(Eyes consumed with Grief)
எந்த சிவப்புமில்லாத facebook போல,
வெறுமை + ஏமாற்றம் தருகிறது
நீ கண்டுகொள்ளாமல் போவது.
கால் கடுக்க காத்திருந்த
எந்தன் வலிகளை ஒன்று திரட்டி
அனுங்கும் செருப்பின் முனகல் கூடவா
உந்தன் காதுகளுக்கு எட்டவில்லை.
என்ன அலட்சியம்!
எத்தனை திமிர்!
உனைச் சொல்லி குற்றமில்லை,
நீ ஓட ஓட,
துரத்தச் சொல்லுது என் அறிவு,
முன் சில்லுகளை துரத்தும்
பேரூந்தின் பின் சில்லுகள் மாதிரி.
வெள்ளவத்தையின் அந்த வசு வண்டி தரிப்பிடம்,
எரிக்கும் வெயில்,
ஒரு தெரு நாய்,
நிழலில் சுருண்டு போயிருந்த தாடி வளர்த்த அந்த பிச்சைக்காரன்,
நான்,
நீ.
உன்னோடு உன் இரண்டு தோழிகள்.
உன்னோடு வரும் போது
அவர்கள் தெரிவதில்லை - எண்டு
தெரியுமா அவர்களுக்கு?
நான் திருக்குமரன் சேரின் இரசாயனவியல் வகுப்பின் இடைவேளையின் போது ராஜ்பவனில் பரோட்டா சாப்பிட வந்ததாய் நினைத்துக் கொண்டிருக்குறது ஊர்.
இந்த இடைவேளையில் தான் இரசாயனவியல் நடக்கிறது என்பது திருக்குமரன் சேர் கூட ஊகித்திராத உண்மை.
எனக்கும்,
உனக்கும் (?)
அந்த நாயிற்க்கும் மட்டும் - தெரிந்த காதலை
தெரியாத்தனமாய்
காலி வீதியை நிரப்பி நிற்கும்
கடல் காற்றிடம் சொல்லி வைத்தேன்.
காதலை யாரும் காற்றிடம் சொல்லாதீர்கள்.
'ஊ' என்ற பேரிரைச்சலுடன்
ஊருக்கே சொல்லிப் போனது
அந்த மூடக் காற்று.
சாப்பிடு விட்டு ஊரே தூங்கிக்கொண்டிருந்த மத்தியானம் மூன்று மணி அது.
ஒரு விடுமுறை நாள்.
காற்றில் வந்த எந்தன் காதல் கிசுகிசுவை கேட்க்க யாருமில்லை.
கேட்க்க வேண்டிய நீயே கேளாத மாதிரி நடிக்கும் போது,
யாரோடு நோக?
யார்க்கெடுத்து உரைக்க?.
சூரியன் இத்தனை பிரகாசத்தைக் கொட்டியும்,
உன் முகத்தில் இருந்து வீசுகிற ஐொலிப்பை மறைக்க முடியாத ஆற்றாமையில் வெம்மையை கொட்டித் தீர்த்தான்.
ஒரு நிமிடத்திற்கும் குறைவாக பின்னழகும்
அதற்க்கு முன் மிகச் சில நொடிகளுக்கு மட்டும் முன்னழகும்.
அவ்வளவே....... பஸ்சிலிருந்து நீ இறங்கி கடக்கும் வரை.
ஒரு நிமிடத்திற்கும் குறைவாக பின்னழகும்
அதற்க்கு முன் மிகச் சில நொடிகளுக்கு மட்டும் முன்னழகும்.
அவ்வளவே.......
இரண்டு ஸ்கூப் ஐஸ்-கிரீமும் அதன் மேல் ஒரு செர்ரிப் பழமும் போல,
தகிக்கும் அந்த வெயிலுக்கு இதமாய்.
ஏன் பெரும்பாலும் பெண்கள்
சின்னதாக ஒரு செயின்
அதில் குட்டியாக ஒரு பென்டன் அணிகிறார்கள் ?
அதைக்கூட சட்டைக்குள்ளே ஒளித்து விடுகிறார்கள்.....
சொல்லாத காதல் போல
நீண்டு நெடிகிறது செயின்
அதில் சொல்லி சேர்ந்த காதல் போல
ஜம்பமாய் ஒரு பென்டன்.
