்த கண்கள் அவள் சித்திரத்தை தேடுது
கடும்பாறை மனசு வெடிச்சு பூ ஒன்று பூத்தது - அவள்
நினைவில ஒன்று எந்தன் நினைவலையில் வந்தது


அவள் நினைவில ஒன்று எந்தன் நினைவலையில் வந்தது
கடும்பாறை மனசு வெடிச்சு பூ ஒன்று பூத்தது.


நினைவில் பூத்த பூ

தோகை மயிலவள் தொலையாமல் இருப்பாளோ? - இல்லை
போர் மேகம் வந்ததனால் தொலைவுக்குப் போனாளோ?
நாகை கருங்கூந்தல் நரையோடி இருக்குமோ?
கார்மேகம் என (என்னை) இன்னும் எண்ணி இருப்பாளோ?


தோகை மயிலவள் தொலையாமல் இருப்பாளோ?
கார்மேகம் என என்னை எண்ணி இருப்பாளோ?


பிள்ளைப் பராயம் கல்வியோடு போகவில்லை
விடலைப் பருவம் விரும்பியபடி அமையவில்லை
காளைப் பருவமது கடும் யுத்தம் புரிந்தபடி
கடைசிப் பருவம் அவள் கனவுகளில் கழியட்டும்.




தாய் மண்ணை தனயர் நாம் சுமந்திட்ட வரலாறு
பத்து மாதமல்ல பயிற்ரிரண்டு வருடங்களாய்: கரு வயிற்றில் - அந்தப்
புந்தி உடைத்து புகழ் கொண்டார் உலகமெல்லாம் - அந்தப்
பந்திக்குப் போகமால் குளவி செய்வீரோ அக்குருதி ?


பாரெல்லாம் பரந்தவனே - இந்தப்
போராளியின் கதை கேட்டாயா ?
கார் மேக வண்ணா - இனி
போராடா வருவாயா ?


கார் மேக வண்ணா - 
இனிப்போர் ஆட, வருவாயா ?

இனிப் போராடலாம்......


அடுத்த பாகத்தில் போராடலாம் இனி.

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

ஒரு போராளியின் கதை.


"நான் கவிதை எழுதி நிறைய நாளாயிட்டுது" எண்டு கடந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். இன்னமும் நான் ஏதும் அண்மையில் கவிதையாய் எழுதவில்லை. இது ஒரு பழங்கவிதை. எழுதி பல வருடங்கள் இருக்கும்.
இன்னமும் நான் எழுதியதில் முழுமையான கவிதை என்று நம்பும் ஒரு சிலவில் இது ஒன்று.


எனக்கு கவிதை என்பது
பிள்ளையார் பிடிக்கிற மாதிரி
பிள்ளையார் தவிர வேறு
எல்லார் மாதிரியும் வரும்
நான் எதை பிடிக்க முயன்றேன்
என்பதை சொல்லாத வரை
எல்லாம் கவிதை என்று
நம்ப சிலர் இருக்குறீர்கள் என்ற நபிக்கையுடன்.
இது ஒரு போராளியின் காதல் கதை!

திங்கள், ஏப்ரல் 23, 2012

காதலிக்க நேரமில்லை. III வேலை

முந்தய பாகம்

வேலை


கடைசியாகக்
காதலிக்கலாம் என்று தீர்மானித்தேன்
அதற்காக இவ்வளவு நாளும்
"காதல் வேண்டாம்" என்று தவம் கொண்டிருக்க வில்லை.



இனி காரட்டை சாப்பிட்டே ஆவது என்று முடிவெடுத்தேன்.
கவிதை எழுதி கன நாள் ஆயிட்டுது.
என்னைப் போலத்தான் என் நண்பன் ஒருவனும்.
இனிக காதலிப்பது என்று தீர்மானமாக இருக்குறான்.
அவன் வெள்ளிக்கிழமை தவறாது கோவிலுக்குப் போகிறான்.

என்னையும் வரச் சொல்வான்.
எனக்கும் விருப்பம் தான்.
அனால் வேலை அவசரத்தில் வெள்ளி மறந்துவிடும்.
அதற்குப் பிறகு சனி ஞாயிறு மச்சம்.
செவ்வாயும் போகலாம் தான்.
அதென்னமோ வெள்ளி விசேசம்தான்.

கவிதை எழுதி கன நாள் ஆயிட்டுது.

முற்றும்

எழுதியது: செப்டெம்பர் 2005 


மச்சம் என்பது கடலுணவுகளை குறிப்பினும் மாமிச உணவுகள் என்று பொதுமைப் படுத்துவது எங்கள் பேச்சு வழமை.

வியாழன், ஏப்ரல் 19, 2012

காதலிக்க நேரமில்லை. II கம்பஸ்

முந்தய பாகம்.
கடைசியாக
காதலிக்கலாம் என்று
தீர்மானித்தேன் !

அதற்காக
இவ்வளவுநாளும் காதல் வேண்டம் என்று
தவம் கொண்டிருக்கவில்லை.

இனி காதலை தேடி அலைந்தாவது
கைப்பற்ற தீர்மானித்தேன்.


இங்கு எல்லாமே புதிதாக இருந்தது,
புதிராகவும்....
எதுவும் செய்யக்கூடாது என்றார்கள்
நீயாச் செய்யோணும் எண்டார்கள்.
நாங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்ளவும் செய்தார்கள்.
நாங்கள் சொல்வதாலேயே மறுக்கவும் செய்தார்கள்.

இங்கு எல்லாமே புதிதாக இருந்தது,
புதிராகவும்....


கொஞ்சம் ஆசை
கொஞ்சம் அன்பு
கொஞ்சம் குறும்பு
கொஞ்சம் கண்டிப்புடன் சில அக்காமார்
அத்தோடு லிமிட் தெரிந்து நெருங்கும் சிங்கள நண்பிகள்
மற்றும் நண்பிகள்.

நான் தெரியும் வரைக்கும்
அதிகம் நனையாமல் இருந்தேன்.
தேன் சுவை அறியாக் கரண்டி.....


நான் தெரியும் வரைக்கும்
அதிகம் நனையாமல் இருந்தேன்.
நீங்கள் தான் "உதயா அண்ணாவா?" என்று ஒரு குயில் கூவும் வரை.

அந்தக் கடற்கரையில்
எந்த சுனாமியும்
அண்மையில் வந்ததை தெரியவில்லை.

அடிக்கடி முரண்பட்ட கல்யாணிக்கும்
இவளுக்கும்
அதிகம் வித்தியாசம் இருந்தது.



இவள் அழகு என்று சொல்லமுடியாது
அவளைப் போல்
இவள் அழகு என்று சொல்லமுடியாது
அனாலும் இவளிடம் ஒரு attraction இருந்தது.

இவளும் முரண்பட்டாள்,
அனால் எப்போதும் அல்ல.
ஏற்றும் கொண்டாள்.
சில சமயம் இதுவுமன்றி அதுவுமன்றி.

