வெள்ளி, ஜூன் 14, 2013

ஆய பயன்

என் கொல் ?
74.5 இக்கும்
75 இக்கும்
இடையிலான அழுத்தத்தில்
பல மாணவர்களின்
மனச்சாட்சி
நசுங்கி சாகிறது

பேசாமல்
முப்பத்தி ஐந்தை
வறுமைக் கோடாக
அறிவித்து விடலாம்

சார்பு வேகத்தையும்
சமாந்தரக் கோடுகளையும்
சப்பித் துப்பியவர்களே
முச்சந்திகளில்
பெரும்பாலும் விபத்துக்குள்ளாகிறார்கள்
என்று எனக்கு ஒருமுறை
முச்சந்தி முரளியே சொல்லி இருக்குறார்


கற்றதனால் ஆய பயன்
தலை ‘கனக்க’ தொப்பி போடுவதில்
போய் முடிகிறது - பெரும்பாலும்

சமூகப் பொறுப்பு என்பதை
பள்ளங்களுக்குள்
விழாமல் நடப்பது என்றும்
நேர்மை என்பதை
வாய்ப்புக் கிடைக்காதவரை
ஏமாற்றாமல் இருப்பது என்றும்
நாணயமாய் நடத்தல் என்பதை
நா நயமாய் பேசல் என்றும்
மொழிபெயர்க்கின்றது கல்வி

புரிதல் பற்றிய
புரிதல் இன்றியே
எல்லாவற்றையும்
புரிய வைக்க முயல்கிறது கல்வி

நல்ல புரிதல் என்பது
ரசனையான கூடலுக்குப் பின்னான
ஆழ்துயில் போல
அமைதியும் மந்தகாசமும் தரும்
ஆனால்….
அவசர அவசரமாய் படித்து
அவசர அவசரமாய் பாஸ் பண்ணி
அவசர அவசரமாய் செத்தும் போகிறோம்
இடையில் நிறைய….

அதுசெரி,
புரிந்ததா என்பதைக் காட்டிலும்
புரிந்த மாதிரி
சலம்புபவர்க்கே
விலை அதிகம்

அதனால்
புரிதல் பற்றிய
புரிதல் இன்றியே
எல்லாவற்றையும்
புரிய வைக்க முயல்கிறது
கல்வி

விளம்பரங்களின்
மயக்கத்தில்
விலை பேசும் ஆற்றலை
நாம் என்றைக்கோ
மறந்துவிட்டோம்

சமூகப் பொறுப்பு என்பதை
பள்ளங்களுக்குள்
விழாமல் நடப்பது என்றும்
நேர்மை என்பதை
வாய்ப்புக் கிடைக்காதவரை
ஏமாற்றாமல் இருப்பது என்றும்
நாணயமாய் நடத்தல் என்பதை
நா நயமாய் பேசல் என்றும்
மொழிபெயர்க்கின்றது கல்வி
நிரவப் படாத பள்ளங்களும்
அதிகமான வக்கீல்களுமாய்
கூர்க்கிறது சமூகம்

இந்த அலட்டல்கள் பற்றி பிரக்ஞ்சை இன்றி
நீயா நானாக்களில் கலந்து கொள்ளாத
சமூகப் போராளிகளும்
விளம்பரம் இல்லாத நேர்மைகளும்
நாணயமான நாக்களும்
இந்த பூமிப் பந்தெங்கிலும்
மழைப் பன்னீரை தெளித்துக் கொண்டே இருக்கின்றன.

3 கருத்துகள்:

ஜே கே சொன்னது…

கவிதை நயத்துக்கானது என்ற தப்பபிப்பிராயம் எண்ட மனசுக்குள்ள கொஞ்சம் இருக்கிறதால நமக்கு வசதியான பிட்ச்சில ப்ளே பண்ணுறன். மன்னிக்க.(இப்பிடி எழுதிற தான் தாக்கி இருக்கிறீங்கள் எண்டதும் விளங்கினது).

சமூகப்பொறுப்பு, நேர்மை, நாணயம், அயோக்கியத்தனம், ஏமாற்றும் குணம் இவை பண்புகள் இல்லையா? இது கற்றவனுக்கும் இருக்கும் .. கல்லாதவனுக்கும் இருக்கும். சடக்கென்று காலமை எழும்பினாலோ, இல்ல நல்ல ஒரு பேச்சு கேட்டாலோ, ஒரு புத்தகத்தின் பக்கத்தை வாசிச்சு முடிச்சாலோ சமூகப்பொறுப்பு வந்திடாது. அது ஒரு இயல்பு என்று நினைக்கிறேன். யாரென்றே தெரியாமல் போயிறங்கியபோது வாவென்று உள்ளுக்க அழைச்சு சோறு போட்டு இண்டைக்கு முள்ளிவாய்க்கால்ல காலை இழந்து போனாலும், நான் போன் கதைக்கேக்க, இப்ப என்னடா படிக்கிறாய் எண்டு கேட்கிற விக்கி மாமா சமூகப்பொறுப்பு, நேர்மை, நாணயத்துக்கு அடையாளம். அவர் படிக்கேல்ல.

அவர்வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி, சிவலிங்கம் எண்டு வைப்பம், அதே கமம், அதே மெசின், அதே சாரம், ஆனா ஆள் ஒரு ஒண்ணாம் நம்பர் சுத்துமாத்து. நல்லவனாய் நடிக்கதெரிந்தவர். உச்ச தெரிந்தவர். இப்ப வெளிநாட்டில இருக்கிறார். சிவலிங்கமும் படிக்கேல்ல!

