விவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

தனியே எமக்கோர் குணமுண்டு....

முகவுரை


காட்டிடை கற்பகதரு.....

அது 1992, ஜூன் அல்லது ஜூலை என்று நினைகிறேன்.... பம்பலப்பிட்டி பிளட் பஸ் தரிப்பை ஆதிசேசன் படம் விரித்தது போல் நிழல் போர்த்து காத்து நிற்கும் மரங்களை வெப்பக் காற்று உலுக்கி எடுத்துக்கொண்டு இருந்தது. என்னத்தைப்பற்றி காற்று மரங்களிடம் விசாரித்து இருக்கும்.... சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த கோரத்தையா, இல்லை சற்று நேரத்தில் கதிரேசன் மண்டபத்தில் நிகழ இருக்கும் பிரமிப்பையா....

பம்பலப்பிட்டி பிளட்ஸ் பஸ் தரிப்பிடம்
கோவிலுக்கு கூட இவ்வளவு கூடியதில்லையே, கடைசியா ஆடிவேலுக்குதான் இதனை வேலைப் பளு இருந்தது, அப்படி ஒரு பள்ளிகூட விழாவிற்கு எதற்கு இதனை 'தலை'கள். அந்த சிங்களப் போலீஸ்காரருக்கு அயர்ச்சியும் அதிசயிப்பும் சேர்ந்து அதிர்ச்சி கூட. ஆண்கள் பாடசாலை எண்டுதானே சொன்னார்கள் எதற்கு இத்தனை பெண்கள். half saree அணிந்த வளையல் கரங்கள் அலைமோதியது அவருக்கு அதிர்ச்சியே. போலிஸ் பயிற்சியில் விடியக்காலையே எழுந்து வெறு வயிற்றோடு மைதானத்தில் சுமார் ஐந்தாறு சுற்றுகளை அரை மணி நேரத்துக்குள் ஓடத் தெரிந்த, விறைப்போடு சலூட் அடிக்க தெரிந்த, கள்ளனை கண்களால் அளவெடுக்க தெரிந்த அந்த நடுத்தர வயது போலீசுக்கு இந்த வளையல் கரங்கள் யாராக இருக்கும் எதுக்கு அலை மோதுகிறார்கள் எண்டு கண்டுபிடிக்க தெரியவில்லை.

அன்று சபையில் ஒரு அற்புதம் நிகழ்த்த இருக்கும் இளஞ்ஞனின் காதலிகளும் காதலிகள் ஆகப்போகிறவர்களுமே ஒரு கூட்டம் இருக்குமே. மற்றவர்களையும் சேர்த்தால். காக்கிக்கு இது புரிய வாய்ப்பில்லை.


மாலைக் கடைக்காரர்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது, குறிப்பாய் மல்லிகை சரம். மொட்டு மாலை விலை அதிகம் ஆனாலும் கிராக்கி இருந்தது. விரைவில் மல்லிகை விற்றுத் தீர்ந்ததால் மற்றைய பூச்சரங்களை வகை வகையாய் கோர்த்து வைத்தார்கள். கனகாம்பரம் கையிருப்பில் இல்லை, ஆனால் பலர் குறிப்பாக நடுத்தர வயதுப் பெண்கள் அதை இருக்கா இருக்கா எண்டு ஆவலோடு கேட்டு ஏமாந்து போனார்கள்.

பூக்கடைக் காரர்களுக்கு மட்டுமல்ல அந்த பலசரக்கு கடையிலும் நல்ல கூட்டம், பாக்கட்டில் வரும் தீன்பண்டங்கள், பிஸ்கட்கள், டொபிகள், மென்பானங்கள், கண்டோஸ் மற்றும் பெப்பர்-மின்ட்கள் விரைந்து விற்பனை ஆனது. பெரிய அளவில் இலாபம் தராத பண்டங்களே ஆயினும் நிறைந்து விற்றதில் முதலாளி மகிழ்வாயிருந்தார். ஆனாலும் கடைப் பையன்களிடம் கண்டிப்பாயே இருந்தார்.

