புதன், அக்டோபர் 10, 2012

ஒரு பரபரப்பற்ற மழை நாள்





இன்-பொக்ஸ் இன்கிரிமெண்ட் ஆகாத
ஒரு பரபரப்பற்ற நாள்

எந்த 'இழவுக்கோ'
வானம் கருமை பூசிக்கொண்டு
சோம்பி இருந்தது

பின்னேரம் நாலு மணி -
ஆனால் அதிகாலையும் அந்தியும் கலந்து
மிக்சிங் ஒருமாதிரி அம்மல் தந்து

மெல்லிய தலைவலி
கண்கள் பூஞ்சி பூஞ்சி சொக்கிற்று.
பெய்தேன் என்றும் இல்லாமல்
பெய்யவில்லை என்றும் இல்லாமல்
மழை ஒப்புக்கு சப்புக்கு
வானத்தின் துக்கத்தோடு சேர்ந்து கொண்டது

ஒரு கோப்பி சூடா -
நாக்கு சப்புக் கொட்ட முடியாமல்
சொண்டுகள் காய்ந்து போய் இருந்தன

போர்வையின் கணகணப்பை ஒதுக்கி
எழும்பி கோப்பி போட
அலுப்பாய் இருந்தது.

இப்போதெல்லாம்
பரபரப்பற்ற நாட்களில்
சாப்பாடு செமிக்குதில்லை,
கண்கள் அயருதில்லை

இது ஒரு அப்பழுக்கற்ற ஒய்வு நாள்
என்பதை
மனது நம்ப மறுக்குது.

காற்று வீசாமல் பெய்கிற மழை
தேத்தண்ணிக்கு தண்ணி கலந்து தந்த மாதிரி
ஒரு அஜீரணம்.

அந்த பரபரப் பற்ற நாளை
எந்த பரபரப்பும் இல்லாமல்
அனுபவிக்க முடியாமல் போனோமே
என்ற அங்கலாய்பின் பரபரப்பில்
தவித்துக்கொண்டிருந்த மனசு

சோம்பல் முறித்து
நெட்டி முறித்து
எழுந்ததும்
மழை
கொட்டோ கொட்டு என்று கொட்டியது.

2 கருத்துகள்:

எஸ் சக்திவேல் சொன்னது…

மழை நாட்கள் மனத்தைச் சோம்பலாக்குகின்றானவா அல்லது என்னாளும் சோம்பல் , ஸோ மழைநாளூம் சோம்பலா?

எனது ஒரு மழைநாளை இழுத்து வந்ததிற்கு நன்றி.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

வாங்க சக்தி அண்ணை, இரண்டும் இல்லை ஒரு சோம்பல் நாளில் மழை வந்து தொலைத்தது என்று வைச்சுக்கொள்ளலாமா ?

கருத்துரையிடுக