சனி, மே 05, 2012

எங்கே எனது கவிதை?

எங்கே எனது கவிதை? "இரும்புகுதிரை"

மேலே சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியிலிருந்து வரும் ஓசை ஆரம்பத்தில் நிறைய எரிச்சலை தந்தது. இப்போ பழகி, அதைக் கேட்டாலே நித்திரை சொக்குமளவுக்கு ஆகிப்போனது. ஆனால் இன்றைக்கு அது மனதில் மையம் கொண்டிருந்த பெரும் எண்ணச் சுழலுக்கு ஒத்திசைத்தாற் போல் இருந்தது. நாளை கல்கிசைப் போலீசிடம் சென்று பிறந்த கதை வளர்ந்த கதை எல்லாம் சொல்ல வேணும் - கொழும்பு வரும் போது போட்டிருந்த அண்டர்வியார் நிறம் வரை கேப்பானுகள். சிங்களத்தில் விறுவிறு என்று ஏதோ எழுதுவானுகள். நான் சொல்வதைத்தான் எழுதுரானா என்று தெரியாது.


அந்தக் கட்டிலுக்கு மரக்கால் இரண்டு, மற்றயவை செங்கல் மற்றும் உடைந்த ஒரு பிளாஸ்டிக் வாளி கொண்டு இட்டுக்கட்டியது. எனக்கு அடுத்து திரும்பி படுத்திருப்பவன் இரண்டாவது தம்பி - உமா. அங்கால கீழ படுத்திருப்பவன் முதல் தம்பி - கோபி. அவனிலிருந்து சில அடி தூரத்தில் பெரிய பாக்குகள் சூட்கேசுகள் பிறகு படி கீழே செல்லும். ஒரு மூன்றுக்கு மூன்று அடி பாத்துரூம் கீழே, பாசியும் உடைப்பும் வெடிப்புமாய். பிளஷ் செரியா வேலை செய்யாத கோமேட்.

மாசம் இரேண்டாயிரத்தில் மூன்று பேரும் சாப்பிட வேண்டும், வாடகை + கரண்ட் பில் + வாட்டர் பில் எல்லாம் சேர்த்து அப்பா கட்டி விடுவார். இரண்டாயிரத்தில் கொழும்பில் மூன்று பேர் - கருப்பன் அரிசி, கஞ்சி, தேங்காய் சொட்டு, சின்ன றால் பொரித்து, பொரித்த கச்சான் சேர்த்த யெல்லோ ரைஸ் கனவுகள் காண்பதை தவிர்த்து சில மாசங்கள் இருக்கும்.

காற்றில் கரைவது
கனவா விதையா ?
உமா வந்து ஒரு மாசமிருக்கும், வவுனியாக் காம்புக்கால தப்பி பிழைச்சு வந்தான். முன்னோர் புண்ணியத்தில் அப்பா டாக்குத்தர், பிள்ளையாருக்கு வைத்த நேர்த்தி சென்ற்றியில நிண்டவனுக்கு காது நோவா வர - தப்பி பிழைச்ச கதை ஒரு திரில்லர் படம். படம் எண்டதும் நான் எழுதி முடிக்காத படம் நினைவில் வந்தது, மேசையில் அந்த கொப்பி பாதி திரைக்கதை சில பாடல்களுடன் ஃபான் காத்தில் துடிச்சுக் கொண்டிருந்தது. அந்தக் கொப்பிகள் தொலைந்து மயிலிறகாய் என்னுடைய கனவுகள் கனக்க பத்திரமாய் , சட்டென்று இந்த மாசத்திற்க்கான காசுப்பிரச்சனை வந்து சிந்தனையை வெட்டி வயிற்றை பிசைந்தது.

போன கிழமை உமாவிட்ட நூறு ருபாய் சாப்பாடுக்கு குடுத்திருந்தன், அவன் சந்தோசமா கொத்து ரொட்டியும், கோக்கும், கோழிக் குழம்பும் சாப்பிட்டு விட்டு எங்களுக்கும் அப்பம் வாங்கிக்கொண்டு வந்தான், அது ஒரு கிழமைக்கான (ஒரு வாரம்) காசு ஒரே நாளில் முடிச்சிருந்தான். இப்பதானே வந்திருக்குறான், அவனுக்கு சிக்கலை செரியா சொல்லேல்லை. கீழே படுத்து குளிரும் மழைத் தண்ணியும் போய் கோபிக்கு காது நோ. அதுக்கும் ஒரு வழி பண்ண வேணும்.

