புதன், நவம்பர் 23, 2011

தெய்வத்தால் ஆகாது .......

வரலாற்றில் இருந்து தான் கதைகள் பிறக்கின்றன.
வரலாற்றின் நிஜக் கருவில் இருந்து அவரவர் நியாயப் படுத்தலில் தான் கதைகள் பிறக்கின்றன / கட்டப்படுகின்றன.

"கதை கதை யாம் காரணமாம் , காரணத்தின் தோரணமாம்" எண்டு அமமா (அம்மம்மா) சொன்னது ஆழ்ந்த அர்த்ததுடனே. தோரணமாக காரணங்கள் கட்டப்பட்டுள்ளது எங்கள் கதைகளிலெலாம்.

இந்த கதைக்கு எந்த வரலாறு மூலம் எண்டு தெரியாது , ஆனா மறுபடி மறுபடி இது தான் எங்கள் வரலாறாக இருந்திருக்கிறது.

எங்களை அரக்கர்கள் எண்டினம்,
நாங்கள் கருப்பாக தடியாக இருப்பதாலா ,
அல்லது,
தோற்றுப் போனதாலா;
அல்லது,
வெல்ல வழியற்றுப் போனதாலா;
அல்லது,
கேக்க நாதியில்லாமல் போனதாலா;
அல்லது,
எங்கள் குணமே அரக்க குணம் தானா;
அல்லது,
நாங்கள் குறைவாக பெற்றுக் கொண்டதாலா;
தெரியவில்லை !

நாங்கள்
அரக்கர் எண்டு சொல்லித்தான் 
அமுதம் வஞ்சிக்கப் பட்டது.

அவர்கள்
தேவர்கள் எண்டு சொல்லித்தான்
அவர்களுக்கு தரப்பட்டது.

அமுதத்தை இழந்ததால் அரக்கர்களா ?
இல்லை
அரக்கர் என்டதால் இழந்தமா ?
தெரியாது!

தெய்வத்தால் ஆகாது ,
எனினும்;
முயற்சி மெய் வருந்த,
கூலி தரும்.
-என்பர் / எண்டம் (எண்டு சொன்னம்)
நாங்கள்
மெய் வருந்தி
செய்த முயற்சிக்கு
கூலி விசம்.

தெரிந்தே தந்தான் 
திருமால்
தலையை எங்களுக்கு.

கொள்ளாமல் 
விண்டாள் விடம்
வாசுகி எங்கள் மீது.

"அள்ளி முடிந்தவன் 
ஆபத்தானவன்; அத்து மீறினவன்.
அதை அவிழ்த்து விட்டவன் 
ஆபத்பண்டவன்"
என்ட கதையாய்.....

நம்பியாரை மயக்க
ஜெயமாலினியை ஆட வைத்தனர்.
பிறகு சில்க் சிமிதா
கடைசியில்
அம்பிகா , ராதா , மீனா என 
கதா நாயகிகள் கூட
வரிசை கட்டினர்.

ஒரு வகையில் 
விபசாரம் செய்துதான்
நாயகர்கள்
தங்கள்
விஸ்தீரணம்
காட்டினர்.

அன்றைக்கும் அப்படித்தான்,
பாற்கடலில் இருந்து
ஒரு பௌர்ணமி வந்தது
- அலைமகள்
எம் கனவை
கலை மகள்.

அமுதம் அவர்களுக்கு;
சிவன் உண்டது போக
ஆலகாலம் எங்களுக்கு;
அலை மகள் தனக்கு
என பங்கு பிரித்தான்
பரந்தாமன்.

அமுத வரிசையில்
அலைமகள் ஆசை காட்டி
பொறுமை 
சாந்தி
சமாதானம்
எண்டு பேசி
பின் நிறுத்தினாள்.

திருமால் தானே
தருவார்
எண்டுநம்பினம்.
அவர்களுக்கே 
கொடுத்து தீர்த்தான்
அரி.

தெய்வத்தால் ஆகாது.
எனினும்,
மெய் வருத்தி செய்த முயற்சி ?

சனி, நவம்பர் 19, 2011

மனிசப் பூ மாலையிட்டா மரியாதை ஆகாது !


சோலை, குயில், காதல், சொன்ன கதை அத்தனையும்
மாலை அழகின் மயக்கத்தால் உள்ளத்தே 
தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சி என்றே கண்டு கொண்டேன்
ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும் ,
வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க 
யாதனுஞ் சற்றே இடமிருந்தாக் கூறீரோ ? - குயில்ப் பாட்டு: பாரதி

புரியாமல்ப் போனாலும் - என்னெழுத்து 
புரிந்து கொண்டார் கோமகனார் 
பெரியண்ணா
எந்தன் 
உருவாகி 
அறிவாகி 
திருவாகி
நின்ற நீர் 
கருவான கதை எண்டறிந்தும்,
பவிசேதும் பாராது,
பாராட்டி சீராட்டி 
என் கனவுக்கு கிட்டே 
கை பிடிச்சு வந்த கணம்
யுகம் யுகமாய் இருவருமே சேர்ந்து பிறந்த கதை சொன்னதுவே,

சொன்ன கதை சிலதிருக்க 
தலையை சொறிந்தபடி 
புனகையில் கண்ட கண்கள் 
சொல்லாத கதைகளெல்லாம் 
சொல்லிப் போன சுகமிருக்கே - நாளை
என் 'பள்ளி'ப் பாடத்தில் 
படிப்பேனா தெரியலையே.

ஆட்டுக் கல்லினிலே 
அம்மாவாய் இருந்தபடி 
பீட்ரூட் தீத்தினது நினைவிருக்கும்.
பேசாம பீற்றூடே திண்டபடி இருந்திருக்கலாம் 

இளந் தேங்காய்ப் பூ,
இறுகப் பிடித்த புட்டு 
உள்ளிருக்கும் 
கள்ளிருக்கும் பீட்ரூட் துண்டு;
திருவலையில் இருந்தபடி 
வாய் திறந்திருந்த எனக்குள்ளே
மன அறையில் ஒரு ஆசையுண்டு,
அந்த ஆட்டுக்கல்லேறும் தகுதி 
எனக்குத் கடைந்தேறுமா எண்டு.

இந்த சிட்டுக்குருவி பறக்க
வானமாய் வந்தீர் 
வானமளக்கும் ஆசை 
வந்ததென்ன குருவி தப்பா ?


இது ஆசை + மோகம் = மடம் என்ற கதை தொட்டு அறிவுடை நம்பி கலிய பெருமாள் இந்திரன் , அறிவுடை நம்பி கலிய பெருமாள் சந்திரன் என்று பிரிந்து நின்று முரண்டது வரைக்கும் தொட்டு, துழாவி (ஜே.கே. இன் "கடவுள்கள் துயிலும் தேசம்", "காதலிகள்", "எழாம் அறிவுடை நம்பிகள்" மேலும் சில ) திளைத்தபிறகு , என் அண்ணா ஒரு பெரிய sms அனுப்பி 2hrs video call கதைச்ச பிறகு, பழைய நினைவுகளில் அந்தரித்த போது எழுதியது. இந்தியன் ஆமி பிரச்சனைக்  காலத்தில் சில காலம் பீட்ரூட் மட்டுமே புட்டோடு சாப்பிட காலத்தை, இந்த சிட்டுக்குருவிக்கு போதி மரமாய் வந்து நிண்ட பெரு வெளியை, அதில் நான் கண்ட வெயில், மழை, வானவில் என்பவற்றை நினைவுகளில் அந்தரித்த அவைஸ்தையில் அவதரித்தது இந்தக் கவிதை. வானவில்லில் பச்சை நிறமாக வந்ததிந்த குயில் பாட்டு. 


