வியாழன், பிப்ரவரி 16, 2012

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது....

அன்புள்ள அம்மா அறிவது,

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது....
நான் ஒரே சூடில் சுருண்டு விடுகிறேன்,
அது சொல்லானாலும் செரி
பொறியானாலும் செரி.

ஒரு புரியா மனத்துயரில்
துவண்டு கிடக்கும் தருணத்தில்;
வார்த்தைகளில் இருக்கும் பொறுப்பு குறைந்து, தடித்து;
அறியாக் கோபம் பொங்க... பொங்க...
இதை எழுத முயல்கிறேன்.

அப்பாவின் அடிக்குப் பிறகு கேவுகிற போது...
அண்ணாவுடனான சண்டைக்குப் பின் மூலைக்குள் முடங்கும் போது...
என் தோல்வியடைந்த அரங்கேற்றங்களுக்குப் பின்......
அப்போதெல்லாம் நீ அரவணைத்து கூட வியப்பில்லை....

நான் சொல்லாத
பகிராத
துயரங்களையும்
கண்டு தலை வருடுகிறது உன் கைகள்;
ஏன்.. என்ன... என்றில்லா தொந்தரவற்ற மௌனம்....
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது....

கனத்த இதயத்தோடு
விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி இருக்கையில் தோன்றியது
"நாங்கள் பள்ளி போன பிறகு நீ என்ன செய்து கொண்டிருந்தாய் ?"
சமையலா.... பகல் முழுவதுமா....
மாதம் ஒருமுறை கல்கி...
எப்போவாவது ரமணிச்சந்திரன்.....
மீதி நேரம் ?

நீ அயர்ச்சி காட்டி சிடு சிடுத்து பார்த்தது குறைவு....
உனக்கு கோபமே வராது எண்டு சொல்லவில்லை
ஆனால் அதன் வீச்சும் நீட்சியும் குறைவே...

எங்கள் காயங்களுக்கெல்லாம் உன்னிடம் தான் வருகிறோம்
உன் காயங்களை யார் தடவி விடுவார் ? -
இது வரை இப்படி கேட்க்க தோன்றவில்லை....
அப்பாவுடனான சண்டைக்குப் பிறகு
உன் முகத்தில் வாட்டம் இருந்திருக்கலாம் - எனக்குப் பட்டதில்லை
உன் தலை இந்தப் பிஞ்சுக் கரங்களின் தடவலுக்காய் ஏங்கி இருக்கலாம் - எனக்கு தோன்றவில்லை

அன்று ஒருநாள் கொஞ்சம் பாதியில் பள்ளி விட,
விளையாடிவிட்டு கொஞ்சம் வேளைக்கு வந்திருந்தேன்;
உள்ளே சமையலறையில் கேட்ட அழுகை
உன்னுடயதா என்று பார்க்கும் திராணி இல்லை.

களத்து மேட்டில் வாளில்லா வீரன்
இந்த நகுலனின் கவிதை கூட ஏனோ உன்னை எனக்கு அறிவுறுத்துகிறது....

களத்துமேட்டில் 
வாளுருவி 
மீசைதிருகி 
நிற்கிறான் ஒரு மாவீரன் 
போகும் பறவைகளனைத்தும் 
அவன் தலை மீது 
மீசை திருகிய மாவீரன்
எச்சமிட்டன 
அவன் மீசையை 
எறும்புக்கூட்டங்கள் 
அரித்தன 
ஆனால் அவன் முகத்திலோ 
ஒரு மகா சாவதானம்.

இது ஒரு 
சிலையின் சோகமாயிருக்கலாம்....
இல்லை 
கலையின்  சோகமென்றும் 
சிலர் வாதிடலாம்...
முன்னிற்கும் 'தலை'யின் தாற்பரியம் 
எண்டும் பார்க்கலாம்...
ஆனால்த் தாயே 
உன் நிலையின் நிஜம் 
என்றே எனக்கு தோன்றுகிறது....

மற்றபடி, கால் நோ இப்ப எப்படி ? விரைந்து திரும்பி வந்து விடுகிறேன்.... 
முடிந்தால் எனக்கு கொஞ்சம் முட்டை மா செய்து அனுப்புங்கோ.

