செவ்வாய், ஜனவரி 24, 2012

புத்தனின் ஊரில் புத்தர்கள்...

கண்ணிமைக்காது அந்த ஊர்வலத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆட்டம், ஆட்டம், ஒருகால் நிலத்தூன்றி ஒரு கால் தூக்கி அரை வட்டமாக கைகள் தாங்கி சுழன்று சுழன்று ஆட்டம்...
                           டண், டண், டண் டண,ணக்கட
                           டண், டண், டண் டண,ணக்கட
                           டண், டண், டண் டண,ணக்கட
                           டண், டண், டண் டண,ணக்கட

இனிமை என்று சொல்ல முடியாவிட்டாலும் அதில் ஓர் லயம் இருந்தது. அந்த ஒலி பழகிப் போனவங்களுக்கு ஒரு துக்கம் கவ்வியது. ஊர்வலத்தின் நீளமும் நிரப்பும் பார்த்தால் அதன் காரணத்தர் ஒரு முக்கியஸ்த்தர் என்று அனுமானிக்கலாம். பச்சையும் வெள்ளயுமாக கொடி பிடித்த கனவான்கள் கூட்டம் அந்த ஊர்வலத்தை முன் வகித்தது. பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ஆட்டக்காரர், தேவாரம், திருவாசகம், குளிர்பானம், அரிசி, அம்பட்டன், மனைவி, மக்கள், அந்தப் பிணம்.

எனக்கும் அந்த இறப்புக்கும் என்ன தொடர்பு. ஒரு முறை ஆழ மூச்சு விட்டான். அரச மரத்து இலைகள் அந்த மூச்சின் வலுவிலோ, தான் பழுப்பின் மூப்பிலோ, சந்தர்பவசமாகவோ சலசலத்தன.ஒரு குருவி அங்கிருந்து சிறகடிக்க காகம் ஒன்று கிளை கொண்டது. எனக்கும் அந்த சாவுக்கும் எந்த 'நேரடித்தொடர்பும்' இல்லை எனினும் அந்த சிறுவனின் மழித்த தலை ஒரு பந்தாகி வயிற்றுக்கும் வாயுக்கும் இடையில் கிளித்தட்டு விளையாடியது.மெல்லிதாக வியர்த்தது. வியர்வையின் வாசம், நாய் மூத்திரம் இருந்து எல்லை வகுப்பதை ஞாபகப் படித்தியது. அந்த சிந்தனையின் அருவருப்பை சகியாது பிணத்தை நோக்கினேன்.

இதோ இன்று பிணம் என்று சொல்லப்படுகிற இது, இவனாக இருந்த போது என்னோடு உறவாடியவன். என்னைப் போல் அரச போகம், அதிகாரம் ஆதிக்கம், ஆரவாரம்..... இன்று அடக்கம். அடக்கம்... என்னைப் போல் ? என்னை நானே கேட்டுக்கொண்டேன். ஒரு கரையாக கோடிழுத்து உதடு சிரித்தது. நமட்டு சிரிப்பா? நக்கல் சிரிப்பா ? ஒரு வேளை ஞானச்சிரிப்பா ?

பட பட வென வெடிச்சத்தம்.

எவ்வளவு ஆரவாரம், ஆணவம், ஆர்ப்பாட்டமாக வெடிக்கிறது.
வெடித்த பின்?
...........
............
குப்பை ! மண்ணோடு மக்கல், கைப்பிடிச் சாம்பல். நானும் வெடியும் ஒன்றா ? திரும்பவும் என்னை கேட்டுக் கொண்டேன். இப்போ சிரிப்பு வரவில்லை.என்னை நான் வேடியோடு ஒப்பிட்டதில் எனக்கு என்னை பிடிக்க வில்லை. அவனை சொல்லலாம் இப்போ எரியூட்டப் படப் போகிறானே அவனை சொல்லலாம்.

பிரார்த்தனையில் இருந்த போது உலோகக் கூர் முனை நெஞ்சு பிளக்க இறந்து போனான். நானா காரணம் ? நானா தாக்கினேன் ? நானா தாக்கியவனை எவினேன் ?

ஏன் எனக்கு மீள மீள இந்தக் கேள்வி - நானா காரணம் ?

