வெள்ளி, பிப்ரவரி 03, 2012

மொட்டுக்கள் சில முட்களானதேன் ?



படம் வரையும் கல்வின்.
உகண்டா நாட்டினை சேர்ந்த கல்வின் (Calvin) எனும் சிறு வயதுப் போராளி தன் ஆயுதம் தாங்கிய வலியின் நினைவுகளை தூரிகளை கொண்டு மீட்டிருக்கிறான். Street Child Project எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் காப்பாற்றப் பட்டு வளர்த்தெடுக்கப் படும் இந்த ஓவியனுக்குள் இன்னமும் ஓயாமல் அலை அடிக்கிறது அவன் சிறுவயதில் கண்ட வன் முறைகள். இன்று எல்லாவற்றையும் மறந்து வெள்ளையாய் சிரிக்கிறான் என்றால் அது street child project இன் கர்த்தாக்களான இரண்டு under-grad வெண் பிள்ளைகள். அதில் ஒரு நண்பி என் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். நண்பியாக அறிமுகமாகி சகோதரியாக மலர்ந்திருக்கும் அந்த உறவு பெருமைக்குரியதாய் நான் மெச்சுவது. இந்த பத்தியை எழுதும் தருவாயில் அவர் குழப்பமான அரசியல் மேகங்கள் சூழ்ந்திருக்கும் உகண்டாவில், இந்த மாதிரி பல சிறுவர்களுடன் உறுதுணையாய் நிறைய தியாகங்களுடன் சேவையாற்றி வருகிறார். அந்த தங்கச்சியின் பெயர் ஜென்னி. தங்கச்சி என்பதை தன் ஆங்கில ஓசை நயத்துடன் அவர் உச்சரிப்பதே தனி அழகு.

முள்ளாகுகிற ஒரு மொட்டு......

இந்தப் படம் பார்த்த மாத்திரத்திலேயே என் அடிவயிற்றுக்குள் ஒரு நாக்குளியும் கழுத்துக்குள் ஒரு மிடறும்...... சட்டென்று சொந்தங்களும் நட்புகளும் நினைவில் வந்து போனார்கள். உகண்டா நாட்டில் (உம்) வற்புறுத்தி  இவர்கள் கையில் ஆயுதம் கொடுக்கப்பட்டது. அது வற்புறுத்தியோ விரும்பியோ ஆயுதம் தாங்குகிற பிஞ்சுக் கரங்களுக்கு, ஏன் மனசுக்கும் கூட வலிவு குறைவு. பட்டாம்பூச்சிகளுக்கு இறகுகளை பிய்த்து விடுதல் எத்தனை கொடுமையோ அதனிலும் கொடுமையானது அவற்றை குளவிகளாக்குவது.

ஒரு நல்ல படைப்பை பகிரத் தொடங்கின முயற்சி உலக மற்றும் உள்ளூர் அரசியலை சாடை பண்ணியது தற்செயல். இந்த ஓவியத்தை நான் ரசித்த முறையில் நீங்கள் ரசிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் நான் கவனித்த சில முக்கிய அம்சங்களை வரிசைப் படுத்த விரும்புகிறேன். மேலே வாசிக்க முதல் அந்த படத்தை ஆழ ரசித்து விடுங்கள்.

|
|
|
|
|
|
|
|
|

  1. அந்த சிறுவன் தாங்குகிற ஆயுதம் பெரும்பாலும் A.K.47 போல் தெரிகிறது, அதன் பிடியைப் பாருங்கள், பரிமாணப் படி அது கொஞ்சம் இடறுகிறதா.... இல்லை ஏதும் சொல்கிறதா ?
  2. மடித்து விட்ட சட்டைக் கைகளைப் பாருங்கள், தோள் மூட்டைப் பாருங்கள் - இந்த சீருடை அவனுக்குப் பெரிதில்லையா.....பொருந்தலையே!
  3. கன்னங்களின் மொழுக் மொளுக்கையும் மீறி  கண்களில் தெரிகிறது வன்மம் ?
  4. அந்த உதடுகளில் தொங்கிச் சரிந்து விழாமல் இருப்பது, கேள்வியா? பதிலா? சிரிப்பா? ஏளனமா?...... புரிந்தும் புரியாத அந்த கலவை உணர்வை யாராயினும் எனக்கு மொழிபெயர்க்க முடியுமா?
  5. பினாலே தெரிகிற அந்த ஒற்றை மரம் அல்லது துளிர்க்கும் இளைகளற்ற சிறு மரம் அவன் குறைஞ்ச பட்சம் ஆறு ஒற்றுமை எனக்கு தெரிகிறது....உங்களுக்கு?
  6. ஆ, அந்த நாணல்கள்..... எனக்கு எந்தக் கதையும் சொல்லவில்லை உங்களுக்கு ஆயினும் ஏதும் சொல்கிறதா?


கல்வின் உங்களுக்காய் காட்டுகிறான் தன் படைப்புகளை, உங்கள் அவசரம் அல்லது கவனமின்மை ஒரு நல்ல ஓவியனை ஆயுதமேந்த வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.