வழக்கத்துக்கு மாறாய் நிறைந்த கூட்டம் தங்களுக்கு பலனளிக்காததில் பிச்சைக்காரர்கள் கூட்டம் நிறைய ஏமாற்றம் கொண்டது. கோவில் திருவிழாக் கூட்டம் அல்லது சமய விழாக் கூட்டம் என்றால் தங்களை வலுவாகக் கவனிக்கும். இந்தியாவிலிருந்து யாரும் பிரபலங்கள் வந்திருந்தால் தான் இப்படிக் கூட்டம் அலை மோதும் ஆனாக் கவனியாது. இது புதுசு, உள்ளூர் விழாதான் ஆனா இவ்ளவு ஆர்ப்பாட்டம். போன கிழமை கூட ஒரு உள்ளூர் பிரபலம் - டிவி எல்லாம் தெரிந்த முகம் ஒரு விழா நடத்த்தினாரே, ஆனா கூட்டம் இல்லையே. குறிப்பா இளைஞ்ஞர் கூட்டம் இந்த இடத்திற்கு புதுசு. கோவிலும், சினிமா இல்லாத பண்பாட்டு விழாக்களும் இளசுகளை அவளவாய் ஈர்த்ததில்லை.

வித்தக விநாயகர்
ஏன் இவ்வளவு கூட்டம்? ஒருவேளை இந்தக் கல்லூரியின் அமைப்பு:- நீலம், சிவப்பு, பச்சை எண்டு வகை வகையான டை அணிந்த பெண்கள் பாடசாலைகள் சுற்றி இருக்க என்பதாலோ.... ஒருவேளை அதைத் தான் தலைநகரின் மையப்பகுதியில் இருக்கும் தன்னிகரில்லாப் பாடசாலை எண்டு சொல்லுரானுகளோ?.... யாருக்கு தெரியும்வித்தக-விநாயகருக்கேவெளிச்சம்.

வாசலில் இருந்த பரபரப்பு உள்ளே பாதையில் தெரியவில்லை. அகன்றிருந்த பாதையும், அங்கால் பக்கம் இருந்த மண்டப வாசலும் உள்ளே நடக்கிற பரபரப்பை பெரிதுபடுத்தியது - ஒரு திரில் அனுபவமாய் - suspense effect இல்.

திறந்து விட்டிருந்த கிறில் கேட்டுக்கு இடையில் ஒரு மேசை, இரண்டு குத்து விளக்கு, நடுவே ஒரு கும்பம், சில வேட்டி கட்டின தலைகள் தெரிந்தன. ஒருவன் குத்து விளக்கை காற்றிடம் இருந்து காப்பற்ற கங்கணம் கட்டிக் கொண்டு போராடிக் கொண்டிருந்தான்.

இந்த ஆர்ப்பாட்டங்ககளுக்கு மத்தியில், அதை கண்டு கொள்ளாதவர் போல் எங்கட கதையின் நாயகன் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தார். பள்ளி உடுப்புத்தான், நல்லா கஞ்சி போட்டு தோச்சு அயன் பண்ணின மிடுக்கான சட்டை; கையில் ஒரு பையில் வேட்டி குருத்தா எண்டு நினைக்குறேன். பாடலில் லயித்திருந்தவர் நேற்று பயிற்சியில் சொன்ன மாதிரி ஒரு குறித்த வரியைப் பாட முயன்று கொண்டிருந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக பயின்ற சிறுவர்களும், பயிற்றுவித்த ஆசிரியர்களும், கூட்டி வந்த பெற்றாருமாய், எல்லோருமே வறுத்தெடுக்கப் பட்டார்கள். தொடர்ச்சியான கடும் பயிற்சி + ஒத்திகை. ஆனா இந்த நாடக் காரங்கள் பயிலும் போது தங்களை மாதிரி நண்டு சிண்டுகளை துரத்தி விட்டுடுவானுகள் என்பதுதான் அவனின் ஒரே வருத்தம். அதிலும் தமிழழகன் உருவமும் குரலும் அவர் பேசமுதலே பயம் பற்றிக் கொள்ளும். தெறித்து ஓடிவிடுவானுகள். சுபாஸ் பற்றி கண்டதை விட கதைகள் அதிகம் என்பதால் ஒரு முடிவற்ற குழப்பம் அவர் பற்றிய அபிப்பிராயத்தில் இருந்தது. எது எப்படியோ இண்டைக்கு அந்த நாடகத்தை பார்த்து விடலாம். எதோ ஒரு அரச நாடகம் என்பதை தாண்டி வேறேதும் தெரியாது, ஆர்வம் மனதை அரிக்கத் தொடங்கியது....

