அது 1992, ஜூன் அல்லது ஜூலை என்று நினைகிறேன்.... பம்பலப்பிட்டி பிளட் பஸ் தரிப்பை ஆதிசேசன் படம் விரித்தது போல் நிழல் போர்த்து காத்து நிற்கும் மரங்களை வெப்பக் காற்று உலுக்கி எடுத்துக்கொண்டு இருந்தது. என்னத்தைப்பற்றி காற்று மரங்களிடம் விசாரித்து இருக்கும்.... சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த கோரத்தையா, இல்லை சற்று நேரத்தில் கதிரேசன் மண்டபத்தில் நிகழ இருக்கும் பிரமிப்பையா....
| பம்பலப்பிட்டி பிளட்ஸ் பஸ் தரிப்பிடம் |
கோவிலுக்கு கூட இவ்வளவு கூடியதில்லையே, கடைசியா ஆடிவேலுக்குதான் இதனை வேலைப் பளு இருந்தது, அப்படி ஒரு பள்ளிகூட விழாவிற்கு எதற்கு இதனை 'தலை'கள். அந்த சிங்களப் போலீஸ்காரருக்கு அயர்ச்சியும் அதிசயிப்பும் சேர்ந்து அதிர்ச்சி கூட. ஆண்கள் பாடசாலை எண்டுதானே சொன்னார்கள் எதற்கு இத்தனை பெண்கள். half saree அணிந்த வளையல் கரங்கள் அலைமோதியது அவருக்கு அதிர்ச்சியே. போலிஸ் பயிற்சியில் விடியக்காலையே எழுந்து வெறு வயிற்றோடு மைதானத்தில் சுமார் ஐந்தாறு சுற்றுகளை அரை மணி நேரத்துக்குள் ஓடத் தெரிந்த, விறைப்போடு சலூட் அடிக்க தெரிந்த, கள்ளனை கண்களால் அளவெடுக்க தெரிந்த அந்த நடுத்தர வயது போலீசுக்கு இந்த வளையல் கரங்கள் யாராக இருக்கும் எதுக்கு அலை மோதுகிறார்கள் எண்டு கண்டுபிடிக்க தெரியவில்லை.
அன்று சபையில் ஒரு அற்புதம் நிகழ்த்த இருக்கும் இளஞ்ஞனின் காதலிகளும் காதலிகள் ஆகப்போகிறவர்களுமே ஒரு கூட்டம் இருக்குமே. மற்றவர்களையும் சேர்த்தால். காக்கிக்கு இது புரிய வாய்ப்பில்லை.
மாலைக் கடைக்காரர்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது, குறிப்பாய் மல்லிகை சரம். மொட்டு மாலை விலை அதிகம் ஆனாலும் கிராக்கி இருந்தது. விரைவில் மல்லிகை விற்றுத் தீர்ந்ததால் மற்றைய பூச்சரங்களை வகை வகையாய் கோர்த்து வைத்தார்கள். கனகாம்பரம் கையிருப்பில் இல்லை, ஆனால் பலர் குறிப்பாக நடுத்தர வயதுப் பெண்கள் அதை இருக்கா இருக்கா எண்டு ஆவலோடு கேட்டு ஏமாந்து போனார்கள்.
பூக்கடைக் காரர்களுக்கு மட்டுமல்ல அந்த பலசரக்கு கடையிலும் நல்ல கூட்டம், பாக்கட்டில் வரும் தீன்பண்டங்கள், பிஸ்கட்கள், டொபிகள், மென்பானங்கள், கண்டோஸ் மற்றும் பெப்பர்-மின்ட்கள் விரைந்து விற்பனை ஆனது. பெரிய அளவில் இலாபம் தராத பண்டங்களே ஆயினும் நிறைந்து விற்றதில் முதலாளி மகிழ்வாயிருந்தார். ஆனாலும் கடைப் பையன்களிடம் கண்டிப்பாயே இருந்தார்.