எனக்கு அவர்கள் படிக்காட்டியும் இரண்டுபேரையும் தெரியும் (இதை சொல்லுறதன் காரணம் உங்களுக்கு புரியும்).

பேச்சு, எழுத்து, கவிதை, பாட்டு, நடனம் .. கலை வடிவங்கள். அதுவும் குணங்கள் போல. திடீரென்று எனக்கு ஆசையாய் இருக்கென்று பாடலாம். ஆனா சுருதி தப்பும். எழுதலாம் அடுத்தநாள் நானே வாசிக்கமாட்டன். ஆடலாம். வயுறு கொளுவும். ஆனால் இதை பலர் சரியா செய்வார்கள். அவர்களை ரசிக்க என்று ரசிகர்கள் இருப்பார்கள். எப்படி எனக்கு சிவலிங்கத்தையும் விக்கி மாமாவையும் தெரியுமோ அதுபோல இவர்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள். உங்களை நானும் என்னை நீங்களும் தெரிந்து வைத்திருப்பதை போல(ஒர்டரை கவனிக்க!)

கல்வி, அதை குறை சொல்லும்போது கோபம் லைட்டா வருது. இந்தா கிடக்கு கடல் வந்து நீந்து எண்டு சொல்லுறது தான் கடல். சிலர் கரை வலை போடுவான் உழைப்புக்கு. சிலர் அலுப்படிக்கது நீச்சல் போடுவான். சிலர் கடலை வெறுமனே பார்ப்பான். சிலர் கடலில தூண்டில் போடுவான். தூண்டில் போடுறவனும் மீன் பிடிச்சது எண்டு தான் சொல்லுவான்.

மண்டேலா, காந்தி முதல் இன்றைக்கு பில் கேட்ஸ் வரை படித்தவர்கள் தான். உதயகுமார் படித்தவர் தான். ஐபில் ஸ்ரீனிவாசனும் படித்தவர் தான். நீங்கள், கொஞ்சமே ஆனாலும் நான் படித்தவர்கள் தான். ஆனாலும் செய்யும், சொல்லும் விஷயங்கள் வேறு இல்லையா?

இப்போது உங்கட திருக்குறள்!
வெங்காய தோட்டம் செய்யேக்க, விதைக்கிறது, பாத்தி கட்டுறது தொடங்கி, சீவகத்தியால வேங்காயத்திண்ட அடி கிண்டி, கிளறி, அறுத்து, தொங்கப்போட்டு, விக்கிறது மட்டும் பழக்குவார்கள்! ஆண்டு ஒண்டில இருந்து ஆரம்பிச்சு நேற்றைக்கு ஒரு பிரச்னைக்கு JQuery plugin ஒண்டு படிச்சன். இது ரெண்டுமே நீங்க சொல்லுற கல்வி.

வள்ளுவன் சொல்லும் வாளறிவனை அடைய(சிவன் அல்லன்) கற்கும் கல்வி இவை அல்ல. ஆனால் அவை எது என்று சொல்ல நான் கற்றறிந்தவன் அல்லன்!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நீ என்ன படித்து இருக்குறாய் ?
ஜாவா - எனக்கு ஒரு இழவும் தெரியாது

நீ என்ன படித்து இருக்குறாய் ?
ஜாவா - எனக்கு ஜாவா தெரியும்

நீ என்ன படித்து இருக்குறாய் ?
ஜாவா - எனக்கு புரோக்ராமிங் மொழிகள் அப்படி செயல் படும் என்று தெரியும்

நீ என்ன படித்து இருக்குறாய் ?
ஜாவா - எனக்கு oop தெரியும்

நீ என்ன படித்து இருக்குறாய் ?
ஜாவா - எனக்கு கணணியின் மட்டுமானம் அதன் செயல் பாடுகள் அதில் மென்பொருட்கள் மீதமர்ந்து வேலை செய்யும் விதம் மற்றும் மென் பொருள் வடிவமைப்பு தெரியும்

நீ என்ன படித்து இருக்குறாய் ?
ஜாவா - எனக்கு எல்லாம் தெரிகிறது புரிகிறது - பிரபஞ்சமே என் முன்னே வியாபிக்கிறது

நீ என்ன படித்து இருக்குறாய் ?
தெரியாது

நீ என்ன படித்து இருக்குறாய் ?
ஊகும் எதுவுமில்லை

நீ என்ன படித்து இருக்குறாய் ?
....
நீ என்ன படித்து இருக்குறாய் ?
...
நீ என்ன படித்து இருக்குறாய் ?
....
(பதில் இல்லை)

Ketha சொன்னது…

அருமாவ்யான கவிதை. "சமூகப் பொறுப்பு என்பதை
பள்ளங்களுக்குள்
விழாமல் நடப்பது என்றும்
நேர்மை என்பதை
வாய்ப்புக் கிடைக்காதவரை
ஏமாற்றாமல் இருப்பது என்றும்
நாணயமாய் நடத்தல் என்பதை
நா நயமாய் பேசல் என்றும்
மொழிபெயர்க்கின்றது கல்வி"

முகத்தில் தெறிக்கும் யதார்த்தம்.

கருத்துரையிடுக