இவன் சுதர்சனை இன்னும் காணவில்லையே, எங்கயாவது மூலைக்க நிண்டு சுரம் பாடிப் பார்கிறானா - பாவி என்ன குரல் அவனுக்கு. உள்ளுக்குள் இருந்து ஒரு வெள்ளை நிற வான் வேகமாக கடந்து போனதில் சிந்தனை வேறு தளத்திற்கு தாவியது. அண்டைக்கு அப்படித்தான் ஒரு லே-லான்ட் பஸ் பிடிச்சு தமிழ்தினப் போட்டி போனது நினைவு வந்தது - கூடவே பூரிப்பும் பெருமையும்.

ஏறு போல் நடை

சுபாஷ் அண்ணா:
உதவி சிரேஷ்டமாணவ தலைவர் 93-94
தமிழ் அண்ணா:
சிரேஷ்டமாணவ தலைவர் 92-93
தமிழ்த் தினப்போட்டியில் மாவட்ட, மாகாண ஏன் அகில இலங்கையளவில் எங்களுக்கு எத்தனை பொற் பதக்கங்கள். மாவட்ட மட்டப் போட்டிக்கு போன போதுதான் பஸ் பிடிச்சு போனது. வழமையாக கடுமையாக இருக்கும் தமிழ் மற்றும் சுபாஸ் அண்ணாமார் சிரிச்சுக் கும்மாளம் அடிச்சுக் கொண்டு கூட்டிக்கொண்டு போனது ஒரு இன்ப அதிர்ச்சி. சிரேஷ்ட மற்றும் பிரபல்யமான (அடுத்த வருடம் உதவி சிரேஷ்ட மாணவதலைவர் ஆகப் போகிற) மாணவ தலைவர் என்பதாலேயே அவர்கள் மீது ஒரு பயம் கலந்த மரியாதை. முகுந்தன், லோசன் எண்டு ரெண்டு அண்ணாமார் - அவர்களிலும் சின்ன அனால் இவனிலும் பெரிய பெடியனுகள் தமிழோடும் சுபாஸோடும் நல்ல ஓட்டப் பேசிப் பழகினானுகள். விவாத அணிக்காரனுகள். சுபாசண்ணாவின் ஒரு காதல் கவிதையை லோசனும்முகுந்தனும் - தமிழுக்குகிண்டலும் கேலியுமாய் சொல்லிக்கொண்டு வந்தது ஆச்சரியமாயும் உற்சாகமாயும் இருந்தது. வயது வேறுபாடின்றி அவனுகள் சிரேஷ்டமாணவதலைவர்களையே கிண்டலடிப்பது இந்த ஆறாம் வகுப்பு சிறுவனுக்கு புதிதே. அவனுகள் எல்லாம் எதோ ஒரு பெருமையும் தினவையும் அந்த சிறுவனுக்குள் அவனுக்கு அறியாமலேயே ஊடிக்கொண்டிருந்தானுகள். (இவர்களைப்பற்றி இன்னும் விவரமாய் வருகிற தொடர்களில் பதிய இருப்பதால் இப்போ தவிர்த்து விடுகிறேன்)

பஸ் பிடிச்சுப் போனவனுகள் வரேக்க ஒரு ஒட்டோவும் பிடிக்க வேண்டி இருந்தது - பெற்ற பரிசுகளை பாராட்டுகளை அள்ளி வர. தமிழ்அழகனின் நாடகம் முதற் பரிசு பெற்றதோடு, பின்னர் மாகாண மற்றும் அகில இலங்கை மட்டம் வரை சென்று வெற்றி பெற்றது. மேலும் நடுவர்களின் பரிந்துரையின் பேரில் தமிழ் தின பரிசளிப்பு விழாவில் அரங்கும் ஏறியது. நாடகம் மட்டுமல்ல. கீழ் பிரிவு மேல் பிரிவு குழு தனிப் பாடல்கள் பேச்சு கவிதை கட்டுரை இன்னும் இன்னாவோ எல்லாம் - முதல் பரிசு புதல பரிசு முதல் பரிசு....

பரிசுகளை அறிவிப்பவர் முதலே எல்லா முதல் பரிசும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கே எண்டு சொல்லிருக்கலாம் போல.... அப்படி தொடர்ச்சியாக இந்துக்கலூரி முதலிடம் , இந்துக்கலூரியை சேர்ந்த இவர் முதலிடம் ...சொல்ல அவருக்கு அலுத்ததோ இல்லையோ கேட்ட எங்களுக்கு தித்திப்பு... மற்றவர்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது, அதிலும் சில பொறாமைக்காரர்கள் முகத்தில் ஒரு கலியாணத்திற்கு தாளிக்குமளவுக்கு கடுகு வெடித்தது எண்டால் பாருங்களேன். யார் கண்ணுக்கும் படாமல் சில காதல்களும் வெடித்தது.