இந்த நல்ல தருணம் அமைய வழிகோலிய ஜேகே அண்ணைக்கு 90 நாட்களை தாண்டிக் காதலிக்கும் மைதிலி அக்கா(க்கள்) அமைய நல்லூரானே காப்பு. 
இந்தப் போர், ஜேகே மாதிரியான திறமையான ஆளுமைகளை எங்கள் செம்மண் புழுதியிருந்து கடத்தி சென்று மெல்போர்ன் குளிருக்குள் விறைக்க விட்ட விதியை அண்ணா நிறையவே நொந்து கொண்டார். 


அண்ணாக்கள் எனக்கு சொன்ன கதைகளிளிருந்தே என் கனவுகள் வந்திருக்கு...
உங்களுக்கு எப்படி ?

முக்கோணத்திற்கு ஒரு முகமிருக்கு, மூன்று பக்கமல்ல

சோலை, குயில், காதல், சொன்ன கதை அத்தனையும்
மாலை அழகின் மயக்கத்தால் உள்ளத்தே 
தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சி என்றே கண்டு கொண்டேன்
ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும் ,
வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க 
யாதனுஞ் சற்றே இடமிருந்தாக் கூறீரோ ?



- குயில்ப் பாட்டு பாரதி.


கடிதத்தில் வந்த சேதியப் பாத்திட்டு 
கக்கூசு, டெலி போன், கலியாணம் எண்டு 
அவசரமா கலவரம் செய்வோரே

நீங்கள் கிழித்துப்போட்ட கடிதஉறையில் தான் 
அடித்து திருத்தப்பட்ட முகவரி ஒண்டு 
address இல்லாமல் கசங்கிப்போய்....

ஆட்டத்தை பாக்க வந்தனியள் 
அவளை ரசிக்கலாம்,
தப்பில்லை !
அதுக்குத்தான் அவள் அலங்கரித்து வந்திருக்குறாள்.
ஆனா அவளை மட்டும் ரசித்து விட்டு 
ஆட்டத்தை கோட்டை விட்ட கோமான்களே 

makeup போட்டு வந்தது அவள்தான் 
makeup போடாம வந்தது அவள் கலை 
நீங்கள் செய்தீரோ அதை ஒரு கொலை ?

வானொலிப் பாட்டொன்று 
வானலைகளை கடந்து வரும் 
வெறும் காது கொண்டு அதை உணர்வீரோ ?
வானலையில் கரைந்து போகும் 

பருவ நிலா பொழியும் பால் நிலவு 
அது தேனிலவு தம்பதிக்கே
எனவெண்ணி 
மலராமல் போன அல்லிகளா - அதனால் 
நீங்கள் மலடாகிப் போனதறிவேரோ ?

நீங்கள் மலடாகிப் போனதினால் 
பால் நிலவு பொழியாமல் போகும் 
எண்டு நினைத்தீரோ ?

வெள்ளி, நவம்பர் 18, 2011

எனக்கும் அரசியல் தெரியும் ? - 7ம் அறிவு இருக்கு ?

எழாம் அறிவுடை நம்பி  எனும் ஜேகே இன் பதிவும், இன்ன பிற எழாம் அறிவு படம் உருவாக்கிய சர்ச்சைகளின் விளைவுக் குழப்பத்தில் நான் பதிந்தது

எழாம் அறிவுடை நம்பி என்னுள், அறிவுடை நம்பி கலிய பெருமாள் இந்திரன் , அறிவுடை நம்பி கலிய பெருமாள் சந்திரன் எண்டு இரண்டு துருவங்களை, உண்டு பண்ணி, ஒரு பெரிய பட்டி மண்டபம் நடந்து கொண்டிருக்கு - ஏலவே இங்கு (blog மற்றும் FB இல்) நடப்பதையும் தாண்டி, நடுவர் தீர்ப்பு சொன்னால் - ஒரு முடிவான கருத்தை நேரம் பொறுப்பது பொறுத்து பதியுறன். 
நானே எனக்குள் சில தெளிவு கொள்ளாததால் - என் உணர்வுகளை ஆட்கொள்ளும் சுழல்களை முடிந்த வரை பகிர்கிறேன் - இது கொஞ்சம் சிக்கல் - இடியப்பதிலிரிந்து சிக்கல் எடுக்குற மாதிரி - will c. 

பொதுவா இந்த மாதிரி கதைகளும் கவிதைகளும் இன்னொமொரு கோணத்தை வாசகனுக்கு அடையாளப்படுத்துகின்றன, தவிர முடிவு என்று பரிந்துரைப்பதில்லை - அது அதன் நோக்கமல்ல. முடிவு வாசகனின் உள்வாங்கல் மற்றும் அனுபவம் + கொள்ளளவு பொறுத்தது. ((என்) பதிவுகளை எப்படி வாசிக்க வேணும் எண்டு இங்க ஒரு கவிதை சொல்லி இருக்குறன்.)

நிற்க, எழாம் அறிவு ஒரு விடியலை பெற்றுத்தரும் எண்டோ; சினிமா நடிகர்களின் நடிப்புக்கும், மேடை நடிகர்களின் நடிப்புக்கும் உணர்விழக்கும் கூட்டம் (உணர்ச்சி வசப்படல் என்பது வேறு வகை) எங்கள் 'நாளையை' வடிவமைக்கும் எண்டோ நான் நினைக்கவில்லை. ஆயினும் பெரும்பான்மை ஆகி நிற்கும் அந்த தமிழ் பேசும் (எழுதும் வாசிக்குமா எண்டு தெரியேல்லை) நல்லுலகம் (?) 'நாளையை' - இன்றைய ஜனநாயகத்தில் தீர்மானிக்கிறது என்பதே நிஜம். தமிழ்நாட்டின் அரசியல் 'நாளை' - தமிழினது நாளையிலும், ஈழதமிழர் நாளையிலும் ஒரு முக்கிய செல்வாக்கு காரணி எண்டு நான் நினைக்குறன்.

ஒரு entertainer + உணர்வாளன் தன் எல்லைகளுக்குள், தன் கொள்ளளவுக்குள், தன் உணர்வை பதிந்திருக்குறான் எண்டே நான் எழாம் அறிவை பார்க்கிறேன்.

வாழ்வு முழுவதையும் அறிவு கொண்டு வாழ்ந்திடலாமா - முடியுமா ? + தேவையா ?, உணர்வாதல் பிழையா - என் சுழல்கள்.

என் நண்பன் ஒருவன் சொல்வது மாதிரி, போர் முனைகளில் புத்தனையும் காந்தியையும் தேடுதல் செரியா, போரை புத்தத்தையும் காந்தியத்தையும் கொண்டு ஆராய்தல் முறையா - என் சுழல்கள்.

களத்திற்கு தேவையான போது, கத்தி செய்து குடுக்காத நான், கத்தி எடுத்து களம் போகாத நான், கத்தி ஊரைக் கூட்டாத நான், கடமையே கண்ணா படிச்சுக் கொண்டிருந்த நான், கெட்ட பின் சூரிய நமஸ்காரமா, சந்திரனுக்கு அபிசேகமா, ஜடாயுவுக்கு அருச்சனையா எண்டு ஆராயலாமா தெரியேல்லை. 