(இதுக்கு மேல இதை விவரிச்சா சென்சார்ட்)
உனக்கு ஏன் அத்தனை அவசரம்,
வகுப்புக்கு நேரமிருக்கே - கொஞ்சம் மெதுவாய்த்தான் போவேன்.
உன் கூட வருகிற அந்த குட்டச்சி தான்
எதோ குடு குடுத்துக் கொண்டே (குடு குடுப்பை)
குடு குடுத்தாள். (குடு குடு வென ஓட்டம்)
போகிற போது சும்மா போகக்கூடாது ?
எதற்கு
உந்தன் கன்னத்து முடிக்கற்றை ஒன்றை
காதுக்கு பின்னல் பத்திரப்படுத்துகிறாய்.
வெளிச்சென்று தெரிகிற காது
நெருச்சென்று எங்கேயோ தைக்கிறதே,
அந்த ஒற்றைக் கல் காதோரத்தில்
ஊஞ்சலாட வந்த என் மனது சும்மா இராதே
முன்னே கொஞ்சம் சருக்கீஸ் விளையாட விரும்புமே.
தெரிஞ்சு செய்கிறாயா ?
இல்லை
தெரியாமல் செய்கிறாயா ?
காதிலிருந்து கண் எடுத்தால்,
பிரச்சனை இன்னும் 'பூதாகரமாகுதே'.
"இடையின் பின்னழகில்
இரண்டு குடங்கள் கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்"
- (இது டீஆர் எழுதினது நம்மட வரிகள் எண்டு டென்சன் வேணாம்)
'கூட்டி' 'ஆட்டி' என்று போடாமல் மீட்டி என்று போட்டதில் ஒரு நயமிருக்கு,
தம்புராவின் தந்திகள் இடமிருந்து வலம் மீட்கயிலே...
ஒவ்வொரு தந்தியும் ஒவ்வொரு நாதத்துடன்.....
அழுத்திய விரலிரிந்து மெலெளுமே.....
சட்டையை மடித்து மடித்து சுருக்கு தைத்திருப் பார்களே,
அந்த ஒவ்வொரு மடிப்பும் ஒரு தந்தி....
இனிமேல் இரவில் 'நேற்றைய காற்று' கேட்க்க கூடாது.
(மேலதிக விவரங்களை உ.. ஊ.. ம ப த ப மா பாடும் ஜேகே வைக் கேட்கவும் )
இன்னும் சில நொடிகள் தான் திரும்பி விடுவாள் - உருத்திரா மாவத்தைக்குள்.
எந்தன் பேர்சை தட்டிப் பார்த்துக் கொண்டேன்.
அதுக்குள் தான்
எழுதப்படாத காதல் கடிதம் ஒன்று
இன்னமும் இருக்கிறது.
கடிதம் எழுதத் தான் அந்த காகிதம் வாங்கினேன்.
எழுத அமரும் போதெல்லாம்
அந்த அழகான காகிதத்தில்
அவள் முகமே தெரிகிறது.
எந்தன் அறியாமையை அதில் வடித்து
அந்தக் காகிதத்தின் அழகை கெடுக்க விருப்பில்லை.
அவள் பார்த்தாளா இல்லையா ?
dts surrounding இல் எந்தன் heart beat கேட்டது....
பாவி பார்த்தாளா இல்லையா ?
அந்த ரோட்டுத் திருப்பத்தில் திரும்பும் போது
கைகள் கன்னத்து முடியை காதுக்குப் பின்னல் ஒதுக்கி
கண் பீரங்கிகளுக்கு வழிவிட.....
பார்த்தாளா இல்லையா ?
சட்டென்று கடந்து விட்டாளே....
பார்த்தாளா இல்லையா ?
உங்களுக்கு தெரியுமா ? நீங்கள் கவனித்தீர்களா ?
அவள் பார்த்தாளா இல்லையா ?
எல்லாம் தெரிந்தும் எதுவுமே தெரியாதமாதிரி மௌன சாட்சியாக இருந்தன அந்த பஸ் ஸ்டாண்டும், நாயும்.
ஊ என்று ஊளையிடும் காற்று பார்த்தாள் என்கிறதா இல்லை என்கிறதா.....