திங்கள், செப்டம்பர் 10, 2012

நித்தம் நித்தம் நெல்லு சோறு…

                                                      மொட்டைக் கறுப்பன்
ஹேய் ஒதயா, ஹொவ் டூ வீ ஈட் திஸ் ?


அது ஒரு வெயில் கால சனி மதியம், தெரிந்தவர், தெரிந்தவருக்கு தெரிந்தவர் என்று ஒரு சிறு கூட்டம், பெயர் தெரியாமல் மதமத என்று உயர்ந்து வளர்ந்த ஒரு மரம் , கீழே ஒரு கொட்டில் - அந்த வளாகத்தில் வாழுபவர்களுக்காய், ஒரு நீல நிறத்தில் பூப் போட்ட பிளாஸ்டிக் மேசை விரிப்பு, விதம் விதமாய் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பண்டங்கள், கோக், ஸ்பிரைட், தேசிக்காய் சோடா (லேமேனேட்) மற்றும் மெலிதாக சீவிப் பொரித்த உருளைக்கிழங்கு - சிப்ஸ்.

வெள்ளை நிறத்தில் மல்லிகைப் பூவாய் பூத்து சிரிக்கிற கோதுமைப் புட்டு (ஆல் பெர்பஸ் வீட் மாவில் செய்தது), பொரித்த சோயா, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, என்பவற்றை; கடுகு சீரகம், கருவேப்பிலை முறுகலாகப் பொரித்த வெங்காயம் சேர்ந்த தாளித்தோடு பிரட்டி (முக்கிய குறிப்பு நல்லெண்ணெயில் பொரித்தது), இஸ்பானியக் கடையில் வாங்கிய இளந்தேங்காய் உடைத்து திருவிய பூவும் சேர்ந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் மல்லிகைப் பூவாய் பூத்து சிரிக்கிற கோதுமைப் புட்டு, பொரித்த மிளகாய் சம்பல் என்பவற்றோடு சம்பந்தமே இல்லாமல் ரயித்தாவையும் போட்டுக் கொண்டு வந்து “ஹேய் ஒதயா, ஹொவ் டூ வி ஈட் திஸ் ?” என்று கேட்ட காரோலினுக்கு வயது அடுத்த மாதம் இருபத்தி ஆறு ஆகப் போகின்றது என்பது சொல்லாமலே தெரிந்தது.

எண்ட பெயரை மென்று துப்பினதைக் காட்டிலும் புட்டுப் பிரட்டலுக்கு தயிர் – கடுப்பு.

டேய் எங்கடா எழும்பிட்டாய் ?


உரும்பிராய் சிறிச் சித்தப்பாவின், குரல் அத்தனை கனமும் அதிர்வும் கொண்டது, சொல்லை மீறி நகர முடியா வசீகரம் அந்தக் கடினக் குரலுக்குள் இருக்குற கனிவு.

சாப்பிட்டுடன் சித்தப்பா.

பாயாசம் ?

அதை பேணியில விட்டுக் குடிக்குறன்.

விசரா உனக்கு, இலையிலையே விட்டு வடை இல்லை அப்பளம் போட்டு சாப்பிட்டா அது பாயாசம் இல்லை அது xxxxx


சந்தமா ஒரு வசை. கூட சாப்பிட்டுக் கொண்டிருந்த சகலபாடிகள், வயதொத்த உறவுகள் கொல் என்று சிரித்தனர். சித்தப்பாவின் உறுமல் அவை அடக்கம் - வாலைச் சுருட்டிக்கொண்டு இருந்து விட்டேன் - எனக்கு பாயாசமே பிடிக்காது இதில் இலையில வேறையா. குசினி வாசல்ப் படியில் அம்மா தெரிந்தார் - அவர் கண்களில் தெரிந்தது பழிவாங்கும் உணர்ச்சியா இல்லை களிவிரக்கமா செரியா சொல்ல முடியாது.

டேய் ‘பாயாசம்’ எண்டு சொல்லிப்பார் - எவ்வளவு இனிமை; ஆயாசம் போன மாதிரி, மொடுக் எண்டு ‘’ எண்டு சொல்லப் படாது – பாஆஆயாஆஆசம் ஒரு ஆலாபனை மாதிரி - பத்மநாபன் பீபீ வாசிச்ச மாதிரி - இனிமை.
அண்ணி கொஞ்சம் பாயசம் கொண்டாங்கோ, வடையும், இரண்டுமே சூடா” -

சித்தப்பா அம்மாவிடம் சொல்லி விட்டு திரும்பி எங்களை ஒரு நோட்டம் விட்டார். சித்தப்பா ஒரு மூடுக்கு வந்துட்டார் எண்டு அவர் கண்கள் சொன்னது - குனிந்த மர நிழலில் குரு போல.