புரியவில்லை என்றாள்,
புரிந்து கொள்ள முயற்சிசெய்தாள்.
புரியவைத்தாள்.

ஆத்தாளை
அந்த அபிராமவல்லியை
அங்கமெல்லாம் பூத்தாளை,
என் புவி அடங்கக் காத்தாளை,
அங்குச பாசங்குசம் கரும்பும் அங்கை சேர்த்தாளை,
முக்கண்ணியை - முக்கனியை
தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையோ ?

எனக்கு
இந்த தேவாரத்தையும்
அபிராமவல்லியையும் பிடித்துப் போயிற்று.

அவலை பார்க்கிற போது
நினைக்கிற போது எனக்குள் ஒரு பாடல்.
அப்போ அச்சர சுத்தமாய் ஒலித்தாலும்
பிறகு இருந்து வார்த்தை தேடியும் கிடைக்க வில்லை.

ஓரிரு ஏகாந்த வேளையில்
எங்கள் வீட்டு தலை வாசலில் தொங்கும் சிப்பி சோகிகளை
அசைத்து தென்றல் என்னை அழைத்து செல்லும்.
மூடில் இருந்தால்
அந்த தென்னை மரத்துக் குயில்
அந்தப் பாடலைப் பாடும் போது
எடுத்த குறிப்புகளை ஒன்று திரட்டி வைத்திருந்தேன்.



டிரேனிங்கோடு அதுவும் காணமல் போனது.
Training இக்கு பிறகு
கலைவிழா தமிழருவிப் புத்தகத்தில்
"சிலுவைக்கு செய்வோம் சங்காபிடேகம் "
என்ற கவிதையை அபிராம்சன் என்பவன் அல்லது என்பவள் எழுதியிருந்தான்/ள்.
எனக்கு யாரென்று அறியும் ஆர்வம் நேரத்தோடு வற்றிற்று.
தேவையுமில்லை என்றாகியது.
பிறிதொருநாள் கண்டீனில் கண்டுகொண்டேன்.


எழுதியது: செப்டெம்பர் 2005
இனி வேலை....

வெள்ளி, மார்ச் 23, 2012

கருடா சவுக்கியமா ?

கருடா சவுக்கியமா ?
                                             இனி பிரச்சனை இல்லை....

அடேய் மச்சோ,

என்ன கதை ? எப்ப திரும்ப ஊருக்கு வாராய் ?
கடைசியா வரேக்கை என்னோட குருணாகல் வருவதா சொல்லி இருந்தாய், இப்பதான் பிரச்சனை முடிஞ்சுதே, பிறகு என்ன ?
திரும்பவும் அப்பா சொன்னார் அம்மா சொன்னார் எண்டு பிஸ்கற் குடுக்காத?
உன்னை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போய் தோசை சுட்டு தர நினைத்திருந்தேன், என்ட அம்மேவுக்கு தோசை சுட தெரியாது எண்டு நீ சொன்னாவாவது நம்புவாவா பார்ப்பம்.
மச்சி படிச்சுட்டு அங்கேயே செட் ஆகிடாதே, ஜார்ஜியாவில ஆளைப் பிடிச்சாலும் இங்க கூட்டிக்கொண்டு வந்துடு, நான் இங்கிலிசு படிக்கலாம் இல்லை ;).

எப்பவாவது ஒருநாள் நீ சொன்ன மாதிரி கெப்பட்டிப்பொல பற்றி படம் எடுத்து ஒஸ்கார் மாதிரி விருதுகள் வேண்டுவாய் எண்டு நம்புகிறேன். மறக்காம எனக்கு ஒரு வேசம் கொடு. உண்ட அபிமான ரஜனி படம் ஒண்டு பார்த்தனான் - ரோபோ - நல்ல முசுப்பாத்தி. எனக்கும் இப்ப அந்தாளிண்ட படங்கள் பிடிக்குது.

எங்கள் எல்லோருக்கும் சமாதானமா சேர்ந்து வாழத்தான் ஆசை, ஆனா உங்கட தலைவர் மட்டும் வேணாம். அதை விட்டுட்டு ஒன்னா வாழலாம். இப்பதான் எல்லாம் செரி ஆகிட்டுதே, இனி நாங்கள் ஒண்டா இருக்கலாம், நீ இங்கயும் நான் அங்கயும் வந்து போகலாம். முரளி மாதிரி ஒரு நல்ல ஸ்பின்னர் உங்க பக்கமிருந்து வேணும். நீ அடிக்கடி சொல்லுவியே MIT டோனி சொல்லுமாப் போல எங்கட நாட்டில இஞ்சினியர்ஸ் நிறையப் பேர், அதை செரியா பயன்படுத்தி நாட்டை முன்னேற்றணும் எண்டு. வா மச்சோ சேர்ந்து செய்யலாம்.

இப்போ முன்ன மாதிரி இல்லை, பிரச்சனை தீர்ந்துடிச்சு, சென்றி பொயின்ட் எல்லாம் எடுத்தாச்சு, கொழும்பில குண்டு வெடிக்காது, உங்க பக்கம் குண்டு போட மாட்டம். நாங்க உங்கட ஊருக்கு வரலாம், நல்லூர் கும்பிடலாம், சேர்ந்து கள்ளு குடிக்கலாம், நீ நம்ம மலைக்கு வரலாம், மானோடு விளையாடும் பௌத்த பிக்குகளையும், நீர் மட்டம் இறங்காத தாம்பாளம் இருக்கும் குகைகளில் விஷ்ணுவையும் புத்தரையும் பார்த்தபடி லயித்து இருக்கலாம். பொல் சம்பல், பொல் ரொட்டி, இடியாப்பம், சாம்பார் எல்லாம் சேர்ந்து சாப்பிடலாம்.

உங்க ஊருக்கு ரோட்டு போட்டிருக்குறம், புது புது கட்டடம் எல்லாம் கட்டுறம். ஆ இப்ப கரண்ட் கூட இருக்கே: நீ அடிக்கடி சொல்லுவியே, நீ பதினைந்து வயது வரை கரண்ட் இல்லாமல் படித்து எலக்றோனிக் இஞ்சினியர் ஆகினாய் எண்டு. இனி பிரச்சனை இல்லை.

இப்ப அண்மைக்காலமாக எங்கட நாட்டின் மீது எல்லா வெளி நாடுகளும் கண் வைக்குது. எங்களுக்குள் முண்டப் பாக்குது, ஆனா இப்பதான் நாங்க ஒண்டா சேர்ந்து முன்னேறனும். பிரச்சனை தீர்ந்த பிறகு மீண்டும் சேராமல் இருக்க பழசை இல்லாததும் போல்லாததுமாய் இட்டுக் கட்டி சொல்லுவானுகள். உலகமெல்லாம் அட்டூழியம் பண்ணும் அமெரிக்காவையோ , இல்லை எங்களை பகடை ஆக்கும் இந்தியாவையோ சுயநலம் கொண்ட சீனாவையோ நாங்கள் வேண்டாவோ நாடவோ தேவையில்லை. எங்கள் கலாச்சாரம் பண்பாடு அவர்களுக்கு புரியாது. ஏற்கனவே கொழும்பெல்லாம் கிளப்புகள், தியட்டர் எல்லாம் இந்தியப் படங்கள் எங்கள் கலாசாரத்தை சீரளிக்குது. இதை சேர்ந்து போராடோணும்.