"ஊ..." என்ற கத்தல்களும், சீண்டலும், குறிப்பாய் பெண்கள் கல்லூரிகளைப் பார்த்து கலர்ஸ் காட்டுறதும், அலம்பல், சிலம்பல், ஆர்ப்பாட்டம், பெருமை, வீறு, ஆனந்தம் எல்லாம். தரையில் கால்கள் நிற்கவில்லை. தங்கள் குழுவிற்கு பரிசு கிடைத்தது எண்டு தெரிந்ததும் கைதட்டி ஆரவாரப் படுத்தி கை குலுக்கி - சந்தோசம் + வெக்கம். நாம ஹீரோ நிஜமாயே ஹீரோவாய் உணர்ந்தார் - ஒருமுறை கொலரை செரிப்படுத்திக் கொண்டார் சுற்றும் முற்றும் பார்த்து விட்டும் மீண்டும் அமர்ந்தார். இப்போ மாணவதலைவர்கள் மீது வாஞ்சை வந்தது, அவனுகள் விவாதம், நாடகத்தில் காட்டிய ஆளுமை கருவத்தையும் சந்தோசத்தையும் தந்தது - இனிமேல் இவுனகள் என்ன சொன்னாலும் கேக்கலாம் எண்டு தோன்றிற்று.

இது தான் அரும்புகிற மீசை முறுகுகிற தருணம், மார் புடைத்து தோள் விடைத்து சிங்கங்கள் மாதிரி..... ஜிவ் எண்டு மண்டைக்குள் ஏறுகிற போதை சொல்லால் வடிக்கவொணா உணர்வு - ரதியும் மன்மதனும் நிறைய அம்புகளோடு களம் காணுகிற கணம். அவசரத்தில் ஒழுங்கில்லாமல் நடக்கிற போட்டிகளுக்காய் departmet காரர்களோடு ஆசிரியர்கள் சண்டை பிடிக்கிற தருணம். எனக்காக என் கல்லூரி, ஆசிரியர்கள் மாணவ தலைவர்கள் அண்ணாமார் பின்னே நிற்பார்கள் என்பது புரிகிற பொழுது.

இது என் கல்லூரி எண்டு உணர்வு மேலோங்குகிற தருணம், மண்டை கனக்கும், கைகள் பையில் தைக்கப்பட்ட சின்னத்தை முத்தமிடும், தலை கால் புரியாத வெறி அது - வேண்டியதே. இவன் என் கல்லூரியின் மாணவதலைவன் - இத்தனை பேரை கட்டி-மேய்த்து, சொல்லிக்கொடுத்து, பயிற்றுவித்து, உற்சாகப் படுத்தி, தட்டிக் கொடுத்து, தட்டிக் கேட்டு, இடையில் கன்டீனுக்கு கூட்டிப் போய், காசு கொண்டர மறந்தவனுகளுக்கும் சேர்த்து வாங்கி பகிர்ந்து உண்டு, பகிர பங்கு பெற சொல்லிக் கொடுத்து, வெற்றி வாங்கி, அதை கொண்டாட சொல்லிக் கொடுத்து, கொண்டாடி மகிழ்ந்து - இவன் அண்ணா - என்னை அடித்தாலும் மிரட்டினாலும் நான் பணிய வேண்டிய; பணிய விரும்புகிற அண்ணா எண்டு தோன்றுகிற தருணம். அவன் அடையாளப் படுத்திக் கொடுத்த மேடையில்த் தான் நான் ஏறி முழங்குகிறேன், அக்காமாரும் நடுவர்மாரும் எல்லாரும் அவன் வெற்றியையும் பெருமையும் ஏலவே எங்களுக்கு ஏற்றித்தான் பார்க்கிறார்கள்; கூடவே எதிர்பார்ப்பும். இந்த அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் தந்தவனுக்கு நான் பணிவது என் கடமை - எங்கள் எல்லார் வெற்றியையும் தட்டி குடுத்து பாராட்டிய அவன் வெற்றியை எப்படிக் கொண்டாடுவது - அவர்கள் பெயர்களை உரக்க கத்தினோம் -ஒரு லயத்தோடு
தமிழ் அண்ணா! தமிழ் அண்ணா! தமிழ் அண்ணா!
அறிவிப்பாளரோடு சேர்ந்து நாங்களும் உச்சரித்தோம் - சுபாஸ் அண்ணா- சுருதி சேர்த்தோம்- ஒரு புன்னகையோடு அதற்க்கு வழி விட்டார் அறிவிப்பவர். தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு தமிழ் தினப் போட்டிகளில் வகைப்பட்ட எல்லாப் பிரிவுகளிலும் விவாதம், இசை, நாடகம் எண்டு முத்தமிழிலும் ஈடு இணையற்ற வெற்றிகளைக் குவித்து விட்டுத்தான் இந்த விழாவிற்கு வருகிறது கல்லூரி. ஆனால் கண் பட்ட மாதிரி எங்கள் குழுப் பாடல் வகையில் அகில இலங்கை மட்டப் போட்டியில் ஒரு சின்ன சிக்கல் ஆகிவிட்டது.