சட்டென்று அந்த மொட்டைத்தலை சிறுவன் கண் முன்னே தோன்றினான். தலை பெரிதாகி என்னை நிரப்பி இறுக்குவது போல இருந்தது பின் மறைந்து போனது.

நேற்று, அந்த அரச விழாவில் ஏதோ சொன்னார்களே.... ஆ...
"செய்பவனும் நான் செயலும் நான் அதன் பயனும் நான்" என்றான் கண்ணன்.
அப்போ நான் எப்படிக் காரணமாவேன்.
ஒரு காய்ந்து போன அரசமிலை
காற்றில் நடமாடியது,
மிதந்தது,
ஒய்யாரமாய் ஊஞ்சலாடியது,
கொஞ்சம் முன் சென்று பின் காட்டியது,
சட்டென அம்பாகி 'நோக்கி நகர்ந்தது',
வளையம் வளையமாய் சுழன்று
பின் சட்டென நிலத்தில் சரண் புகுந்தது.

அரசமிலைக்கு நிலம் சரணா? சமாதியா ?
என் கற்பனை செரியா ?
கேள்விகள்.... கேள்விகள்.....கேள்விகள்......

அரசமிலையில் இறந்தவன் முகம் தெரிந்தது. மீண்டும் தனது வாழ்க்கையையோ மனித வாழ்க்கையையோ ஒப்பிட விருப்பமில்லை - தான் ஒப்பிடப் படாதது பற்றி எந்த பிரக்ஞையும் இன்றி சருகாகிக் கொண்டிருந்தது அந்த அரசமிலை.

போதும் என்று தோன்றியது, தலை விண்ணென்றது.

ஆமாம் புத்தன் எத்தனையாவது சாவில் ஞானியானான் ?
ஞானம் தந்த சாவுக்கு முன் அவன் சாவே 'தரிசித்தது' இல்லையா ?
அல்லது அது தான் அவன் உற்றுக் கவனித்த முதல் சாவா ?
அரச மரத்திற்கும் ஞானத்திற்கும் என்ன தொடர்பிருக்கும் ?
கேள்விகள்.... கேள்விகள்.....கேள்விகள்...... 
காற்றில் பறக்கிற பட்டத்தை வால் துரத்துகிற மாதிரி
மீண்டும் மீண்டும்
கேள்விகள்.... கேள்விகள்.....கேள்விகள்...... 

அரை வயித்தியன் ஆவதற்கே ஆயிரம் பேரைக் கொல்ல வேண்டும் என்றால் ஞானியாவதர்க்கு.... எனக்கு கணக்கு அவளவா வராதே....

நான் ஞானியாக வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

ஊர்வலம் கண்ணுக்கெட்டிய வரைக்கும் தெரியவில்லை, வீதி சாதாரணமாக மிகச் சாதாரணமாக ஆகியிருந்தது - கடந்த சாவின் அடையாளம் ஏதும் தெரியவேயில்லை.

எதோ புரிந்தாற் போல் இருந்தது - எதோ புரிந்தாற் போல் சிரித்துக் கொண்டேன். அரச மரம் அச்சிரிப்பிற்க்காய் சில பழுத்த இலைகளை உதிர்த்தது.

ஒரு முக்கிய செய்தி, தலைப்பு செய்தி ஆகி, மறு பக்கம் பார்க்க, ரண்டாம் பக்கம் ஆகி முப்பதாம் நாள் நினைவு....

விழுந்த பழுத இலைக்குப்பைகளை பொறுக்கி எடுத்துப் போட்டு விட்டு மீண்டும் அண்ணாந்து மரம் பார்த்தான் அந்த வேலையாள்.

அதைப் பார்த்ததும் கண் காத்து வாய் எல்லாம் பிரிந்து திறந்து சிரித்தேன் நான்.

உளவுத்துறை அந்த வேலையாள் அன்றிரவு தான் மனைவியிடம் கேட்டதாகச் சொன்னது
"ஏண்டி அலரி மரத்துக்கு கீழ நிறைய நேரம் நிண்டா விசராக்குமே ?"


