வெள்ளி, பிப்ரவரி 04, 2011

எனக்கு கிடைத்த வரம்.


உங்களில் எத்தனை பேருக்கு ராஜா ஆக விருப்பம் ?

உங்களுக்கு என்றொரு நாடு, நாட்டு மக்கள், கோட்டை, கொத்தளங்கள் , மந்திரி, சேனாதிபதி, படைத்தளங்கள் , குலகுரு, ஆன்றோர், அறவோர்....
உங்கள் கனவுகளுக்கு கட்டியம் கூற , கட்டி முடிக்க எண்டு கடிதுழைக்கும் ; அறிவும் ஆற்றலும் பொருதிய பெம்மான்கள் படை சூழ .... ராஜாங்கம் !

திங்கள் கிழமை தோறும் எனக்கும் இப்படித்தான் தோன்றும் 

இதோ இது என் ராஜாங்கம்.

காலை ஆறு மணிக்கே கோட்டை கதவுகள் திறந்து விடுவர். சுமார் ஏழு மணியில் இருந்து கோட்டை வாயில் களேபரப்படும். ஒன்று கூடல் நேரத்தை நெருங்க நெருங்க கூட்டம் கட்டுக் கடங்காமல் அலை மோதும். இந்த கூட்டத்தை நெறிப்படுத்துவது ஒன்றும் இலகல்ல. தேர்ந்த பயிற்சி வேண்டும். இதற்கென்று ஆஜனபாகுவான வீரர்களை மன்னரே தெரிவு செய்வது வழக்கம். சிரேஸ்ட வீரர்களுடன் , இந்த களத்திற்கு தயாராகும் புதிய இளைய வீரர்களும் வாயில் கடமையில் இருப்பர். சிறப்பு வாயில் ஒன்று உண்டு - அவோர்க்கும் அதிகாரிகளுக்கும் மட்டும் இங்கு அனுமதி. இந்த வாயிலில் தனியே ஒரு வயதான முரட்டு அதிகாரி பணி இருப்பார். பல்வேறு முகங்களும் , அவற்றில் கலவையாக பல்வேறு உணர்ச்சிக்களுமாய் காலை வேளைகளில் (குறிப்பாக திங்கள் கிழமைகளில்) இந்த வாயிலை வேடிக்கை பார்ப்பதே ஒரு தனி அனுபவம்.

வாயிலிலிருந்து வேறுபட்ட சுறுசுறுப்பை கோட்டை கொத்தளங்களில் காணலாம். கொத்தளங்களின் ஒவ்வொரு பிரிவுக்கும் என்று நியமிக்கப்பட்ட வீரர்களும் அதிகாரிகளும் அந்த பிரிவைச் சார்ந்த மக்களை கொத்தள துப்பரவாகலிலும் அலங்கரிதளிலும் ஈடுபடுத்துவர். நிறைந்த பொறுமை , கடுமை போன்ற குணங்களுடன் மக்களை வசியப்படுத்த தெரிந்தவர்களே இந்த பணியை சிறப்புற ஆற்ற முடியும். கொத்தள அதிகாரியின் கண்ணசைவுகளுக்கு அர்த்தம் புரிந்து கொண்டு ஆங்காங்கே தெரியும் குறைகளை மக்களை கடிந்தும் பணிந்தும் களைந்து துரிந்து நகர்வர் ஆற்றல் வீரர்கள்.பத்தாம் பதினோராம் பிரிவுகளை வேலை வாங்குவது கல்லில் நாருரிப்பது போல கடினமானது. மக்கள் தொடர்பாடலில் வல்லவர்களும் , கூட்டத்தை ஈர்க்க வல்லோருமே இந்தப் பிரிவுகளில் சிறப்புற பணியாற்றலாம். சில சமயங்களில் முரட்டுத் தோற்றமும் கடுமையான குணமும் கொண்ட அதிகாரிகளை பணியமர்த்துவது வழக்கம். பதினோராம் பிரிவுகளை கையாழ்கையில் அடுத்த வருடம் அதிகாரியாக நியமனம் பெற வாய்ப்பிரிப்போரும் இருப்பார் என்பதை கவனத்தில்கொண்டு கடமையாற்ற வேண்டும்.

அதிக ஆரவாரம் இல்லாமல் இருக்கும் முன்றில் ஒன்றுகூடலுக்கான முதல் மணி அடித்தவுடன் உயிர் பெறத் தொடங்கும். அரண்மனை முன்றலில் ஒன்று கூடலுக்காக சாரை சாரையாக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திரண்டு வருவார் மக்கள். திங்கள் தோறும் கடந்த வார நாட்டு நடப்புகள் , வெற்றி , தோல்வி , வெளி விவகாரம் , உள் விவகாரம் , புதிய பதவி நியமனங்கள், வர விருக்கும் அரச விழாக்கள் பற்றிய விவரங்கள் , எனப் பல அரச அறிவிப்புகளை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் முண்டி அடித்துக் கொண்டு மக்கள் வருவார்கள். முண்டி அடிப்பவரையும் முடங்கிக் கிடப்பவரையும் ஒழுங்கு படுத்தி கோட்டை மத்தியில் உள்ள முன்றலுக்கு படை வீரர்கள் அழைத்து வருவார்கள்.மக்கள் திரண்டதின் பின் அறவோரை அழைத்துவர சமிக்கை அளிப்பார் மன்னர் , அதற்க்கென்று நியமிக்கப்பட்ட வீரர் பறப்பார், அறவோரை அழைத்துவர. இறுதியாக குலகுருவுக்கு செய்தி போகும். குல குருவின் வழி நடத்தலில் ஒன்று கூடல் இனிதே தொடங்கும். இந்த களேபரத்தில் கவனத்தை சிதையவிடாமல் கருமமே கண்ணாக எங்கள் காலாட்படை (கால பந்து அணி ) தங்கள் பயிற்சியில் ஈடுபடும். 

