சனி, செப்டம்பர் 08, 2012

எளியவனாப் பிறந்தாலும்...

அன்புள்ள அண்ணாமாருக்கு வணக்கம்,
தேத்தண்ணி முதல் சாயம்,
இறால்ப் பொரியல் பங்கீடு
இரவுக்கும் பதுக்கப்படும்
வெங்காயப் பொரியல்
போன்ற ஒதுக்கீட்டின் பாரபட்சமும்,

உன் அளவில்லாதவைகள்
எனக்கான அன்பளிப்புகள்
என்ற சலிப்பும்,

எனக்கு உன்மீது
பொறாமை
கொளச்செய்தன - இன்றுவரை.
ஆழ ஒரு ஆதங்கம் – மாற்றில்லை
ஆனால்…..


யாழ்ப்பாணத்தின்
கன தம்பிமாரின்
டீ-90 மோட்டச் சயிக்கிளுக்கும்
சிங்கப்பூர் செயினுக்கும்
லிங்கம் கூல் பாரில்
Birth-day பார்டிக்கும்

வெளியே குளிர் காயும்
அண்ணன்களைக் கண்டபின்னும்
’எளியவனாப் பிறந்தாலும்
இளையவனாப் பிறக்காத’ என்ட
வழக்கு மாறாதது
வழக்காடு மன்றங்கள்
இனி விசாரிக்க வேண்டியது.

என்ன இருந்தாலும்
யாழ்ப்பாணத்தாருக்கு
தம்பி எண்டா தனிப் பாசம்!


அம்மாவின்,
அக்காவின்,
தம்பிகளின்,
தங்கைகளின்,
எல்லார் கவலைகளும்,
அத்தனையும்,
மடுத்தபின்னும்
திறந்தே இருக்கின்றது உந்தன் செவி
திறவாமல் இருக்கிறது உந்தன் வாய்.
எத்தனையோ பாவமன்னிப்புகள்
 - நீ வழங்கி இருக்கிறாய்
எத்தனையோ வழக்குகளில்
 - நீ உடைத்து தீர்ப்பு சொல்லி இருக்குறாய்
உன் பிராது ஏதும்,
உன் அழுகை ஏதும்
தலைவாசல் பஞ்சாயத்துகளில் அரங்கேறியதில்லை
- நான் அறிந்த வரை.

எங்களுக்கெல்லாம்
நீ பாவமே செய்யாத பரமாத்துமா;
விட்டுக் கொடுப்பது உன் பிறவிக்குணம்;
உனக்கு பதில் தெரியாத கேள்விகளோ
நீ தீர்க்க முடியாத சிக்கல்களோ
எனக்கு தெரிந்து இல்லை
உடம்பு மடை திறந்த நாளுக்கு பிறகு கூட
நீயே எங்கள் சுப்பர் ஹீரோ



எனக்கு கூட அவ்வப்போ தோன்றும்
உனக்கு யார் சிவி எழுதியது
உந்தன் ட்ரிப்களுக்கு கைச்செலவுக்கு யார் தந்து பணம் ?
டபிள் நோட் போட யாரிடம் கற்றுக் கொண்டாய் ?
ஆனால் அண்ணாக்கள் எல்லாம்
இதை தம்பிகளுக்கு சொல்லித்தர
தெரிந்து கொண்டே பிறக்கிறார்கள் என்று
சும்மா இருந்து விட்டேன்.

”அண்ணாக்கள் அழுவதில்லை” என்று
அரேபிய தேசத்து ஒட்டகக்காரர்களிடம்
ஒரு வழக்கிருக்காம்,
அழுவதில்லையா?
இல்லை அழத் தெரியாதா ?

உந்தன்
தோற்றுவாய்,
ஆற்றுப்படுக்கை,
பலிபீடம்
என்று எதைப்பற்றியும் கவலையின்றி
கருவறைக்குள் இருத்திவிடுகுறோம்
இல்லை தேரேற்றி விடுகிறோம்.

உந்தன் தோற்றுவாய், எது ?
உனக்கான ஆற்றுப்படுக்கை, என்ன ?
உந்தன் பலிபீடம் எங்கே ?
என்று எதைப்பற்றியும் கவலையின்றி
கருவறைக்குள் இருத்திவிடுகுறோம்
இல்லை தேரேற்றி விடுகிறோம்.
கடைசிவரை
சுண்டல் பற்றிய கனவுகளுடன்
எங்களுக்கு உறக்கம் வருகிறது
கட்டாயம் சுண்டலும்
சில சமயம் அவலும் கிடைக்குறது.

ஆமாம்
இருப்புக்கு வாறதில் சாமிக்கு
அலுப்பேதும் இருக்குமோ?
சண்டீசுவரருக்கு மூண்டு முறை
கைதட்டினாப் போச்சு.

வில்லங்கம் பண்ண மாட்டியள் – எண்டால்
விகல்ப்பம் இல்லாம ஒண்டு சொல்லுவன்
அண்ணா செய்த புரட்சிக்கும்
தம்பி செய்த புரட்சிக்கும்
வித்தியாசம் இருக்கு பாருங்கோ.

7 கருத்துகள்:

எஸ் சக்திவேல் சொன்னது…

நானும் ஒரு அண்ணாதான், ஹீ ஹீ! (வீட்டில் மூத்த பிள்ளை)

செழியன் சொன்னது…

//”அண்ணாக்கள் அழுவதில்லை” என்று
அரேபிய தேசத்து ஒட்டகக்காரர்களிடம்
ஒரு வழக்கிருக்காம்,
அழுவதில்லையா?
இல்லை அழத் தெரியாதா ?
//

செழியன் சொன்னது…

நீண்ட இடைவெளிக்கு பிறகு....
//”அண்ணாக்கள் அழுவதில்லை” என்று
அரேபிய தேசத்து ஒட்டகக்காரர்களிடம்
ஒரு வழக்கிருக்காம்,
அழுவதில்லையா?
இல்லை அழத் தெரியாதா ?//

அண்ணாக்கள் மட்டுமல்ல தம்பிகளும் அழக்கூடாது தெரியாதா..?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//தம்பிகளும் அழக்கூடாது தெரியாதா// :)

ஏ.எ.வாலிபன் சொன்னது…

சக்தி அண்ணை உங்க சிரிப்புக்குப் பின்னல் இருக்கும் அர்த்தம் புரியுது.

ஜேகே சொன்னது…

அண்ணன் பாசம் கண்ணை மறைக்காமல் இருக்கவேண்டும் தம்பி! அப்பா தான் வித்தியாசங்களை வில்லங்கம் பண்ணாமல் பார்க்கலாம்!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

ஜேகே நான் சொன்னதன் பொளிப்புரையா இல்லை பழிப்புரையா ?

கருத்துரையிடுக