வழக்கத்துக்கு மாறாய் நிறைந்த கூட்டம் தங்களுக்கு பலனளிக்காததில் பிச்சைக்காரர்கள் கூட்டம் நிறைய ஏமாற்றம் கொண்டது. கோவில் திருவிழாக் கூட்டம் அல்லது சமய விழாக் கூட்டம் என்றால் தங்களை வலுவாகக் கவனிக்கும். இந்தியாவிலிருந்து யாரும் பிரபலங்கள் வந்திருந்தால் தான் இப்படிக் கூட்டம் அலை மோதும் ஆனாக் கவனியாது. இது புதுசு, உள்ளூர் விழாதான் ஆனா இவ்ளவு ஆர்ப்பாட்டம். போன கிழமை கூட ஒரு உள்ளூர் பிரபலம் - டிவி எல்லாம் தெரிந்த முகம் ஒரு விழா நடத்த்தினாரே, ஆனா கூட்டம் இல்லையே. குறிப்பா இளைஞ்ஞர் கூட்டம் இந்த இடத்திற்கு புதுசு. கோவிலும், சினிமா இல்லாத பண்பாட்டு விழாக்களும் இளசுகளை அவளவாய் ஈர்த்ததில்லை.
![]() |
| வித்தக விநாயகர் |
ஏன் இவ்வளவு கூட்டம்? ஒருவேளை இந்தக் கல்லூரியின் அமைப்பு:- நீலம், சிவப்பு, பச்சை எண்டு வகை வகையான டை அணிந்த பெண்கள் பாடசாலைகள் சுற்றி இருக்க என்பதாலோ.... ஒருவேளை அதைத் தான் தலைநகரின் மையப்பகுதியில் இருக்கும் தன்னிகரில்லாப் பாடசாலை எண்டு சொல்லுரானுகளோ?.... யாருக்கு தெரியும்வித்தக-விநாயகருக்கேவெளிச்சம்.
வாசலில் இருந்த பரபரப்பு உள்ளே பாதையில் தெரியவில்லை. அகன்றிருந்த பாதையும், அங்கால் பக்கம் இருந்த மண்டப வாசலும் உள்ளே நடக்கிற பரபரப்பை பெரிதுபடுத்தியது - ஒரு திரில் அனுபவமாய் - suspense effect இல்.
திறந்து விட்டிருந்த கிறில் கேட்டுக்கு இடையில் ஒரு மேசை, இரண்டு குத்து விளக்கு, நடுவே ஒரு கும்பம், சில வேட்டி கட்டின தலைகள் தெரிந்தன. ஒருவன் குத்து விளக்கை காற்றிடம் இருந்து காப்பற்ற கங்கணம் கட்டிக் கொண்டு போராடிக் கொண்டிருந்தான்.
இந்த ஆர்ப்பாட்டங்ககளுக்கு மத்தியில், அதை கண்டு கொள்ளாதவர் போல் எங்கட கதையின் நாயகன் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தார். பள்ளி உடுப்புத்தான், நல்லா கஞ்சி போட்டு தோச்சு அயன் பண்ணின மிடுக்கான சட்டை; கையில் ஒரு பையில் வேட்டி குருத்தா எண்டு நினைக்குறேன். பாடலில் லயித்திருந்தவர் நேற்று பயிற்சியில் சொன்ன மாதிரி ஒரு குறித்த வரியைப் பாட முயன்று கொண்டிருந்தார்.
கடந்த இரண்டு நாட்களாக பயின்ற சிறுவர்களும், பயிற்றுவித்த ஆசிரியர்களும், கூட்டி வந்த பெற்றாருமாய், எல்லோருமே வறுத்தெடுக்கப் பட்டார்கள். தொடர்ச்சியான கடும் பயிற்சி + ஒத்திகை. ஆனா இந்த நாடக் காரங்கள் பயிலும் போது தங்களை மாதிரி நண்டு சிண்டுகளை துரத்தி விட்டுடுவானுகள் என்பதுதான் அவனின் ஒரே வருத்தம். அதிலும் தமிழழகன் உருவமும் குரலும் அவர் பேசமுதலே பயம் பற்றிக் கொள்ளும். தெறித்து ஓடிவிடுவானுகள். சுபாஸ் பற்றி கண்டதை விட கதைகள் அதிகம் என்பதால் ஒரு முடிவற்ற குழப்பம் அவர் பற்றிய அபிப்பிராயத்தில் இருந்தது. எது எப்படியோ இண்டைக்கு அந்த நாடகத்தை பார்த்து விடலாம். எதோ ஒரு அரச நாடகம் என்பதை தாண்டி வேறேதும் தெரியாது, ஆர்வம் மனதை அரிக்கத் தொடங்கியது....