நானும் சம்பந்தப்பட்ட ஒரு பெரும் தவறில் நியாயம் சொல்ல எனக்கு அருகதை இல்லை எண்டே நம்புகிறேன். என்னுடைய நியமங்கள் எனக்கு மட்டும், உங்களையும் அந்த வட்டத்துக்குள் வாருங்கள் எண்டு அழைக்க என் வட்டம் பற்றி எனக்குள் ஒரு தெளிவு இன்னமும் வரவில்லை.

என் அறிவும் தர்க்கமும் கொண்டு என்னால் ராமனுக்கு சூர்பனைகயை கூட கட்டி வைச்சிட முடியும். அதனால் 'இறந்த'-காலத்தை ஒரு மௌன சாட்சியாக பார்த்தபடி, தொலைந்து போன நித்திரையில், அடிக்கிற மாதிரி துடிக்கிற இதயத்தில், பனிக்கிற கண்களால், கனவொன்றை கட்டி வைச்சிருக்குறன், தவிர்க்க முடியாமல் அதன் நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள். அந்த கனவு நனாவாக்க 'நாமார்க்கும் குடியல்லோம்' எண்ட என் கிழவனின் உரப்புக்காய் வேண்டுகிறேன். 

இது ஒரு வாக்கு மூலம், யாரையும் எடை பார்க்கும் எண்ணமோ, கொள்கைப் பிரச்சாரமோ கிடையாது. எழுதுவதும் வாசிப்பதும், கூட உணர்ச்சி வசப்படுதலும் எண்டுதோடு நிண்டுவிடுகிறேன் (இந்தக் கதையில் வாற குமரன் மாதிரி) எண்ட என் நண்பன் கோபியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடச்ச பிறகு நானும் இதுதான் எண்டு ஒண்டை இது பற்றி சொல்லுவன் - அதுவரை கனவுகளும் அதை நனவாக்கும் கனவுகளும் நானும்....

பிறந்தநாள்



என் இனிய தமிழ், தெலுங்கு, மலையாள, மற்றும் கன்னட வாசகர்களே இதுவரை facebookஇல் குறும்பு செய்து வந்த வாலிபன் முதன் முறையாக blog இல்.

இதுவரை facebookஇல் செய்த குறும்புகளை முதற் கட்டமாக இங்கு transfer செய்திருக்குறேன் - வரலாறு முக்கியம் அமைச்சரே.

இனி இங்கையே வாலிபனின் சேட்டைகள் ஆரம்பமாகும்.



என் படைப்புகளை,

ஒரு அப்பா தன் வயது வந்த பெண் பிள்ளையை

சபைக்கு அழைத்து வருவது மாதிரி

அழைத்து வருகிறேன்.




அவள் கலையை ரசிப்பவர் சிலர்,

அவளை ரசிப்பவர் சிலர்,

ரொக்கட் எறிபவர் சிலர்,

விசிலடிப்பவர் சிலர்;




இவளும் சளைத்தவள் அல்ல!

எந்த வாசகனுக்கு

கண் ஜாடை காட்டுகிறாள் எண்டு தெரியாது.

அதை நான் தடுக்கவும் முடியாது.

எதையுமே நான் தடுக்க முடியாது .




ஒரு புன்னைகயோடும்

எச்சரிக்கையோடும்

எல்லாவற்றையும் எதிர்கொள்கிறேன்.

அவள்

உங்களை ஏற்றுக் கொண்ட பிறகு

கூடுவதும்,

கூடி இன்பம் காணுவதும்,

குலவி பிள்ளை பேறுவதும்,

உங்கள் இஷ்டம்.

தூதுக்கு என்னைக் கூப்பிடாதீர்கள்.

புதன், நவம்பர் 16, 2011

ஆசை + மோகம் = மடம் , இன்னும் தொண்ணூறு நாட்களுக்கு மட்டுமே

ஆசை + மோகம் = மடம் 
             "இன்னும் தொண்ணூறு நாட்களுக்கு மட்டுமே"

மயக்கம் என்ன.....
தோய்ப்பதற்கு எடுத்த சட்டை collor, கை என்பவற்றில் இருந்து body-spray உடன் வியர்வையும் சேர்ந்து வரும் வாசம் கிறங்கடித்தது. அவனுக்கு அடிக்கடி தோய்ப்பது பிடிக்காது, ஆனா அவளுக்கு புதுத் துணி கூட ஒருமுறை அலம்பி அணிவதே பழக்கம்.

கொடியில் சுடிதாருக்கு பக்கத்தில் காய்ந்து கொண்டிருக்கும் டெனிம், ஆறு மணி எப்ப வரும் என்று ஏங்க வைத்தது, தனக்கென ஒருத்தன் என்பது மனதுக்கு நிறைவான உணர்வு, வார்த்தைகளுக்குள் அடங்காத உணர்ச்சி - நல்ல குளிர் காலத்து கம்பளி மாதிரி, அவன் வர இன்னும் பல மணியாகும் என்பது ஏக்கம் + வாட்டம் - அதுவும் சுகம்தான் குளிர் காலத்தில் கோப்பி குடிக்கிற மாதிரி, அப்ப பின்நேரம் அவன் வந்தவுடன் வரும் உணர்வை என்ன வேண்டு சொல்லலாம் ? ஏக்கம் + வாட்டம்: சூடான கோப்பி கப் கையை சுட சுட சூடு தாளாமல் கை மேலும் கப்பை இறுக்குற மாதிரி, அந்தி வேளை அவன் வருகை+ ....(வயது வந்தவர்கள் புரிந்து கொள்ள) அது குளிர் காலத்து கோப்பி, உள்ளிறங்கி உடல் கலக்கும் வரை அதன் சூடு தெரியும்.

அவன்ட computer மேசை அலங்கோலமா புத்தகங்களும், பேப்பர்களும் சிடி களும் இறைந்திருந்தது, ஒவ்வொன்றா எடுத்து அடுக்கி வைப்பது பிடித்திருந்தது. அவள் அப்படி பழக்கப் பட்டவள் இல்லை. வீட்டில் இதுவரை இப்படி மற்றவர் வேலை செய்ததில்லை, அவள் மேசை நேர்த்தியாகத்தான் எப்பவும் இருக்கும். ஆனா அவன் அலங்கோலமாக வைத்திருக்கும் முறை ரசனை, அது பற்றி பின்நேரம் வந்தவுடன் சண்டை போட வேணும், சொன்னாலும் அவன் ஒழுங்காகப் போவதில்லை, கேப்பான், சில சமயம் கோபமாக நான் அப்படித்தான் எண்டு முரண்டு பிடிப்பான், அடுக்கி வச்சதுக்கு நன்றி சொல்லுவான் - அவன் நன்றி சொல்லும் விதமே தனி, நேற்று குழம்புக்கு சொன்ன நன்றி கன்னங்களில் இன்னும் எரியுது - தாடி மீசையை வழித்தெறி ஏண்டா கேக்குறானா. அந்த நினைவில் அதரங்கள் பரபரத்தன. கட்டாயம் கொழுவ வேணும் - இண்டைக்கு மேசை அடுக்கி வைக்குறது பற்றி.