அடுத்த முறை வரும்போதாவது, என்னோடு நாடு சுற்ற வருவோணும். கட்டாயம் வீட்டை கூப்பிட்டு பாயசம் தருவியல்ல ? அந்த உங்க ஊரு சூப் ஒண்டு சொல்லுவியே இறால், நண்டு எல்லாம் போட்டு - பாட்டெல்லாம் இருக்கெண்டுவாய், அதுவும் சாப்பிடோ ணும்.

நீ திரும்ப வருவாய் என்ற நம்பிக்கை உடன், 
பொதுவான கனவுகளுடன்,
நண்பன்,
சரக்க தனசூரிய.

பி.கு: அந்த தமிழ் பிகரு மட்டர் என்ன ஆச்சு ? விவரம் கிடைச்சுதா.

சனி, பிப்ரவரி 25, 2012

சொல்லொணா.....



வாழ்க்கை
என்னை விட்டு
தூரச்செல்வதாக உணர்கிறேன்...
என்னை சுற்றி வெறுமை சூழ்ந்திருந்தது ...
அந்த அறையில் எல்லாப் பொருட்களையும்
தின்று நின்றது வெறுமை!
என்னிலிருந்து ஓரடி தள்ளி
வட்டமாய்
சில பாராட்டுப் பூங்கொத்துக்கள்....
நிஜமலர்களும் காகித மலர்களும்.....
இடையில் இருந்த அந்த ஒற்றை முள்ளை
வெறித்தவாறு நான்.....

--------- --------- ---------
  

என் சந்நிதிக்கு பூக்கள் கொண்டு
வரும் பக்தர்கள் எல்லாம்
கூடவே கோரிக்கைகளும்
கொண்டு வருகிறார்கள்;

என் நுகர்வின்பமே மகிழ்ச்சி
என்று யாரும் பூக்களை அர்சிப்பதில்லை.
'முத்தனாதன்கள்' பரவாயில்லை,
மெய்ப்பொருள்1 ஆகா சாமானியன் நான்.

---------         ---------         ---------    

அக்கரைப் பச்சைகளுக்காய் 
நான் தேர்ந்தெடுத்த பாதைகளெல்லாம்
ஒற்றையடி.
இந்த ஒற்றையடியில்
அவ்வப்போ குறுக்கே கடந்து போகும்
நெடுஞ்சாலைகள்
நடை பாதைகளில்லாமல்.

சந்திக்கு சந்தி
முச்சந்தி முரளிகளும்,
சோக்கல்லோ சண்முகங்களும்;
உலகின் எல்லா சித்தாந்தங்கள் பற்றிய கிண்டல்களுடன் முரளிகளும்
உலகின் எல்லாக் கேள்விகளுக்குமான பதில்களுடன் சண்முகங்களும்.

எனக்கும்,
எப்பவும் எதோ ஒரு வழி சொல்கிறார்கள்,
நான் வேண்டினாலும் வேண்டாவிட்டாலும்.

அந்த சந்தியை தாண்டாமல் அவர்கள் அங்கேயே.
நான் மட்டும் நகர்ந்த படி.
முன்னேயோ... பின்னேயோ...
நான் மட்டும் நகர்ந்த படி.


செவ்வாய், ஜனவரி 24, 2012

புத்தனின் ஊரில் புத்தர்கள்...

கண்ணிமைக்காது அந்த ஊர்வலத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆட்டம், ஆட்டம், ஒருகால் நிலத்தூன்றி ஒரு கால் தூக்கி அரை வட்டமாக கைகள் தாங்கி சுழன்று சுழன்று ஆட்டம்...
                           டண், டண், டண் டண,ணக்கட
                           டண், டண், டண் டண,ணக்கட
                           டண், டண், டண் டண,ணக்கட
                           டண், டண், டண் டண,ணக்கட

இனிமை என்று சொல்ல முடியாவிட்டாலும் அதில் ஓர் லயம் இருந்தது. அந்த ஒலி பழகிப் போனவங்களுக்கு ஒரு துக்கம் கவ்வியது. ஊர்வலத்தின் நீளமும் நிரப்பும் பார்த்தால் அதன் காரணத்தர் ஒரு முக்கியஸ்த்தர் என்று அனுமானிக்கலாம். பச்சையும் வெள்ளயுமாக கொடி பிடித்த கனவான்கள் கூட்டம் அந்த ஊர்வலத்தை முன் வகித்தது. பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ஆட்டக்காரர், தேவாரம், திருவாசகம், குளிர்பானம், அரிசி, அம்பட்டன், மனைவி, மக்கள், அந்தப் பிணம்.

எனக்கும் அந்த இறப்புக்கும் என்ன தொடர்பு. ஒரு முறை ஆழ மூச்சு விட்டான். அரச மரத்து இலைகள் அந்த மூச்சின் வலுவிலோ, தான் பழுப்பின் மூப்பிலோ, சந்தர்பவசமாகவோ சலசலத்தன.ஒரு குருவி அங்கிருந்து சிறகடிக்க காகம் ஒன்று கிளை கொண்டது. எனக்கும் அந்த சாவுக்கும் எந்த 'நேரடித்தொடர்பும்' இல்லை எனினும் அந்த சிறுவனின் மழித்த தலை ஒரு பந்தாகி வயிற்றுக்கும் வாயுக்கும் இடையில் கிளித்தட்டு விளையாடியது.மெல்லிதாக வியர்த்தது. வியர்வையின் வாசம், நாய் மூத்திரம் இருந்து எல்லை வகுப்பதை ஞாபகப் படித்தியது. அந்த சிந்தனையின் அருவருப்பை சகியாது பிணத்தை நோக்கினேன்.

இதோ இன்று பிணம் என்று சொல்லப்படுகிற இது, இவனாக இருந்த போது என்னோடு உறவாடியவன். என்னைப் போல் அரச போகம், அதிகாரம் ஆதிக்கம், ஆரவாரம்..... இன்று அடக்கம். அடக்கம்... என்னைப் போல் ? என்னை நானே கேட்டுக்கொண்டேன். ஒரு கரையாக கோடிழுத்து உதடு சிரித்தது. நமட்டு சிரிப்பா? நக்கல் சிரிப்பா ? ஒரு வேளை ஞானச்சிரிப்பா ?

பட பட வென வெடிச்சத்தம்.

எவ்வளவு ஆரவாரம், ஆணவம், ஆர்ப்பாட்டமாக வெடிக்கிறது.
வெடித்த பின்?
...........
............
குப்பை ! மண்ணோடு மக்கல், கைப்பிடிச் சாம்பல். நானும் வெடியும் ஒன்றா ? திரும்பவும் என்னை கேட்டுக் கொண்டேன். இப்போ சிரிப்பு வரவில்லை.என்னை நான் வேடியோடு ஒப்பிட்டதில் எனக்கு என்னை பிடிக்க வில்லை. அவனை சொல்லலாம் இப்போ எரியூட்டப் படப் போகிறானே அவனை சொல்லலாம்.