கொப்பியின் மட்டையும், இரண்டு பக்கங்களையும் காத்து திருப்பி மூன்றாவது பக்கத்தோடு சில்மிஷம் பண்ணிக் கொண்டிருந்தது.

நேற்றுத்தான் யாழ்ப்பாணத்திலிருந்து அம்மாண்ட கடிதம் வந்தது. உதயாவும் ஒரு கடிதம் எழுதி இருந்தான். கடைசி தம்பி - தனியே அங்க அம்மா அம்மாமாவுடன், எப்படி சமாளிக்குரானோ. கரண்டில்லை, எண்ணை இல்லை, கடைகளுமில்லை எப்படி ?, அப்பவாவது கடைகள் இருந்திச்சி - கொஞ்சம் பரவாயில்லை, இப்ப ஆமிக்காறனுகள் - எதையும் கடிதத்தில எழுதேல்லை.

நேற்று கூட பஸ்ஸில் போகேக்க ஒரு நல்ல கவிதை வந்தது, எழுதி வைக்க நேரமில்லை இப்ப மறந்துட்டுது. முந்தி ஏ.எல் எக்சாமை கிண்டி கவிதை எழுதிக்கொண்டு இருந்தன், பயோ படித்தன், டாக்குத்தர் ஆவன் எண்டு சுற்றம் சொல்லிற்று, கெமிஸ்ட்ரி பிடிச்சுது, பயோ சயன்ஸ் டிகிரி முடிச்சு, இப்ப கொழும்பில, அடுத்து ? ஊருக்கு கடிதம் எழுதோணும், நூறு ரூபாய மனேஜ் பண்ணோணும். புத்தி பர பர எண்டது காது நோவுக்கும், காசுக்கும் - எதுகை, ஊருக்கு கடிதம் - மோனை கண்டது.

ஊருக்கு கடிதம் மட்டும் காணாது, தனியே, இன்னமும் இடம்பெயர்ந்த சுற்றம் வந்து சேராமல், எந்த பராக்கும் இல்லாமல் - ஆ ஒரு ரேடியோ சின்னது பற்றியோடு வாங்கி அனுப்பினால் பொழுது போகும், செய்தி கேக்கலாம். கட்டாயம் வேணும். பெட்டாவில கொஞ்சம் மலிவா சின்னது ஒண்டு கிடைக்கும் எஸ்.டபிள்யு வோட வாங்கினா பி.பி.சி கேக்கலாம். கொழும்பில் ஒரு கிழமைக்கு மூண்டு பேர் எவ்வளவு குறைவான காசில சீவிக்கலாம் ? பருப்பு மட்டும் கடையில வேண்டி பாணை தனிய வாங்கினா கொஞ்சம் மிஞ்சும், இந்த சூட் கேசை யன்னல் பக்கம் வைச்சு கொஞ்சம் வெள்ளம் குறைக்க பாக்கலாம், அப்பத்தான் கீழ படுக்கலாம். மழை பெரிசா அடிக்காட்டி பெட்டர். மூளை மனது உடம்பு சேர்ந்து ஒரு தீ பர பர எண்டு எழுந்தது. காத்து கதைக் கொப்பியை பிரட்டி கீழ விழுத்தியது.

கொப்பியை எடுத்து வைச்சுட்டு பார்த்தா சண்டே லீடரில கொம்புயுடர் வேலைக்கு விளம்பரம் வந்திருந்தது. காலைச் சூரியனின் செம்மையை எதோ பெயர் தேரியாத பறவை தகவல் சொன்னது. ஒரு போருக்கு நான் தயார் ஆனேன், கதையும் கவிதையும் மறந்தே போனது. காற்று மட்டும் இன்னமும் அந்த எழுதி முடிக்காத படக்கதைக் கொப்பியோடு சீண்டிக் கொண்டிருந்தது.

