ஞாயிறு, ஜூன் 09, 2013

நீக்கமற…

நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்ட
பள்ளிப்பருவத்து நண்பன் ஒருவனை
ஆரத் தழுவ முடியவில்லை
நெஞ்சில் நெருடுகிறது ஒரு பல்லுக்காயம்

நண்பரோடு கூடைப்பந்து
ஆடிக் களைக்கலாம் எண்டால்
ஓடி வழியும் வியர்வை
நகங்களின் கூர்மை சொல்லிச் செல்கிறது

சமூக அநீதி கண்டால் கோபம் ?
ஊகும், தள்ளிப் போகிறது
மிருதுவானவற்றோடு சேர்ந்து
நானும் மிருதுவாகிப் போனேன் போலும்.
செங்கொடி மேடைகளில்
உறுத்துப் பேச முடியாதபடி
உதடுகள் கடிபட்டுப் போய் இருக்கின்றன


நண்பர்களுடனான அதீத அரட்டை
ஆடிக்கொண்டிருக்கும் உந்தன் முத்துச்சிமிக்கியை
நினைவுக்கு கொணர்கிறது

சற்றே தாமதமாகும் அலுவலக கூட்டங்கள்
ஆவி பறந்து ஆறிப்போய்க் கொண்டிருக்கும்
ஒரு குவளை தேநீரையும்
இரு குவளைக் கண்களையும்
படம் காட்டுகின்றன

ஆடி அசைகின்ற உந்தன் பின்னல்
ஆக்சிலேற்றரோடு எந்தன் கால்களை - ஒரு
ஆசுவாச உடன்பாட்டிற்கு சம்மதிக்க வைத்திருக்கிறது

எந்தன் பருவத்தில் கொண்ட கோலமெல்லாம்
உந்தன் புருவத்தின் மையில் கரைந்து போகின்றன

அகந்தை அகற்றிய ஆத்மாவை
பரமாத்மா ஆட்கொள்ளல் போல
நான் இழந்த நிற்கும் (எந்தன்) மிச்சத்தை
நீயே முழுதும் ஆட்கொண்டிருக்குறாய்.

அடையாளம் தொலைத்த இந்த நிலையை - எல்லாரும்
அடையாளப்படுத்திக் கேலி சொல்கின்றார்
பின்னூட்டங்-களையும் விருப்பு-களையும்
தாண்டிய ஒரு வாசிப்புக்காகவே
இப்போதெல்லாம் எழுத முயல்கிறேன்

குனிந்த மர நிழலும் குனித்த புருவமும் - கண்ட பிறகு
குதிரைகளின் கனைப்பும்
நரிகளின் ஊளையும் ஒன்றே.

இதற்க்கு முன்னான என்னை
எங்கு தேடினாலும்
நீயே நிறைந்திருக்குறாய் எங்கும்

அந்த பள்ளிக்கூட ஹொக்கி அணியின் நிழல் படத்தில்
பின் வரிசையில் நடுவில் நிற்கும் இளைஞனுக்கும்
எனக்குமான வித்தியாசம் மகிழ்வையே தருகிறது
இதற்க்கு முன்னான என்னை
எங்கு தேடினாலும்
நீயே நிறைந்திருக்குறாய் எங்கும்,
நீக்கமற!

---------------------------------------------------------------------------------
இதை நான் அந்த சம்பவத்து மொன்னமே எழுதினான் எண்டு சொன்னா நம்பவா போறீங்க ?
---------------------------------------------------------------------------------