பிரார்த்தனையில் இருந்த போது உலோகக் கூர் முனை நெஞ்சு பிளக்க இறந்து போனான். நானா காரணம் ? நானா தாக்கினேன் ? நானா தாக்கியவனை எவினேன் ?

ஏன் எனக்கு மீள மீள இந்தக் கேள்வி - நானா காரணம் ?

சட்டென்று அந்த மொட்டைத்தலை சிறுவன் கண் முன்னே தோன்றினான். தலை பெரிதாகி என்னை நிரப்பி இறுக்குவது போல இருந்தது பின் மறைந்து போனது.

நேற்று, அந்த அரச விழாவில் ஏதோ சொன்னார்களே.... ஆ...
"செய்பவனும் நான் செயலும் நான் அதன் பயனும் நான்" என்றான் கண்ணன்.
அப்போ நான் எப்படிக் காரணமாவேன்.
ஒரு காய்ந்து போன அரசமிலை
காற்றில் நடமாடியது,
மிதந்தது,
ஒய்யாரமாய் ஊஞ்சலாடியது,
கொஞ்சம் முன் சென்று பின் காட்டியது,
சட்டென அம்பாகி 'நோக்கி நகர்ந்தது',
வளையம் வளையமாய் சுழன்று
பின் சட்டென நிலத்தில் சரண் புகுந்தது.

அரசமிலைக்கு நிலம் சரணா? சமாதியா ?
என் கற்பனை செரியா ?
கேள்விகள்.... கேள்விகள்.....கேள்விகள்......

அரசமிலையில் இறந்தவன் முகம் தெரிந்தது. மீண்டும் தனது வாழ்க்கையையோ மனித வாழ்க்கையையோ ஒப்பிட விருப்பமில்லை - தான் ஒப்பிடப் படாதது பற்றி எந்த பிரக்ஞையும் இன்றி சருகாகிக் கொண்டிருந்தது அந்த அரசமிலை.

போதும் என்று தோன்றியது, தலை விண்ணென்றது.

ஆமாம் புத்தன் எத்தனையாவது சாவில் ஞானியானான் ?
ஞானம் தந்த சாவுக்கு முன் அவன் சாவே 'தரிசித்தது' இல்லையா ?
அல்லது அது தான் அவன் உற்றுக் கவனித்த முதல் சாவா ?
அரச மரத்திற்கும் ஞானத்திற்கும் என்ன தொடர்பிருக்கும் ?
கேள்விகள்.... கேள்விகள்.....கேள்விகள்...... 
காற்றில் பறக்கிற பட்டத்தை வால் துரத்துகிற மாதிரி
மீண்டும் மீண்டும்
கேள்விகள்.... கேள்விகள்.....கேள்விகள்...... 

அரை வயித்தியன் ஆவதற்கே ஆயிரம் பேரைக் கொல்ல வேண்டும் என்றால் ஞானியாவதர்க்கு.... எனக்கு கணக்கு அவளவா வராதே....

நான் ஞானியாக வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

ஊர்வலம் கண்ணுக்கெட்டிய வரைக்கும் தெரியவில்லை, வீதி சாதாரணமாக மிகச் சாதாரணமாக ஆகியிருந்தது - கடந்த சாவின் அடையாளம் ஏதும் தெரியவேயில்லை.

எதோ புரிந்தாற் போல் இருந்தது - எதோ புரிந்தாற் போல் சிரித்துக் கொண்டேன். அரச மரம் அச்சிரிப்பிற்க்காய் சில பழுத்த இலைகளை உதிர்த்தது.

ஒரு முக்கிய செய்தி, தலைப்பு செய்தி ஆகி, மறு பக்கம் பார்க்க, ரண்டாம் பக்கம் ஆகி முப்பதாம் நாள் நினைவு....

விழுந்த பழுத இலைக்குப்பைகளை பொறுக்கி எடுத்துப் போட்டு விட்டு மீண்டும் அண்ணாந்து மரம் பார்த்தான் அந்த வேலையாள்.

அதைப் பார்த்ததும் கண் காத்து வாய் எல்லாம் பிரிந்து திறந்து சிரித்தேன் நான்.

உளவுத்துறை அந்த வேலையாள் அன்றிரவு தான் மனைவியிடம் கேட்டதாகச் சொன்னது
"ஏண்டி அலரி மரத்துக்கு கீழ நிறைய நேரம் நிண்டா விசராக்குமே ?"


இந்த படங்களுக்கும் இந்தக்கதைக்கும் எந்த தொடர்புமில்லை...
- யாவும் கற்பனை

புதன், நவம்பர் 23, 2011

தெய்வத்தால் ஆகாது .......

வரலாற்றில் இருந்து தான் கதைகள் பிறக்கின்றன.
வரலாற்றின் நிஜக் கருவில் இருந்து அவரவர் நியாயப் படுத்தலில் தான் கதைகள் பிறக்கின்றன / கட்டப்படுகின்றன.

"கதை கதை யாம் காரணமாம் , காரணத்தின் தோரணமாம்" எண்டு அமமா (அம்மம்மா) சொன்னது ஆழ்ந்த அர்த்ததுடனே. தோரணமாக காரணங்கள் கட்டப்பட்டுள்ளது எங்கள் கதைகளிலெலாம்.

இந்த கதைக்கு எந்த வரலாறு மூலம் எண்டு தெரியாது , ஆனா மறுபடி மறுபடி இது தான் எங்கள் வரலாறாக இருந்திருக்கிறது.

எங்களை அரக்கர்கள் எண்டினம்,
நாங்கள் கருப்பாக தடியாக இருப்பதாலா ,
அல்லது,
தோற்றுப் போனதாலா;
அல்லது,
வெல்ல வழியற்றுப் போனதாலா;
அல்லது,
கேக்க நாதியில்லாமல் போனதாலா;
அல்லது,
எங்கள் குணமே அரக்க குணம் தானா;
அல்லது,
நாங்கள் குறைவாக பெற்றுக் கொண்டதாலா;
தெரியவில்லை !

நாங்கள்
அரக்கர் எண்டு சொல்லித்தான் 
அமுதம் வஞ்சிக்கப் பட்டது.

அவர்கள்
தேவர்கள் எண்டு சொல்லித்தான்
அவர்களுக்கு தரப்பட்டது.

அமுதத்தை இழந்ததால் அரக்கர்களா ?
இல்லை
அரக்கர் என்டதால் இழந்தமா ?
தெரியாது!

தெய்வத்தால் ஆகாது ,
எனினும்;
முயற்சி மெய் வருந்த,
கூலி தரும்.
-என்பர் / எண்டம் (எண்டு சொன்னம்)
நாங்கள்
மெய் வருந்தி
செய்த முயற்சிக்கு
கூலி விசம்.