இந்த படங்களுக்கும் இந்தக்கதைக்கும் எந்த தொடர்புமில்லை...
- யாவும் கற்பனை

17 கருத்துகள்:

ஜேகே சொன்னது…

//ஒரு காய்ந்து போன அரசமிலை காற்றில் நடமாடியது, மிதந்தது, ஒய்யாரமாய் ஊஞ்சலாடியது, கொஞ்சம் முன் சென்று பின் காட்டியது, சட்டென அம்பாகி நோக்கி நகர்ந்தது, வளையம் வளையமாய் சுழன்று பின் சட்டென நிலத்தில் சரண் புகுந்தது.

அரசமிலைக்கு நிலம் சரணா சமாதியா ? என் கற்பனை செரியா ? //

சங்ககால உவமானம் இன்றைக்கும் நின்றுபிடிக்கிறது!

உங்கள் அளவுக்கும் தமிழறிவு இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். ஒரு நல்ல கவிதையை கதையாக எழுதி அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் ஆக்கிவிட்டீர்களோ? உரைநடை கவிதை என்றும் சொல்லமாட்டேன். சிறுகதை தான். 70 களின் சிறுபத்திரிகைக்கதை.

ஒரு உண்மை, எழுதுபோருளை, சிறுகதையாக்கினால், அப்பட்டமாக முகத்தில் அடிக்கும். ஏர்போர்ட்டிலும் அடிக்கும்! கவிதையாக்கினால், ஜேகே போன்ற சாதாரண வாசகர்களுக்கு புரியாது. ஆக இந்த பாணிக்கு தாவிவிட்டீர்களா?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//உங்கள் அளவுக்கும் தமிழறிவு இல்லை. //
ஜே.கே இந்த சம்பிரதாயங்களை இனி விட்டு விடுவோம். இது கவிதை மாதிரி உங்களுக்கு தோன்றியது எனக்கு கொஞ்சம் வியப்பே, சிறுகதை வடிவம் தான் ஒருத்தனின் சிந்தனை ஓட்டத்தை செரியா தீட்ட உதவும். கவிதையில் சந்தங்களுக்காக நான் சமரசம் செய்ய வேண்டி இருந்திருக்கும்.... என் மொழி அறிவு இதை இதே தாக்கத்தில் கவிதையாய் தர காணாது. இது எழுதி சுமார் 5-6 வருடமிருக்கும். அண்மைக்காலமாக வலைத்தலங்களுக்குள் என் வாசிப்பை சுருக்கியதால் வீரியம் இழந்தவனாக உணருகிறேன். இந்தக் கதையே விளங்குமா எனும் சந்தேகத்தில் - பழைய பாடம் - படம் பார் பாடம் படி என்று ஆக்கியிருக்கிறேன். மற்றபடி உங்கள் வாசிப்பு ரசனை blog-அறிந்த உண்மை, நான் சாட்சிக்கு வரத் தேவையில்லை.

அந்த உதாரணம் " காற்றின் தீராத பக்கங்களில் தான் கதை எழுதிய போது" மறு ஜென்மம் எடுத்தது. நான் சும்மா பிச்சையில் இருந்து சொச்சை போடுகிறேன்.

ஜேகே சொன்னது…

அங்கு தான் பிரச்சனை. சந்தம் கவிதையில் இருந்தால் அழகு. ஆனால் கவிதைக்கு சந்தம் தேவையில்லை என்பது என் கருத்து. கருத்து முகத்தில் அடிக்கும் போது அங்கே சந்தம் இருந்தாலும் தொலைந்து விடுகிறது!

இந்த வகை சிறுகதைகள் குறிப்பாக கணையாழியில் வாசித்து இருக்கிறேன். ஈழத்தில் 90களின் ஆரம்பத்தில், இந்தியாவில் 70களில் இந்த பாணி சிறுகதை தான் இலக்கியப்பட்டியல் ஆகி இருக்கிறது. அண்மையில் "Australian Short Stories" என்ற 70களின் கதைத்தொகுப்பில், யாரென்று தெரியாத ஒரு கூலியின் சாவு வீட்டை மையமாக வைத்து ஒரு சிறுகதை. இதே உணர்வுகள் தான். ரசித்தேன்.

