செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்.....
எங்கள் விவாத அணி டிஸ்கஸ் பண்ணுரதெண்டால் ஒரு ஒதுக்குப்புறமாக தனித்த வகுப்பறை தேடுவம். எங்கட விவாத நுட்பங்கள் ஒற்றறியப்படாதிருக்க எண்டு நினச்சா, அது தவறு, மகா தவறு. நாங்கள் ஒரு ரண களம் பண்ணிடிவம் எண்டதால. மீனி தான் எப்பவும் களப் பலி. வழக்கமா ஒரு தலைப்பெடுத்தா வகுத்தல், பிரித்தல், தொகுத்தல், பொல்லு, எண்டு நாலு படி அமைப்பில் ஆராய்வம். எல்லாத்தையும் வழக்கமா மீனி கவனிக்கும் மீனியே ஏதாவது மிஸ் பண்ணிட்டு எண்டா அதை கண்டுபிடிக்கிறதுதான் என்ட வேலை. கமி பிரித்தலுக்கு பிறகு தனியே தயாரயிடும்; எனக்கு தயாராக எந்த வேலையுமில்லை. சட்டப்படி மீனிக்கு அசிஸ்ட் பண்ண வேணும் ஆன நடக்கிறது தலை கீழ்.
மீனி தலைப்பை வகுக்கும் போது எல்லோரும் கொஞ்சம் கவனிப்பம்; பிறகு யாருக்கு என்ன வேலை எண்டு பிரிக்கேக்க ஜெனா பாடத் தொடங்கீடுவான். தொகுத்தல் - எல்லாரும் ஒரே புரிதலில் இருக்கிறமா எண்டு ஒரு நூல் குடுப்பம் (இது கொஞ்சம் சிக்கலான நுட்பம் இதை இங்கே விளக்க அவசியமில்லை). பொல்லு எண்டா எதிரணிக்கான பொறி - கேள்விகள் அல்லது ஒரு எதிர்பாரா மறு வாதம் இருக்கும் அவர்களுக்கு சார்பான ஒரு ஓட்டை, தெரிந்தே யாரவது ஒருவர் - மீனி (தல) அல்லது கிருபா/ பாத்தி (ரண்டாம் விவாதி) கொடுக்குற உளுந்த பொல்லு. எடுத்தடிச்சா எதிரணியில் எல்லாரும் அடிப்பினம் ஆன பிரயோசனமில்லை அது சப்பை கட்டு கடைசியா நான் அது சப்பை கட்டு எண்டு சொல்ல வேணும் இல்லாட்டி மீனி.
இந்தப் பொல்லும் நூலும் - பாட்டும் கூத்துமா நடக்கும். என்ட வேலை எதிரணி எப்படி எல்லாம் காய் நகர்த்தும் எண்டு எதிர்வு கூறுறது; மீனி அதுக்கேத்த மாதிரி தயாராகும். நியாயமா எதிர்வு கூறுறது - சும்மா பில்ட் அப் பண்ணி மினிய டென்சன் பண்ணிடுவம் - ஜெனாவை நேரத்திர்கேற்ப பாடச்சொல்லி ஒரு நாடகம் அரங்கேற்றுவம். மீனி மேலும் பிபி ஏறி, ரண்டாம் விவாதியை வறுத்தெடுக்கும் (உள்ளத்தில அவர்தான் சின்னவரு). பாத்தி எண்டா நமட்டு சிரிப்போட வறுபடும் கிருபா பாவம் அவனும் மீனி மாதிரி சீரியஸ் கேஸ். எங்கட அலுப்பில மீனி கை நிகம் முடிச்சு காலுக்கு போய் திரும்பி கையையே கடிக்கிற அளவுக்கு போயிடும். எவளவு அலுப்பு குடுத்தாலும் தாங்கினதாலதான் அவர நாங்க நல்லவாஆஆர் எண்டு சொல்லுறனாங்கள்.
ஜெனா குரல் ஜேசுதாஸ் அளவுக்கு இல்லாட்டியும் அதில ஒரு இசைவு இருக்கும், அவன் அனுபவித்து பாடுறதுதான் எண்களிண்ட வெற்றியின் ரகசியம். அம்மாவைப் பற்றி எஸ்.ஜே.சூரியா பாடுற பாட்டு "ஆசைப் பட்ட எல்லாத்தையும் " அவன் அதை முந்தியே பாடுறவன் - எங்கட ஊர் நாட்டுப் பாடல் ஒண்டத்தான் களவெடுத்தவனுகள். ஜெனா பாடினா ஒரு பத்துப் பரப்பு மிளகாய்த் தோட்டம் எழுதி வைக்கலாம் - சுர்ர் எண்டு ஏறும் - தென்மராட்சி கள்ளு மாதிரி - கண்ணு கலங்கி வார்த்தை தளரடிச்சிடும் .