தெரிந்தே தந்தான் 
திருமால்
தலையை எங்களுக்கு.

கொள்ளாமல் 
விண்டாள் விடம்
வாசுகி எங்கள் மீது.

"அள்ளி முடிந்தவன் 
ஆபத்தானவன்; அத்து மீறினவன்.
அதை அவிழ்த்து விட்டவன் 
ஆபத்பண்டவன்"
என்ட கதையாய்.....

நம்பியாரை மயக்க
ஜெயமாலினியை ஆட வைத்தனர்.
பிறகு சில்க் சிமிதா
கடைசியில்
அம்பிகா , ராதா , மீனா என 
கதா நாயகிகள் கூட
வரிசை கட்டினர்.

ஒரு வகையில் 
விபசாரம் செய்துதான்
நாயகர்கள்
தங்கள்
விஸ்தீரணம்
காட்டினர்.

அன்றைக்கும் அப்படித்தான்,
பாற்கடலில் இருந்து
ஒரு பௌர்ணமி வந்தது
- அலைமகள்
எம் கனவை
கலை மகள்.

அமுதம் அவர்களுக்கு;
சிவன் உண்டது போக
ஆலகாலம் எங்களுக்கு;
அலை மகள் தனக்கு
என பங்கு பிரித்தான்
பரந்தாமன்.

அமுத வரிசையில்
அலைமகள் ஆசை காட்டி
பொறுமை 
சாந்தி
சமாதானம்
எண்டு பேசி
பின் நிறுத்தினாள்.

திருமால் தானே
தருவார்
எண்டுநம்பினம்.
அவர்களுக்கே 
கொடுத்து தீர்த்தான்
அரி.

தெய்வத்தால் ஆகாது.
எனினும்,
மெய் வருத்தி செய்த முயற்சி ?

புதன், நவம்பர் 16, 2011

ஆசை + மோகம் = மடம் , இன்னும் தொண்ணூறு நாட்களுக்கு மட்டுமே

ஆசை + மோகம் = மடம் 
             "இன்னும் தொண்ணூறு நாட்களுக்கு மட்டுமே"

மயக்கம் என்ன.....
தோய்ப்பதற்கு எடுத்த சட்டை collor, கை என்பவற்றில் இருந்து body-spray உடன் வியர்வையும் சேர்ந்து வரும் வாசம் கிறங்கடித்தது. அவனுக்கு அடிக்கடி தோய்ப்பது பிடிக்காது, ஆனா அவளுக்கு புதுத் துணி கூட ஒருமுறை அலம்பி அணிவதே பழக்கம்.

கொடியில் சுடிதாருக்கு பக்கத்தில் காய்ந்து கொண்டிருக்கும் டெனிம், ஆறு மணி எப்ப வரும் என்று ஏங்க வைத்தது, தனக்கென ஒருத்தன் என்பது மனதுக்கு நிறைவான உணர்வு, வார்த்தைகளுக்குள் அடங்காத உணர்ச்சி - நல்ல குளிர் காலத்து கம்பளி மாதிரி, அவன் வர இன்னும் பல மணியாகும் என்பது ஏக்கம் + வாட்டம் - அதுவும் சுகம்தான் குளிர் காலத்தில் கோப்பி குடிக்கிற மாதிரி, அப்ப பின்நேரம் அவன் வந்தவுடன் வரும் உணர்வை என்ன வேண்டு சொல்லலாம் ? ஏக்கம் + வாட்டம்: சூடான கோப்பி கப் கையை சுட சுட சூடு தாளாமல் கை மேலும் கப்பை இறுக்குற மாதிரி, அந்தி வேளை அவன் வருகை+ ....(வயது வந்தவர்கள் புரிந்து கொள்ள) அது குளிர் காலத்து கோப்பி, உள்ளிறங்கி உடல் கலக்கும் வரை அதன் சூடு தெரியும்.

அவன்ட computer மேசை அலங்கோலமா புத்தகங்களும், பேப்பர்களும் சிடி களும் இறைந்திருந்தது, ஒவ்வொன்றா எடுத்து அடுக்கி வைப்பது பிடித்திருந்தது. அவள் அப்படி பழக்கப் பட்டவள் இல்லை. வீட்டில் இதுவரை இப்படி மற்றவர் வேலை செய்ததில்லை, அவள் மேசை நேர்த்தியாகத்தான் எப்பவும் இருக்கும். ஆனா அவன் அலங்கோலமாக வைத்திருக்கும் முறை ரசனை, அது பற்றி பின்நேரம் வந்தவுடன் சண்டை போட வேணும், சொன்னாலும் அவன் ஒழுங்காகப் போவதில்லை, கேப்பான், சில சமயம் கோபமாக நான் அப்படித்தான் எண்டு முரண்டு பிடிப்பான், அடுக்கி வச்சதுக்கு நன்றி சொல்லுவான் - அவன் நன்றி சொல்லும் விதமே தனி, நேற்று குழம்புக்கு சொன்ன நன்றி கன்னங்களில் இன்னும் எரியுது - தாடி மீசையை வழித்தெறி ஏண்டா கேக்குறானா. அந்த நினைவில் அதரங்கள் பரபரத்தன. கட்டாயம் கொழுவ வேணும் - இண்டைக்கு மேசை அடுக்கி வைக்குறது பற்றி.

அண்டைக்கு உப்புடித்தான் ஜே.கே இண்ட கதை வாசி எண்டு நச்சரித்து எடுத்திட்டான் , எனக்கு நிறைய நேரங்களில் அவன் வாசிக்கிற விசயங்கள் விளங்காது, அவனே விளங்கப் படுத்துவான் ஆனாலும் விளங்காது; அவனும் பேச்சும், தாடையும், தாடையை போர்த்தி இருக்கும் தாடியும் ரசிப்பதில், அவன் சொல்வதை கவனிப்பதில்லை. அவனும் எழுதுவான், மிக அரிதாய், ஆனா அவனுக்கு வாசிக்கிறது தான் பிடிக்கும் எண்டுவான். எழுதிப் போட்டு, யாரு வாசிச்சவை யாரு கொமென்ட் போட்டவை எண்டு கொஞ்சநாளா தவம் கிடப்பான் - ஆனா அதை காட்டிக்கொள்ள அவனுக்கு வெக்கம். ஆனா நிறைய வாசிப்பான் - வாசிச்சதில் ரசிச்சதை மற்றவர்களுக்கு விதவிதமாய் -வற்புறுத்தலாய் - பகிர்வது அவன் குணம்.

