ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

தனியே எமக்கோர் குணமுண்டு.... முகவுரை

முகவுரை
இது ஒரு சிறுவன் சொன்ன கதை. நீலக் காற்சட்டையும் வெள்ளை சட்டையும், அதில் செவ்வகமாய் பாடசாலை சின்னமுமாய் - ஒரு துடிப்பான சிறுவன். கதை கேட்டவனும் அப்படியே அவனும் ஒரு சிறுவன் தான். இந்தக் கதையில் அந்த இருவருமே முக்கிய பாத்திரங்களே. என் வழமையான 'கதைகளில்' இருந்து வேறுபட்டு இது உண்மை சம்பவங்களின் அடிப்படையிலானது. கதையில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் யாரையோ குறிப்பிடுவனவையே.

இந்த Spartan 300 படம் பார்த்திருப்பீர்களே... இல்லாட்டிக் கூட பரவாயில்லை இந்தக் கதை கேளுங்கள், அது மாதிரி ஒரு கூட்டம் தீரர்களின் கதை.

அந்தக் கல்லூரியை ;சேர்ந்தவர்களை இந்து-காளைகள் (hindu-bulls) என்றே அழைப்பது பொருத்தம், அவர்கள் கல்லூரி சின்னத்தை முன்னிட்டு மட்டும் நான் அப்படி சொல்லவில்லை. அவர்களின் இயல்புப் பொருத்தமும் சேர்த்துதான்.

அதில் இளையவனாகத் தெரிந்த சிறுவனுக்கு அப்படிச் சொல்வதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை; கொஞ்சம் மமதை, நிறையப் பெருமை! அடக்கமாகச் சொல்வது போல் ஆர்ப்பாட்டமாக சொல்வதில் வல்லவன் அவன். அவன் மட்டுமா அந்தக் கூட்டமே அப்படித்தான்.

அதை ஆமோதித்த சிறுவன் இவனை விட கொஞ்சம் பெரியவன் என்பது என் ஊகம், மற்ற சிறுவனின் தொனியைப் பார்த்தால் அப்படித்தான் தெரிந்தது. இத்தனை சிறிய நிகங்கள் கொண்ட விரல்களை இந்த சிறுவனைத் தவிர வேறு யாரிடமும் பார்த்ததில்லை. அந்த சிறுவனுக்கு நகங்கள் மீது ஏன் இத்தனை கோபமோ - ஒரு வேளை தாள வாத்தியக்காரனோ இல்லை தந்தி வாத்தியக்காரனோ - அப்படித்தான் மற்ற சிறுவன் ஏதோ சொன்னானே - என்ன அது - ஆ... ட்ரவுசர் போட்ட புல்லாங்குழல்....

கதை சொல்லும் பெரியவன் ஆறாம் வகுப்பு கேட்க்கும் சின்னவனுக்கு பத்தாம் வகுப்பு - என்னது குழப்பமா இருக்கா அது அப்படித்தான். கதை சொல்லும் பெரிய சிறுவன் ஒரு கணணி மென் பொறியியல் வலுனன். இலங்கையின் தலை சிறந்த மென்பொருள் வடிவமைப்பு கம்பனியில் கூப்பிட்டு வேலைக்கமர்த்தப்பட்ட ஒரு வித்தைக்காரன் (நன்றி பிரேம்நாத் சார்). மொரட்டுவப் பல்கலைக்கழக இலத்திரனியல் பொறியியல் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்த ஒரே தமிழர். இந்த ஏங்க ஊரு பாட்டுக்காரன் பெயர் தயாபரன். கதை சொல்கிற போது ஒரு ஆறாம் வகுப்பு சிறுவனாகத்தான் சொன்னார் - கேக்கிறவன் ஒரு பத்தாம் வகுப்பு பெடியனாகத்தன் கேட்டான். அந்த இரவு முழுவதும் நினைவு மழை......(சக்திவேல் வார்த்தைகள் படி) நினைவிடை தோய்தல்....


கதை கேட்பவனே கதை சொல்லியும் ஆவான்.......

இந்த முகவுரைக்கும் கதைக்கும் இம்மியளவும் சம்பந்தம் இல்லை, ஆனா இதுதான் கதை ஜனித்த புள்ளி. இந்தக் கதையில் வரும் சித்தரிப்புகளுக்கும் வார்த்தைகளுக்கும் முழுமையான் சொந்தக்காரர் தயா அண்ணா தான். இதில் வரும் சம்பவங்களும் மனிதர்களும் எங்கள் கதாநாயகர்கள், பெருமையும் சிறப்புமாய் அவர்கள் கட்டிய கோட்டையில் தான் நாங்கள் கொடியலங்காரம் செய்தோம். சொன்னவர்களைக் காட்டிலும் சொல்லியதைக் காட்டிலும் நிறையக் கதைகள் இருக்கு. ஒரு இரவில் சில மணித்துளிகளில் கனவு மாதிரி கடந்த பசுமை நினைவுகளில் வேள்ளெனத் தெரிந்த புள்ளிகளை கோர்த்து கோலமிடுகிறேன்...

உங்கள் வாழ்த்துக்கள் பெரியவனுக்கும் வருத்தங்கள் சின்னவனுக்குமாய் இருக்கட்டும்.

2 கருத்துகள்:

எஸ் சக்திவேல் சொன்னது…

இது மீள்பதிவா ?திகதி பழசாக உள்ளது. ஆனால் முன்பு பின்னூட்டமிட்டதாகவும் ஞாபகம் உள்ளது..

ஏ.எ.வாலிபன் சொன்னது…

அந்தப் பதிவை நீளம் காரணமாய் துண்டு பண்ணினது அவ்வளவே.

கருத்துரையிடுக