இவன் சுதர்சனை இன்னும் காணவில்லையே, எங்கயாவது மூலைக்க நிண்டு சுரம் பாடிப் பார்கிறானா - பாவி என்ன குரல் அவனுக்கு. உள்ளுக்குள் இருந்து ஒரு வெள்ளை நிற வான் வேகமாக கடந்து போனதில் சிந்தனை வேறு தளத்திற்கு தாவியது. அண்டைக்கு அப்படித்தான் ஒரு லே-லான்ட் பஸ் பிடிச்சு தமிழ்தினப் போட்டி போனது நினைவு வந்தது - கூடவே பூரிப்பும் பெருமையும்.
ஏறு போல் நடை
![]() |
![]() | |
| சுபாஷ் அண்ணா: உதவி சிரேஷ்டமாணவ தலைவர் 93-94 |
தமிழ் அண்ணா: சிரேஷ்டமாணவ தலைவர் 92-93 |
பஸ் பிடிச்சுப் போனவனுகள் வரேக்க ஒரு ஒட்டோவும் பிடிக்க வேண்டி இருந்தது - பெற்ற பரிசுகளை பாராட்டுகளை அள்ளி வர. தமிழ்அழகனின் நாடகம் முதற் பரிசு பெற்றதோடு, பின்னர் மாகாண மற்றும் அகில இலங்கை மட்டம் வரை சென்று வெற்றி பெற்றது. மேலும் நடுவர்களின் பரிந்துரையின் பேரில் தமிழ் தின பரிசளிப்பு விழாவில் அரங்கும் ஏறியது. நாடகம் மட்டுமல்ல. கீழ் பிரிவு மேல் பிரிவு குழு தனிப் பாடல்கள் பேச்சு கவிதை கட்டுரை இன்னும் இன்னாவோ எல்லாம் - முதல் பரிசு புதல பரிசு முதல் பரிசு....
பரிசுகளை அறிவிப்பவர் முதலே எல்லா முதல் பரிசும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கே எண்டு சொல்லிருக்கலாம் போல.... அப்படி தொடர்ச்சியாக இந்துக்கலூரி முதலிடம் , இந்துக்கலூரியை சேர்ந்த இவர் முதலிடம் ...சொல்ல அவருக்கு அலுத்ததோ இல்லையோ கேட்ட எங்களுக்கு தித்திப்பு... மற்றவர்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது, அதிலும் சில பொறாமைக்காரர்கள் முகத்தில் ஒரு கலியாணத்திற்கு தாளிக்குமளவுக்கு கடுகு வெடித்தது எண்டால் பாருங்களேன். யார் கண்ணுக்கும் படாமல் சில காதல்களும் வெடித்தது.
"ஊ..." என்ற கத்தல்களும், சீண்டலும், குறிப்பாய் பெண்கள் கல்லூரிகளைப் பார்த்து கலர்ஸ் காட்டுறதும், அலம்பல், சிலம்பல், ஆர்ப்பாட்டம், பெருமை, வீறு, ஆனந்தம் எல்லாம். தரையில் கால்கள் நிற்கவில்லை. தங்கள் குழுவிற்கு பரிசு கிடைத்தது எண்டு தெரிந்ததும் கைதட்டி ஆரவாரப் படுத்தி கை குலுக்கி - சந்தோசம் + வெக்கம். நாம ஹீரோ நிஜமாயே ஹீரோவாய் உணர்ந்தார் - ஒருமுறை கொலரை செரிப்படுத்திக் கொண்டார் சுற்றும் முற்றும் பார்த்து விட்டும் மீண்டும் அமர்ந்தார். இப்போ மாணவதலைவர்கள் மீது வாஞ்சை வந்தது, அவனுகள் விவாதம், நாடகத்தில் காட்டிய ஆளுமை கருவத்தையும் சந்தோசத்தையும் தந்தது - இனிமேல் இவுனகள் என்ன சொன்னாலும் கேக்கலாம் எண்டு தோன்றிற்று.