அண்டைக்கு உப்புடித்தான் ஜே.கே இண்ட கதை வாசி எண்டு நச்சரித்து எடுத்திட்டான் - "உஸ் இது கடவுள்கள் துயிலும் தேசம் " எண்ட பெயரை கேட்டவுடன் எனக்கு விளங்கேல்லை , இது கடவுள்கள் துயிலும் தேசம் எண்டா சொர்க்கமோ?  இல்லை, இந்த ஊரில சாமி எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கு எண்டு அர்த்தமோ?. உஷ் எண்டு எதுக்கு சொல்லோணும் ? எழுப்பிடாதேங்கோ, இங்கை ஆழத்துயில் கொள்ளும் எல்லாரும் கடவுள்கள் என்டர்த்தமோ ? சுடலை பற்றி இருக்குமோ ? துயிலும் இல்லம் ? குழந்தைகள் காப்பகம் ? அவன் இப்படித்தான் பல மாதிரி கேள்வி கேப்பான் - ஏன் இப்படி குழம்போணும் எண்டு எனக்கு விளங்கிறேல்லை. சும்மா வாசிச்சுட்டு போறதுக்கு இவளவு ஆர்ப்பாட்டம் - அவன் அப்படித்தான் - அது அவளுக்கு பிடிச்சிருந்தது.

உப்பு தூக்கலாக போட்டு, நெயில தாளிச்சு துவரம்பருப்பு வறை, அவன் தான் சொல்லித் தந்தான், இவளுக்கு முந்தி அறிமுகமில்லை. ரசம் ஒருபக்கம் கொதிச்சுக் கொண்டிருந்தது , தாளிக்குறது ஒரு ரசனை அனுபவம் எண்டுவான், கருவேப்பிலை, கடுகு, சீரகத்துடன் பொரியும் போது வரும் சத்தமும், மணமும் காங்கேசன் வீதிகளில் பயணிக்க வைக்கும் எண்டுவான் இப்படித்தான் கருவேப்பிலைக்கும் காங்கேசன் வீதிக்கும் என்ன லிங்க் எண்டு தெரியேல்லை கேக்க வேணும் , அதுக்கொரு கதை வச்சிருப்பான்.

சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் சுப்பர் சிங்கர் பாத்திட்டு படுத்திடலாம். அந்த கதையை வாசிக்கலாம்....

"கண்ணம்மா.....",
 அவளுக்கும் ஆசையா இருந்தது , தனக்கொரு குழந்தை எண்ட எண்ணம் அவள் கன்னக் கதுப்புகளை சிவக்க வைச்சு , காதுகளை சூடேற்றியது. கண்கள் சொருக ஆறு மணிக்கனவுகளோடு தூங்கப் போனாள். அவன் வந்து கதை சொல்லுவான். அதை கேக்கலாம் - அது ஒரு சுகம் - சில வேளை சினப்பான், நீயா தேடி வாசி - அப்பத்தான் அதில ஒரு சுகமிருக்கும், கூடவே ரசனை வளரும், அது படைப்பாளிக்கான கௌரவம் என்பான். இவளுக்கு அதில் ஆர்வமில்லை, அவன் வாசித்தால் கேக்கலாம், கேக்க நல்லா இருக்கும் அவன் வாசிப்பு - நாடகம் மாதிரி - வாசிப்பே அபிநயங்களோடு. அதை அவள் சொன்னதில்லை, எல்லாத்தையும் தனக்கு வாசிச்சு காட்டுவதில்லை எண்ட குறை அவளுக்குண்டு, அவளா எதையும் தேடி வாசித்து பகிர்வதில்லை எண்ட குறை அவனுக்குண்டு. அவனுக்கு பிள்ளையார் பிடிக்கும் எண்டு ஈ-மெயிலில் வரும் பிள்ளயார்களை அவனுக்கு அனுப்புவாள், கூடவே உணவுப் பழக்க வழக்கம் பற்றிய ஈ-மெயில்கள் - அவன் அதை தேடி வாசிப்பதாக ஏற்றுக்கொள்வதே இல்லை. அதற்க்கு இன்னமும் கோபப் படுவான். அனால் அது அவனுக்கு சந்தோசம் தரும் எண்டு அவள் நினைத்திருந்தாள். தனக்காக அனுப்புகிறாள் எண்டு அவனுக்கு ஒரு கரிசனை உண்டு எண்டு தான் நினைக்குறன். பின்னேரம் எழும்பி பில் கட்டவேணும், பகோடா சுடுவம் - அவனுக்கு அது பிடிக்கும் எண்டு நினைத்துக்கொண்டாள்.

மீண்டும் ஆறுமணி நினைவில் வர, ஒரு நகைப்பு வாயுக்குள் வந்து கடிவாயில் கொப்பளித்தது , அதை விழுங்கிக்கொண்டாள். மறக்காமல் ஜே.கே இண்ட கதையை தண்ட facebook இல் பகிர வேணும் எண்டு இடையில் எப்பவோ நினைத்தாள், அனால் தூக்கம் அவளை ஆட் கொண்டதில் பல சிந்தனைகள் அப்படியே முடங்கிப் போயின - பகோடா மட்டும் நினைவில் இருந்தது.

சனி, நவம்பர் 05, 2011

கனவில் வந்த கவுண்டமணி


டேய் தேங்காய் தலையா எழும்படா டேய்... பாருங்க மகா ஜனங்களே இரவிரவா facebook இல பம்பலடிச்சிட்டு எதோ ரிசேர்ச் பேப்பர் படிச்ச மாதிரி நித்திரை கொள்ளுறன் - டேய் எழும்படா டேய். 

வெளியில நாப்பது டிகிரி பெரநைட்டு, இன்னும் மத்தியான பன்னிரண்டு ஆகேல்லை - போத்திண்டு படுங்க...

மவனே நீ இப்படி சொன்ன எழும்ப மாட்டாய், உனக்கு வேற இருக்கடி... உண்ட பூசை முகம் அட சீ ஆசை முகம் மறந்துபோன நோட்டுக்கு யாரோ கொமென்ட் போட்டிருக்கிரானுக டேய் எலும்பு எழும்பு...

அரக்கப் பரக்க எழும்பி யாரு எண்டு பாத்தா... கவுண்ட மணி... என்ன அண்ணை நீங்களே தானா...

எண்டா உண்ட்ட ரேஞ்சுக்கு பின்ன கொண்டை போட்ட ராய் - கொண்டலிசா ராயா வருவாங்க.. நானே நானேதான்.....   

அண்ணை யாரண்ணை கொமென்ட் போட்டது...அதே பழைய வெட்டி குரூப்பா ? இல்லை புதுசா யாரும் புள்ளைங்க ?

எண்டா டகால்டி மண்டையா... உனக்கே இது நியாயமாடா ? முகம் மறந்து போச்சு மூக்கு மறந்து போச்சு எண்டு நீ விடுற பீலாவுக்கு இந்தெல்லாம் ரொம்ப ஓவர்தான்... மறதி எண்டா வல்லாரை சாப்பிடு யோகா பண்ணு அதை விட்டுட்டு மறந்து போயிட்டனண்டு reminder க்கு ஒரு நோட்டா...

ஒரு விளம்பரம்தான்....கலைக்கு ஒரு விளம்பரம் முக்கியம் அண்ணை ...