அண்டைக்கு உப்புடித்தான் ஜே.கே இண்ட கதை வாசி எண்டு நச்சரித்து எடுத்திட்டான் , எனக்கு நிறைய நேரங்களில் அவன் வாசிக்கிற விசயங்கள் விளங்காது, அவனே விளங்கப் படுத்துவான் ஆனாலும் விளங்காது; அவனும் பேச்சும், தாடையும், தாடையை போர்த்தி இருக்கும் தாடியும் ரசிப்பதில், அவன் சொல்வதை கவனிப்பதில்லை. அவனும் எழுதுவான், மிக அரிதாய், ஆனா அவனுக்கு வாசிக்கிறது தான் பிடிக்கும் எண்டுவான். எழுதிப் போட்டு, யாரு வாசிச்சவை யாரு கொமென்ட் போட்டவை எண்டு கொஞ்சநாளா தவம் கிடப்பான் - ஆனா அதை காட்டிக்கொள்ள அவனுக்கு வெக்கம். ஆனா நிறைய வாசிப்பான் - வாசிச்சதில் ரசிச்சதை மற்றவர்களுக்கு விதவிதமாய் -வற்புறுத்தலாய் - பகிர்வது அவன் குணம்.

அண்டைக்கு உப்புடித்தான் ஜே.கே இண்ட கதை வாசி எண்டு நச்சரித்து எடுத்திட்டான் - "உஸ் இது கடவுள்கள் துயிலும் தேசம் " எண்ட பெயரை கேட்டவுடன் எனக்கு விளங்கேல்லை , இது கடவுள்கள் துயிலும் தேசம் எண்டா சொர்க்கமோ?  இல்லை, இந்த ஊரில சாமி எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கு எண்டு அர்த்தமோ?. உஷ் எண்டு எதுக்கு சொல்லோணும் ? எழுப்பிடாதேங்கோ, இங்கை ஆழத்துயில் கொள்ளும் எல்லாரும் கடவுள்கள் என்டர்த்தமோ ? சுடலை பற்றி இருக்குமோ ? துயிலும் இல்லம் ? குழந்தைகள் காப்பகம் ? அவன் இப்படித்தான் பல மாதிரி கேள்வி கேப்பான் - ஏன் இப்படி குழம்போணும் எண்டு எனக்கு விளங்கிறேல்லை. சும்மா வாசிச்சுட்டு போறதுக்கு இவளவு ஆர்ப்பாட்டம் - அவன் அப்படித்தான் - அது அவளுக்கு பிடிச்சிருந்தது.

உப்பு தூக்கலாக போட்டு, நெயில தாளிச்சு துவரம்பருப்பு வறை, அவன் தான் சொல்லித் தந்தான், இவளுக்கு முந்தி அறிமுகமில்லை. ரசம் ஒருபக்கம் கொதிச்சுக் கொண்டிருந்தது , தாளிக்குறது ஒரு ரசனை அனுபவம் எண்டுவான், கருவேப்பிலை, கடுகு, சீரகத்துடன் பொரியும் போது வரும் சத்தமும், மணமும் காங்கேசன் வீதிகளில் பயணிக்க வைக்கும் எண்டுவான் இப்படித்தான் கருவேப்பிலைக்கும் காங்கேசன் வீதிக்கும் என்ன லிங்க் எண்டு தெரியேல்லை கேக்க வேணும் , அதுக்கொரு கதை வச்சிருப்பான்.

சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் சுப்பர் சிங்கர் பாத்திட்டு படுத்திடலாம். அந்த கதையை வாசிக்கலாம்....

"கண்ணம்மா.....",
 அவளுக்கும் ஆசையா இருந்தது , தனக்கொரு குழந்தை எண்ட எண்ணம் அவள் கன்னக் கதுப்புகளை சிவக்க வைச்சு , காதுகளை சூடேற்றியது. கண்கள் சொருக ஆறு மணிக்கனவுகளோடு தூங்கப் போனாள். அவன் வந்து கதை சொல்லுவான். அதை கேக்கலாம் - அது ஒரு சுகம் - சில வேளை சினப்பான், நீயா தேடி வாசி - அப்பத்தான் அதில ஒரு சுகமிருக்கும், கூடவே ரசனை வளரும், அது படைப்பாளிக்கான கௌரவம் என்பான். இவளுக்கு அதில் ஆர்வமில்லை, அவன் வாசித்தால் கேக்கலாம், கேக்க நல்லா இருக்கும் அவன் வாசிப்பு - நாடகம் மாதிரி - வாசிப்பே அபிநயங்களோடு. அதை அவள் சொன்னதில்லை, எல்லாத்தையும் தனக்கு வாசிச்சு காட்டுவதில்லை எண்ட குறை அவளுக்குண்டு, அவளா எதையும் தேடி வாசித்து பகிர்வதில்லை எண்ட குறை அவனுக்குண்டு. அவனுக்கு பிள்ளையார் பிடிக்கும் எண்டு ஈ-மெயிலில் வரும் பிள்ளயார்களை அவனுக்கு அனுப்புவாள், கூடவே உணவுப் பழக்க வழக்கம் பற்றிய ஈ-மெயில்கள் - அவன் அதை தேடி வாசிப்பதாக ஏற்றுக்கொள்வதே இல்லை. அதற்க்கு இன்னமும் கோபப் படுவான். அனால் அது அவனுக்கு சந்தோசம் தரும் எண்டு அவள் நினைத்திருந்தாள். தனக்காக அனுப்புகிறாள் எண்டு அவனுக்கு ஒரு கரிசனை உண்டு எண்டு தான் நினைக்குறன். பின்னேரம் எழும்பி பில் கட்டவேணும், பகோடா சுடுவம் - அவனுக்கு அது பிடிக்கும் எண்டு நினைத்துக்கொண்டாள்.

மீண்டும் ஆறுமணி நினைவில் வர, ஒரு நகைப்பு வாயுக்குள் வந்து கடிவாயில் கொப்பளித்தது , அதை விழுங்கிக்கொண்டாள். மறக்காமல் ஜே.கே இண்ட கதையை தண்ட facebook இல் பகிர வேணும் எண்டு இடையில் எப்பவோ நினைத்தாள், அனால் தூக்கம் அவளை ஆட் கொண்டதில் பல சிந்தனைகள் அப்படியே முடங்கிப் போயின - பகோடா மட்டும் நினைவில் இருந்தது.

செவ்வாய், நவம்பர் 15, 2011

அழகான தீவுக் காரர்கள்



ஒரு அழகான தீவுக் காரர்கள் நாங்கள்
வாழ்க்கை எங்களுக்கு என்றும் வண்ண மயமானதே 
ரத்தமும் சதையுமாக எங்களை சுற்றி சாவு மலிந்த போதும்
துக்கத்தையும் கொண்டாடும் வழமை எங்களது
எங்களை பிச்சு எந்த மலையில் போட்டாலும் 
கடலை தேடி ஓடும் நதிகள் நாங்கள் 
வாழ்க்கை எங்களுக்கு என்றும் வண்ண மயமானதே 

எவளவு அடித்தாலும் குனியத் தெரியாது
எங்கள் முதுகேலும்புகளுக்கு....

கூடி வாழ்வது என்பது எங்கள் வாழுவியல்
மொழி எங்களுக்கு முன்னுரிமை...