பி.கு: இரும்புகுதிரை என்பது பாலகுமாரன் எழுதிய ஒரு அற்புதமான நாவல், அதை வாசித்தவர்களுக்கு அதை இங்கே Caption ஆ பாவித்ததன் பொருள் விளங்கும்.

8 கருத்துகள்:

எஸ் சக்திவேல் சொன்னது…

நல்ல எழுத்து. எண்ணி எண்ணிச் செலவழித்த நாட்களை ஞாபகப்படுத்திவிட்டீர்கள். சுயகட்டுப்பாடு இல்லாமல் சில நாட்களில் கொத்துரொட்டி (மாட்டுக் கொத்துதான் அதிகம்)சாப்பிட்டுவிட்டு (செலவு), பிறகு "பெலமாக (!) இருந்தால்தான் நோய் வராது. சத்தாகச் சாப்பிடாமல் வருத்தம் வந்தால் இந்தக் காசைவிடக் கூடக் காசு டாக்குத்தருக்குக் கொடுக்கவேண்டும்' என்று சால்ஜாப்பு எனக்கு நானே சொல்லிக்கொண்டதுண்டு. அப்பப்ப பொஸ்வெல் பிளேஸ்'ஸில் ஒரு சிங்கள வீட்டில் (சாப்பாட்டுக்கடை), சோறு, கறி முட்டைப்பொரியல் தின்றதுண்டு.

இப்ப இழந்த காலத்தைத்தான் அதிகம் நினைக்கின்றேன். அத்தோடு இழந்த என் தந்தையர் நிலம்/தாய் நிலம்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி சக்தி அண்ணை, முடிக்கிற போது கனக்க வைச்சுட்டியல்.

ஜேகே சொன்னது…

இரும்புக்குதிரை நான் வாசிக்கவில்லை .. வாங்க வேண்டும்!

பெயர்கள் தெரிஞ்சதால முகங்கள் ஞாபகத்துக்கு வருவது தவிர்க்கமுடியாது ... எல்லா அண்ணாமாரையும் தூர நின்று பார்த்தவன் என்பதால் இருக்கலாம்!

நான் இருந்தபோது, காசு மட்டு மட்டேன்றால் கஜனிடம் கேட்டு கொத்து வாங்குவதுண்டு .... சிங்கள கடையில புரியாணியும் வாங்குவம் ... சிலநாட்களில் வெறும் பாண் தான் ... அதுவும் ஒரு அனுபவம் தான்.

Out of curiosity ... புனைந்த கதையா இல்லை கவிதை skypleல சொன்ன கதையா?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

இந்தக் கதை வெறுமே சிக்கனப்படுத்தல் பற்றியதல்ல, நிற்க நிஜசம்பவங்களை நான் என் வாய்ப்புக்கு பயன் படுத்தி இருக்குறேன் - கொஞ்சம் கற்பனையை சுற்றி இருக்குறேன் - வழமை போல. இது எங்கள் சாப்பாட்டு மேசையில் அடிக்கடி பகிடியாய் பேசப்படும் கதை. பாத்திரங்களுக்கு வேறு பெயரிட எனக்கு ஒப்பவில்லை - அது பற்றி கொஞ்சம் யோசிச்சன் - பிறகு ஓவரா யோசிச்சா உடம்புக்கு ஆகாது எண்டு விட்டுட்டன்.

இரும்புக்குதிரை அல்ல இரும்புகுதிரை. அதுக்கு பாலகுமாரன் ஒரு விளக்கம் கதையிலேயே கொடுத்திருப்பார்.

ஜேகே சொன்னது…

சிக்கனம் மட்டுமில்லை ... இந்த கொழும்பு அறை வாழ்க்கை பற்றி கேதா ஒருமுறை சுப்பர் முடிச்சு ஒன்று தந்தவன் ... எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன் .. இப்போது நீங்கள் தொட்டு விட்டீர்கள் .. வீட்டு ஹோல் fan சத்தம் இல்லாமல் தூங்க முடியாது என்ற விஷயம் எல்லாம் இருந்தது .. இப்போது வேறு வழியை நான் பார்க்கவேண்டும் :) ..