டேய் உன்னை எல்லாம் கலைஞன் எண்டு யாரடா சொன்னது... நீயே அறிவிச்சுடுறதா.... அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணும் ராஜா... பொழுது போக்கா எழுதிற நீயும் பொழுது புலர எழுதிற அவைகளும் ஒண்டா... அடேய் நூடில்சு, கழுதைக்கும் நாலு காலு யானைக்கும் நாலு காலு ரெண்டும் ஒண்டா... status update இலையே நீ சிலப்பதிகாரம் எழுதலாம் எண்டு நினைக்கிறாய்... கலைஞன் எண்டா மக்கள் ரசிக்கோணும்....

அண்ணை சும்மா தெரியாம பேசாதீங்க... என்ட நோட்டுகளையும் நாலு பேர் லைக் பண்ணுனம்...

ஆமா பண்ணுனம்.... எதுக்கு நீ குடுக்குற ரோதனயில.... நோட்டை எழுதினாமா publish பண்ணினாமா எண்டு விடுறியா.. இல்லையே....நீ இருக்கிற குறுப்பில எல்லாம் ஷேர் பண்ணுறது... அதுவும் வொர்க் அவுட் ஆகேலேண்டா டாக் பண்ணி விடுறாய்... மவனே அதோட விட்டியா... பிரைவட் massege இல அனுப்பிறாய்... அதையும் கவனிக்காட்டி... மட்டவண்ட சிவரில போடுறது...  கோமென்டில கோத்து விடுறது... உண்ட டகால்டி எல்லாம் எனக்கு தெரியும்டா டேய்....

அப்பதான் எங்கட போஸ்ட் முன்னுக்கு வரும் அண்ணை facebook la அப்பிடி ஒரு அல்கோரிதம் வைச்சிருக்கிரானுகள்....

இப்பிடித்தாண்டா தொடங்குவியல், பிறகு உண்ட போஸ்டை நீயே லைக் பண்ணுறது, உண்ட கொமெண்ட நீயே லைக் பண்ணுறது, எண்டு கடசில steve-jibs R.I.P இக்கு கூட லைக் போட்டவனுகள் தெரியுமில்லை....

அண்ணை அவனுகளையும் என்னையும் ஒன்டெண்டு சொல்லதேங்கோ....நாங்கெல்லாம் ஒரு காலத்துல பெரிய விவாதிகள்.... எங்களுக்கெண்டு ஒரு followers இருக்கினம்...

வியாதிண்டு சொல்லு ஒத்துக்கிறன்... ஈரப்பிலாக்காய் தலையா, டிபேட் பண்ணினா ஏ.ல். பாஸ் பண்ணலாம் எண்டு சொன்னவன் தானே நீ... தமிழ் வளக்கவோ இல்லை தலைமைத்துவம் வழக்கவோ டிபேட் பண்ணி இருப்பை எண்டு பாத்தா, சிமிக்கியப் பாத்திண்டு இருந்திருக்கிறாய்... இதுக்கு உனக்கு followers வேறயா ... யார்ரா அந்த கொத்து ரொட்டி மண்டயன் தங்கட காலத்தில சில பெண் விவாத அணிகள்தான் இருந்துது எண்டு கவலைப் படுறான் உண்ட follower ஆத்தானிருக்கும்... எண்டா டீ இல சுகர் இல்லை என்ட மாதிரி டிபேட் இல figure இல்லை எண்டு கவலைப்படுறான்....  டிபேட் இல fire இல்லை எண்டு கவலைப்படாமல்.... 

அண்ணை அரசியலில இதெல்லாம் சகஜமண்ணை....

டேய் என்ட டயலாக் எனக்கேவா... ஒரு பைல் மட்டை, நாலு பென்சில் மாதிரி இருக்கிற உனக்கே அரசியலா, டேய் உடம்பு தாங்காதுடா..... அடேய் வாழ்க்கையின்னா ஒரு என்டர்டெயின்மென்ட், என்கேஜ்மென்ட், ஒய்ல்மென்ட் இதெல்லாம் தேவைதான் ஆனா உனக்கு கவர்னமென்ட் ரேஞ்சுக்கு ஓவர் பில்ட் அப்பா இருக்கே.... அது செரி அந்த ஆசை முகம் உண்மையா இல்லை உட்டாலக்கடியா ?

ஹிஹி... அது கம்பனி சீக்கிறட் வெளியில சொல்லப் படாது....

டேய் பெரிய மைக்ரோ சாப்ட்டு...இந்த டகால்டி எல்லாம் வேணாம் பம்மாம சொல்லு...யாரந்த காந்தக் கண்ணழகி?

முழுசா பொய் எண்டு சொல்லேலாது... ஆனா உண்மையில்லை...

ஏண்டா நீ திருந்தவே மாட்டியா ? அது செரி உலகத்திலேயே கேள்வி கேக்கிறத்துக்கு மனுவல் போட்ட கேப்பமாரி நீ தானே...ஒவொரு பகுதியா - காது, கை கால், கண் எண்டு கடைசியா முகத்துக்கு வருவாயில்லைஅப்ப இருக்குடி உனக்கு ஆப்பு...
டேய் இப்ப நாங்கள் கதைச்சதைக் கூட நீ போஸ்ட் பண்ணுவாய் எண்டு தெரியும் ஆனா மவனே உள்ளதை உள்ள படியே போடவேணும்.. ஏதாவது மாத்தி இருந்தாய் குழாயை வச்சு குடாஞ்சிடுவன்.....அப்படியே இதையும் சொல்லிடு 

மகா ஜனங்களே நோட்ட வாசிச்சா
சும்மா skip பண்ண நினைக்கிறவை லைக் பண்ணுங்கோ,
லைக் பண்ண நினைக்கிறவை share பண்ணுங்கோ ,
ஷேர் பண்ண நினைக்கிறவை ஒரு கோமண்ட போடுங்கோ... அப்பத்தான் கலை வளரும் 


the notes mentioned in this post are:
ஆசை முகம் மறந்து போச்சே....I: 
ஆசை முகம் மறந்து போச்சே....II: 
என்னிடம் கேட்கக்கூடாத கேள்விகள்....: 

திங்கள், அக்டோபர் 24, 2011

என்னிடம் கேட்கக்கூடாத கேள்விகள்....



இந்த பீல்டில் ஸ்கோப் இருக்கா ?
அடிங் மவனே நான் என்ன சோசியக்காரனா ? நல்ல லென்சு போட்டு பாரு ஸ்கோப் கிடைச்சாலும் கிடக்கும் (இந்தக் கேள்வி கேட்ட பிறகு உன்னில இருந்த ஸ்கோப் போயுட்டுது)
எப்ப முடியுது ?
கலியாணத்தில இருந்து கல்லூரி, கக்கூசு வரைக்கும் இதே கேள்விதான், அடப் போங்க போஸ் போரடிக்குது...
நாயகன் பாணியில், அவனுகளை முடிக்க சொல்லு நான் முடிக்கிறான்....

நூறு எப்பிசோடு அப்புறம் ரீகப் அப்புறம் மறுபடியும் நூறு எப்பி சோடு மவனே மெகா சீரியல் எடுக்குறவன் முடிக்கட்டும் நான் முடிக்கிறான்.