வியாழன், நவம்பர் 03, 2011

ஆசை முகம் மறந்து போச்சே....II


செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்..... 

எங்கள் விவாத அணி டிஸ்கஸ் பண்ணுரதெண்டால் ஒரு ஒதுக்குப்புறமாக தனித்த வகுப்பறை தேடுவம். எங்கட விவாத நுட்பங்கள் ஒற்றறியப்படாதிருக்க எண்டு நினச்சா, அது தவறு, மகா தவறு. நாங்கள் ஒரு ரண களம் பண்ணிடிவம் எண்டதால. மீனி தான் எப்பவும் களப் பலி. வழக்கமா ஒரு தலைப்பெடுத்தா வகுத்தல், பிரித்தல், தொகுத்தல், பொல்லு, எண்டு நாலு படி அமைப்பில் ஆராய்வம். எல்லாத்தையும் வழக்கமா மீனி கவனிக்கும் மீனியே ஏதாவது மிஸ் பண்ணிட்டு எண்டா அதை கண்டுபிடிக்கிறதுதான் என்ட வேலை. கமி பிரித்தலுக்கு பிறகு தனியே தயாரயிடும்; எனக்கு தயாராக எந்த வேலையுமில்லை. சட்டப்படி மீனிக்கு அசிஸ்ட் பண்ண வேணும் ஆன நடக்கிறது தலை கீழ்.

மீனி தலைப்பை வகுக்கும் போது எல்லோரும் கொஞ்சம் கவனிப்பம்; பிறகு யாருக்கு என்ன வேலை எண்டு பிரிக்கேக்க ஜெனா பாடத் தொடங்கீடுவான். தொகுத்தல் - எல்லாரும் ஒரே புரிதலில் இருக்கிறமா எண்டு ஒரு நூல் குடுப்பம் (இது கொஞ்சம் சிக்கலான நுட்பம் இதை இங்கே விளக்க அவசியமில்லை). பொல்லு எண்டா எதிரணிக்கான பொறி - கேள்விகள் அல்லது ஒரு எதிர்பாரா மறு வாதம் இருக்கும் அவர்களுக்கு சார்பான ஒரு ஓட்டை, தெரிந்தே யாரவது ஒருவர் - மீனி (தல) அல்லது கிருபா/ பாத்தி (ரண்டாம் விவாதி) கொடுக்குற உளுந்த பொல்லு. எடுத்தடிச்சா எதிரணியில் எல்லாரும் அடிப்பினம் ஆன பிரயோசனமில்லை அது சப்பை கட்டு கடைசியா நான் அது சப்பை கட்டு எண்டு சொல்ல வேணும் இல்லாட்டி மீனி. 

இந்தப் பொல்லும் நூலும் - பாட்டும் கூத்துமா நடக்கும். என்ட வேலை எதிரணி எப்படி எல்லாம் காய் நகர்த்தும் எண்டு எதிர்வு கூறுறது; மீனி அதுக்கேத்த மாதிரி தயாராகும்.  நியாயமா எதிர்வு கூறுறது - சும்மா பில்ட் அப் பண்ணி மினிய டென்சன் பண்ணிடுவம் - ஜெனாவை நேரத்திர்கேற்ப பாடச்சொல்லி  ஒரு நாடகம் அரங்கேற்றுவம். மீனி மேலும் பிபி ஏறி, ரண்டாம் விவாதியை வறுத்தெடுக்கும் (உள்ளத்தில அவர்தான் சின்னவரு). பாத்தி எண்டா நமட்டு சிரிப்போட வறுபடும் கிருபா பாவம் அவனும் மீனி மாதிரி சீரியஸ் கேஸ். எங்கட அலுப்பில மீனி கை நிகம் முடிச்சு காலுக்கு போய் திரும்பி கையையே கடிக்கிற அளவுக்கு போயிடும். எவளவு அலுப்பு குடுத்தாலும் தாங்கினதாலதான் அவர நாங்க நல்லவாஆஆர் எண்டு சொல்லுறனாங்கள்.