இப்படி எழுத முயலும் போதெல்லாம், சுஜாதா என்னை தடுத்துவிடுவார். இந்த வகை எழுத்தில் ஒரு சிக்கல், வாசகனுக்கு அந்த மனநிலையை நாங்கள் create பண்ண வேண்டும். அந்த context புரிய வேண்டும். பெரும்பாலான பதிவுலக வாசகர்கள் அந்த பக்கமே போவதில்லை. தனக்கு பிடித்ததை வாசிப்பான். வித்தியாசமான எழுத்தை பிடித்தமானதாக்க அழும்பு பண்ணுவான். நீங்கள் சொன்னது போல், வாசிப்பு என்பது web surfing என்ற கட்டுக்குள் அடங்கிவிட்டது. ஜெயமோகனால் இன்னொரு விஷ்ணுபுரம் எழுதமுடியாது. இன்னொரு பொன்னியின்செல்வன் இந்த தலைமுறையில் சான்ஸ் இல்லை. வாசகர்கள் இல்லை. பொறுமை இல்லை. கொஞ்சப்பேர் மிச்சம் சொச்சம்! என் வீட்டு லைப்ரரி புத்தகத்தில் அம்மாவினதும் என்னுடையதும் கைரேகைகள் மட்டுமே!

எழுத்தாளர்களில் இரண்டு வகை.இசையை எடுத்துக்கொள்ளுங்கள். யாருமே இல்லாத அமேசன் காட்டுக்குள்ளும் ஏதோ ஒரு குயில் சங்கீதம் பாடும். ரசிகர்களே இல்லாவிட்டால் இளையராஜா?

இங்கே இந்த பதிவுக்கு வராத கமெண்ட்கள் மீது கோபம் வருகிறது. உங்கள் facebook நண்பர்கள் share பண்ணும் links ஐ பார்க்கும் போது இன்னும். பக்கத்து இலையாகவும் எடுத்துக்கொள்ளுங்கள்!

சிலவேளை காட்டுக்குள் இளையராஜா போல இருக்கிறோமோ என்று தோன்றுகிறது! எசப்பாட்டு கேக்குதா?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//எசப்பாட்டு கேக்குதா?// வசைப்பாட்டும் கேக்குது நண்பரே.... நான் என் அம்மாக்கு அடிக்கடி சொல்லும் பஞ்ச் இது "குயில்களின் கச்சேரியை மனிதர்கள் சில சமயம் கேட்பதுண்டு ஆனால் மனிதக் கச்சேரிகளை குயில்கள் கேட்பதில்லை". குயில் மனிதர்களுக்காகவன்றி தனக்காகப் பாடும் விட்டேத்தி தனம்தான் அதன் அழகு.
நிற்க, நானும் கொமேன்ட்களுக்கு ஆசைபடுகிறேன் தான், ஆனால் நிறைய கொமென்ட்களை விட இந்த மாதிரி ரசனையான ஒரு கொமென்ட் தருகிற திருப்தி தனி. என்னுடைய கோபம் நான் ரசிக்கப் படாமல் போவதிலும் ஒரு நல்ல தொழில்முறை எழுத்தாளன் ரசிக்கப்படாமல் போயிடுவானோ என்பதுதான்.

பட்டிமன்றங்களுக்கும் கலக்கப்போவது யாருக்கும் வேறுபாடற்றுப் போனது போல, எல்லாம் மாறும், மாறியே வந்துள்ளது. வேறு வழியில்லை.

sinmajan சொன்னது…

படங்களிற்கு முன்பே கொஞ்சம் புரிந்தது..
படங்களிற்கு பின்னே..
எந்தத் தொடர்புமே இல்லை என்று சொன்னபோது தெளிவாய்ப் புரிந்தது

அனுஷ்யா சொன்னது…

ஜேகேவின் தளத்தில் இருந்து take diversion எடுத்து இங்கே வந்தேன்..
நிச்சயம் மலைத்தேன்...
கதை கவிதைகளைத் தாண்டிய ஒன்று... இந்த நடை எனக்கு பிடிக்கும்...ஆனால் எழுத வராது...ஹி ஹி..
வாழ்த்துக்கள்

அனுஷ்யா சொன்னது…

remove word verification

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி நண்பர்களே, ஜேகே இக்கு தான் நன்றி சொல்ல வேணும், ஆனா அவரோடு உள்ள உரிமை நெருக்கம் காரணமாய் நான் அதை தவிர்க்கிறேன். அழகாய் இருக்குகிறாய் என்று சொல்லும் போது கொஞ்சம் பயமாயும் இருக்குது... மற்றபடி அருளால் உருக் கொண்ட ஆனந்த வெள்ளம், ஆனந்தம் கோடி சந்திரர் உதயம் சூரியர் உதயம் .....