இது தான் அரும்புகிற மீசை முறுகுகிற தருணம், மார் புடைத்து தோள் விடைத்து சிங்கங்கள் மாதிரி..... ஜிவ் எண்டு மண்டைக்குள் ஏறுகிற போதை சொல்லால் வடிக்கவொணா உணர்வு - ரதியும் மன்மதனும் நிறைய அம்புகளோடு களம் காணுகிற கணம். அவசரத்தில் ஒழுங்கில்லாமல் நடக்கிற போட்டிகளுக்காய் departmet காரர்களோடு ஆசிரியர்கள் சண்டை பிடிக்கிற தருணம். எனக்காக என் கல்லூரி, ஆசிரியர்கள் மாணவ தலைவர்கள் அண்ணாமார் பின்னே நிற்பார்கள் என்பது புரிகிற பொழுது.
இது என் கல்லூரி எண்டு உணர்வு மேலோங்குகிற தருணம், மண்டை கனக்கும், கைகள் பையில் தைக்கப்பட்ட சின்னத்தை முத்தமிடும், தலை கால் புரியாத வெறி அது - வேண்டியதே. இவன் என் கல்லூரியின் மாணவதலைவன் - இத்தனை பேரை கட்டி-மேய்த்து, சொல்லிக்கொடுத்து, பயிற்றுவித்து, உற்சாகப் படுத்தி, தட்டிக் கொடுத்து, தட்டிக் கேட்டு, இடையில் கன்டீனுக்கு கூட்டிப் போய், காசு கொண்டர மறந்தவனுகளுக்கும் சேர்த்து வாங்கி பகிர்ந்து உண்டு, பகிர பங்கு பெற சொல்லிக் கொடுத்து, வெற்றி வாங்கி, அதை கொண்டாட சொல்லிக் கொடுத்து, கொண்டாடி மகிழ்ந்து - இவன் அண்ணா - என்னை அடித்தாலும் மிரட்டினாலும் நான் பணிய வேண்டிய; பணிய விரும்புகிற அண்ணா எண்டு தோன்றுகிற தருணம். அவன் அடையாளப் படுத்திக் கொடுத்த மேடையில்த் தான் நான் ஏறி முழங்குகிறேன், அக்காமாரும் நடுவர்மாரும் எல்லாரும் அவன் வெற்றியையும் பெருமையும் ஏலவே எங்களுக்கு ஏற்றித்தான் பார்க்கிறார்கள்; கூடவே எதிர்பார்ப்பும். இந்த அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் தந்தவனுக்கு நான் பணிவது என் கடமை - எங்கள் எல்லார் வெற்றியையும் தட்டி குடுத்து பாராட்டிய அவன் வெற்றியை எப்படிக் கொண்டாடுவது - அவர்கள் பெயர்களை உரக்க கத்தினோம் -ஒரு லயத்தோடு
தமிழ் அண்ணா! தமிழ் அண்ணா! தமிழ் அண்ணா!
அறிவிப்பாளரோடு சேர்ந்து நாங்களும் உச்சரித்தோம் - சுபாஸ் அண்ணா- சுருதி சேர்த்தோம்- ஒரு புன்னகையோடு அதற்க்கு வழி விட்டார் அறிவிப்பவர். தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு தமிழ் தினப் போட்டிகளில் வகைப்பட்ட எல்லாப் பிரிவுகளிலும் விவாதம், இசை, நாடகம் எண்டு முத்தமிழிலும் ஈடு இணையற்ற வெற்றிகளைக் குவித்து விட்டுத்தான் இந்த விழாவிற்கு வருகிறது கல்லூரி. ஆனால் கண் பட்ட மாதிரி எங்கள் குழுப் பாடல் வகையில் அகில இலங்கை மட்டப் போட்டியில் ஒரு சின்ன சிக்கல் ஆகிவிட்டது.