ஒவ்வொரு திங்கள் காலையிலும் , இந்துக்கல்லூரி மைதானத்தில் , எனக்கு தோன்றுவது இதே கற்பனைதான். இது என் நாடு , அதோ குலகுரு,அறவோர் , என் மீது அன்பு பூண்ட -- என் சேனாதிபதிகள், மந்திரிகள், அதிகாரிகள், வீரர்கள் , மக்கள் , -- சுற்றிலும் கொத்தளங்கள், விதானங்கள், கோபுரங்கள் , தடாகம் , தருக்கள் .... இது என் நாடு நானே இதான் ராஜா. இதை எங்கேயும் எக்காரணத்தைக் கொண்டும் விட்டுத்தரக்கூடாது. "கற்றாங்கு ஒழுகுக" என்பதே இதன் விழுமியம் -இலட்சிய வாக்கு-. எங்கேயும் எப்போதும் இதான் பெயரையும் புகழையும் உயர்த்துவதே என் கடமை. நினைக்க நினைக்க நெஞ்சம் கர்விக்கொள்ளும். எனக்கு கிடைத்த வரம் - இந்துக்கல்லூரியின் பொன் விழாக்கால தலைமை மாணவ தலைவன் - என்னளவில் இராஜாதி ராஜன். 

இந்தக் கற்பனையை விதந்துரைப்பு என்று அர்த்தம் கொள்பவர்கள் மீது எனக்கு இரக்கம்தான் வருகிறது. மாணவ தலைவர்களாக இருந்தவர்களுக்கு மட்டும்தான் இந்த போதை புரியும், இந்தக் காதல் கைவரும். எல்லாப் பெற்றோர்க்கும் தங்கள் பிள்ளை 'ராசா' தான். ஆனால் ஜன நாயக நாட்டில் மாணவப் பருவத்திலேயே ஒரு சைத்திரிய அனுபவத்தை மாணவ தலைவர்கள் மட்டுமே அனுபவிக்க முடியும். வருங்காலம் விரித்து வைத்திருக்கும் சூழ்ச்சியும் போட்டியும் மிக்க வர்த்தக உலகத்தில் , இந்தக் களம் கண்ட சைத்திரியர்கள் மட்டுமே நேர்மையாக வெற்றி கொள்ள முடியும், வெறும் கற்றல் அனுபவம் மிஞ்சிப்போனால் கால ஓட்டத்தில் தன்னை காப்பாற்றி கொள்ள மட்டுமே உதவும். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் நீங்கள் சிந்துபாத்தையும் , விக்கிரமாதித்தனையும் சொல்லலாம் , அல்லது எங்களைப் போல் எங்கள் கதையையும் எங்களின் அண்ணாக்கள் கதைகளையும் சொல்லலாம். பிள்ளையை பொறுத்தளவில் முன்னயதில் யாரோ முன்னிறுத்தப்படுகிறார் பின்னயதில் அவன் அப்பாவும் அவரை சார்ந்தவர்களும் முன்னிறுத்தப் படுகிறார்கள். உங்கள் பிள்ளைகளை விடுங்கள் உங்கள் காதலிகளுக்கு என்ன கதை சொல்லப் போகிறீர்கள் ?

published in :

http://www.hinduprefects.lk/pg/index.php?option=com_content&view=article&id=49%3Aenaku-kidaitha-varam&catid=11%3Aarticle&Itemid=18&lang=ta

3 கருத்துகள்:

Open Talk சொன்னது…

காதலிக்கு என்ன கதை சொல்லப் போகிறீர்கள் என்ற உங்களின் கேள்வி மிகவும் சரியான கேள்வி. நானும் எனது காதலியுடன் இதுபற்றிய வீரதீரக் கதைகள் பேசித்திரிகிறேன். :)

சாதாரணன் சொன்னது…

it was also published in College Diamond jubilee magazine.

நெஞ்சில் வெறும் உலோகத்தகடாக சின்னம் அணிந்தவர்களுக்கு இது விளங்காது, குத்தும் போதும் அது இதயத்திலும் ஏறினால் வாசிக்கையில் கண்ணீர் வரும்

ஏ.எ.வாலிபன் சொன்னது…

உணர்வுப் பகிர்வுக்கு நன்றி நண்பர்காள்.....

கருத்துரையிடுக