ஜெனா குரல் ஜேசுதாஸ் அளவுக்கு இல்லாட்டியும் அதில ஒரு இசைவு இருக்கும், அவன் அனுபவித்து பாடுறதுதான் எண்களிண்ட வெற்றியின் ரகசியம். அம்மாவைப் பற்றி எஸ்.ஜே.சூரியா பாடுற பாட்டு "ஆசைப் பட்ட எல்லாத்தையும் "  அவன் அதை முந்தியே பாடுறவன் - எங்கட ஊர் நாட்டுப் பாடல் ஒண்டத்தான் களவெடுத்தவனுகள். ஜெனா பாடினா ஒரு பத்துப் பரப்பு மிளகாய்த் தோட்டம் எழுதி வைக்கலாம் - சுர்ர் எண்டு ஏறும் - தென்மராட்சி கள்ளு மாதிரி - கண்ணு கலங்கி வார்த்தை தளரடிச்சிடும் .

என்னில் ஏற்பட்ட சலனத்தை யாரும் கண்டு கொள்ளக் கூடாது எண்டு கொஞ்சம் சீரியஸா டிஸ்கஸ் பண்ணினதை யாரும் பெரிசா எடுக்கேல்ல. மீனியை கிண்டுற மூட்ல நான் இல்லை, ஜெனாவை லொள்ளு பாட்டுகளை விட்டுட்டு கொஞ்சம் கள்ளுப் (காதல்) பாடல்கள் பாடச் சொன்னன். நல்ல காலம் கமி கவனிக்கேல்லை. இந்த சலனம் போட்டியில கொண்டர இருக்கும் சறுக்கல் பற்றி தெரியாம நான் பாட்டுக்கு பாட்டை ரசிச்சபடி - என் மனசென்னும் செந்தாழம் பூவில் ஒரு தென்றல் வந்தாடியது - சிமிக்கி ஆடியதால தென்றல் வந்ததா இல்லை தென்றல் வந்து சிமிக்கியை ஆட வைச்சுத்தா - பாவம் நானே confuse ஆகிட்டன்- ஒரு மேசைக்கு மேலிருந்த படி ஜெனா பாடிக்கொண்டிருந்தான் - செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்..... - திருப்பி வைச்ச கதிரையில் இருந்து கொண்டு நான் லயித்திருந்தேன். எங்களுக்கிடையில் ஒரு முத்து சிமிக்கி எனக்கு மட்டும் ஆடிக்கொண்டிருந்தது. அந்த தோடு முடிகிற கழுத்து தோள் வளைவிலேயே எனது மனது மயங்கி கிறங்கி தங்கிக் கொண்டு வர மறுத்தது. அவசரமாக மளித்ததில் தப்பித்த ஒரு மீசை முடி, மூக்குக்கு கீழே முறுக்கு கொண்டது.

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா ...

ஜெனா பாடுற மாதிரி எனக்கு தெரியேல்லை , யாரோ கூப்பிடுற மாதிரி பட்டது, (எல்லா விவாதத்துக்கும் தண்ணீர் ஒரு போத்தல்ல கொண்டு போறது என் வழக்கம்) ; மச்சி தண்ணி எடுத்துட்டு வாறன் எண்டு களண்டுட்டன். அந்தக் கட்டடத்தின் ஒரு மூலையில் நாங்கள் தயார் படுத்திக் கொண்டிருந்தம் மறு மூலையில் கார்டன் பைப் ஒன்று இருக்கும், நடுவால இருக்கிற வாசல் தேவலயத்திற்கும் ஹோலுக்கும் நடுவிலுள்ள புல் மைதானம் நோக்கி இருக்கும் - மையத்தே தூபி கொண்ட, வட்டப் புல் மைதானம் அது - நாலு பக்கமும் இருந்து தூபி நோக்கி போகும் பாதை பரி தோமா மாணவ தலைவர்களுக்கு மட்டும், நாங்கள் மாறி நடந்துட்டா எங்கிருந்துதான் எண்டு தெரியாம வந்து மறிச்சிடுவானுகள் . அந்த வாசல் வழி ஒரு வளையல் கை தூணைப் பற்றி விடுவித்துக்கொண்டது - பிரமையா எனக் கிறங்கும் தருணத்தில் வேகமாக யாரோ ஓடும் சத்தம் கேட்டது. பார்த்துவரலாம் என்று முன்னேறினால் மீண்டும் ஓம்பி - "மச்சி டைம் முடிஞ்சிட்டுது - ரெடியா எண்டான்". இவனை என்ன செய்யலாம் எண்டு நீங்களே முடிவு பண்ணுங்கோ - என்ன இருந்தாலும் என்ட நண்பன் எண்டு ஆகிட்டான்.