இரும்புகுதிரை .. வாங்கோணும் :(

ஏ.எ.வாலிபன் சொன்னது…

அடடா அப்ப நான் முந்திரிக்கொட்டையா ? நீங்கள் எண்டா குறும்பா குசும்பா எழுதுவியலே. நண்பர்கள் சேர்ந்து இருத்தலுக்கும் இதுக்கும் நிறைய வேறுபாடு இருக்கும்.

//இரும்புகுதிரை// முன்னமே கேள்விப்பட்டு இருக்கீங்களா?

Ketha சொன்னது…

கொழும்பு அறை வாழ்க்கை ஒரு தனி அனுபவம். அதுவும் ஊரில இருந்து கொழும்புக்கு வந்து காசு எண்ணி செலவழிச்சு, சிலநேரம் ஆசையில அதை இதை வாங்கிப்போட்டு மாசக்கடைசியில விரதமிருக்க வேண்டி வந்ததும் உண்டு. ஆனாலும் நண்பர்களோட சேர்ந்திருக்கிறதுக்கும் சகோதரன்களோட சேர்ந்திருக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருந்திருக்கும்.

காது நோவுக்கும் காசுக்கும் நல்லா வருகுது மோனை. சுற்றிவர புயலடிக்கும்போதுதான் நல்ல புதுக்கவிதை பல பிறக்கும். எழுதமுதல் தொலைந்துபோகும். பாவி பாரதிமட்டும் எப்படியோ எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கிறான்.

செல்லப்பர் யோகரை கேட்டமாதிரி இந்த கல்கிசை போலிஸ் கேக்கிற கேள்வியில அரசமரம், தேர்முட்டி ஒண்டுமில்லாமலே ஞானம் வரும். ஊர் எங்க? ,எதுக்கு இருக்கிறது? எவளவு காலம் இருப்பீங்க? எண்டு கேட்டு கொல்லுவானுகளே. எல்லாம் முடிஞ்சபிறகு இந்த எதுக்கு இருக்கிறது என்ற முன்னிலை கேள்வி இன்னும் ஏன் இருக்கிறன் என்கிற தன்மை கேள்வியாக மாறி சிலநாட்கள் நீடித்திருக்கிறது வழமை.

கால்கள் தொலைந்தாலும் செங்கலும் வாளியுமாய் சுமக்கும் கட்டில்போல தம் கனவுகளை புதைத்து குடும்பத்தில் புன்னகையை விதைத்து இளமையை தொலைத்த அண்ணன்கள் ஏராளம்.

அவர்கள் எழுதி முடிக்காத கவிதையும் கதையும் காற்றுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

ஜேகே: நீங்க அந்த ஆமி அட்வைஸ் பண்ணின விசயத்த சொல்லேல்ல தானே :)

ஏ.எ.வாலிபன் சொன்னது…

கேதா நீ இந்த அனுபவத்தை எழுதினா குறும்பா ரசனையா இருக்கும் எண்டு விளங்குது - //செல்லப்பர் யோகரை கேட்டமாதிரி இந்த கல்கிசை போலிஸ் கேக்கிற கேள்வியில அரசமரம், தேர்முட்டி ஒண்டுமில்லாமலே ஞானம் வரும். //

நிறையப்பேர் இதை சிக்கனம் என்றும் காசில்லாத அந்த தருணங்கள் எண்டும் பார்த்து போக நீ செரியா ஆணி அடித்திருக்குறாய் - சந்தோசம்: //அவர்கள் எழுதி முடிக்காத கவிதையும் கதையும் காற்றுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். //

தொடங்கும் பூதே அண்ணனுடனிருப்பதும் நண்பனுடநிருப்பதும் வேறு வேறு என்கையில் புரிந்துவிட்டது உனக்கு புரிந்துவிட்டது என்று.

உனக்கு ஜேகேக்கு சக்திக்கு எண்டு சிலருக்கு மட்டும் நிறைய எழுதலாம் போல இருக்கு.

கருத்துரையிடுக