இப்படிக்கு,
இ.த.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மாவைப்பற்றி நான் ரசித்த பதிவிது: http://www.padalay.com/2012/02/blog-post_05.html

13 கருத்துகள்:

Gobi சொன்னது…

நீ பதிந்தவற்றில், மிக யதார்த்தமானது என கருதுவது இந்த பதிவுதான். மிகவும் அருமையான பதிவு.
// நாங்கள் பள்ளி போன பிறகு நீ என்ன செய்து கொண்டிருந்தாய்...
சமையலா.... பகல் முழுவதுமா....
மாதம் ஒருமுறை கல்கி...
எப்போவாவது ரமணிச்சந்திரன்.....
மீதி நேரம் ?//

வெளிநாடுகளுக்கு வந்து, நானே சமைத்து, நானே அதை உண்டு கழித்த காலங்களில் அம்மாவிடம் கேட்ட கேள்வி, உங்களால் மட்டும் எப்படி இது முடிந்தது, இது ஒரு பெரிய தண்டனை இல்லையா என்று. சிரிப்பு மட்டும் தான் அம்மாவின் பதிலாக இருந்தது.

//ஆனால்த் தாயே உன் நிலையின் நிஜம் என்றே எனக்கு தோன்றுகிறது....// நெஞ்சில் நின்றது.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி கோபி. மிக்க சந்தோசம்.

Mano சொன்னது…

வாலிபா, கோபி கூறியதுபோல் இது மிக யாதார்த்தமான படைப்பு. எந்தவித கற்பனையும் சிறுமாற்றமும் சேராத உள்ளடக்கம் - அதற்கேற்ற உண்மையான உருவம்.. இதைத்தான் நான் இன்றைய காலத்து கலைக் கொள்கையாக இருக்கவேண்டும் என்று உன்னிடம் அடிக்கடி கூறுவதுண்டு.

கலை, இலக்கியம் சிருஷ்டிப்பவன் தான் செய்யும் தொழிலையே, தன் வாழ்க்கையையே கலையாகவும் இலக்கியமாகவும் மாற்றினால் எவ்வாறு இருக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த சிறிய உதாரணம்.

ஜேகே சொன்னது…

//"நாங்கள் பள்ளி போன பிறகு நீ என்ன செய்து கொண்டிருந்தாய் ?"
சமையலா.... பகல் முழுவதுமா....
மாதம் ஒருமுறை கல்கி...
எப்போவாவது ரமணிச்சந்திரன்.....
மீதி நேரம் ?//

வாசிக்கும்போது அதிர்ந்தேன். வந்து பார்த்தால் கோபி ஆல்ரெடி கம்மென்ட் பண்ணியாச்சி! நான் லேட்!

//அன்று ஒருநாள் கொஞ்சம் பாதியில் பள்ளி விட,
விளையாடிவிட்டு கொஞ்சம் வேளைக்கு வந்திருந்தேன்;
உள்ளே சமையலறையில் கேட்ட அழுகை உன்னுடயதா என்று பார்க்கும் திராணி இல்லை.//

எங்கேயோ ஒருமுறை கேட்ட கவிதை. ஒவ்வொரு வீட்டின் சமையறையை கேட்டுப்பாரு. கதை கதையை சொல்லும் என்ற ரீதியில் இருந்தது ... ஞாபகம் இல்லை..


இதே கவிதையை உங்கள் மகன் எழுதாவண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்! தமிழ் படிப்பிக்காமல் இருப்பது இலகுவான வழி!!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி மனோ;

ஏ.எ.வாலிபன் சொன்னது…

இதென்ன திடீரெண்டு நம்மள ஒரேடியாப் புகளுறாங்க - இது செரி-இல்லையே ஏதும் உள்குத்து இருக்குமோ; ஆகா... இதுவரைக்கும் நாம உருப்படியா எழுதல எண்டு சொல்லுரானுகளா.... சோழியன் குடுமி சும்மா ஆடாதே - பையன் மெண்டல் ஆகிடப் போறான் எண்டு தட்டிக் குடுக்குராங்களோ....இவனுகள் சுப்பர் சிங்கர்ல யாருக்கு வோட்டுப் பபோட்டிருப்பானுகள் - சாயிசரணா? சந்தோசா ? சத்தியப்பிரகாசாயிராது...... டேய் ஏ.எ.வா சுதாரிச்சுக்கோ....

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி ஜேகே.... உங்கள் அம்மான்ன சும்மா இல்லையடா இதை வெளியில உடைச்சுக் கொண்டுவந்தது.

ஜேகே சொன்னது…

ஹ ஹா .. என் பதிவில் அம்மாவை இந்த அளவுக்கு கொண்டாடியிருக்கமாட்டேன்! நன்றாக தெரிந்த அம்மாவை எழுத்தாளர் கண்ணாடி போட்டு கொஞ்சம் பிம்பில்ஸ் எல்லாம் நோட் பண்ணியிருப்பேன். நீங்கள் அந்த டிபார்த்மென்டுக்கே போகவில்லை. கவிதை இல்லையா!