வரும் போட்டியில் பொல்லு என்ட பக்கம் திரும்ப இருக்கிறதைப் பற்றி அறியாம இந்த களேபரத்தை விட்டுட்டு நான் விவாத அறைக்குள் நுழைந்தோம். சட் என்று ஞாபகம் வந்திச்சிது மறந்துட்டேனெண்டு - பொல்லு என்ன எண்டு மறந்திட்டன் , பொல்லு என்னடா எண்டு கேக்கலாம் எண்டா அதுக்குள்ள சத்தியசீலன் எழும்பி "பரி தோமாவின் விவாதப் போட்டி முதல் சுற்றுக்கு உங்களை வரவேற்கிறேன் ..." எண்டு தொடங்கீட்டான். விவாதம் தொடங்கீட்ட பேசா ஏலாது, கண்களால் கைது செய்தாதான் உண்டு, அரிதா பக்கத்திலிருக்கும் விவாதிக்கு துண்டில எழுதிக் குடுப்பம், அவளவே, விளங்காட்டி அவர் திருப்பி துண்டெழுதுறதில்லை - எழுதேலாது எண்டுறது ஒரு எழுதாத விதி. ஒரு தவிப்போடு நகர்ந்தது அந்த விவாதம் - அடுத்த பகுதியில்.

புதன், அக்டோபர் 26, 2011

ஆசை முகம் மறந்து போச்சே....I


ஆசை முகம் மறந்து போச்சே.... பாரதியார்

St thomas college debate tournerment debate எண்டால் எங்களுக்கு (குறிப்பா எனக்கும் கமிலசுக்கும்) இரண்டு குறிக்கோள் தான், ஒன்று discussion ல ஜெனவிண்ட பாட்டு, மற்றது அங்கத்த கான்டீன் கொத்து ரொட்டி. St johns டின் மில்க் டீயும் ரோல்சுக்கும் அடுத்ததா st thomas கொத்தை தான் சொல்லுவன். ஒண்டில் முகுந்தன் அண்ணாவை ஐஸ் பண்ணி வாங்குவம் இல்லாட்டி மீனி, ஏலாக் கட்டத்தில கலக்சன் தான். ஆனா எனக்கு மட்டும் ஒரு hidden agenda இருந்தது. இதுவரைக்கும் யாரிடமும் சொல்லாத அந்த 'முத்து சிமிக்கி' இரகசியத்தை இங்கே பகிர்கிறேன். இது பலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு அதிர்ச்சியையும் தரலாம். எது எப்படியோ ஒரு முறை முடிவி செய்திட்டா என்ட பேச்சை நானே கேக்க மாட்டன். 