செமி பைனல் அப்புறம் வைல்ட் கார்ட் அப்புறம் பிரீ பைனல் அப்புறம் மெகா பைனல் இந்த ரியாலிட்டி ஷோ பன்னுரனுவகளை நிறுத்த சொல்லு நான் நிருத்திறன்.

இப்ப ஐ.டி பீல்ட் பிக் அப் ஆயிட்டுதா ?

இதென்ன ஸ்கூட்டரா ? அட போங்க போஸ், நான் என்ன ஒபமாக்கே தெரியாது...
என்னதுல ரீ - சர்ச் பண்ணுற ?
ஆங்க, மண்ணாங்கட்டில.... ஏன் வெந்த புண்ணில வேல் பாச்சுறீங்க ?
do read{
    அண்ணே இது புல் அண்ணே , (பாதி பிசிட்டு) இது half அண்ணை...
   மறுபடி இது புல் அண்ணே , (பாதி பிசிட்டு) இது half அண்ணை...
}while (உருப்படியா கேள்வி கேக்கும் வரை);
முடிச்சுட்டு என்ன பிளான் ?
நாலு எருமை மாடு வேண்டி அமெரிக்கன் பூட் போல் கோச் பண்ணலாம் எண்டு இருக்கிறன் அசிஸ்டன்டுக்கு ஆள் தேவை வருரியளா ?
முடிச்சுட்டு எங்க ?
நான் ஊருக்கு எண்டுவன், ஏன் இங்கே இருக்கலாமே நல்ல ஒப்பசுனிட்டி, அங்க லைப் சேவ் இல்லை , விலை ஏறிட்டுது எண்டு ஒரு லெக்சர் அடிக்கவே , அட அதே மாவு , வேறை ட்ரை பண்ணுங்க போஸ்... அதுசரி நாம எதோ ஜேசன் பௌர்ன் எங்க போட்டோ வை கயில வச்சிண்டு ஆளாளுக்கு அலையுரானுகள் சுடுறதுக்கு... அங்க கத்தரிக்காய் விலை ஏறினா இங்கை புரோக்கிலி விலை ஏறுது...
அங்க என்னத்துக்கு போறாய் ?
ஒரு கிளிஞ்ச உள்ளாடை விட்டுட்டு வந்துட்டான் , அதான் எடுத்துட்டு வரலாம் எண்டு...

மாடு செத்தா மனுசன் தின்னான் தோலை உரிச்சு மேளம் கட்டி
அடிடா அடிடா நாக்கு மூக்கா நாக்கு மூக்கா நாக்கு மூக்கா நாக்கு மூக்கா.....

செவ்வாய், ஏப்ரல் 26, 2011

கிலோ மீட்டர் களால் பிரிந்து மெகா byte களால் ஒன்றிணையும் வழி .....


Credit card bill, loans, deadlines, mortgage, rent, GE bills, tax.... எண்டு பொருளாதார குடும்ப நிர்பந்தங்கள் மற்றும் சுமைகள் துரத்தும் போது மனதுக்கும் உடலுக்கும் ஆறுதலாக இருப்பது நடப்பும் உறவும் ...

"சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இருக்கு" - வைரமுத்து 

அவ்வப்போ facebookil like pannurathum share pannurathum, comment poodurathum , msg pannurathum, chattum thaan நட்பை பாராட்ட ஒரே வழியாகிப் போனது :- சின்னச் சின்ன அன்புகள்.

எங்கள் விதி எங்கள் இருப்புகளை சிதறடிச்சு எங்களை கிலோ மீட்டர் களால் பிரித்து வச்சாலும் மெகா byte களால் ஒன்றிணைய வழி இருப்பது ஆறுதலே ....

தனிமையை அனுபவித்தவர்களுக்கு தன் அதன் கொடுமை புரியும் ...
குறிப்பாக கூடி வாழ்ந்தவர்களுக்கு அதன் வலி அதிகமே ...


நியூயார்க்  நகரம்  உறங்கும்  நேரம்  தனிமை அடர்ந்தது
பணியும்  படர்ந்தது கப்பல்  இறங்கியே  காற்றும்  கரையில்  நடந்தது
நான்கு  கண்ணாடி  சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை  தனிமையோ கொடுமை  கொடுமையோ - வைரமுத்து

வாழ்க்கை எங்களுக்கு என்றும் வண்ண மயமானதே 
ரத்தமும் சதையுமாக எங்களை சுற்றி சாவு மலிந்த போதும்
துக்கத்தையும் கொண்டாடும் வழமை எங்களது
எங்களை பிச்சு எந்த மலையில் போட்டாலும் 
கடலை தேடி ஓடும் நதிகள் நாங்கள் 
வாழ்க்கை எங்களுக்கு என்றும் வண்ண மயமானதே 

எவளவு அடித்தாலும் குனியத் தெரியாது
எங்கள் முதுகேலும்புகளுக்கு....

கூடி வாழ்வது என்பது எங்கள் வாழுவியல்
மொழி எங்களுக்கு முன்னுரிமை...

எதற்கு எடுத்தாலும் நாலு பேர் தேவை எங்களுக்கு ...
வம்பளக்க , தோசை மா நல்ல வந்தா பரிமாற,
கம்பெடுத்து பாம்படிக்க , கதை பேச,
காற்றின் சாளரங்களுக்கு பட்டம் கொண்டு சீலை செய்ய 
பொங்கல் வைக்க , பொம்மை கொண்டு விளையாட ,
சம்பல் அரைத்து , அவித்த வெண் -புட்டு தேங்காப்பூ பங்கு போட 
எதற்கு எடுத்தாலும் நாலு பேர் தேவை எங்களுக்கு ...
கூடி வாழ்வது என்பது எங்கள் வாழுவியல்

நண்பர்களே ,
உயர உயரப் பறந்தாலும் இது ஊர்க்குரருவியே ,
இதான் வால் வண்ணார்பண்ணை நோக்கியே நீளும்
கைச் சிறகுகள் கைத்தடியை நோக்கியே விரியும் ...
கொன்கிரீட் காடுகளின் உயர்ந்த மரத்தின் முப்பதாவது மாடியில்
நாளை இந்தக் குருவியை யாரும் விருந்துக்கு அழைக்கலாம் 
ஆனால் இது பனைமரக் காடுக்குள் ஒரு நாவல் மரத்தில் கூடு கட்டவே ஆசைப்படுகிறது ....
எல்லாம் இருந்தும் ஏதோ இல்லாத உணர்வு ,
எல்லாம் இல்லாத போது ஏதோ இருந்ததாக நினைவூட்டுகிறது ...
அந்த 'எதோவை' நினைவு படுத்திய இந்த ஒன்று கூடலுக்கும்
அவ்வப்போ ஆறுதல் கரம் நீட்டும் நட்ப்புக்கும் 
ஊருக்கு வந்தா ஒடியல் கூழும் கருவாட்டுப் பொரியலும் செஞ்சு தாறன்...

பெரு மூச்சுடன் ...
-இ.த.