Ketha சொன்னது…

அருமை அண்ணா. அம்மாவை தெய்வமாக்க தயங்காத நாங்கள், ஏனோ அவள் இதயத்தில் இறுக்கி பூட்டப்பட்டிருக்கும் புரியாத சோகங்களை திறந்து பார்க்க விரும்புவதில்லை. சாமிகளின் கண்ணீரை யார் துடைக்க நினைக்கிறார்கள். அருகில் இருக்கும்போது அவளை புரிந்து கொள்வதில்லை, அவளை புரிந்து கொள்ளும்போது அருகில் இருப்பதில்லை. பலர் அம்மாவின் மேல் போர்த்தியிருந்த சாமி பட்டை எடுத்து மனைவி மீது போர்த்திவிடுகிறோம். போர்வைகளுக்கு பின் பிரளையங்கள் நிகழ்ந்தாலும், ஆறாத ரணங்கள் வலித்தாலும், சாமிகளுக்கு வலிக்காது என்று நாம் ஒரு துதியோடு கடந்து போவோம். முதல் ஸ்பரிசத்தில் தொடங்கும் அம்மா பற்றிய பிரமிப்பு, என்றைக்கும் குறைவதில்லை. அம்மாவுடன் தனித்திருந்து மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன், அவள் தன் பகிரப்படாத சோகங்களை உரிமையோடு கொட்டித்தீர்க்கும்போது, இந்த அருவி வழிந்தோட ஒரு பாறையாய் இருக்கிறோமே என்றொரு திருப்தி மனதில் எங்கோ ஒரு மூலையில் உருவாகி உள்ளம் நிறைக்கும். எல்லாம் முடிந்தபின், தம்பி "நீ சந்தோசமா கதைக்க எடுத்திருப்பாய், நான் அழுது பழுதாக்கிப்போட்டன்" எண்டு கவலைப்படும்போது அம்மா மரக்கறிகளை கழுவ தொடங்கியிருப்பா. இந்த முறை ஊருக்குப்போய் அம்மாவுக்கு கொஞ்சம் மரக்கறி வெட்டி குடுக்கோணும். ரோசாக்கள் வடிவா பூத்திருக்கெண்டு சொல்லோணும். அவளை இப்போதாவது அங்கீகரிக்க வேண்டும்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி கேதா, இந்த உணர்வுப் பகிர்வுக்கும் நகுலன் கவிதைப் பகிர்வுக்கும், உன் கவிப் பந்திக்கும்;

இப்படி கோமேன்டில போஸ்ட் போடுறதை விட்டுட்டு; கொஞ்சம் ஊற வைச்சு, ஆற வைச்சு, முழுசா ஆக்கி உன் 'முற்றத்தில்' போடு - வந்து பசி ஆறுகிறேன்.

டேய் ஏ.எ.வா நீ கெட்டதுமில்லாம அவனையும் ஏன்டா கேடுக்குறாய். அவுக வீட்டில வந்து கொன்சல்ட் பண்ணினாத்தன் நீ திருந்துவாய்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

கேதா அம்மாவும் அப்பாவும் சேர்ந்து தங்கள் பேத்தியோட இதை வாசிச்சவை, அம்மா உன் பின்னூட்டம் சிறப்பாய் இருந்ததாய் சொல்லச் சொன்னா.

அப்பா ஜேகேஇன் பதிவை பெடியன் வேற ரூட்ல யோசிச்சிருக்குறான் எண்டு புளங்காகிதம் அடைஞ்சவர்.

ஜேகே சொன்னது…

நம்ம எழுத்து அங்கிள் மட்டும் போனது சந்தோசம். தந்த உங்களுக்கு நன்றி!

கேதாவ முதல்ல ப்ளாக்க கூட்டி துப்புறவாக்க சொல்லுங்க!!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

ஜேகே, என் அம்மாவின் பிறந்தநாளன்று இதை உங்கள் பத்தியை அவரை வாசிக்க சொன்னேன் - அவரிடம் இருந்து ஒரு ஆழ்ந்த பெரு மூச்சும் "நல்லா இருக்கு" என்ற பொதுவான பாராட்டும் வந்தது - அம்மா உள்ளே என்ன நினைத்தார் எண்டு சொல்ல முடியவில்லை - அப்பா மிகுந்த மகிழ்ச்சியோடு சொன்னது அவை.

கருத்துரையிடுக