எதற்கு எடுத்தாலும் நாலு பேர் தேவை எங்களுக்கு ...
வம்பளக்க , தோசை மா நல்ல வந்தா பரிமாற,
கம்பெடுத்து பாம்படிக்க , கதை பேச,
காற்றின் சாளரங்களுக்கு பட்டம் கொண்டு சீலை செய்ய 
பொங்கல் வைக்க , பொம்மை கொண்டு விளையாட ,
சம்பல் அரைத்து , அவித்த வெண் -புட்டு தேங்காப்பூ பங்கு போட 
எதற்கு எடுத்தாலும் நாலு பேர் தேவை எங்களுக்கு ...
கூடி வாழ்வது என்பது எங்கள் வாழுவியல்

நண்பர்களே ,
உயர உயரப் பறந்தாலும் இது ஊர்க்குரருவியே ,
இதான் வால் வண்ணார்பண்ணை நோக்கியே நீளும்
கைச் சிறகுகள் கைத்தடியை நோக்கியே விரியும் ...
கொன்கிரீட் காடுகளின் உயர்ந்த மரத்தின் முப்பதாவது மாடியில்
நாளை இந்தக் குருவியை யாரும் விருந்துக்கு அழைக்கலாம் 
ஆனால் இது பனைமரக் காடுக்குள் ஒரு நாவல் மரத்தில் கூடு கட்டவே ஆசைப்படுகிறது ....
எல்லாம் இருந்தும் ஏதோ இல்லாத உணர்வு ,
எல்லாம் இல்லாத போது ஏதோ இருந்ததாக நினைவூட்டுகிறது ...
அந்த 'எதோவை' நினைவு படுத்திய இந்த ஒன்று கூடலுக்கும்
அவ்வப்போ ஆறுதல் கரம் நீட்டும் நட்ப்புக்கும் 
ஊருக்கு வந்தா ஒடியல் கூழும் கருவாட்டுப் பொரியலும் செஞ்சு தாறன்...

பெரு மூச்சுடன் ...

சனி, நவம்பர் 05, 2011

கனவில் வந்த கவுண்டமணி


டேய் தேங்காய் தலையா எழும்படா டேய்... பாருங்க மகா ஜனங்களே இரவிரவா facebook இல பம்பலடிச்சிட்டு எதோ ரிசேர்ச் பேப்பர் படிச்ச மாதிரி நித்திரை கொள்ளுறன் - டேய் எழும்படா டேய். 

வெளியில நாப்பது டிகிரி பெரநைட்டு, இன்னும் மத்தியான பன்னிரண்டு ஆகேல்லை - போத்திண்டு படுங்க...

மவனே நீ இப்படி சொன்ன எழும்ப மாட்டாய், உனக்கு வேற இருக்கடி... உண்ட பூசை முகம் அட சீ ஆசை முகம் மறந்துபோன நோட்டுக்கு யாரோ கொமென்ட் போட்டிருக்கிரானுக டேய் எலும்பு எழும்பு...

அரக்கப் பரக்க எழும்பி யாரு எண்டு பாத்தா... கவுண்ட மணி... என்ன அண்ணை நீங்களே தானா...

எண்டா உண்ட்ட ரேஞ்சுக்கு பின்ன கொண்டை போட்ட ராய் - கொண்டலிசா ராயா வருவாங்க.. நானே நானேதான்.....   

அண்ணை யாரண்ணை கொமென்ட் போட்டது...அதே பழைய வெட்டி குரூப்பா ? இல்லை புதுசா யாரும் புள்ளைங்க ?

எண்டா டகால்டி மண்டையா... உனக்கே இது நியாயமாடா ? முகம் மறந்து போச்சு மூக்கு மறந்து போச்சு எண்டு நீ விடுற பீலாவுக்கு இந்தெல்லாம் ரொம்ப ஓவர்தான்... மறதி எண்டா வல்லாரை சாப்பிடு யோகா பண்ணு அதை விட்டுட்டு மறந்து போயிட்டனண்டு reminder க்கு ஒரு நோட்டா...

ஒரு விளம்பரம்தான்....கலைக்கு ஒரு விளம்பரம் முக்கியம் அண்ணை ...

டேய் உன்னை எல்லாம் கலைஞன் எண்டு யாரடா சொன்னது... நீயே அறிவிச்சுடுறதா.... அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணும் ராஜா... பொழுது போக்கா எழுதிற நீயும் பொழுது புலர எழுதிற அவைகளும் ஒண்டா... அடேய் நூடில்சு, கழுதைக்கும் நாலு காலு யானைக்கும் நாலு காலு ரெண்டும் ஒண்டா... status update இலையே நீ சிலப்பதிகாரம் எழுதலாம் எண்டு நினைக்கிறாய்... கலைஞன் எண்டா மக்கள் ரசிக்கோணும்....

அண்ணை சும்மா தெரியாம பேசாதீங்க... என்ட நோட்டுகளையும் நாலு பேர் லைக் பண்ணுனம்...

ஆமா பண்ணுனம்.... எதுக்கு நீ குடுக்குற ரோதனயில.... நோட்டை எழுதினாமா publish பண்ணினாமா எண்டு விடுறியா.. இல்லையே....நீ இருக்கிற குறுப்பில எல்லாம் ஷேர் பண்ணுறது... அதுவும் வொர்க் அவுட் ஆகேலேண்டா டாக் பண்ணி விடுறாய்... மவனே அதோட விட்டியா... பிரைவட் massege இல அனுப்பிறாய்... அதையும் கவனிக்காட்டி... மட்டவண்ட சிவரில போடுறது...  கோமென்டில கோத்து விடுறது... உண்ட டகால்டி எல்லாம் எனக்கு தெரியும்டா டேய்....

அப்பதான் எங்கட போஸ்ட் முன்னுக்கு வரும் அண்ணை facebook la அப்பிடி ஒரு அல்கோரிதம் வைச்சிருக்கிரானுகள்....

இப்பிடித்தாண்டா தொடங்குவியல், பிறகு உண்ட போஸ்டை நீயே லைக் பண்ணுறது, உண்ட கொமெண்ட நீயே லைக் பண்ணுறது, எண்டு கடசில steve-jibs R.I.P இக்கு கூட லைக் போட்டவனுகள் தெரியுமில்லை....

அண்ணை அவனுகளையும் என்னையும் ஒன்டெண்டு சொல்லதேங்கோ....நாங்கெல்லாம் ஒரு காலத்துல பெரிய விவாதிகள்.... எங்களுக்கெண்டு ஒரு followers இருக்கினம்...

வியாதிண்டு சொல்லு ஒத்துக்கிறன்... ஈரப்பிலாக்காய் தலையா, டிபேட் பண்ணினா ஏ.ல். பாஸ் பண்ணலாம் எண்டு சொன்னவன் தானே நீ... தமிழ் வளக்கவோ இல்லை தலைமைத்துவம் வழக்கவோ டிபேட் பண்ணி இருப்பை எண்டு பாத்தா, சிமிக்கியப் பாத்திண்டு இருந்திருக்கிறாய்... இதுக்கு உனக்கு followers வேறயா ... யார்ரா அந்த கொத்து ரொட்டி மண்டயன் தங்கட காலத்தில சில பெண் விவாத அணிகள்தான் இருந்துது எண்டு கவலைப் படுறான் உண்ட follower ஆத்தானிருக்கும்... எண்டா டீ இல சுகர் இல்லை என்ட மாதிரி டிபேட் இல figure இல்லை எண்டு கவலைப்படுறான்....  டிபேட் இல fire இல்லை எண்டு கவலைப்படாமல்.... 

அண்ணை அரசியலில இதெல்லாம் சகஜமண்ணை....