முதல் சுற்று எல்லா பள்ளிக்கூட விவாத அணிகளும் திரண்டிருந்தது. நாங்கள் பரி தோமா தமிழ் மன்ற தல ஓம்பியை கழட்டிக் கொண்டிருந்தம். எங்கள் கூட றோயல் அணித்தல கஜேந்திரன் - ஓம்பிரகாசிண்ட மச்சான், சக்தி F.M காண்டி - எப்பவும் கடி தாங்கும் இதயம்.  ஓம்பி அரக்க பரக்க எங்கட பக்கமா ஓடினா அவன கூப்பிட்டு கடிக்கிறது இல்லை எண்டா காண்டி. இந்த பரபரப்பில் வழமை போல் கஜன் இன்றைய ஸ்பெஷல் யாரெண்டு பெண் விவாத அணிகளை சீர் தூக்கி ஆராய்ந்து கொண்டிருக்கையில் (அதென்ன மாயமோ மந்திரமோ யார் செஞ்சாலும் அவன் தலையில தான் விடியிறது). என்னை யாரோ கவனிக்கிற உணர்வு ஆனா திரும்பி பார்த்தா யாரெண்டு செரியா தெரியேல்லை. நான் அவ்வப்போ கவனம் திரும்பிறதை ஜெனா தான் முதல நோட் பண்ணி சபைக்கு முன் வைச்சான். இவனுகள் வாயில விழுந்த ஒரு படமே எடுத்துடுவானுகள் அதிலையும் கமிலஸ் - கேக்கவே வேணாம் மெகா சீரியலே எடுத்திடுவான். கமிலஸ் அதை முழுசா கிண்டுறதுக்குளை ஓம்பி திரும்ப அந்தப் பக்கம் வந்து காப்பாத்தினான்.
என் முதுகில் ஊர்கின்ற கண்களை என்னால் உணர முடிகிறது. ஆனால் யாரெண்டு பார்கத்திரும்பிய போதெல்லாம் ஒரு தயக்கம், அரங்கில் இடையே நிறைந்திருந்த தலைகளும், கூட விருந்த நண்பர்களும் மேலும் தயக்கத்தை கூட்டி தடங்கலாயும் ஆனார்கள். முதன் முதலாய் நிறைய அணிகள் வந்ததிற்கு வருத்தப் பட்டேன். கடைசியா அந்தக் கண்களுக்கு சொந்தமான காதுகளை அடையாளம் கண்டு கொண்டேன். விருட்டெண்டு திரும்பியதில் ஆடிக் கொண்டிருந்தது அந்த முத்து சிமிக்கி. பெரு மூச்சும் பரபரப்பும் பின்னாலிருந்தே என்னால் அனுமானிக்க முடிந்தது. இந்த உலகத்தையே கவனியாது தோழியோடு கன நேரமாய் கதைப்பது போல நடிப்பதை அதீத கவனத்தோடு திருப்பாத தலை காட்டிக் குடுத்தது, பதட்டத்தை ஏறி இறங்கும் தோள்கள் பெரு மூச்சோடு ஆசுவாசப் படுத்த முயன்றது. காதலை களவு எண்டு சொன்னவன் பேர் தெரிஞ்சா ஒரு அருச்சனை, 108  தேங்காய், சீசீ கோயிலே கட்டலாம் எண்டு தோன்றியது.அந்த முத்து சிமிக்கி இன்னும் ஆடிக்கொண்டிருந்தது.

அவள் முன் பார்த்ததும் நான் பின் பார்த்ததும்
முன்னே வந்தென்னை காட்டச்சொன்னாள்...

நான் அபிரமிப்பட்டர் ஆகிக்கொண்டிருந்த அந்த தேவ கணத்தை ஒரு கரகர குரல் சுள்ளென நிறுத்தி நினைவுக்கு கொணர்ந்தது - ஓம்பி விவாத அணிகளை வரவேற்று போட்டி பற்றி காலகாலமாய் இருக்கும் நடை முறையை சொல்லத்தொடங்கினான். சின்னக் கண்களும் அளவான மூக்குகண்ணாடியும், அதன் மேலான பார்வையும் , உருண்ட தலையும், பருத்த கருத்த உடலும் , குழந்தை சிரிப்புமாய் அவன் பேசினால் வழமையாக ரசிக்கும் நான் அன்று அந்த மனநிலையில் இல்லை, நேரத்திற்கு ஆரம்பித்த போட்டியை சபித்தவாறே மெதுவாக நான் ஆகத் தொடங்கினேன். எடுத்த எடுப்பில் பரி பேதுரு அணியோடு போட்டி, சிக்கலான தலைப்பு எண்டதும் மீனி serious ஆயிட்டான் நாங்கள் குசி ஆயிட்டம் - வெண்டா கொத்து மீனி ஸ்பொன்சர் பண்ணும்.

பி.கு: 
  1. "அவள் முன் பார்த்ததும் நான் பின் பார்த்ததும்..." -  இதல ஒரு சிலேடை இருக்கு முடிஞ்சா கண்டுபிடியுங்கோ.
  2. இதில கற்பனை எவளவு கதை எவளவு எண்டு கேக்காதேங்கோ , கலையையும் கலைஞனையும் பிரிச்சுப் பார்க்கப் பழகவும்.
 இ.த.