அது சாந்தினி அக்காவின் சாமத்திய வீடு, இடம் பெயர்ந்திருந்த காலகட்டம், சமையல் பந்தி எல்லாம் நாங்கள் பெடியள் கொஞ்சப்பேர் சித்தப்பா தலைமையில். ஆண் பந்தி மூன்று பெண் பந்தி இரண்டு பரிமாறி இல்லை போட்டு, சாக்கில இலை எடுத்து, கடைசிப் பந்திக்கும் வருற மாதிரி வாழக்காய் பொரியல், அப்பளம் அளவாய் பரிமாறி. இப்ப கடைசியா நாங்கள் ஒரு பத்துப்பேர்.

வெள்ளை போம் பிளேட்டில் வெள்ளை பிளாஸ்டிக் கரண்டிக்கு கீழே ரயித்தாவுக்குப் பக்கத்தில் சோகமாய் தேமே என்றிருந்த புட்டுப் பிரட்டல் வெள்ளித்தட்டிற்க்காய் ஏங்குவது போல் பட்டது. பார்க்கப் பாவமாய் இருந்தது. சம்பல் சிவப்பைப் பார்த்ததும் அது ஸ்பயிசி என்று எண்ணி இருக்கும் கரோலின் - அதான் பாதுகாப்புக்கு எண்டு கொஞ்சம் ரயித்தாவை எடுத்துதிருக்கும் - கோபி அண்ணாவின் ஆட்டுக்கறி சாப்பிட்டால் உறைப்பிலையே சிவந்து செத்துப் போனாலும் போயிடும் அந்த மத்திய அமெரிக்க குளிர் தேசத்து வெளிர் பெண்மை. மூன்று ஷாட் வோட்கா அடிச்ச  பிறகு கூட டான்ஸ் புளோரில் எல்லை தெரிந்த பெண்மை சம்பலிற்கு பயப்பிடிவது சிரிப்பாய் இருந்தது.

திஸ் ரெட் திங் இஸ் கால்ட் சம்பல், மேட் வித் scraped கொகனட். யூ கான் மிக்ஸ் இட் வித் தே யெல்லோ திங்கி கால்ட் புட்டு. யூ டோன்ட் நீட் யோகட். இ மேட் இட் சூட்டபில் போர் யூ - லெஸ் ஸ்பயிசி.

இஸ் இட் லைக் சட்னி ?

அட ஆத்தா இது வேற , உனக்கு எப்படி புரிய வைக்க , சம்திங் லைக் தட் என்று மழுப்புவதை தவிர வேறு வழி இல்லை.


அந்த செவ்வாழைக் குலைக்கு புட்டு சாப்பிட சொல்லிக் குடுக்குறதுக்குள்ள எனக்கு பசி வந்திடும், சாப்பாடின்ட ரிஷிமூலம் நதி மூலம் கேட்டு ஒரு காய் காச்சுடும். எப்படி சொல்வேன் உண்மையை - ஒரு நல்லா மினுக்கின வெள்ளித் தட்டில், புட்டின் பிம்பத்தை பார்த்தபடி, புட்டை சம்பலோட இறுக்கிப் பொத்திப் பிடிச்சு அள்ளி சாப்பிட வேணும் - கோதம்மா புட்டு விக்கும் மறக்காம தண்ணி எடுத்து வைச்சுக் கொண்டு சாப்பிட வேணும். கடைசியா கொஞ்சம் சீனியும் தேங்காப்பூ கூட சேர்த்து பொத்திப் பிடிச்சு அமம்மா தருவா – டேசார்ட்.

திஸ் இஸ் ரியலி நைஸ் , வெரி ஸ்பயிசி - பட் டிலிசியஸ். ஹொவ் டூ யூ மேக் திஸ் ?

அது சொன்னா விடிஞ்சிடும், விட்டுடு தாயே. தக்காளி சோறு ஆசை காட்டி காய் வேட்டி விட்டேன்.

- அடுத்த பந்தியில்-

சனி, செப்டம்பர் 08, 2012

எளியவனாப் பிறந்தாலும்...

அன்புள்ள அண்ணாமாருக்கு வணக்கம்,
தேத்தண்ணி முதல் சாயம்,
இறால்ப் பொரியல் பங்கீடு
இரவுக்கும் பதுக்கப்படும்
வெங்காயப் பொரியல்
போன்ற ஒதுக்கீட்டின் பாரபட்சமும்,

உன் அளவில்லாதவைகள்
எனக்கான அன்பளிப்புகள்
என்ற சலிப்பும்,

எனக்கு உன்மீது
பொறாமை
கொளச்செய்தன - இன்றுவரை.
ஆழ ஒரு ஆதங்கம் – மாற்றில்லை
ஆனால்…..