டேய் என்ட டயலாக் எனக்கேவா... ஒரு பைல் மட்டை, நாலு பென்சில் மாதிரி இருக்கிற உனக்கே அரசியலா, டேய் உடம்பு தாங்காதுடா..... அடேய் வாழ்க்கையின்னா ஒரு என்டர்டெயின்மென்ட், என்கேஜ்மென்ட், ஒய்ல்மென்ட் இதெல்லாம் தேவைதான் ஆனா உனக்கு கவர்னமென்ட் ரேஞ்சுக்கு ஓவர் பில்ட் அப்பா இருக்கே.... அது செரி அந்த ஆசை முகம் உண்மையா இல்லை உட்டாலக்கடியா ?

ஹிஹி... அது கம்பனி சீக்கிறட் வெளியில சொல்லப் படாது....

டேய் பெரிய மைக்ரோ சாப்ட்டு...இந்த டகால்டி எல்லாம் வேணாம் பம்மாம சொல்லு...யாரந்த காந்தக் கண்ணழகி?

முழுசா பொய் எண்டு சொல்லேலாது... ஆனா உண்மையில்லை...

ஏண்டா நீ திருந்தவே மாட்டியா ? அது செரி உலகத்திலேயே கேள்வி கேக்கிறத்துக்கு மனுவல் போட்ட கேப்பமாரி நீ தானே...ஒவொரு பகுதியா - காது, கை கால், கண் எண்டு கடைசியா முகத்துக்கு வருவாயில்லைஅப்ப இருக்குடி உனக்கு ஆப்பு...
டேய் இப்ப நாங்கள் கதைச்சதைக் கூட நீ போஸ்ட் பண்ணுவாய் எண்டு தெரியும் ஆனா மவனே உள்ளதை உள்ள படியே போடவேணும்.. ஏதாவது மாத்தி இருந்தாய் குழாயை வச்சு குடாஞ்சிடுவன்.....அப்படியே இதையும் சொல்லிடு 

மகா ஜனங்களே நோட்ட வாசிச்சா
சும்மா skip பண்ண நினைக்கிறவை லைக் பண்ணுங்கோ,
லைக் பண்ண நினைக்கிறவை share பண்ணுங்கோ ,
ஷேர் பண்ண நினைக்கிறவை ஒரு கோமண்ட போடுங்கோ... அப்பத்தான் கலை வளரும் 


the notes mentioned in this post are:
ஆசை முகம் மறந்து போச்சே....I: 
ஆசை முகம் மறந்து போச்சே....II: 
என்னிடம் கேட்கக்கூடாத கேள்விகள்....: 

வியாழன், நவம்பர் 03, 2011

ஆசை முகம் மறந்து போச்சே....II


செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்..... 

எங்கள் விவாத அணி டிஸ்கஸ் பண்ணுரதெண்டால் ஒரு ஒதுக்குப்புறமாக தனித்த வகுப்பறை தேடுவம். எங்கட விவாத நுட்பங்கள் ஒற்றறியப்படாதிருக்க எண்டு நினச்சா, அது தவறு, மகா தவறு. நாங்கள் ஒரு ரண களம் பண்ணிடிவம் எண்டதால. மீனி தான் எப்பவும் களப் பலி. வழக்கமா ஒரு தலைப்பெடுத்தா வகுத்தல், பிரித்தல், தொகுத்தல், பொல்லு, எண்டு நாலு படி அமைப்பில் ஆராய்வம். எல்லாத்தையும் வழக்கமா மீனி கவனிக்கும் மீனியே ஏதாவது மிஸ் பண்ணிட்டு எண்டா அதை கண்டுபிடிக்கிறதுதான் என்ட வேலை. கமி பிரித்தலுக்கு பிறகு தனியே தயாரயிடும்; எனக்கு தயாராக எந்த வேலையுமில்லை. சட்டப்படி மீனிக்கு அசிஸ்ட் பண்ண வேணும் ஆன நடக்கிறது தலை கீழ்.

மீனி தலைப்பை வகுக்கும் போது எல்லோரும் கொஞ்சம் கவனிப்பம்; பிறகு யாருக்கு என்ன வேலை எண்டு பிரிக்கேக்க ஜெனா பாடத் தொடங்கீடுவான். தொகுத்தல் - எல்லாரும் ஒரே புரிதலில் இருக்கிறமா எண்டு ஒரு நூல் குடுப்பம் (இது கொஞ்சம் சிக்கலான நுட்பம் இதை இங்கே விளக்க அவசியமில்லை). பொல்லு எண்டா எதிரணிக்கான பொறி - கேள்விகள் அல்லது ஒரு எதிர்பாரா மறு வாதம் இருக்கும் அவர்களுக்கு சார்பான ஒரு ஓட்டை, தெரிந்தே யாரவது ஒருவர் - மீனி (தல) அல்லது கிருபா/ பாத்தி (ரண்டாம் விவாதி) கொடுக்குற உளுந்த பொல்லு. எடுத்தடிச்சா எதிரணியில் எல்லாரும் அடிப்பினம் ஆன பிரயோசனமில்லை அது சப்பை கட்டு கடைசியா நான் அது சப்பை கட்டு எண்டு சொல்ல வேணும் இல்லாட்டி மீனி. 

இந்தப் பொல்லும் நூலும் - பாட்டும் கூத்துமா நடக்கும். என்ட வேலை எதிரணி எப்படி எல்லாம் காய் நகர்த்தும் எண்டு எதிர்வு கூறுறது; மீனி அதுக்கேத்த மாதிரி தயாராகும்.  நியாயமா எதிர்வு கூறுறது - சும்மா பில்ட் அப் பண்ணி மினிய டென்சன் பண்ணிடுவம் - ஜெனாவை நேரத்திர்கேற்ப பாடச்சொல்லி  ஒரு நாடகம் அரங்கேற்றுவம். மீனி மேலும் பிபி ஏறி, ரண்டாம் விவாதியை வறுத்தெடுக்கும் (உள்ளத்தில அவர்தான் சின்னவரு). பாத்தி எண்டா நமட்டு சிரிப்போட வறுபடும் கிருபா பாவம் அவனும் மீனி மாதிரி சீரியஸ் கேஸ். எங்கட அலுப்பில மீனி கை நிகம் முடிச்சு காலுக்கு போய் திரும்பி கையையே கடிக்கிற அளவுக்கு போயிடும். எவளவு அலுப்பு குடுத்தாலும் தாங்கினதாலதான் அவர நாங்க நல்லவாஆஆர் எண்டு சொல்லுறனாங்கள்.

ஜெனா குரல் ஜேசுதாஸ் அளவுக்கு இல்லாட்டியும் அதில ஒரு இசைவு இருக்கும், அவன் அனுபவித்து பாடுறதுதான் எண்களிண்ட வெற்றியின் ரகசியம். அம்மாவைப் பற்றி எஸ்.ஜே.சூரியா பாடுற பாட்டு "ஆசைப் பட்ட எல்லாத்தையும் "  அவன் அதை முந்தியே பாடுறவன் - எங்கட ஊர் நாட்டுப் பாடல் ஒண்டத்தான் களவெடுத்தவனுகள். ஜெனா பாடினா ஒரு பத்துப் பரப்பு மிளகாய்த் தோட்டம் எழுதி வைக்கலாம் - சுர்ர் எண்டு ஏறும் - தென்மராட்சி கள்ளு மாதிரி - கண்ணு கலங்கி வார்த்தை தளரடிச்சிடும் .

