ஞாயிறு, ஜூலை 05, 2015

ஆர்த்து எழு ! பகுத்தறிவு பூண!

பொருளுக்கு பாடவென புலவோர் பலரிருக்க
பொருளாய் பாடவந்த புலவோரே
அருளாய் பாடவல்ல அரங்கத் தலைமை
வெறும் பொழுதாய் பாடுகின்ற புலவன் நான்
உங்களோடு
பொறுத்தருளும் – ஐயன்மீர்
ஆனாலும் அவ்வப்போ – நல்ல
பொழுதுக்கும் பாடுவேன் நான்.

கொஞ்சும் சலங்கை
பட்டுச்சரிகை
கிட்ட வந்து கைபிடித்து குசலம்
நீங்கள் எங்க – ஓ அந்த ஊரே
அங்க போஸ்ட்மாஸ்டர் பொன்னம்பலத்தை தெரியுமே
எங்கள் பெரியப்பாவின் ஒன்னு விட்ட சித்தப்பா மகன் – என்று
கிட்ட வந்து கைபிடித்து குசலம்
நல்லாத்தான் போய்க்கொண்டு இருக்கு இந்த ரெண்டு நாளும்
அனால் என்ன
Monday யை நினைச்சாதான்
மண்டை விறைக்குறது
இருந்தாலும்
சில
Mondays தாங்கும் இந்த நினைவு.

ஆர்த்து எழு !
பகுத்தறிவு பூண!

பகுத்தறிவு பற்றி – கொஞ்சம்
பகுத்து அறிவோமா ?

பகுத்தல் தான் அறிவதற்கான வழி.
அறிந்த பின்,
தொகுத்தல் தான் அதன் வெளிப்பாடு.
இப்படி,
அறிந்தவன் தொகுத்ததுதான்
கல்வி
அதை நாம் பகுத்து உணர கேட்பதுதான்
கேள்வி

பகுத்தறிவு பற்றி – கொஞ்சம்
பகுத்து அறிவோமா ?

கல்வியில் சிறந்த தமிழ் நாடே,
கொஞ்சம் கேள்வியிலும் நீ சிற.

கேட்கத் தெரிந்தவன் – காதுகளால்
கேட்கத் தெரிந்தவன் தான்
கேட்க்க முடியும்
கேள்வியை - செரிவர
“கடவுளை காட்ட முடியுமா?” என்று கேட்டவன்
கடவுளை அறிந்தான்
“ஆப்பிள் எதற்கு கீழே விழுகிறது?” என்று கேட்டவன்
ஈர்ப்பை அறிந்தான்
மனிதர்களின் இறப்பை கேள்வி கேட்டவன்
ஞானம் பெற்றான்.
“யாராய் கேக்குறாய் வரி ?” “எதற்கு கேக்குறாய் வரி?” என்று கேட்டவன்
சுதந்திரத்தின் அடையாளம் ஆனான்.

உன்னுடைய கேள்வியும் – அதன் மீதான தேடலும் தான்
உன்னுடைய அறிவையும் அடையாளத்தையும்
தீர்மானிக்கின்றன

ஆண்டவனாய் இருந்தாலும் – அவனை
அறிந்தவன் என்று சொன்னாலும் – நம்மை
ஆள்பவனாய் இருந்தாலும் – ஈன்று
பெற்று வளர்த்தவனாய் இருந்தாலும் – ஆய்ந்து
கல்வி கற்று தருபவனாய் இருந்தாலும்

கேளு,
உந்தன் கேள்விக்குள்,
எல்லாரும், எல்லாமும் உட்பட்டத்துதான்.

இது விளம்பர உலகம்,
கேள்விதான் - இங்கு
வாழ்வதற்கான வழி

கடவுளை,
கடனை (கிரடிட் கார்ட்)
கற்பை – ஏன்
எளிமையைக் கூட
கூவிக் கூவி விற்கிறார்கள்.
நாங்கள் தான் தெரிந்து வகை ஆட வேண்டும்.

“அன்பு நண்பர்காள்,
ஆர்த்து எழுங்கள்
பூணலாம் பகுத்தறிவு
அடையலாம் பெரும் சிறப்பு”

என்று அறைகூவ
எனக்கு அச்சமாய் இருக்குறது
விளம்பரங்களின் வியபகத்தில்
கூசிப்போன காதுகளில்
நானும் பத்தோடு பதினொன்றாக
சம்மதமில்லை

எங்கள் காது வந்து சேர்கின்ற – இற்றை
அழைப்புகள் எல்லாம்
உள்ளுக்குள்
பூடகமாய் ஒன்றை
பூட்டியே வைத்திருக்கின்றன.

கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர் - என்பதுதான்
இறை உணர்வு.
ஆனால் இங்கே,
அதிகம் விற்க்கப்படதுவும் - கேள்விகள் ஏதுமின்றி
அதிகம் வாங்கப்பட்டதுவும்
இறை உணர்வுதான்

இராமர் ஆண்ட இடம் இது – மசூதியை
இடித்து விட்டு
கோவில் கட்டு – என்றால்
உனதிறைவன்
உலகையே ஆண்டவன் என்றல்லா நபியிருந்தோம்
என்று திருப்பிக் கேளு

போத்தீஸ் விளம்பரங்கோளோடு
போட்டி போடும் – அலங்கார
போதகர்களா – உங்களுக்குப்
போகம் அறுத்து
காட்டிடுவார் பேரின்பம் ?

அல்லா பெயரால் அடி என்றால் –
கேள்வி இன்றி அடித்துவிடு,
சொன்னவனை
பாதகமில்லை
ஏழைகளின் வீட்டிற்கு இறைவன்
ரொட்டி வடிவில் மட்டும்தான் வருவான்
கூடவே
துப்பாக்கிகளையும் தருபவன் சாத்தான்.

முடியப் போகிறது உலகம்
கூடச்சேர்
உன்னை மட்டும் காப்பாற்றுகிறேன் – என்பவனிடம்
உலகுக்கே சிலுவை சுமந்தவனை
உந்தன் மத்த்துக்காய் மட்டும் – என்று
மட்டுப்படுத்ததே – என்று
மறுத்துவிடு.

வாக்கு கேட்டு வருபவனிடம்
கொள்கைகளை கேளுங்கள்
கொள்ளையில் பங்கில்ல

இலவசம் தான் – எங்கள்
கொள்கை என்றால் –
ஆகிடுங்கள் உசார்
அதற்கும் சேர்த்து
நீங்கள் தான் கட்டவேண்டு வரி.

அன்பானவர்களே
உங்கள் குழந்தைகளுக்கு
கேள்வி கேக்க
கற்று கொடுங்கள்.

கேள்வி எப்படி உரிமையோ
பதில் அப்படிக் கடமை
என்பதை சொல்ல மறவாதீர்.

கேட்பது என்பது கலை. – அதைப்
பயின்றால் உயரும் உங்கள் நிலை.

ஆர்த்து எழு – நண்பனே,
எழுந்து கேளு உந்தன் தலைமுறைக்கான கேள்விகளை
கேட்பதனால் பூணலாம் பகுத்தறிவு
பூண்பதினால் செய்யலாம் பெரும் செயல்கள்
செய்வதனால் காணலாம் புது விடிவு.