என்னில் ஏற்பட்ட சலனத்தை யாரும் கண்டு கொள்ளக் கூடாது எண்டு கொஞ்சம் சீரியஸா டிஸ்கஸ் பண்ணினதை யாரும் பெரிசா எடுக்கேல்ல. மீனியை கிண்டுற மூட்ல நான் இல்லை, ஜெனாவை லொள்ளு பாட்டுகளை விட்டுட்டு கொஞ்சம் கள்ளுப் (காதல்) பாடல்கள் பாடச் சொன்னன். நல்ல காலம் கமி கவனிக்கேல்லை. இந்த சலனம் போட்டியில கொண்டர இருக்கும் சறுக்கல் பற்றி தெரியாம நான் பாட்டுக்கு பாட்டை ரசிச்சபடி - என் மனசென்னும் செந்தாழம் பூவில் ஒரு தென்றல் வந்தாடியது - சிமிக்கி ஆடியதால தென்றல் வந்ததா இல்லை தென்றல் வந்து சிமிக்கியை ஆட வைச்சுத்தா - பாவம் நானே confuse ஆகிட்டன்- ஒரு மேசைக்கு மேலிருந்த படி ஜெனா பாடிக்கொண்டிருந்தான் - செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்..... - திருப்பி வைச்ச கதிரையில் இருந்து கொண்டு நான் லயித்திருந்தேன். எங்களுக்கிடையில் ஒரு முத்து சிமிக்கி எனக்கு மட்டும் ஆடிக்கொண்டிருந்தது. அந்த தோடு முடிகிற கழுத்து தோள் வளைவிலேயே எனது மனது மயங்கி கிறங்கி தங்கிக் கொண்டு வர மறுத்தது. அவசரமாக மளித்ததில் தப்பித்த ஒரு மீசை முடி, மூக்குக்கு கீழே முறுக்கு கொண்டது.
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா ...
ஜெனா பாடுற மாதிரி எனக்கு தெரியேல்லை , யாரோ கூப்பிடுற மாதிரி பட்டது, (எல்லா விவாதத்துக்கும் தண்ணீர் ஒரு போத்தல்ல கொண்டு போறது என் வழக்கம்) ; மச்சி தண்ணி எடுத்துட்டு வாறன் எண்டு களண்டுட்டன். அந்தக் கட்டடத்தின் ஒரு மூலையில் நாங்கள் தயார் படுத்திக் கொண்டிருந்தம் மறு மூலையில் கார்டன் பைப் ஒன்று இருக்கும், நடுவால இருக்கிற வாசல் தேவலயத்திற்கும் ஹோலுக்கும் நடுவிலுள்ள புல் மைதானம் நோக்கி இருக்கும் - மையத்தே தூபி கொண்ட, வட்டப் புல் மைதானம் அது - நாலு பக்கமும் இருந்து தூபி நோக்கி போகும் பாதை பரி தோமா மாணவ தலைவர்களுக்கு மட்டும், நாங்கள் மாறி நடந்துட்டா எங்கிருந்துதான் எண்டு தெரியாம வந்து மறிச்சிடுவானுகள் . அந்த வாசல் வழி ஒரு வளையல் கை தூணைப் பற்றி விடுவித்துக்கொண்டது - பிரமையா எனக் கிறங்கும் தருணத்தில் வேகமாக யாரோ ஓடும் சத்தம் கேட்டது. பார்த்துவரலாம் என்று முன்னேறினால் மீண்டும் ஓம்பி - "மச்சி டைம் முடிஞ்சிட்டுது - ரெடியா எண்டான்". இவனை என்ன செய்யலாம் எண்டு நீங்களே முடிவு பண்ணுங்கோ - என்ன இருந்தாலும் என்ட நண்பன் எண்டு ஆகிட்டான்.
வரும் போட்டியில் பொல்லு என்ட பக்கம் திரும்ப இருக்கிறதைப் பற்றி அறியாம இந்த களேபரத்தை விட்டுட்டு நான் விவாத அறைக்குள் நுழைந்தோம். சட் என்று ஞாபகம் வந்திச்சிது மறந்துட்டேனெண்டு - பொல்லு என்ன எண்டு மறந்திட்டன் , பொல்லு என்னடா எண்டு கேக்கலாம் எண்டா அதுக்குள்ள சத்தியசீலன் எழும்பி "பரி தோமாவின் விவாதப் போட்டி முதல் சுற்றுக்கு உங்களை வரவேற்கிறேன் ..." எண்டு தொடங்கீட்டான். விவாதம் தொடங்கீட்ட பேசா ஏலாது, கண்களால் கைது செய்தாதான் உண்டு, அரிதா பக்கத்திலிருக்கும் விவாதிக்கு துண்டில எழுதிக் குடுப்பம், அவளவே, விளங்காட்டி அவர் திருப்பி துண்டெழுதுறதில்லை - எழுதேலாது எண்டுறது ஒரு எழுதாத விதி. ஒரு தவிப்போடு நகர்ந்தது அந்த விவாதம் - அடுத்த பகுதியில்.
2 கருத்துகள்:
பாவமாக இருந்துது 0 கொமென்ற்ஸ். அதுதான் போட்டனான் :-)
நன்றி சக்தி...இதனை அன்பா...., இது ஏற்கனவே facebook இல் பதிந்தது, நான் இப்பதான் blog இக்கு வந்தனான், வரலாறு முக்கியம் எண்டு ;) இங்க transfer பண்ணி இருக்குறன், இதில வரும் நிறையப் பேர் = நிஜ மனிதர்கள்; பல சம்பவங்களும் ;), அவங்கள் செய்த கொலைவெறி இன்னும் facebook இல் இருக்கு....
கருத்துரையிடுக