என்னில் ஏற்பட்ட சலனத்தை யாரும் கண்டு கொள்ளக் கூடாது எண்டு கொஞ்சம் சீரியஸா டிஸ்கஸ் பண்ணினதை யாரும் பெரிசா எடுக்கேல்ல. மீனியை கிண்டுற மூட்ல நான் இல்லை, ஜெனாவை லொள்ளு பாட்டுகளை விட்டுட்டு கொஞ்சம் கள்ளுப் (காதல்) பாடல்கள் பாடச் சொன்னன். நல்ல காலம் கமி கவனிக்கேல்லை. இந்த சலனம் போட்டியில கொண்டர இருக்கும் சறுக்கல் பற்றி தெரியாம நான் பாட்டுக்கு பாட்டை ரசிச்சபடி - என் மனசென்னும் செந்தாழம் பூவில் ஒரு தென்றல் வந்தாடியது - சிமிக்கி ஆடியதால தென்றல் வந்ததா இல்லை தென்றல் வந்து சிமிக்கியை ஆட வைச்சுத்தா - பாவம் நானே confuse ஆகிட்டன்- ஒரு மேசைக்கு மேலிருந்த படி ஜெனா பாடிக்கொண்டிருந்தான் - செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்..... - திருப்பி வைச்ச கதிரையில் இருந்து கொண்டு நான் லயித்திருந்தேன். எங்களுக்கிடையில் ஒரு முத்து சிமிக்கி எனக்கு மட்டும் ஆடிக்கொண்டிருந்தது. அந்த தோடு முடிகிற கழுத்து தோள் வளைவிலேயே எனது மனது மயங்கி கிறங்கி தங்கிக் கொண்டு வர மறுத்தது. அவசரமாக மளித்ததில் தப்பித்த ஒரு மீசை முடி, மூக்குக்கு கீழே முறுக்கு கொண்டது.

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா ...

ஜெனா பாடுற மாதிரி எனக்கு தெரியேல்லை , யாரோ கூப்பிடுற மாதிரி பட்டது, (எல்லா விவாதத்துக்கும் தண்ணீர் ஒரு போத்தல்ல கொண்டு போறது என் வழக்கம்) ; மச்சி தண்ணி எடுத்துட்டு வாறன் எண்டு களண்டுட்டன். அந்தக் கட்டடத்தின் ஒரு மூலையில் நாங்கள் தயார் படுத்திக் கொண்டிருந்தம் மறு மூலையில் கார்டன் பைப் ஒன்று இருக்கும், நடுவால இருக்கிற வாசல் தேவலயத்திற்கும் ஹோலுக்கும் நடுவிலுள்ள புல் மைதானம் நோக்கி இருக்கும் - மையத்தே தூபி கொண்ட, வட்டப் புல் மைதானம் அது - நாலு பக்கமும் இருந்து தூபி நோக்கி போகும் பாதை பரி தோமா மாணவ தலைவர்களுக்கு மட்டும், நாங்கள் மாறி நடந்துட்டா எங்கிருந்துதான் எண்டு தெரியாம வந்து மறிச்சிடுவானுகள் . அந்த வாசல் வழி ஒரு வளையல் கை தூணைப் பற்றி விடுவித்துக்கொண்டது - பிரமையா எனக் கிறங்கும் தருணத்தில் வேகமாக யாரோ ஓடும் சத்தம் கேட்டது. பார்த்துவரலாம் என்று முன்னேறினால் மீண்டும் ஓம்பி - "மச்சி டைம் முடிஞ்சிட்டுது - ரெடியா எண்டான்". இவனை என்ன செய்யலாம் எண்டு நீங்களே முடிவு பண்ணுங்கோ - என்ன இருந்தாலும் என்ட நண்பன் எண்டு ஆகிட்டான்.

வரும் போட்டியில் பொல்லு என்ட பக்கம் திரும்ப இருக்கிறதைப் பற்றி அறியாம இந்த களேபரத்தை விட்டுட்டு நான் விவாத அறைக்குள் நுழைந்தோம். சட் என்று ஞாபகம் வந்திச்சிது மறந்துட்டேனெண்டு - பொல்லு என்ன எண்டு மறந்திட்டன் , பொல்லு என்னடா எண்டு கேக்கலாம் எண்டா அதுக்குள்ள சத்தியசீலன் எழும்பி "பரி தோமாவின் விவாதப் போட்டி முதல் சுற்றுக்கு உங்களை வரவேற்கிறேன் ..." எண்டு தொடங்கீட்டான். விவாதம் தொடங்கீட்ட பேசா ஏலாது, கண்களால் கைது செய்தாதான் உண்டு, அரிதா பக்கத்திலிருக்கும் விவாதிக்கு துண்டில எழுதிக் குடுப்பம், அவளவே, விளங்காட்டி அவர் திருப்பி துண்டெழுதுறதில்லை - எழுதேலாது எண்டுறது ஒரு எழுதாத விதி. ஒரு தவிப்போடு நகர்ந்தது அந்த விவாதம் - அடுத்த பகுதியில்.

திங்கள், அக்டோபர் 31, 2011

எயார் டெல் சுப்பர் சிங்கர் 4 உம் ஏகாதிபத்திய பங்குதாரர்களும் ....


உயிரினங்களும் சூழலும் சேர்ந்த எல்லாம் ஆன இந்த இயற்கை தன்னை தானே மாற்றிக்கொண்டு நகர்கிறது. இதை கூர்ப்பு என்று சொல்கிறார்கள். இந்த கூர்ப்பு நான், நீங்கள், நாய், வடை, பிள்ளையார் கோவில் மோதகம், பண்டா குளிர்பானம், அரசடி அரட்டை,  facebook. http protocol என்று எல்லாத்திலையும் அவதானிக்கலாம். இந்த மாற்றத்தை ஒரு படிப்படியான நகர்வாக நோக்க முடியும். ஒரு நிலையில் இருந்து மற்ற நிலைக்கு நகர்வதை 'தெரிவு' என்கிறார்கள். யார் தெரிவு செய்கிறார்கள் , எந்த முறையில் தெரிவு செய்கிறார்கள், யார் இதை கண்காணிக்கிறார்கள் / ஒழுங்கு படுத்துகிறார்கள்.

இது ஒரு சிக்கலான அமைப்பு என்றாலும், எல்லாருக்கும் தெரிந்த அமைப்புதான். எயார் டெல் சுப்பர் சிங்கர் 4 இல் இறுதிப் போட்டி தெரிவும் இந்த வகையினதுதான். கடந்த கொழும்பு மாநகரில் ஐ.தே.கா தெரிவு செய்யப்பட்டதும் இப்படித்தான்.  ஒபாமா கூட தெரிவு தான் செய்யப்பட்டார். 