ஏ.எ.வாலிபன் சொன்னது…

மயிலன் I tried 'postandcommentsettings' it is not there???

எஸ் சக்திவேல் சொன்னது…

தொடர்ந்து எழுதிங்கள். குறைந்தபட்சம் தமிழ்மணம், thamil10.com இலாவது இணையுங்கள்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி வேல், ஏலவே இரண்டிலும் இணைந்திருக்கிறேனே...

JK சொன்னது…

Uthaya,

Switch to older blogger, remove the comment moderation and then switch back to new blogger.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

I was able to remove it without switching, I just wanted to remove word verification but keeping the power to censor spamming comments. Never-mind I removed CM now so now உலகெங்கிலும் உள்ள கோடான கோடி வாசகப் பெருமக்கள் (அடங்குடா மவனே) தங்கள் கொமெண்டுகள வாரி வழங்குக்களேன்....

Ketha சொன்னது…

கதையை வாசித்தபோது அது நிச்சயமாக என்னை பின்னோக்கி அழைத்துப்போன உணர்வு ஏற்பட்டது. ஜேகே சொன்னதுபோல எழுபதுகளின் சஞ்சிகையொன்றில் தேர்ந்த ஒரு எழுத்தாளனால் எழுதப்பட்ட கதைபோன்ற உணர்வை அந்த உரைநடை ஏற்படுத்தியிருந்தது. புதுமைப்பித்தனின் கதைகளில் இந்த எழுத்தை நான் கண்டிருக்கிறேன். அதற்குப்பின் ஜெயகாந்தனின் நடையிலும், சிலவேளைகளில் பாலகுமாரனின் நடையிலும் இந்த ஓட்டம் இருக்கும். யாரோ ஒருவன் கதையின் மையத்தில் நின்று, செய்யும் சுயவிசாரணையும், தேடல்களும் கதையோட்டத்தில் கலந்திருக்கும். எனக்கு இந்த எழுத்து பிடிக்கும். இது ஒரு புள்ளியில் வாசகனை இருத்தி, அவன் வாழ்க்கையை அந்த புள்ளிக்கு இழுத்து வரும். சுஜாதாவின், இன்றைக்கு ஜேகே இன் நடை வாசகனை ஒரு வேகமான நதி ஓட்டம்போல் இழுத்து செல்லும். அதிலும் குறிப்பாக எழுத்தாளன் எல்லா விசாரணைகளையும். தர்க்கங்களையும், சிந்தனைகளையும் வாசகனிடமே விட்டுவிடுகிறான். இந்த இரண்டு நடைகளிலும் ஒரு அழகு. ஆனால் பின் சொன்ன நடை இன்றைய இணைய வாசகனின் வாசிப்புக்கு அதிகளம் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.

ஜேகே சொன்னது…

கேதா .. கம்மென்ட் நல்லா இருக்கு .. அப்பிடியே என்னோட போஸ்ட்ல கமெண்ட் பண்ணி விடுறன். விமர்சன பதிவில இதெல்லாம் மிஸ் ஆகக்கூடாது பாஸ்!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

எல்லாம் செரித்தான், சந்தோசம், நன்றி புல்லரிப்பு புளங்காகிதம் - ஓகே

வாலிபனை 70இல மட்டுக் கட்டினது புகழ்ச்சியா இல்லை வஞ்சப்புகழ்ச்சியா ?

எல்லாருமா சேர்ந்து பீதியைக் கிளப்புகிறீங்கப்பா...

ஏ.எ.வாலிபன் சொன்னது…

இதை இங்கே http://orupadalayinkathai.blogspot.com/2012/01/blog-post_28.html சிக்கெடுத்து பேன் பார்திருக்குறார்கள்.....

கருத்துரையிடுக