யாழ்ப்பாணத்தின்
கன தம்பிமாரின்
டீ-90 மோட்டச் சயிக்கிளுக்கும்
சிங்கப்பூர் செயினுக்கும்
லிங்கம் கூல் பாரில்
Birth-day பார்டிக்கும்

வெளியே குளிர் காயும்
அண்ணன்களைக் கண்டபின்னும்
’எளியவனாப் பிறந்தாலும்
இளையவனாப் பிறக்காத’ என்ட
வழக்கு மாறாதது
வழக்காடு மன்றங்கள்
இனி விசாரிக்க வேண்டியது.

என்ன இருந்தாலும்
யாழ்ப்பாணத்தாருக்கு
தம்பி எண்டா தனிப் பாசம்!


அம்மாவின்,
அக்காவின்,
தம்பிகளின்,
தங்கைகளின்,
எல்லார் கவலைகளும்,
அத்தனையும்,
மடுத்தபின்னும்
திறந்தே இருக்கின்றது உந்தன் செவி
திறவாமல் இருக்கிறது உந்தன் வாய்.
எத்தனையோ பாவமன்னிப்புகள்
 - நீ வழங்கி இருக்கிறாய்
எத்தனையோ வழக்குகளில்
 - நீ உடைத்து தீர்ப்பு சொல்லி இருக்குறாய்
உன் பிராது ஏதும்,
உன் அழுகை ஏதும்
தலைவாசல் பஞ்சாயத்துகளில் அரங்கேறியதில்லை
- நான் அறிந்த வரை.

எங்களுக்கெல்லாம்
நீ பாவமே செய்யாத பரமாத்துமா;
விட்டுக் கொடுப்பது உன் பிறவிக்குணம்;
உனக்கு பதில் தெரியாத கேள்விகளோ
நீ தீர்க்க முடியாத சிக்கல்களோ
எனக்கு தெரிந்து இல்லை
உடம்பு மடை திறந்த நாளுக்கு பிறகு கூட
நீயே எங்கள் சுப்பர் ஹீரோ



எனக்கு கூட அவ்வப்போ தோன்றும்
உனக்கு யார் சிவி எழுதியது
உந்தன் ட்ரிப்களுக்கு கைச்செலவுக்கு யார் தந்து பணம் ?
டபிள் நோட் போட யாரிடம் கற்றுக் கொண்டாய் ?
ஆனால் அண்ணாக்கள் எல்லாம்
இதை தம்பிகளுக்கு சொல்லித்தர
தெரிந்து கொண்டே பிறக்கிறார்கள் என்று
சும்மா இருந்து விட்டேன்.

”அண்ணாக்கள் அழுவதில்லை” என்று
அரேபிய தேசத்து ஒட்டகக்காரர்களிடம்
ஒரு வழக்கிருக்காம்,
அழுவதில்லையா?
இல்லை அழத் தெரியாதா ?

உந்தன்
தோற்றுவாய்,
ஆற்றுப்படுக்கை,
பலிபீடம்
என்று எதைப்பற்றியும் கவலையின்றி
கருவறைக்குள் இருத்திவிடுகுறோம்
இல்லை தேரேற்றி விடுகிறோம்.

உந்தன் தோற்றுவாய், எது ?
உனக்கான ஆற்றுப்படுக்கை, என்ன ?
உந்தன் பலிபீடம் எங்கே ?
என்று எதைப்பற்றியும் கவலையின்றி
கருவறைக்குள் இருத்திவிடுகுறோம்
இல்லை தேரேற்றி விடுகிறோம்.
கடைசிவரை
சுண்டல் பற்றிய கனவுகளுடன்
எங்களுக்கு உறக்கம் வருகிறது
கட்டாயம் சுண்டலும்
சில சமயம் அவலும் கிடைக்குறது.

ஆமாம்
இருப்புக்கு வாறதில் சாமிக்கு
அலுப்பேதும் இருக்குமோ?
சண்டீசுவரருக்கு மூண்டு முறை
கைதட்டினாப் போச்சு.

வில்லங்கம் பண்ண மாட்டியள் – எண்டால்
விகல்ப்பம் இல்லாம ஒண்டு சொல்லுவன்
அண்ணா செய்த புரட்சிக்கும்
தம்பி செய்த புரட்சிக்கும்
வித்தியாசம் இருக்கு பாருங்கோ.