பயன்பாட்டில் மூன்று வகை தெரிவு அமைப்புகளை காணலாம் ,
  1. தேர்தல் - பெரும்பான்மை அபிப்பிராயம் 
  2. நியமிக்கப்பட்ட நடுவர் ஆயமும் போட்டியும் - வல்லுநர் அபிப்பிராயம் 
  3. பரீட்சை 
உலகெங்கிலும் உள்ள எல்லா மனித உருவாக்கங்களிலும் இருக்கிற மாதிரி மேற்சொன்ன தெரிவமைப்புகளும் ஆயிரத்தொன்பது சட்ட சிக்கல் கொண்டதுதான் - புதுசா ஒரு அமைப்பை சிந்திப்பதில் இலபமில்லை - தெரியாத கடாபியை விட தெரிந்த ராஜ பக்ஸ மேல் எனண்டதுதான் வியாக்கியானம். பொதுவா மனுவல் வாசிக்காம மருந்து சாப்பிடுறதும் மனுவல் வாசிக்காம ஏலெற்றிக்கல் சாமான்களை பாவிக்கிறதும் பழக்கமாகிட்டதால (முனுசாமி சொன்னது: அந்த கோதாரியை எவன் வாசிப்பான்- சும்மாவே இங்கிலீசு விளங்காது இதல பூதக்கண்ணாடி வச்சுத்தான் அதை வாசிக்க வேணும்) இந்த மாதிரி தெரிவு அமைப்புகளையும் அப்பிடியே எழுந்த மானத்தில பாவிச்சு பழகிட்டம். (கவுண்டமணி - டேய் கோமுட்டி தலைய பிரிண்ட் பண்ணி பெட்டிக்க வந்தாலே வாசிக்க மாட்டம்... இதல இதுக்கேல்லாம மனுவல் வாசிப்பம்.. நாங்கெல்லாம் யாரு.... )

பரீட்சை தெரிவு நாங்களெல்லாம் கடந்துவந்த கால்வாய் தான், நிறைய துன்பியல் நினைவுகளை கொண்டதுதான்.  படிச்சதை கேட்டா அதிர்ஷ்டம், படிச்சது நினைவிருந்தா சுக்கிர திசை, எழுதினதே சரி எண்டா சனிதா வாசனாவ - நீதான் முதலாம் பிள்ளை. பிட் அடிக்கிறதிலை எனக்கு அனுபவமில்லை ஆன எக்ஸாம் சென்டர்ல ஐங்கரன்ட கொஞ்சம் கேட்டேளுதின நினைவுண்டு - கீரிமலை தேவியின் பெயர் - சமய பாடம். மற்ற படி முன்னால இருக்கிற முனுசாமி பேப்பர் பாத்து நினைவுக்கு வந்த சில பதில்களை அதே முனுசாமி பேப்பர் பாத்து குழம்பினதில களிச்சிடலாம். (என்னைப் பார்த்து குழம்பின முனுசாமி - ரதீசனும் மடக்கையும் கதை தெரியாதவைக்கு தனியா சொல்லுறன் , இப்ப அது மட்டர் இல்லை) 

வைரமுத்து சிற்பிகளை செதுக்கு முயலும் போது (சிற்பியே உன்னை செதுக்குகிறேன் புத்தகத்தில்) எக்ஸாம் பற்றி ஒரு மனுவல் போட்டிருக்கிறார்... காதல் பற்றிக் கூட அதே புத்தகத்தில் மனுவல் உண்டு. அதில முக்கியமான பொயின்ட் என்னெண்டா
"மாணவரே இந்தக் கல்வி முறையில் தேர்வுதான் உன் அறிவைக்காட்டும் அடையாளம் என்றால் அதிலிருந்து நீ அங்குலமும் பின்வாங்காதே தேர்வு என்பது தேசிங்குராஜன் குதிரை. அதை நீ அடக்கி விட்டால் அது உனக்குப் பொதி சுமக்கும் கழுதை "
  1. வேற வழியில்லை எக்ஸாம் எல்லாரும் எழுதியே ஆகவேணும் 
  2. எக்சாமை பாஸ் பண்ணிட்டு அதை விமர்சனம் பண்ண விளை
  3. எக்ஸ்சாம் பாஸ் பண்ணுறது சுலபம் பகுத்தலும் தொகுத்தலும் தான் டிரிக் இது எந்தப் பாடத்திற்கும் பொருந்தும்
ஒரு முழுமைக்காக இதைத் தொட்டாலும் எக்ஸ்சாம் பற்றின எக்ஸ்சாமினேசன் போதும் எண்டு நினைக்கிறன். 

நியமிக்கப்பட்ட நடுவர் ஆயமும் போட்டியும் - வல்லுநர் அபிப்பிராயம் 
பெரும்பாலான துணைப் பாட விதான மட்டர்கள் இப்படித்தான் அசெஸ் பன்னுறவை. நடுவர் எண்டு ஒருத்தரை கொண்டந்திருத்தீட்ட வேற வழியில்லை அவர் என்ன சொன்னாலும் கேட்டுத்தான் ஆக வேணும். பாவம் அவரும் மனுஷன் தானே.ரெண்டு சக்கை பெர்போர்மன்சில எது பெட்டர் எண்டு சொல்ல வல்லுநர் தேவை ரெண்டு சப்பை பெர்போர்மன்சில எது பெட்டர் எண்டு சொல்லவும் வல்லுநர் தேவை (வல்லுனர் ரொம்பப் பாவம்). ஆனா ஒரு சக்கை பெர்போர்மன்சும் ஒரு சப்பை பெர்போர்மன்சும் எண்டா அது ஈஸி.

உதாரணமா, விக்ரமா சூர்யாவா யாரு நல்ல நடிகர் எண்டா அது கொஞ்சம் சிக்கல் தான் - சப்ஜெக்டிவ் அபிப்பிராயம். (எவண்டா அவன் கருணாநிதி எண்டது ..என்னது அவர் ஒரு பெருங் கலைஞரா.. நான் இந்த ஆட்டத்திற்கு வரலை )
விக்ரமா saam andersana எண்டால் ஈஸி ......சாம் அண்டர்சனா power star Dr. Srinivasan ஆ எண்டல் அது மண்டை காயுற விஷயம் திரும்பவும் தனிப்பட்ட அபிப்பிராயத்துக்கு தள்ளப்படும்.

இதில இந்த வல்லுனர்கள் ஒரு scheme வைச்சு மார்க்ஸ் போட்டா என்ன ஆகும் ? scheme ல அடங்காத விடயங்களை அசெஸ் பண்ணுறதா வேணாமா. ஒரு லெவலுக்கு மேல அந்த வல்லுனரின் சொந்த அபிப்பிராயங்கள் தெரிவில செல்வாக்கு செலுத்தும்.

இதில வல்லுனர் தெரிவும் புள்ளியிடும் முறைமையும் (scheme) முக்கியம். புள்ளியிடும் முறைமை போட்டி நடத்துறவை தங்கட அறிவு + அனுபவம் கொண்டு அமைக்கிறது. ஆனா வல்லுனர் தெரிவு மிக முக்கியமானதொன்று ஒரு நல்ல பேச்சாளர் கட்டாயம் ஒரு நல்ல பேச்சுப்போட்டி நடுவர் எண்டு சொல்ல முடியாது இதான் மறுதலையும் எப்போதும் உண்மையல்ல. என்னதான் நல்ல நடுவர் சொன்ன தாயிருந்தாலும் அந்தத் தீர்ப்பிலையும் குற்றம் கண்டு பிடிக்கலாம்.

ஒரு சராசரி கிரிக்கெட் செலேக்டர் பெர்பெக்ட் ஓவ் டிரைவ் அடிக்கிற மகிலவை செலக்ட் பண்ணிடுவார் ஆன ஜெயசூரியாவை ஒரு நல்ல பட்ஸ்மன் என்டறிய வாட் மோர் மாதிரி what more எண்டு out of the box தின்க் பண்ண வேணும்.

ஒரு போட்டியை சுவாரசியப் படுத்திர விசயமே அதில இருக்கிற random influence தான். அதே random influence தான் தான் அதன் முடிவுகளிலை விமர்சனங்களை உருவாக்குது. நிற்க தேர்தல் முறைமை இதெல்லாத்திலும் பெரிய பகிடி. அது பற்றி நேரம் இருந்தா பிறகொருக்கா...

அதுவரை - ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை.